இணைய இதழ்இணைய இதழ் 86சிறுகதைகள்

பாட்டும் தாளமும் – கமலதேவி 

சிறுகதை | வாசகசாலை

மேற்கு சன்னல் வழி அந்தி வெளிச்சம் தம்பூராவின் தண்டுகளாகத் தரையில் வீழத்தொடங்கியது. வெளியே தோட்டத்தில் கணேஷ் செடிகளுக்கு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தான். பறிக்காமல் விடப்பட்டிருந்த மிச்ச மலர்களும் உதிர்ந்தன. வெயில் குறைந்து மழை நாட்கள் தொடங்கும் காலம். வானம் வெளிச்சமும் மங்கலுமாக கண்ணாமூச்சி ஆடியது. வெளிச்சம் மங்கும் போது கண்கள் தன்னிச்சையாக மூடிக்கொண்டன. சுமதி தோட்டத்திலிருந்து வரிசையாக படுக்கையறைகள் வரை மின்விளக்குகளை ஔிரச் செய்து கொண்டே நடந்தாள். அவள் கொலுசின் ஒலி கலைந்தும், நின்றும், தயங்கியும், சடசடவென்றும் கேட்டுக்கொண்டிருந்தது. அவள் நடக்கும் போதெல்லாம் மஞ்சள் வாசம் வந்து வந்து போனது. 

“லட்சுமிஅக்கா,” என்று அழைத்தபடி நிலைப்படிகளில் மெதுவாக ஏறி தெய்வானை உள்ளே வந்தாள். மஞ்சள் நிற சுங்குடிச் சேலை. விளக்கு வெளிச்சத்தில் அவள் முகமும் மஞ்சளாகியது.

“என்ன…கொஞ்சநாளா இங்க எட்டிப்பாக்கலை,”

“கடைக்குட்டி பேத்திக்கு தலைச்சம்பிள்ளை…கை வேலை எதுவும் முடியாட்டாலும் கூடவே இருந்தேன்… சொல்லியனுப்பினேனே?”

“…”

“மறந்திருப்பேள்..விடுங்கோ,”

“….”

“எதானும் மனச விட்டு பாடுங்கோ…நீங்க பாடி ஆறுமாசத்துக்கு மேலாகறது,”

“இனிமே பாட முடியாதுன்னு தோண்றது,”

“அப்படிச் சொல்லப்பிடாது..”

“வெய்ய காலத்துல மதுரைய புழுதி மூடினாப்ல மனசுக்குள்ள எதுவோ ஒட்டிண்டுத்து…”

அவள் என் முகத்தில் இருந்து பார்வையை மாற்றி கொலுப்படிகளைப் பார்த்தாள். அவள் முகம் கூம்பியிருப்பது பக்கவாட்டிலேயே தெரிகிறது. அவளிடம் இதையெல்லாம் சொல்லியிருக்க வேண்டாம். அவளே அந்த பெரியவீட்டில் நசுங்கிதான் இங்கே வருகிறாள்.

கொலு பொம்மைகள் கண்ணிமைக்காமல் அமர்ந்திருந்தன. அவற்றுக்குப் பின்னால் இடதுபக்க படுக்கை அறையைப் பார்த்தேன். அரவமில்லை. கண்ணிமைகள் தாழ்ந்து தானாக மூடிக்கொண்டன. சோபாவில் தலை சாய்ந்து கொண்டது.

மதுரையிலிருந்து தனியாகக் கிளம்பி மெட்ராஸ் சென்ட்ரலில் இறங்கிய காலையில் இருட்டு விலகியிருக்கவில்லை. நான்கு திசைகளிலும் கருமை சூழ்ந்திருந்தது. ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்க சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். கையிலிருந்த பையில் இரண்டு சேலைகள். கழுத்தில், காதில் ஒரு நகையுமில்லை. ஐந்து சுதேசிகள் வட்டமாகத் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆட்கள் நடமாட்டம் இருந்தது. 

அம்மாவுக்கு மிஞ்சி யாரை நம்புவது…இரவெல்லாம் அழுதழுது இமைகள் ஒட்டிக்கொள்வது போல காந்தின. அம்மா ஈரோட்டு பணக்காரருக்கு இரண்டாம் தாரமாக செல்லச் சொல்கிறாள். ‘அவருடன் சென்றால் நான் எப்படி பாடமுடியும்?’ என்று கேட்டேன். ‘உன்னையும், உன்அக்காவையும் பணம் கொண்ட ஒருத்தரோட பாதுகாப்பாக வாழ வைக்கிறதுதான் எனக்கு நோக்கம். மத்ததெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம்’ என்று சொல்லிவிட்டாள். நம்மை யாரும் முதல்தாரமாக கல்யாணம் செய்து ஊருக்கு மத்தியில் நிறுத்த மாட்டார்கள். கல்யாணமாக செய்து கொள்கிறேன் என்று சொல்வதே பெரிது என்று அம்மா சொல்வதும் உண்மை.

