எல்லைகளற்ற வெளிகளில்
பறந்தலைகின்றன என் பறவைகள்
கதவுகளற்ற கூடு அவற்றுக்கு
மயிலும் குயிலும்
வாத்தும் நாரையும்
ஒன்றாகத்தான் வளர்கின்றன
அவசியம் தவிர்த்து அவை
ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை
பட்டப்பகலிலும் வீட்டைப் பூட்டி
தலையணையடியில்
சாவியை வைத்து
தூங்குவதில்லை அதன் தாய்
எங்கள் சுத்தம்தானே
உங்கள் சந்தேகம்
உதிர்ந்து கிடக்கும் இறகில்
ஒன்றை எடுத்து எழுதுங்கள்
உங்களை விடவும்
பரிசுத்தமானவர்கள் நாங்கள்.
***
எதிர்பாராத நேரத்தில் விழும்
ஒரு கல் கலைத்துவிடுகிறது
குளத்தின் அமைதியை
இரைக்கு காத்திருந்த கொக்கு
பூத்துக்கொண்டிருந்த தாமரை
எதற்கோ குறிவைத்த தவளை
என மொத்தக் குளமும்
முடிவில்லாத வட்டங்களில்
உழன்று கொண்டிருக்கின்றது
இனியாவது வீசும் கல்லில்
கவனமாயிரு
கொஞ்சம் சொல்லிலும்.
******