கார்த்தியின் அம்மா வீட்டைக் கழுவி முடிக்க மணி 4 ஆகிவிட்டது. ராவெல்லாம் தூங்காததால் கார்த்திக்கு கண்ரெப்பைகள் மூடித் திறக்கையில் வலித்தன. பயத்தால் விரல்கள் லேசாக நடுங்கிக்கொண்டே இருந்தன. இவனுக்கு, இவன் அக்கா கொஞ்சம் தேவலை. இவனளவுக்கு நடுக்கமில்லை. ராவெல்லாம் அழுதுகொண்டே ஊடமாட அம்மாவுக்கு உதவிக் கொண்டும் இருக்கிறாள். இவனால் என்ன செய்ய முடியும்? பழைய சேலைத் துணியில் மூக்கு, வாயோடு சேர்த்துக் கட்டி விட்டிருந்தாள் அம்மா. கண்ணை மூடச் சொல்லியிருந்தாலும் அவ்வப்போது கண்ணைத் திறந்து பார்த்து சத்தமாய் அழப்போவான். சத்தம் வந்தால் நெருங்கி வந்து அம்மா அறைவாள். அப்படி நாலைந்து அறைகள். எப்படா விடியுமென இருந்தது. இந்த இருட்டு அவனுக்கு பழக்கமில்லை. என்னதான் குடிபோதையில் அப்பா, அம்மா சண்டையிருந்தாலும் இவன் தூங்கிவிட்டிருப்பான். இன்று அப்படியில்லை. முழுராத்திரி தூங்கவில்லை. கதவிடுக்கில் வெளிச்சம் வருமென பார்த்துக் கொண்டே இருந்தான். மணி 5 ஐத் தாண்டியிருந்தது. வழக்கத்தை விட கடிகார முள் மெல்ல நகருவதைப் போல இவனுக்குப் பட்டது. எப்படியிருந்தாலும் விடிந்துதானே ஆக வேண்டும். அம்மா பேக்கில் துணிமணிகளை அள்ளி வைத்துக் கொண்டிருந்தாள். கதவிடுக்கில் மெல்லமாய் வெளிச்சம் வர இவன் நடுக்கம் மட்டுப்பட்டது. கதவைத் திறந்ததும் அம்மாச்சி வீட்டுக்குப் போகணும் என நினைத்துக் கொண்டான்.
யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அம்மா இடுக்கு வழியாக யாரெனப் பார்த்துவிட்டு அப்புறம் கதவைத் திறந்தாள். மாமாதான் வந்திருந்தார். பதறியபடி இருந்த அவர், இவனைக் கண்டு கொள்ளவில்லை. ஏதேதோ பேசிக் கொண்டார்கள். மாமாவின் நெஞ்சில் சாய்ந்து அம்மா ஓவென அழுதாள்.