பொட்டில் நல்ல வலி. குனிந்து தலையில் கைவைத்து பிடித்துக் கொண்டேன். கண்களுக்குள் எரிச்சல். என்ன செய்து வைக்கிறேன் என்று புரியவில்லை. ‘வீட்டைவிட்டு இந்த ராவில் எங்கோ சென்று நிற்க நமக்கெல்லாம் தைரியம் வருமா?’ என்று இன்னேரம் மதுரை ராயன் தெருவில் பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும். எனக்கு மெட்ராஸ் புதிதில்லை. ஐந்தாறு முறை வந்து மாதக்கணக்கில் தங்கியிருந்த இடம்தான். ஆனால், அப்போது அம்மா கூடவே இருந்தாள். சுதேசிக்காரர்களின் வாதம் பலமாகக்கேட்டது. கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தேன்.

அந்தக்கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து வந்து, “யாரம்மா வருவா ? எங்க போகனும்? இந்த நேரத்துல தனியா ஒக்காந்திருக்கியே,” என்று வரிசையாகக் கேட்டார். மயிலாப்பூர் என்று சொல்ல நினைத்து “திருவல்லிக்கேணிக்குப் போகனும்” என்றேன். அவர் குதிரை வண்டிக்காரனை அழைத்து அனுப்பினார். குதிரை வண்டி ஓட ஓட பின்னால் வானத்து நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்தன.

அந்த கதராடை மனிதரின் வீட்டு வாசலில் குதிரை வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்கினேன். அவர் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார். நான் ஒருஅடி எடுத்து வைப்பதற்குள் அவர் அவசர அவசரமாக குதிரை வண்டியின் முன்பக்கம் ஏறினார். வண்டி பாதைக்கு வரும் வரை திரும்பிப் பார்க்காமல் அமைதியாக இருந்தார்.

“இந்த நேரத்துல தனியாவா வந்தம்மா,” என்று கேட்ட அவரின் குரலில் இன்னும் பதட்டம் இருந்தது

“என் விருப்பமில்லாம அம்மா ஒரு செட்டியார் கூட என்னை அனுப்பப் பாக்கறா…அவளுக்கு அதான் நல்லதுன்னு தோணுது. எப்பப் பாத்தாலும் ஒருத்தர் பாதுகாப்பில இருக்கனுன்னே சொல்றா…அங்க போய் வீட்டோட இருந்துட்டா..எப்படி பாடறது..?”

அவர் தலையாட்டுவது இருட்டில் நிழலாகத் தெரிந்தது. வண்டிக்கூட்டின் முன்புறம் தொங்கிய லாந்தர் விளக்கின் ஔி மஞ்சளாய் ஆடியது. அது அவர் முகத்தில் இருட்டையும் வெளிச்சத்தையும் மாற்றி மாற்றிக் காட்டியது. எப்படி சில மாதப்பழக்கத்தில் இவரிடம் இதையெல்லாம் சொல்கிறேன். சுதேசி என்ற நம்பிக்கைதான். பிறத்தியார் ஒருத்தரை நான் நம்பறது எனக்கே ஆச்சர்யம்.

குதிரைக்காரன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். கொஞ்ச நேரம் ‘டக் டக்’ என்று குதிரையின் காலடி சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சுழன்று வேகமாக வண்டிக்குள் நுழைந்த காற்று உடலை நடுங்க வைத்தது. உடலை குறுக்கிக் கொண்டு கூண்டின் பானைநார் வளைவில் நன்றாகச் சாய்ந்து கொண்டேன். நேற்று மத்தியானம் சாப்பிட்டது. வயிறு உள்ளுக்குள் குடைந்தது. சில்லிட்ட கைகளை சேலை முந்தானையில் தேய்த்து கொண்டேன்.

“தியாகராஜன் இருக்கார்ல்லம்மா..விகடன்ல வேலை பாக்கறாரே… அவரிண்ட ஒன்னை ஒப்படைக்கிறேன்..அவருக்கு இந்த பாட்டு விவகாரமெல்லாம் தெரியும்..அவர் பார்த்துப்பார்…”

நான் எதுவும் பேசாமல் வானத்தைப் பார்த்தேன். ஒரு கச்சேரிக்குப் பிறகு விகடன் பத்திரிக்கையில் இருந்து என்னைப் பற்றி புத்தகத்தில் எழுத வேண்டும் என்று தியாகு இந்த கதராடை மனிதருடன் வந்த நாளன்று அம்மா அவ்வளவு சந்தோசப்பட்டாள். புதிதாக ஒரு கீர்த்தனையை பாடம் பண்ணினது போல ஒரு பரவசம் எனக்கும் இருந்தது. பாடம் பண்ணின கீர்த்தனையை திரும்பத் திரும்ப பாடிப் பார்க்கனுன்னு தோணுமே அந்த மாதிரி உள்ளுக்குள் ஒரு ஈர்ப்பு.

குதிரை ஒரு முறை தயங்கி நின்று வண்டியை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு திரும்ப நடந்தது.

இன்னைக்கு அவர் முன்னாடி போய் கதியத்தவளா நிக்கனுமா? அப்படியே திரும்பி மதுரை போயிட்டா என்ன? அங்க போய் அம்மா சொல்றபடிக்கு வாழ முடியுமா?

“நேக்கு இந்த சத்தியாகிரஹ போராட்டத்துல தான் கொஞ்சம் லோக விவரம் உண்டு கேட்டியா..நீ என் தங்கையாட்டம்.. தப்பான எடத்துல ஒன்னை ஒப்படைக்க மாட்டேன்..என்னை நீ வித்தியாசமா நினச்சுரப்படாது…” என்ற கதராடைக்காரர் பதிலை எதிர்பார்த்து நான் ஒன்றும் பேசாததால் பெருமூச்சுடன் திரும்பி பாதையைப் பார்த்தார்.

