சாந்திக்குத் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். குலதெய்வம் மாரியம்மனுக்கு பிரார்த்தனை செய்ததை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கமும் தெய்வத்தின் மீதான அச்சமும் அவளை ஆட்கொண்டது.
அவள் வயசுக்கு வந்தவள்தான். ஆனால், பதினைந்து வயதில் பிரார்த்திக் கொள்வது வயதை மீறிய செயல்தானே. பத்தாம் வகுப்பில் பள்ளிக்கூடத்திலேயே முதல் மார்க் வாங்கினால் மாரியம்மனுக்குப் புத்தாடை சார்த்தி மாலை போட்டு அர்ச்சனை செய்வதாக பிரார்த்திக் கொண்டிருந்தாள்.
பிரார்த்தனை செய்து விட்டு தனது பணி முடிந்துவிட்டதாக அமைதியாக இருந்துவிடவில்லை சாந்தி. ‘தன்னத்தனம் பிறரரத்தனம் தெய்வத்தனம்’ என்று பாட்டி சொல்லிக் கொண்டே இருப்பாள். அதன்படி தன்னளவிலான முயற்சியில் குறை வைக்கவில்லை சாந்தி. பிறர் உதவி என்னும் படியாக மிலிட்டரி சர்வீசிலுள்ள அப்பாவின் அறிவுரையும் ஊக்குவிப்பும் அம்மாவின் ஒத்துழைப்பும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் சாந்திக்கு உறுதுணையாகவே இருந்தன. மூன்றாவதாக குலதெய்வம் மாரியாத்தாவின் கடாட்சம் தன்பக்கம் எப்போதும் உள்ளதாகவே நம்பிக்கை வைத்திருந்தாள் சாந்தி. மூன்றும் வீண்போகவில்லை. எல்லாம் சேர்ந்து கொண்டு அவளுக்கு 490 மதிப்பெண்களை அள்ளித் தந்து மாவட்டத்தில் முதலாவதாக வந்தாள் சாந்தி. அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமே என்பதுதான் சாந்தி முன்னுள்ள சவாலாகிவிட்டது.
குலதெய்வத்துக்குப் புதுத்துணி மாலை போட்டு அர்ச்சனை செய்வது பெரிய வேலையா என்ன? செலவு மிகவும் அதிகமாகுமா என்ன? இரண்டுமே இல்லை என்றான பிறகு என்ன தடை இருக்கப் போகிறது என பிரார்த்திக் கொள்ளும்போதே வெகுளித்தனமாக எண்ணினாள். ஆனால், பத்தாம் வகுப்பு பாசாகி பள்ளியிலும் மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் பெற்று பாராட்டு மழை குவிந்ததை எண்ணி எண்ணி மனம் மகிழ்ந்த சாந்தி, தான் பள்ளியிலிருந்து வரும்போது வழக்கம் போல மாரியம்மன் கோவில் அருகே சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு வெளியே இருந்தபடி கண்களை மூடி இருகை கூப்பி வணங்கினாள் சைக்கிள் மீதேறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதுதான் மூளை விழித்துக் கொண்டது.
“என்ன சாந்தி, நீ பாட்டுக்கு குலதெய்வம் மாரியம்மனுக்கு பிரார்த்திச்சுக்கிட்டியே, அத நிறைவேத்த முடியுமா? இப்பவே கோயிலுக்கு வெளியே ஓரமா நின்னுதானே ஆத்தாவக் கும்பிட்ட. அப்படியிருக்கும்போது கோயிலுக்குள்ள போகத்தான் முடியுமா? பூசாரி ஐயர்கிட்ட புதுத்துணி குடுத்துட்டதா அம்மனுக்கு சார்த்தத்தான் முடியுமா? அர்ச்சனை செய்யத்தான் முடியுமா? ஊராளுங்க சும்மா விடுவாங்களா?”
இப்படி கேள்விக் கணைகளால் துளைத்த மனதின் குரலுக்கு பதில் தர முடியாமல் மதிப்பெண் கொடுத்த இன்பம் புஸ்வாணம் போல் ஆனது சாந்திக்கு.