கார்த்தி வீட்டைத் தாண்டி தெருவில் நடந்து கொண்டிருந்தான். சட்டை, டவுசரை முன் பக்கமாகத் தடவிப் பார்த்துக் கொண்டான். ஒன்றும் ஒட்டியிருக்கவில்லை. நேரா அம்மாச்சி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். இவனைப் பார்த்த சோருக்கு கட்டிப்பிடித்துக் கொண்டு அம்மாச்சி அழுதது. இவனும் அந்த ராத்திரியை நினைத்துக் கேவிக் கேவி அழுதான். அங்கிருந்த அத்தையும் தடிதடியான சொற்களைச் சொல்லிக் கூப்பாடு போட்டாள். அதிர அதிர அந்த நிமிடங்கள் அடக்கவே முடியாத, வெடித்த அழுகையாய்ப் பொங்கி வந்தன. அம்மாச்சி மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். அம்மாச்சி இவனை இழுத்துப்போய் உள் ரூமில் படுக்க வைத்ததும் அத்தைக்குப் போன் வந்தது. இனி என்ன நடக்கும் என இவனுக்குத் தெரியாது; பயமாக இருந்தது. இவனை விட்டு விட்டு எல்லாரும் திண்ணையில் உக்கார்ந்தும், நின்றும் பேசிக் கொண்டிருந்தார்கள். அழுகையும், சத்தமுமாக வீடு இவனை அதட்டிக் கொண்டே இருந்தது. பாயில் குத்திட்டு உக்கார்ந்து, வழிகிற கண்ணீரைப் புறங்கையால் இழுத்துவிட்டபடி அழுது கொண்டே இருந்தான். ஜன்னல் வழி நுழைந்த வெயில், கோடு கோடான கம்பியின் நிழலைச் செவ்வகச் சட்டமாக தரையில் கிடத்தியிருந்தது. தேம்பிக்கொண்டே இருந்தான். கொஞ்ச நேரத்தில் கம்பிநிழல் மெல்ல வளர்ந்து வந்து குத்திட்டு உக்கார்ந்திருந்த இவன் கால் விரல்களைத் தொட்டது. எழுந்து வந்து கம்பியைப் பிடித்துக் கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தான். பஞ்சாரக்கூடை ஒருச்சாய்த்துக் கிடந்தது. கோழியும், குஞ்சுகளும் இரை கொத்திக் கொண்டிருந்தன. துணிகாயப் போடும் கொடியில் இவனது ஸ்கூல் யூனிபார்ம் – சட்டையும், டவுசரும் – காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது.
*****
வழக்கத்தை விட சீக்கிரம் பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தான். வளாகத்தில் யாருமே இல்லை. கிளாஸ்ரூம் பூட்டு திறந்து சும்மா சாத்தியிருந்தது. உள்ள போய் உக்கார்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டான். கம்பி பந்தல் போட்ட வகுப்பு அது. மேலே பிள்ளைகள் வரைந்த படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. பேப்பர் முழுக்க சிவப்பு கலரில் வரைந்திருந்த ஒரு படத்தைப் பார்த்ததும் திட்டுத்திட்டான அந்த சிவப்பு, ராத்திரியாக விரிந்து இவனைப் பயமுறுத்தியது. முகத்தை மூடிக்கொண்டு உக்கார்ந்தவனுக்கு அழுகையோடு தூக்கமும் சொக்கிக் கொண்டு வந்தது. வலித்த கண் ரெப்பைகள், மூடிக்கொள்ள சுகமாக இருந்தன. அவனையே அறியாமல் தூங்கிப்போனான்.
மூஞ்சி ஜில்லுப்பானதும் உலுக்கி எழுந்து கொண்டான். முழித்துப் பார்க்கையில் பாமா டீச்சர் ஒரு காலை மடக்கி ஒரு காலைக் குத்திட்டு எதிரே உக்கார்ந்திருந்தார். தண்ணியை முகத்தில் அடித்தால் அலறுவான் என கையை நனைத்து முகத்தில் தடவியிருக்கிறார். நிதானித்தவன் அன்னார்ந்து பார்த்தான். சுற்றிலும் பிள்ளைகள் சிரித்துக் கொண்டு நின்றிருந்ததுகள்.
”என்னாச்சுடா?” டீச்சர் கேட்டார்.
அழ ஆரம்பித்துவிட்டான்.
”செரி செரி.. அழாதடா..
லேய்.. சொன்னாக் கேளு.. அழாத! ங்காரு லேய்.. ங்காருடா..”
தாவாங்கட்டையைப் பிடித்து முகத்தை நிமிர்த்திக் கேட்டார்.
“சாப்ட்டியா?”
இடதும் வலதுமாக தலையை ஆட்டினான்.
கூட்டிப்போய் ஸ்டாஃப் ரூமில் உக்கார வைத்து லஞ்ச் பேக்கிலிருந்து மேல் அடுக்கை எடுத்துக்கொடுத்து சாப்பிடச் சொன்னார். இதற்கு முன் இப்படி சாப்பிட்டிருக்கிறான். மறுக்காமல் வாங்கிப் போய் ஜன்னல் பக்கமாக திரும்பி சம்மணம் போட்டு உக்கார்ந்து சாப்பிடத் தொடங்கினான்.