மதுரையில் இருந்து கிளம்பி விடலாம் என்று நினைத்த போது முதலில் தியாகுவின் முகம்தான் மனதில் வந்தது. பின்புதான் இவரும் இருக்கிறாரே என்று நினைத்தேன். அவரிடம் தானாகச் சென்று நிற்க எதுவோ தடுக்கிறது. 

இப்படி அகாலத்தில் வீட்டை விட்டு வந்து அந்த கண்களின் முன் தனித்து நிற்பதை நினைக்கும் போதே உடல் பதறுகிறது. அம்மா பக்கத்தில் இல்லாமல் ரயில் ஏறும் போதே தைரியம் குறைந்து விட்டது. ஒவ்வொரு சத்தத்திற்கும் பதறி திரும்பித்திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போதும் ரயிலில் பயணப்படும் போது ஏகாந்தமாக ஐன்னலை பார்த்துக் கொண்டு மனதிற்குள் பாடிக்கொள்வது இன்று நின்றுபோயிருந்தது. 

கோவிலைக் கடந்து அந்தத் தெருவில் வண்டி நுழைந்தது. ஒவ்வொரு வீட்டிலும் வரிசையாக மாடங்களில் பிறை விளக்குகள் மின்மினிகள் போல முனுக் முனுக்கென்று சுடர்ந்து கொண்டிருந்தன. வண்டி நகர நகர பின்பக்கம் கோவில் கோபுரம் தெரியத் தொடங்கியது. பறவைகள் விருட்டென்றும் மெதுவாகவும் பறந்து மறைந்தன. கோபுரம் கண்களில் இருந்து மறைய மறைய தரை கண்களுக்குள் வந்தது. ஒரு புறா தரையில் மெதுவாக இறங்கி கோலமிட்ட அரிசி மாவை கொத்தத் தொடங்கியது.

கண்களை திருப்பிக் கொண்டு வரிசையாக வாசலில் கோலமிடும் பெண்களைப் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் வண்டி வேகம் குறைந்து நின்றது. கதராடை மனிதர் அந்த வீட்டின் உள்ளே சென்றதும் கீழே இறங்கி பின்புற சட்டத்தில் சாய்ந்து கொண்டேன். இவரும் எதாவது சாக்கு போக்கு சொல்லித் திருப்பிவிட்டால் திரும்ப மதுரைக்கு போய் அம்மா முன்னாடி நிக்கனும். அம்மா சொல்றதுக்கு தலையாட்டனும். யோசனையை வெட்டிவிட்டு தலையை உயர்த்தினேன். வீட்டின் முன் மாடத்தின் பிறைவிளக்கின் மினுக்… மினுக். சட்.. சட்டென்று இருக்கறதும் இல்லாமலாகறதுமா ஒரு விளையாட்டு. என்னா ஒரு தடித்தனம் எனக்கு..எப்படி இப்படி வந்து நிக்க முடியறது? ஈரோட்டுக்கு போனாலும் இதே ஒதுக்கம்தான். எங்கேயும் சமனமா யாரும் ஏத்துக்கப் போறதில்லை. 

வாசல் பெருக்கும் பெண் என்னை ஒரு முறை உற்றுப்பார்த்து விட்டு கோலப்பொடியை எடுத்தாள். பேசுவதா வேண்டாமா என்ற சஞ்சலத்தில் புன்னகைத்தபின் குனிந்து ஐந்துப்புள்ளியில் சிக்கல் கோலமிட்டு காவி சுற்றுப்பட்டை வரையத் தொடங்கினாள். அரவம் கேட்டு நிமிர்ந்து ஒதுங்கினாள்.

பரபரவென்று வாசலுக்கு வந்த தியாகு வேட்டியும், முண்டா பனியனும், மேல் துண்டும் போர்த்தியிருந்தார்.

“உள்ள வராம வேத்தாளாட்டம் வெளியவே நிக்கறேளே,” என்றவாறு என் கைகளில் இருந்த பையைப் பார்த்து கை நீட்டினார். அனிச்சையாக நீண்ட கைளில் இருந்து பையை வாங்கிக்கொண்டு என் பார்வையைத் தவிர்த்து அந்தப் பெண்ணிடம், “பார்வதி…வேலையை சுருக்க முடிச்சுட்டு காஃபி கலந்து எடுத்துட்டு வா,” என்றவாறு படிகளில் ஏறினார். மறுபடி திரும்பி என்னை பார்த்து, “சங்கோஜப்படாம வாங்கோ,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

“அவா இல்லையாண்ணா…?”

“பிரசவத்துக்கு தோப்பனார் ஆத்துக்கு போயிருக்கா..”

“அவா இருப்பானில்ல இவளை அழைச்சுட்டு வந்தேன்… வயசுப்பொண்ணு தனியா வந்திருக்கா..இப்ப என்ன பண்றது…நேக்கு ஆத்துல அவ்வளவு தைரியம் பத்தாதுன்னா..”

