இணைய இதழ்இணைய இதழ் 53கவிதைகள்

திவ்யா ஈசன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சில வருடங்களுக்குப் பிறகு

நீ அக்கணம் ஏதேச்சையாகத்தான்
கடந்து போனாய்
நான் இருபது வருடங்களைக்
கடந்து வந்தேன்
இருவரும் சந்தித்துக்கொண்டோம்
காலம் கடந்து பேசிக்கொண்டோம்

2002;
உன் விழியிலிருந்து
ஒரு நொடியில்
ஒரு கோடி தோட்டாக்கள் புறப்பட்டு
ஒருமுக வெறியோடு
என் ஒரே இதயத்தை வீழ்த்தின

2022;
உன் அதே விழியில்
இப்போதும்
தோட்டாக்கள் இருந்தால்
இன்னொரு முறை
என் இதயத்தை வீழ்த்தக்கூடும்

உன் ஞாபகமாய்
உன் ஞாபகம் மட்டும்தான்
என்னிடம் இருந்தது
அது நூலாம்படை படிந்து
ஒரு ஓரமாய் இருந்தது
அதைதான் தூசித்தட்டினாய்
இப்போது பார்
அது மிளிரத் தொடங்கிவிட்டது

இனி
என் மனைவி மக்களை
அடிக்கடி நினைத்துக்கொள்ள  வேண்டும்.

***

நானும் சிங்கிள்தான்

 

உங்களுக்கு ஆள் இருக்கா
ம்ம் இருக்காங்க
யாரென்று தெரிஞ்சிக்கலாமா
ஓ தெரிஞ்சிக்கலாமே

என் எதிர்வீட்டில்
ஒரு ஆள் இருக்கிறான்
இந்த ஊரில்
நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்

முக்குச்சாலை டீக்கடையில்
ஒரு ஆள் இருக்கிறான்
வழக்கப்பட்ட  மளிகைக் கடையில்
ஒரு ஆள் இருக்கிறான்

பேருந்து நிறுத்தம் வரை வரும்
தோழியின் அண்ணன்
என் ஆளுதான்

வாடிக்கையாக வந்து போகும்
பேருந்தின் கண்டக்டர்
என் ஆளுதான்

கல்லூரியில்
பன்னிரெண்டு  துறைகளிலும்
தலா நான்கு ஆட்கள் இருக்கிறார்கள்

பகுதிநேரமாகப் பணிசெய்யும்
மருத்துவமனை மெடிக்கலில்
ஒரு ஆள் இருக்கிறான்

இன்ஸ்டாவில்
வாரத்திற்கு நாலைந்து ஆட்கள்
புதிதாக வந்துவிடுகிறார்கள்

ஃபேஸ்புக்கில்
காரணங்கள் ஏதுமின்றியே
2643 ஆட்கள் இருக்கிறார்கள்

இன்னும்
பால்யத்தில் தொடங்கி
இந்நாள் முடிய
விட்டக்குறை தொட்டகுறையாக
நூற்றுக்கும் மேல் ஆட்கள் இருக்கிறார்கள்

எனக்கு
சேவை செய்வதற்கென்றே
ஒரு கண்டெய்னர் லாரிக்கு
ஆட்கள் இருக்கிறார்கள்தான்

உனக்கு
எந்த ஆளைப் பற்றித் தெரிய வேண்டும்?

நீ என் ஆளாகத்தானே விரும்புகிறாய்
பிறகு ஏன்
தேவையற்ற கேள்வி கேட்கிறாய்
நெட் பேலன்ஸ் வேறு முடிந்துவிட்டது
முதலில்
9597167715 என்ற ஏர்டெல் எண்ணுக்கு
அன்லிமிட்டடு ரீசார்ஜ் செய்துவிட்டு வா
இன்று முதல் நீயும் என் ஆள்தான்…

******

divyaeesan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button