
யாருமற்ற சிலுவை
இயேசுவை சிலுவைச்சாவுக்கு தீர்வையிடுகிறார்கள்
நான் உன்னிடம் காதலைச் சொல்கிறேன்
இயேசு சிலுவை சுமக்கிறார்
நீ மறுமொழியற்று திரும்பிப் பார்க்கிறாய்
இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
நீ முதல் முறையாய் கை கோர்க்கிறாய்
இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
விரல்களை இன்னும் இறுக்கிக் கொள்கிறாய்
இயேசு மூன்றாம் முறையாகக் கீழே விழுகிறார்
சத்தமின்றி விம்மிக் கொண்டிருக்கிறாய்
இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்
உன் பேருந்து நிறுத்தம் வரப்போகிறது
இயேசு சிலுவையில் இறக்கிறார்
கண் துடைத்து, விரல் பிரித்து
விடைபெற ஆயத்தமாகிறாய்
இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்
நடத்துநர் ஓடிக்கொண்டிருந்த
பாடலை நிறுத்துகிறார்
இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுகிறார்
நான் யாருமற்ற சிலுவையை
சன்னல்வழி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
****
ஓநாய்கள்
மிச்சம் வைத்த உடல்
கழுகிற்கு
காத்திருப்பது.
****
சிலுவைக்கு பதிலாக
ஒயின் பாட்டில்களோடு
அடர்த்தி மிகுந்த
ஒரு படகு செய்திருக்கலாம்.
****
யாரோ பேசாமல் போன
வார்த்தைகளின் மத்தியில் அமர்ந்திருக்கிறது
ஒரு மௌனம்
இப்போது சாத்தான்கள்
அதனோடு
பேசத் துவங்கிவிட்டன.
****
வெகுளியான
அன்பை
எப்படி மேய்க்க முடியும்?
ஏதுமற்ற திடலில்
நடிக்கத் தெரிந்த
சொற்களை
இவைதான்
புற்கள் என்று
உங்கள் கைகளால்
விசிறி எறியுங்கள்.
****
பேய்களெல்லாம் சாத்தான்கள் ஆகிவிட்டதொரு மாதத்தில்
அம்மா விடுப்பெடுத்துக் கொள்வாள்
அப்பா பொறுப்பேற்றுக் கொள்வார்
விளக்கில்லா வீடுகளின்
வால் நட்சத்திரங்கள்
இரவைக் கிழித்து
தூவும் வெளிச்சத்தின்
நிழல் பிடிக்கும்
எதிர் வீட்டு திண்ணைக்கும்
இரகசியமற்று சிரிக்கும்
யாரோ ஒருவளின்
கையசைப்பில்
தாடி தைத்து
தாத்தாவானதை மறந்த
பாலு அண்ணனுக்கும்
சர்ச்சுக்கோ காதலுக்கோ
மெழுகுவர்த்தி ஏந்தும்
செல்விக்கும் ஸ்டீபனுக்கும்
சன்னதம் வரும் பாட்டிக்கும்
சரவண பவ அத்தைக்கும்
எல்லோருக்குமாய் பிறக்கப்
போகிறார் இயேசு
இரத்தம் தொட்டு அப்பமிடப்போகும்
இந்த நத்தாரின்
முதல் நாள்
மேரிகள்
விட்டத்தைப் பார்ப்பார்கள்
பாஸ்டின்கள்
வானத்தைப் பார்ப்பார்கள்
மறுநாள் எப்படியோ விடிந்திருக்கும்
பிதா சுதன் பரிசுத்த ஆவியின்
பெயராலே.
****
அடர் சாயத்தில்
வேறெந்த நிறமும்
கலந்துவிடாத
அப்படியொரு
பிரகாச நிழலை
முதல்முறை
பார்க்கிறான்
தலைக்கு மேலே
ஒளியில்லா
அவ்வானத்தில்
வழி தேடுபவளுக்கு
வாடகை தேதிக்குள்
எப்படியாவது
முளைத்துவிட வேண்டும்
ஒரு நட்சத்திரமாவது.
*******
அற்புதமான ஒன்று ❤️????✍️