“அவ இல்லைன்னா என்ன? இங்க இருக்கட்டும்..நீங்க என்னை நம்பலாம்,”

“அதுக்கில்லை…”

“சித்தி பொண்ணு பார்வதி இங்கதான் இருப்பா…எனக்கு சமைச்சு போட வந்திருக்கா…இவா ஒராளுக்கு எடமில்லையா என்ன? இங்கயும் ஒரு பழைய தம்பூரா இருக்கு..விசனப்படாதேள்,”

பேசும்போது முகத்தில் போலியாக எதுவுமில்லை.

அந்தத் தம்பூராவை சிறுவயதிலிருந்தே வைத்திருக்கிறார் என்று பார்வதி ஒருமுறை சொன்னாள். சில நாட்கள் ஏதாவது நினைத்துக் கொண்டவராக அவர் அதன் தந்திகளை வருடிக்கொண்டு நிற்பதைப் பார்த்திருக்கிறேன். எதாவது சத்தம் கேட்டு மனம் கலையும் வரை அப்படியே நிற்பார். 

அபிதா அக்கா குழந்தையுடன் வரும்போது எனக்கு வீடு பழகியிருந்தது. அடுத்த நாள் காலையில் தம்பூராவுடன் அமர்ந்ததும் பார்வதிக்கும் எனக்குமான அந்த சின்ன அறைக்குள் ஒரு வண்டு புகுந்து கொண்டது. அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாட்களிலும் அதன் ரீங்காரம் அறைக்குள் சுற்றி சுற்றி வந்தது. பார்வதி கிளம்பி ஊருக்குச் சென்றுவிட்டாள். அந்த வண்டு எப்போது கொட்டுமோ என்ற பதட்டம் நாள் முழுவதும் இருந்தது. இரவு படுக்கும் போதும் இருட்டில் வண்டின் முரலல் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு நாள் காலை வண்டின் முரலலுடன் சேர்ந்து என் குரல் தயங்கித்தயங்கி நின்றது. வைகைக்கரையில் அப்போதுதான் சேறு எடுத்து வைத்த கரையில் கால்களை வைத்ததைப் போல திரும்பத்திரும்ப வழுக்கிக் கொண்டிருந்தது. பட்டென்று “லட்சுமி,”என்று அதட்டிய குரலால் பதறி தம்பூராவின் தந்திகளில் இருந்து விரல்கள் நழுவ கண்களைத் திறந்தேன்.

“நம்ம தெரு கோடியில சுஜி வீட்ல பிள்ளைகள் சாதகம் பண்ணுவா..அங்க ஒரு ஆள் இருந்தா தேவலைன்னு சுஜி புலம்பிண்டிருந்தா..நீ காத்தாலையும் சாயரட்சையும் அங்க போனா அவாளுக்கு உபகாரமா இருக்கும்,” என்று சொல்லிவிட்டு விடுவிடு என்று புழக்கடை பக்கம் சென்ற தியாகுவின் முதுகுப்பக்கம் தெரிந்தது. அது கிணற்றடி கைப்பிடிச் சுவரின் பக்கம் கொஞ்ச நேரம் அப்படியே நின்றது. பின் இடது பக்கம் மறைவது வரை தம்பூராவில் விரலோட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். ஆனால், கைகால்களில் ஒரு அசவுகர்யம் மத்தியான்னம் வரை இருந்தது. தந்திகளில் விரல்களை ஓட்டமுடியவில்லை.

அத்தனை ஆட்கள் வந்து போன மதுரைவீட்டில் கூட இத்தனை பதட்டம் இல்லை. ஐந்தாறு ஆட்கள் உள்ள மெட்ராஸ் வீடு எப்போதும் எனக்கு அதிர்ந்து கொண்டே இருந்தது. அந்த அதிர்வில் என் தம்பூரா நழுவி விழாமலிருக்க மதுரை வீட்டை விட இன்னும் இறுகப் பிடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அரூபமாக இன்னொரு கரம் என்னை விட அழுத்தமாய் தம்பூராவை பிடித்திருப்பதை அந்த வயதில் அறிந்தேனா இல்லையா என்று தெளியத் தெரியவில்லை. அன்று எனக்கு வேறு போக்கிடம் இல்லை.

பித்தளை பூக்கூடையை தரையில் வைக்கும் சத்தம் கேட்டு கண்களைத் திறந்தேன். சுமதி பூச்சரங்களை கொலுப்படிகளின் விளிம்புகளில் சுற்றி கோர்த்தாள். தனி மலர்களை அங்கங்கே வைத்துக் கொண்டிருந்தாள். அந்த சிவந்த செம்பருத்தி இருப்பதிலேயே பெரிய பூவாக இருக்கிறது. தனியாகத் தெரிந்த அந்தப்பூவை எடுத்த அவள், கண்களை சுழற்றிப் பார்க்கிறாள். சில நொடிகளுக்குப் பிறகு குழந்தை கண்ணனுக்கும் பார்த்தசாரதிக்கும் இடையில் அந்தப்பூவை வைத்தாள்.

வெளியே லயமில்லாத தண்ணீர் சத்தம் மனதைக் கலைத்தது. அவள் வளையல் லயமில்லாமல் ஓசை எழுப்ப பரபரவென்று ஒவ்வொரு பாவையின் காலடியிலும் பூக்களை வைத்தாள். இந்த உலகமே லயமில்லாமல் ஓசைகளாக கலைந்து கிடக்கிறது. காதுகளை மூடிக்கொள்ளலாம் என்று நினைத்த போது சுமதி எங்களைப் பார்த்து தலையாட்டினாள்.