அவனே கழுவி மேல் அடுக்கில் கோர்த்து வைத்து விட்டு வந்து,
”மேய் கம்மிங் டீச்சர்.”
”வாடா.”
…
”ஸ்கூல் பேக் எங்கடா?”
உக்காரப் போனவன், கையைக் கட்டி நின்று கொண்டு முழித்தான். டீச்சரைப் பார்க்காமல் தரையில் உக்காந்திருக்கும் பிள்ளைகளின் பக்கமாக திரும்பிப் பார்த்தான். சிரிப்பதைப் போல வாயில் கை வைத்துக்கொண்டதுகள். கண்களில் நீர் தேங்க உதட்டைப் பிதுக்கினான்.
“செரி டா அழுதுறாத.. வீட்ல சண்டையா? ”
ஆமாம் என்பது போல தலையாட்டி விட்டு, அப்புறம் இல்லையென்பது போல ஆட்டினான்.
“என்ன பேச மாட்டியா?”
கிட்டத்தில் கூப்பிட்டு அவன் கன்னத்தில் கை வைத்தபடியே தேங்கி நின்றிருந்த கண்ணீரை ரெண்டு பெருவிரல்களாலும் நீவித் துடைத்தார்.
“செரி போய் உக்காரு. பேக் நாளைக்கு எடுத்துக்கிறலாம்.ஓக்கே வா.”
அவன் தலையாட்டினான்.
”நாளைக்கு இப்டிருக்கக் கூடாது. வெள்ளிக்கிழம கண்காட்சி. தெரியும்ல. மூணுநா தான் இருக்கு ரெடியாகனும். இன்னிக்கு சாய்ங்காலம் சோலி இருக்கு. நாளைக்கு வந்து அம்மாட்ட பேசுறேன்.
பத்தரை மணிக்கெல்லாம் கார்த்தியின் மாமா வந்துவிட்டார். கிளாஸ் ரூமில் வேகமாய் நுழைந்தவர்,
“கார்த்திய கூட்டுக்கிறேன் டீச்சர்”
“ஏன் என்ன விசயம்?”
”வீட்ல ஒரு பிரச்சன டீச்சர். வந்து சொல்றேன்” என சொல்லிக் கொண்டே அவனை இழுத்துப் போனார்.
“இங்காருங்க… பொறுங்க! ப்ச்.”
டீச்சரும் பின்னாலேயே போக கார்த்தி அழ ஆரம்பித்தான். வராண்டாவைக் கடந்து போகையில் விசும்பி அழுதவனை ஓங்கி முதுகில் ஒரு அறை விட்டார்.
பாமா டீச்சர் படியில் கீழிறங்கிக் கொண்டே கத்தினார்.
“ஹெச்சம்ட்ட சொல்லிக் கூட்டிப்போங்க.. சொன்னாக் கேளுங்க.”
கிக்கரை வேகமாய் உதைத்து பைக்கை கிளப்பினார். அவருக்கு முன் பக்கம் உக்கார்ந்திருந்த கார்த்தி அழுதபடியே டீச்சரைப் பார்த்துக் கையை நீட்டிக் கொண்டே போனான்.
****
பாமா டீச்சர் காலையில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வரும் போது மணி பத்தாகி இருந்தது. தங்கச்சி வீட்டிலிருந்து வருவதால் ஒன் ஹவர் பெர்மிசன் போட்டிருந்தார். இவருக்காக காத்திருந்தது போல் எல்லா டீச்சர்ஸும் வராண்டாவில் கூடி நின்றிருந்தனர்.
