கால மா கோலமதில்
சிறு கல்தான்
முக்கால் உலகு
கடலால்
ஊடுருவலைத்
தடுக்க முடியவில்லை
நீ
என்னவோ
ஏன் இன்னும்
என்னை மறக்கவில்லை
என்கிறாய்.
****
எது ஞானமோ
அதைக் கண்டடைந்து பின்
ஒன்றாமல் விலகுவேன்
அறிவின் முதிர்ச்சி
கவனம் பிசகா விழிப்பு
கனவென்னும் மாயம்
என்று கூறுவதையெல்லாம்
புடம் போடுவேன்
என் தேடலின் பரிசுகள்
ஜூவாலையாய் மின்னும்
ஈரத்தை உண்ணும்
கனவையன்றி
வெறென்ன நிஜமென
விழிப்பின்
அழிவில் கூத்திடுவேன்
இவை
சாத்தியமாகும் காலம் வரை
நீரோடையில்
மூழ்காப் பச்சிலையாய் நகர்வேன்
பளு சுமக்கும் இதயம்
வெறுமையால் பூர்ணமாகும்
புலம் தோன்றாப் புனைவைச்
சாத்தியப்படுத்தும்
கதைகள் படைக்கப்படும்
அவ்விடம்
எல்லா உயிர்க்குமாய்ச் சமைக்கப்பட்டிருக்கும்
ஒற்றை மனத்தை
யாராலும்
இனங்காண முடியும்
கூட்டிசைவு தனித்ததாயும்
தனித்தன்மை பொதுமையாவும்
மாற்றம் கொள்ளும்
சாதுர்யத்தால்
பிழைக்க நேரும்
அவலம் தரிக்காது போகும்
அது
மரணத்தை விஞ்சி நிற்கும்
பிறப்பைக் கொண்டாடித் தீர்க்கும்
காலத்தை எண்ணாது கழிக்கும்
இருப்பை உள்ளபடி சுவைக்கும்
பின்
மயக்கத்தின் பித்து
மழிக்கப்பட்டதாய்
உயிர்கள்
பிரகடனம்
செய்யும்,
கடவுள்
குழிக்குள்
கண்ணுறங்குவதை.
****
ஒப்பந்தத் துயர்
கற்பாறைகளை
என் காகிதக் கப்பலில்
சாற்றிப்
பெருவெள்ளத்தில்
பாய்ந்தேன்
புயல் காற்றாய்
என்னைக்
கோதித் தேற்றுவாய்
என நம்பி
கவிழ்க்கப்பட்டு
மூழ்குகையில் கூட
அமைதியின் நாமத்தையே
தரித்தேன்
நிச்சலனம்
என் நிரந்தர
கிரியையாகிவிட்டது
நீருக்குள்
சுவாசிக்கப் பழகிவிட்டதை
என்
அசைவுகள்
அறிவித்திருக்கும்
பூகோள நடுக்கத்தின்
சத்தம் கொண்டு
காதலின் பசையைப்
பிளக்கப் பார்த்தாய் –
கூடும் நத்தையும் போல
நானும் காதலும்
மேகஸ்தம்பத்தின்
துலாபர மெத்தையில்
தூக்கி வீசினாய்
நேசத்தின்
ஞாபகங்களால்
உயிர்வளி இன்மையிலும்
சுவாசித்து நீண்டேன்
பூமி
இறங்கையில்
விழுதொன்றை
மீட்டி
ஊஞ்சலாக்கிக் கொண்டேன்
இறுதி சிட்சையென
ரோஜாவில்
முள்ளிறக்கிப்
பீறிப்போட்டாய்
கசிந்தாலும்
சிவந்தே
நின்றேன் உன்னில்
ஒப்புக்கொண்டாய்
தோல்வியின் வறிய
துயரைச் சூடிக்கொண்டாய்
துலாபரத்தின் முள் பார்க்க
கண்கட்டைத் தளர்த்தினாய்
புதிரவிழ்ந்த ஸ்பின்க்ஸாய்
முழந்தாளிட்டாய்
ஒப்பந்தத்துக்கு வருவோம்!
என்றாய்
‘இடம்பெயர்ந்துகொள்வோம்’
என் பதிலானது
துரதிர்ஷ்டம்
தடம் மாறியதும்
துயிலின் கம்பளியோ
உனக்குப் போர்த்தப்பட்டுவிட்டது
கைமாறியது
ஏக்கத்தின் காதல்
வாதையின் காலம்
சிலிர்ப்பின் மரணம்
துக்கத்தின் ஆசாரம்
இழப்பின் நிம்மதி.
****
பார்க்கட்டும்
ஆகாயத்தே
தூக்கி விசிறிய
குழந்தையின்
வீழ்ச்சியைப் போல்
நம்பிக்கையின் படித்தரம்
ஒவ்வொரு
அங்குலமாய்ச் சரிகிறது
உன்னை நானும்
என்னை நீயும்
உதறிவிட்டு
பரஸ்பரம்
குற்றம் சுமத்துகிறோம்
சபிக்கத் தொடங்கிவிட்டது
காலம் நம்மை
இனி
முற்றிலும்
பொருள் இழந்த
அயல் சொல்லாய்
நம்மிடையே நாம்
அலைந்து கொண்டிருப்பதை
நனைந்தும் மிதக்கும்
காகிதக் கப்பலாய்
வேடிக்கை பார்க்கட்டும்
விதியின்
தாராளப் பார்வை.
****
கோலம்
அங்கன
இங்கன
என்றில்லாதபடி
உங்கன
எங்கன
என்றறியாதபடி
வந்த இடத்திலே
நின்ற கோலத்திலே
சுழல்கிறேன்
இக்கனாவென்னும் பெருவாழ்வதிலே
நேர்ந்ததெல்லாம்
அர்த்த புஸ்டி
க்ஷேம கோலம்
ஆயுள் கெட்டி
வேஷ பூர்ணம்.
****
‘இடம்பெயர்ந்துகொள்வோம்’ என் பதிலானது
துரதிர்ஷ்டம் தடம் மாறியதும்
துயிலின் கம்பளியோ உனக்குப் போர்த்தப்பட்டுவிட்டது
கைமாறியது ஏக்கத்தின் காதல்
வாதையின் காலம்
சிலிர்ப்பின் மரணம்
துக்கத்தின் ஆசாரம்
இழப்பின் நிம்மதி//