கால்மூட்டுகள் எழுத்திருக்க விடாமல் முரண்டு பண்ணின. சோபாவின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றேன். இடுப்பில் வலி. முதுகுத்தண்டில், கழுத்தில் வலி தெரிந்தது. தெய்வானையும் மெதுவாக எழுந்து கொண்டாள்.

சுமதி ஆரத்தி விளக்கை ஏற்றி கொலுப்படிகளின் முன்னால் வைத்தாள். தெய்வானை கணேஷிடம்,“இன்னிக்கு யாரும் பாடறதுக்கு வராளாடா..?” என்று கேட்டாள்.

“சுப்புங்கறவர் வருவார்ன்னு நடேசன் சார் சொன்னாருங்கம்மா..”

“நடேசனும் இப்ப வரதில்லையோ?”

“வாரத்துக்கு ரெண்டுல வருவன்…”என்றேன்.

“சுப்புன்னா…ஆரு…” என்று கேட்டாள்.

“டீ.வியிலெல்லாம் கூட பாடுவாரேம்மா..”

“ஓ..பாக்கியம் மாமி பேரனா..?”

“முன்னமே கிளம்பிட்டாராம்..தியேட்டர் ரோட்டுல திருவிழா கும்பலாம்…அங்கருந்து பேசினார்,” என்றபடி வெளியே சென்று வாசலைப் பார்த்தான்.

“கோகுலம் ரீலீஸ் ஆனப்ப அப்படியொரு கூட்டம்ன்னு அவர் சொன்னார்,” என்று தெய்வா பக்கம் திரும்பினேன்.

“நேக்கு அப்போ பத்து வருஷம் இருக்கும்…ஒரு வருஷம் கழிச்சு பாத்தேன்னு வச்சுக்கோங்களே…வீட்ல எல்லாரும் கோகுலம் பார்க்க போறதுங்கறது ஒரு பேச்சாவே இருந்துச்சு,”

நின்றபடியே இருவரும் கைகால்களை அசைத்து விட்டுக்கொண்டோம். 

என் மனம் கோகுலம் நடித்த நாட்களுக்குள் போனது. மணமான புதிதில் தைரியமாக அவருடன் வெளியிடங்களில் பேசுவதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கலாம். படப்பிடிப்பெல்லாம் கனவில் எங்கோ நடப்பது போல இருக்கும். இயக்குனர், “உங்க முகமே போதும்…கண்ணனை பார்த்த பரவசம் முகத்தில உண்டு..அதான் நம்ம படத்துக்கு வேணும்..பாடறச்ச இன்னும் மெருகு கூடறது,” என்று சிரிப்பார்.

படம் முடிந்த பிறகுதான் வீட்டில் இருக்க வாய்த்தது. படம் வெளியான ஒரு வாரத்தில்,“இன்னைக்கெல்லாம் ஒரே கூட்டம்…தடிகளோட போலீஸ் வந்து கலைக்கறாப்ல ஆகறது,” என்றார்.

பதில் எதுவும் சொல்லாத என் முகத்தைப் பார்த்து, “தடின்னா… சும்மா ஒரு பயம் காட்டறதுக்குன்னோ,” என்று சொல்லிவிட்டு கணக்கு வழக்கு புத்தகத்திற்குள் ஆழ்ந்து போனார். மாதக்கணக்கில் வருஷக்கணக்கில் கோகுலத்திற்கு கூட்டம் குறையாமல் இருந்தது. 

“குஞ்சம்மா…இந்தப்படம் உன்னைய எப்படி மாத்தறதுன்னு பாரு…இதுக்கு அப்பறம் நீ நடிக்கவே வாண்டாம்…கச்சேரி பண்ணினா போரும்,”

“எனக்கும் குழாக்குள்ள சிக்கிக்கிட்ட வடாம் மாவாட்டம் நடிக்கவே வரமாட்டேன்றது,” – என்றால் கண்களைப் பார்த்து சிரிப்பார். 

வீட்டில் அவரின் பிள்ளைகள், அவர் சிஷ்யபிள்ளைகள், பெரியவர்கள் என்று எப்போதும் கும்பல். ஒரு முறை இதைச் சொல்லும் போது பட்டம்மாள் வாய்விட்டு வேகமாகச் சிரித்தாள். திருமணத்திற்கு முன்பு அபிதா அக்காவுடன் இப்படி இல்லை. வழக்கமான கணவன் மனைவி அதட்டல்கள், சமாதானங்களை எட்ட நின்று பார்த்திருக்கிறேன். அவள் மறைவுக்குப்பின் என்னுடன் திருமணமான ஐந்தாறு ஆண்டுகள் கோகுலம் படம், கச்சேரிகள் என்று தன்னைச் சுற்றி கூட்டத்தை வைத்துக்கொண்டே இருந்தார். வீட்டில் இருந்தால் குழந்தைகளால் ஆன ஒரு வளையம். அக்கா போல என்னால் அவர் எதிர்க்க நின்று பேசமுடிந்ததில்லை. ‘குஞ்சம்மா’ என்று என்னை அவர் அழைக்கும் தோரணையைப் பார்த்து வீட்டில் உள்ள பிள்ளைகளும் வாயில் கை வைத்து சிரிக்கும். பெரியவளுக்கு அப்போதே விவரம் தெரிந்த வயது. பிள்ளைகள் என்னிடம் வித்தியாசம் காட்டாமல் நெருங்கியது அதனால் கூட இருக்கலாம்.