”தங்கச்சி வீட்டு விசேசத்துல இருப்பீங்கன்னுதான் போன் பண்ல டீச்சர். வாட்சப் பண்ணோம் நீங்க பாக்கல.” வள்ளி டீச்சர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுதா டீச்சர் தினத்தந்தி பேப்பரில் மடித்து வைத்திருந்த அந்த பக்கத்தைக் காட்டினார்.
‘புத்தூரில் போதையில் இருந்த கணவனைக் கழுத்தறுத்துக் கொன்ற மனைவி:
கள்ளக் காதல் காரணமா? என போலீஸ் விசாரணை.
தேனி மாவட்டம், புத்தூரில் தாலி கட்டிய கணவனை, மனைவியே கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புத்தூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39), கூலித் தொழிலாளி. தினமும் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். குடி போதையில் தினமும் மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். சம்பவ தினத்தன்று, இரவில் குடித்து விட்டு, போதையில் வீட்டுக்கு வந்தவர் வழக்கம் போல, மனைவி சாந்தி உடன் சண்டை போட்டு, அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, போதை மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரின் கழுத்தை அரிவாளால் ஆத்திரம் தீர அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த மணிகண்டன், துடி துடிக்க உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த, கிழக்கு காவல் நிலைய போலீசார், இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாந்தியைக் கைது செய்த அவர்கள், இறந்த மணிகண்டன் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கு மணிகண்டனின் மது பழக்கம் தான் காரணமா அல்லது கள்ளத்தொடர்பு காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
இந்த தம்பதியருக்கு வினோதினி (13) என்ற மகளும், கார்த்தி (10) என்ற மகனும் உள்ளனர்.
இந்த கொலை சம்பவம் புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.’
‘கார்த்தி (10) ….
நம்ம கார்த்திதான்.
முகம் வெளுத்து நின்றிருந்த பாமா டீச்சரை எல்லாரும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். யார் முகத்தையும் பார்க்காமல் எச்சிலை முழுங்கிக் கொண்டார். தொண்டை அடைத்தது. நடந்து போய் ஸ்டாப் ரூமில் உக்கார்ந்து கொண்டார். டீச்சர்கள் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார்கள். உறைந்து போய் உக்கார்ந்திருந்த பாமா டீச்சர் எதையும் கவனிக்கவே இல்லை.
வருத்தப்பட்டு ஹெச்.எம் பேசும் போது மட்டும் ‘ம்ம்’ கொடுத்தார். ஆமாம், இல்லை எனத் தலையாட்டி வைத்தார்.
எல்லோரும் அந்நிமிடப் பரபரப்பைப் பேசிக் கொண்டிருக்கையில் பாமா டீச்சர் கேட்டார்..
”இவ்ளோ நடந்திருக்கு அவன் ஏன் கிளம்பி ஸ்கூலுக்கு வந்தான்??”
இது இவர்களிடம் கேட்பது போலில்லை. யாரிடமோ கேட்பது மாதிரி இருந்தது.
அவர்கள் சொன்ன பதில்களையும் பொருட்டாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அங்கு நிற்பவர்களின் முகங்கள் தவிர்த்து பிரிதொன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். கடைசியாக எல்லாரும் அங்கிருந்து கிளாஸ் ரூம் போய் விட, உட்கார்ந்தே இருந்த பாமா டீச்சர் ஹெச்.எம்மிடம்,
”நைட் இவ்ளோ நடந்திருக்கு. அவன் ஏன் சார் ஸ்கூலுக்கு ஓடி வரணும்?”
மறுபடியும் கேட்டுவிட்டு எழுந்து போனார். வராண்டாவில் நடந்து போகும் போதும் கூட அதேயே கேட்டுக்கொண்டு போயிருக்கக் கூடும். கிளாஸ் ரூம் படிக்கட்டில் ஏறும்போது ஸ்கூல் கேட்டை திரும்பிப் பார்த்தார். பைக்கில் அழுபடியே கையை நீட்டிக் கொண்டு கார்த்தி போனது ஞாபகத்திற்கு வந்தது.
***