ஒப்புக் கொள்கிறேன்
உன்னோடிருந்த காலங்களில்
நான் அத்தனை பால்யத்தையும் மீட்டெடுத்திருந்தேன்
நில்லாமல் இரட்டிப்பாகிய எனக்கு
பகல் நிழலாய் நீ தெரிய
உன் முகம் கையேந்தி
கண் நிறைத்துக் கொள்கிறேன்
மீளுருவாக்க முடியாத நேற்று
நம் பந்தம்
உன் கண்படும் தூரத்தில்
இருந்துமில்லாமல்
மினுங்கியபடி இருப்பேன்
துருவ வெள்ளியாய்…
வாய்பொத்தி எனை மன்னியாதே
இயன்றவரை தூற்று
என் நினைவுச் சுவடுகளை சிதை
என்னிலிருந்து விடுதலையாகு
தனித்தெழு
மகிழ்ந்திரு
நீயென் கண்படும் தூரத்தில்
இருந்துமில்லாமல்
மினுங்கியபடி இருப்பேன்.
***
மெத்தப் பசிக்கிறது
அணு உலையாகிறது வயிறு
நேற்றின் பருக்கை
உன் வயிற்றில் மீதமிருக்கலாம்
பசி வேகத்தில்
நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறேன்
மோவாய் கடுக்குவதால்
பற்களைப் பற்கள்
கடித்துக் கொள்கின்றன
நீருக்கென்றும்
தீயை அணைக்கும் திராணியில்லை
தெரியாதா உனக்கு?
பரவும் தீயை
அணைக்கும் வலு
எதிர்த்திசை பரவும்
பெருந்தீக்கே சாத்தியம்
என் வயிற்றில் கை வை
எப்படிக் கொதிக்கிறது பார்.
***
தருவிக்கத் தேவையில்லை என
உன் சமையலைத் துவங்குகிறாய்
குழந்தைகளின்
தேர்வு நெருங்குவதாக அவர்களை
நெருக்கியபடி இருக்கிறாய்
தினமும் பேசும் தாயுடன்
நேரமிழுத்துக் கதைக்கிறாய்
தனிமையில் நான் கொறிக்க
நொறுவல் செய்து நேரங்கடத்துகிறாய்
சுற்றுலா புகைப்படங்களை
மடிக் கணிணியில்
ஏற்றித்தரப் பணிக்கிறாய்
விடுதி கிளம்பும் சிறுபிள்ளையாய்
முதல் நாளெல்லாம்
உன் மடியில் அழுது தீர விரும்புகிறேன்
வயதின் பக்குவம்
பிரிவை
ரத்தம் சொட்டச் சொட்ட
சின்னாபின்னமாக்குகிறது.
********