ஒரு நாள் காலை காஃபிக்கு பிறகு அவர் அறையிலிருந்து “குஞ்சம்மா…இங்க செத்த வா..என்ன பண்ற..கூப்ட்ட நேரத்துக்கு சுருக்க வரப்பிடாதோ,” என்று வழக்கமான பரபரப்புடன் அழைத்தார்.

சுதேசிகளின் அறக்கட்டளைக்காக கோதைலட்சுமி தொடர்ந்து ஐந்து கச்சேரிகள் செய்கிறார் என்ற செய்தி வெளியான ஆனந்தபோதினி, தினமணி, சுதேசமித்திரன், கலைமகள், தேசபக்தன் என்று பத்திரிகைகள் வரிசையாக விரித்து வைக்கப்பட்டிருந்தன.

“குஞ்சம்மா..இனிமே பாட்டு மட்டும் நோக்கு போரும்,”

நான் ஒவ்வொரு பத்திரிகையாகப் பார்த்தேன். ஸ்வரங்களின் லட்சுமியின் கச்சேரிகள் என்ற கருப்பு கொட்டை எழுத்துகளுக்கு கீழே திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர் ,சென்னை ஆகிய ஐந்து இடங்களில் பாடுகிறார் என்று செய்தி வெளியாகியிருந்தது.

‘என் பிள்ளைகள் மரியாதையா வாழனும்…அது மட்டுந்தான் எனக்கு வேணும்’ என்று தினமும் ஒரு முறையாவது சொல்லும் அம்மா சட்டென மனதில் வந்தாள். 

“என்ன யோசனை..வேற வேற ஊர்ல எப்படி அடுத்தடுத்து இத்தனை கச்சேரின்னா..அத நான் பாத்துக்கறேன்..கேட்டியா,” என்றபடி உற்சாகமாக எழுந்து வெளியே சென்றார். இப்படி எனக்காக அவர் கொண்டு வந்ததெல்லாம் அடுத்தடுத்த படிகளில் நான் ஏறுவதற்கான செய்திகள் மட்டும்தான். அவரால் எப்படி முடிந்தது?

எல்லோரும் சொல்வதைப் போல தியாகு ஒரு நல்ல நிர்வாகி, வியாபாரி மட்டும்தானா? ஒரு வியாபாரத் தன்மைக்கு இத்தனை வலு உண்டா?

“காஃபி குடிங்கோ..என்னக்கா தோட்டத்தையே வெறிச்சு பாக்கறேள்,” என்றபடி தெய்வா காஃபி டம்ளருடன் வந்தாள். வெளியே கார் சத்தம் கேட்கிறது. அந்த மஞ்சள் பூவிலிருந்து கண்களைத் திருப்ப பிரயாசையாக இருக்கிறது.

“அம்மா…நன்னாயிருக்கேளா?” என்ற குரல் மனசைத் திருப்பியது. 

“வாடா அம்பி…வரத்துக்குள்ள சிரமப்பட்டுட்டையா?”

“அதுக்கென்னம்மா..உங்கள பாக்க வரது பாக்கியம்..என்னால ஆரத்தி பிந்தி போச்சேன்னு ஒரு பதட்டம்..”

“நாழியாயிடுச்சோன்னோ..தீபம் காட்டியாச்சு,”

தீபத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு விரித்த பாயில் அமர்ந்தான். முப்பது வயதிற்குள் இருக்கும். சிரித்த முகம். 

“இவா…” என்று தெய்வாவைப் பார்த்தான்.

“ஒறவுதான்…நல்லா பாட்டு கேப்பாள்,”

“பாடலாமில்லையோ…” என்று புருவத்தை உயர்த்தி இயல்பாக கேட்டான். நாசூக்கான பிள்ளை. 

தலையை அசைத்தபடி எழுந்து மெள்ள அவனுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டேன். தெய்வா மூலையில் இருந்த முக்காலியில் சென்று அமர்ந்து கால்களை நீவிக்கொண்டாள். பின்னால் தம்பூராவுடன் பாலு அமர்ந்தான். இவ்வளவு நேரம் வெளியில் தெருவை பார்த்துக் கொண்டிருந்திருப்பான்.

தம்பூராவின் முதல் மீட்டலிற்கே கண்களை மூடிக்கொண்டேன். அவ்வப்போது கண்களைத் திறந்து பார்க்கும்போது அதே சிரித்த முகத்துடன் பாடிக்கொண்டிருந்தான். தெய்வா குனிந்து கண்களை மூடியிருந்தாள். முன்னால் ஆட்கள் நிறைந்திருப்பதைப் போல பார்வையை நேராக ஊன்றியிருந்தான். மறுமுறை கண்களைத் திறக்கும் போது வானம் இருட்டுக் கட்டியிருந்தது. 

“ஆடுகிறான் கண்ணன்…” என்று கடைசிப் பாடலை சுப்பு தொடங்கியதும் கண்களை மூடத்தோன்றவில்லை.