வீட்டுக்கு வந்ததும் சைக்கிளை மஞ்சம் புல் வேய்ந்த குடிசையின் தாழ்வாரத்தில் நிறுத்திவிட்டு வழக்கம்போல் அம்மாவை அழைத்தபடி உள்ளே சென்றாள். அம்மா தகவல் அறிந்தவளாய் ஆலம் கரைத்து எடுத்து வந்தவள் சாந்தியை வெளியே வரச் சொல்லி வீட்டுக்கு வெளியே நிறுத்தி ஆலம் கரைத்த தட்டில் கற்பூரத்தை ஏற்றி அவளை மூன்று முறை சுற்றி சாந்தியை உள்ளே போகச் சொல்லிவிட்டு கற்பூரம் அணையாமல் வீட்டெதிரில் தரையில் லாவகமாக விட்டு நிமிர்ந்தாள்.
“என்ன அஞ்சலி? ஒன்னுமே குடுக்காம வெறும் ஆலத்தோட முடிச்சிடப் போற.”
“உள்ள போயி லட்டு எடுத்துட்டு வாடி”
“சாக்லெட்டாவது எல்லாருக்கும் குடுடி”
“வூட்டுக்காரன் மிலிட்டரியில் கெடக்கான். இந்தளவுக்கு அஞ்சலியே ஒத்த ஆளா ஊக்கம் குடுத்து சாதிச்சிட்டா”
“பரவால்ல, நான் சொல்லனும்னு நெனச்சத அஞ்சலி செஞ்சிட்டா. ஆலங்கரச்சி சுத்தினது சூப்பர்”
இப்படியாய் தாய்க்குலங்களின் பேச்சுகளுக்கு இடையே புன்முறுவலை மட்டும் பூத்தவளாய், “இருங்க இதோ வரேன்” என்றபடி உள்ளே நுழைந்தாள். எதிர்பார்த்தபடி சாந்தி முகம் கழுவி தன்னைச் சரிசெய்து கொண்டு தோட்டத்திலிருந்து வந்தாள். தட்டு நிறைய சாக்லேட்டை வைத்து மகளிடம் தந்து வெளியே இருப்பவர்களிடம் கொடுக்கச்சொன்னாள் அஞ்சலி.
சாந்தி வெளியே சென்று எல்லோரிடமும் சாக்லெட் கொடுத்தாள்.
“நீ கும்புடுற மாரியாத்தா உன்னக் கைவிடல. பேர் சொல்ற மாதிரி பள்ளிக்கொடத்துலயும் மாவட்டத்ததிலயும் மொத மார்க்க கை நெறைய குடுத்திருக்கா மாரியாத்தா”
பெருசு சொன்னது இப்போது படுக்கையில் கிடந்த சாந்திக்கு மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.
தான் பிரார்த்திக் கொண்டது அந்தப் பெருசுக்கு அப்போது தெரியாது. தெரிந்த பிறகு அஞ்சலியிடம் பெருசு சொன்னதை சாந்தியிடம் சொல்லி விசனப் பட்டாள் அம்மா. அந்த வார்த்தைகள் இப்போது அலைமோதியது.
“சாந்தி, பிராத்தனய நெறவேத்தலன்னா தெய்வக்குத்தம் ஆயிடும்னு சொல்லுது பெருசு. நீபாட்டுக்கு யாரையும் கேக்காமலே பிரார்த்திச்சுக்கிட்ட, நாம கோயிலுக்குள்ள போகமுடியாதுன்னு தெரியுந்தானே உனக்கு. இப்படி ஒரு பிரார்த்தனய பண்ணலாமா?”
உடனே தான் பதில் சொன்னதும் இப்போது வந்து போனது.
“அம்மா, பிராத்திக்கும்போது இதல்லாம் எனக்கு ஞாபகத்துக்கு வரல. இப்ப என்ன பன்றதுன்னு மட்டும் சொல்லு”
அஞ்சலி எதுவாயிருந்தாலும் கணவன் கௌதமைக் கேட்காமல் செய்ததில்லை. இந்த விசயத்திலும் அப்படித்தான்.
மகள் படிப்பில் செய்த சாதனை கௌதமைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. கூடவே சாந்தியின் பிரார்த்தனை தகவல் புளகாங்கிதத் தடை செய்தது.
“கால அவகாசம் எடுத்துக்கொண்டு பிரார்த்தனையை நிறைவேத்தலாம். நீ எதுக்கும் கவலைப்படாதே. இதே மாதிரி பிஸ் ஒன் பிளஸ் டூ வில் நிறைய மார்க் எடுக்கனும். கூடவே அரசு நமக்கு நீட் கோச்சிங் இலவசமாக குடுக்கிறதப் பயன்படுத்திக் கண்ணும் கருத்துமா படிக்கனும். நம்ம சேரியில் ஒரு டாக்டர் வர்றத நம்ம ஊரே பாத்து ஆச்சரியப்படனும். சரியா?”