‘குஞ்சம்மா நீ வாக்கிங் போகனுல்ல’ என்ற குரல் உள்ளே கேட்டது. 

‘மனவீட்டெங்கும் ஓடுகிறான் கண்ணன்…’ என்று மறுபடி மறுபடி அதே வரிகள்.

‘நாளைக்கு கச்சேரி இருக்கு..உப்பு வெந்நீர் விட்டு ரெண்டு மூணு முறை தொண்டை சுத்தி பண்ணிக்கனும் குஞ்சம்மா’

என்னுள் பாடுகிறான் கண்ணன்..கண்ண்ண்ன்..கண்ண்ன்….

‘நாளைக்கு கல்யாணி, சங்கராபரணத்தில உள்ள பாட்டைப் பாடு…அதுல பாடறச்சதான் நீ வானத்துல நிக்கிற…’

‘காற்றென வந்தெனை…கதிரென கண்ணுள்…’ என்று வரிகள் ஓடிக்கொண்டிருந்தன. 

‘இந்த காஃபி நோக்கு வயித்துக்கு சேராது கேட்டியா..’

‘இந்த ப்ளூ கலர் பட்டு நோக்கு அம்சமா இருக்கு…’

‘இரு… நான் நெய் விளாவுறேன் நோக்கு அளவு தெரியாது..’

‘குஞ்சம்மா நில்லு முந்தானைய கொஞ்சம் நல்லா இழுத்து விட்டுண்டு மேடைல ஏறு…’

‘நீ செத்த நிழல்ல நில்லு வேர்வை கபம் கட்டும்…’

‘குஞ்சம்மா..குஞ்சம்மா…குஞ்சம்மா..’

‘மறந்துட்டனே..நம்ம கிட்டு வீட்டண்டை ஒரு கடையில வெங்காய பக்கோடா போட்டான்…நல்லாருந்துச்சு. அவன்ட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன்’

அபித்தா அக்கா இறப்புக்கு பின் அம்மா மெட்ராஸ் வந்திருந்தாள்.

“துக்கவீடாடீ இது?”

“இங்க இல்லம்மா..அவா அம்மா ஆத்துக்கு போயிருந்தா..அங்கயே..புழக்கடை இருட்ல ஏதோ விஷஜந்து தீண்டிடுச்சாம்,”

“நல்லா பேசறான்..பாத்துக்கிறான்னு இவனை நம்பிறாத…என்கூட வந்துடு. ஏன்னா..நாம பிறந்தது அப்படியாப்பட்ட எடம்..மனசுக்குள்ள நம்மள பத்தின எண்ணமே இவாளுக்கெல்லாம் வேற..விட்டுட்டு போயிட்டா..என்ன பண்ணுவ?”

‘“நம்ம வீட்டோட அப்பா இருந்ததில்லை..பெரிசா ப்ரியத்தை காட்டினதுமில்லை..யாரோ போல தானே தெருவில போவா,”

“அதுக்கென்ன இப்போ,”

“இவா குஞ்சம்மான்னுதான் என்னைய கூப்பிடறா,”

அம்மா என் முகத்தையே வெறித்துப் பார்த்தாள். “விட்டுட்டான்னு திரும்ப என்னிட்ட வரப்பிடாது..ஆமா,” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று சென்றதை தியாகு ஜன்னலில் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

“குஞ்சம்மா..இன்னும் ஒரு வாரத்துல.. திருநீர்மலையில நமக்கு விவாஹம்…”

விவாஹம் முடிந்த நான்காம் நாள் பார்த்தசாரதி கோயில் பின்புறம் கடம்ப மரத்திற்கு அடுத்த வில்வ மரத்தின் அடியில் கிடந்த கல்லில் தியாகு அமர்ந்திருந்தார். நெற்றியில் நான்கு பட்டையாக திருநீறு. எதுவோ சொல்ல நினைக்கிறார். ஆனாலும் எப்போதும் போல பார்வை மட்டும் தயங்கித் தயங்கி நிற்பது இரண்டு நாட்களாகத் தெரிகிறது. கைகளில் குங்குமத்துடன் அவரைப் பார்த்தபடி குளிர்ந்த கருங்கல் தரையில் நடக்கிறேன். ஒவ்வொரு அடிக்கும் கல்யாணியை பாடும் போது உண்டாகும் ஒன்று உடலை சிலிர்க்க செய்தது. அவர் எதிரே தரையில் அமர்ந்தேன். அந்த குளிர்ச்சிக்கு என்னை ஒப்புக்கொடுத்ததைப் போல நன்றாக சம்மணம்மிட்டு அமர்ந்தேன். அத்தனை பெரிய கோவிலின் பின்புறம் அது. கூட்டமில்லாத இடம் என்றாலும் ஒன்றிரண்டு கண்கள் எங்களை உற்றுப்பார்ப்பதை உணரமுடிந்தது. 

“இப்போ நோக்கு நிம்மதிதானே குஞ்சம்மா,”

“ம்…குழந்தைகளை பெற்ற பிள்ளைகளாட்டம் நன்னா பார்த்துப்பேன்..நீங்க எதுவும் நினைச்சு விசனப்படாதேள்,”

“அது நேக்கு நன்னாத் தெரியும்..”

“பின்ன..?” என்று அவர் கண்களை தைரியமாக முதல் முறையாக பார்த்தேன்.

“குடும்பத்தை பராமரிக்கறது நேக்கு பிடிபடுமான்னு யோசிக்கிறேளா..”

அமைதியாக இருந்தார்.

“உங்களை மீறி ஒரு நூலளவு நகர மாட்டேன்…என்னை நம்புங்கோ,”

“அதான் நேக்கு வேணும்…நான் சொல்றதை புரிஞ்சுண்டு மனசாற கேப்பியோ,”

“குடும்பம் ,குழந்தை , ஒரு மனுஷனங்ற மரியாதையெல்லாம் எனக்கு முந்தினவாளுக்கு சரிவர கிடைக்கலை…என்னவும் செய்வேன்னு முகத்துக்கு நேர சொல்றதுக்கு சங்கடம்..ஆனாலும் என் நிலமையிலருந்து நான் நம்புங்கோங்கறதை விட வேறொன்னும் சொல்றதுக்கில்லை..பாட்டு நேக்கு ரெண்டாம் பட்சம் தான்,”

“இதுக்கு பரஸ்பரம் உண்டுல்ல..குஞ்சம்மா,” 

அவர் குரலில் முன்பிருந்த குழைவு மாறி ஒரு உறுதி வந்திருந்தது.

“ஆமா… அதைத்தானே இம்புட்டு நேரமா இழுத்து கட்றேன்..இன்னும் உங்க காதுக்கு கேக்கலையா..”

“அன்னிக்கு ஒருநாள் அவசர அவசரமா ஓடி வந்து அந்த சின்ன கச்சேரி ஹால்ல இருட்டுல பின்னாடி நின்னேன்..புதுசா ஒரு பாடகி பாடறான்னு யாரோ சொல்லவும் நானும், எழுதறவரும் ஓடி வந்தோம்..அவளை திரும்பத் திரும்ப பெரிய பெரிய மேடைகளில் பார்க்கனும்,” என்றவரின் விரல்கள் என் உச்சந்தலையில் ஒரு குளிர் தாமரையாய் தொட்டது. உடல் முழுவதும் ஒருமுறை அதிர்ந்தது. உள்ளங்கை முழுவதும் விரிந்து, தலையை வருடியது. தாமரை இதழை பாதங்களில் மிதிப்பதை போன்ற உணர்வு தலையில் படிந்தது. 

என் மூச்சில் முன்பிருந்த திணறல் இல்லை. அனைத்தும் இலகுவானது. தரையில் தத்தி தத்தியபடி இருந்த புறா ஒன்று காற்றில் எம்பியது. தலையை உயர்த்தினேன். அது மரத்துக்கு மேல் காற்றில் எம்பி காணாமல் போனது. உச்சந்தலையில் அந்த தாமரை தண்மையாய் படிந்தே இருந்தது.

எதுவோ கால்களுக்கு கீழே நழுவி நழுவிப் போக என்னையறியாமல் தலையசைத்தேன். தியாகு ஏதோ பேசத் தொடங்கினார். நான் வில்வ மரத்தின் அனைத்து இலைகளும் காற்றில் அசைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘காற்றென வந்து..

கதிரென வந்து.. ‘ – என்று சுப்புவின் குரல் மீண்டும் மீண்டும் என்னை நினைவிலிருந்து உசுப்பியது.

‘குஞ்சம்மா, நீ தைரியமா இருக்கனும்…நேக்கு சுகப்படலை…’ 

நான் பக்கத்தில் அமர்ந்ததும் நரம்புகளோடி சுருங்கிய கைகளைப் பிடித்துக்கொண்டு புன்னகைத்தார். இரு கைகளிலும் எது யாருடையது என்று தெரியாது குளிரும் நடுக்கமும் பரவியது.

“தைரியமா இருக்கனும்…”

மனசுக்குள் எங்கும் அந்தக்குரல் அடைந்து நெருக்கியது. உள்ளுக்குள் அந்தக்குரல் மட்டும்தான். ஒரே புகைச்சல் மூட்டம். கமறிக்கொண்டு வரும் போல இருந்தது. மேடையில் அமர்ந்திருக்கிறேன். 

கண்ணுக்கெட்டியவரை கூட்டம். தொண்டை வறண்டு போகுமோ என்று பயம். மனதிற்குள் மீனாட்சியை நினைத்துக் கொள்கிறேன். குரலை எழுப்ப தொண்டை துடிக்கிறது. எங்கிருந்தோ பரபரவென்று ஓடி வந்து முன் இருக்கையில் அமர்கிறார். 

‘கூற்றென வந்துமிந்த கூட்டைப் பிரித்துடுவான்…கண்ணன்..’ தளர்ந்த என் குரலுடன் சுப்பு எளிதாக ஈடுகொடுத்து இழைகிறான். 

தெய்வா நிமிர்ந்து சுவரில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். கணேஷ் சன்னலைப் பார்த்து திரும்பிக் கொண்டான். தம்பூரா விடாமல் ரீங்கரித்தது. மதுரை வீதிகளில் மழை பெய்து கொண்டிருந்தது. நான் மழையில் நனைந்தபடி ஓடுகிறேன். ‘குஞ்சம்மா..’ என்ற குரல் எங்கிருந்தோ தலைக்கு மேல் கேட்கிறது.

*********

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button