“அப்பா, பிரார்த்தனைய நிறைவேத்தலனா தெய்வக்குத்தம் ஆயிடும்னு பெருசுங்க சொல்றாங்க. பயமா இருக்குப்பா”
“சரிம்மா, நான் சீக்கிரமாவே ஏற்பாடு பண்றேன்.”
இந்த வார்த்தைகளின் நினைவுகளோடு தூக்கம் தழுவியது சாந்திக்கு.
அப்பா சொல்லி பத்தாவது நாள் தாசில்தார், டி.எஸ்.பி. இன்ஸ்பெக்டர், ஆர்.டி.ஓ, ஆர்.ஐ, வி.ஏ.ஓ என ஒரு பட்டாளமே ஊருக்கு வந்து பஞ்சாயத்து ஆபீசில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியது.
“எங்களுக்குக் கருத்துத் தெரிஞ்ச நாள்ள இருந்து ஊர்ல இருக்கிற மாரியம்மன் கோவிலுக்கு சேரி ஜனங்க வெளிய இருந்துதான் கற்பூரம் ஏத்தி சாமி கும்பிட்டுப் போவாங்க. ஊரு அமைதியாய் தான் இருக்கு. இப்ப ஏன் நீங்களாகவே இந்தப் பிரச்சினைய கிளப்புறீங்க” – ஊர் நாட்டாமையும் கோயில் தர்மகர்த்தாவுமான பரசுராமன் கேட்டார்.
“நாங்களா வரல. மிலிட்டரி மேலதிகாரிங்க மூலமா கலெக்டருக்கு மெயில் வந்திருக்கு. நம்ம ஊர்ல கோயில்ல தீண்டாமை இருக்கு. அதை முடிவுக்குக் கொண்டு வரனும்னு பிரஷர். அதுல நியாயமும் இருக்கில்ல”
ஆர்.டி.ஓ. பேசும்போதே தலையை ஆட்டிக் கொண்டே இருந்தார் தாசில்தார்.
“எனக்கு தெரிஞ்சிடுச்சி, இதுக்கெல்லாம் யார் காரணம்கிறது! நம்ம காலனியில் இருந்து மிலிட்டரியில் வேலை செய்றது நாலு பேரு. அந்த நாலு பேருல துடுக்கானவன் கௌதம்தான். அவன் வேலையாத்தான் இருக்கும். அதுவுமில்லாம அவனோட மகள் ஸ்கூல்லயும் மாவட்டத்திலயும் முதல் மார்க் வாங்கிட்ட கர்வம். மிலிட்டரி மேலதிகாரிங்க மூலமா பிரஷர் குடுக்க வச்சிருக்கு. மிலிட்டரி லீவில் அவன் ஊருக்கு வந்துதான ஆகனும்?” இப்படிப் பேசிய பரசுராமனை மடக்கினார் டி.எஸ்.பி.
“இதென்ன மிரட்டுற மாதிரி பேசுறீங்க. இது சரியில்லயே” என்றதும்,
“தர்மகர்த்தாவுக்குத் தன் பேரன் பார்டர்ல பாசாயிருக்கானேன்ற எரிச்சல். கௌதம் பிரஷர் குடுத்ததாவே இருக்கட்டுமே. அவனோட மகள் சாந்தி மாரியம்மனுக்கு பிரார்த்தனை பன்னியிருக்கா. அத நிறைவேத்த நாங்க கோயிலுக்குள்ள போனாத்தான முடியும்?” – என்று நிதானமாகப் பேசிய சேரி நாட்டாமையைப் பார்த்து,
“நல்லா அமைதியா இருக்கிற ஊர்ல பிரச்சனை கெளப்பலாம்னு வந்திருக்கீங்க போல” என்றார் பரசுராமன்.
“இந்தப் பஞ்சாயத்து ஆபீஸ்ல சேரிப் பகுதி வார்டு மெம்பர் நான் இருக்கேன். ஒன்னா உக்காந்துதான் பஞ்சாயத்துக் கூட்டம் போடுறோம். அதில் வராத தீட்டு, நீங்க செத்தா உங்கள எரிக்க பொதைக்க நாங்க செய்ற செயல்கள்ள வராத தீட்டு, எல்லாருக்கும் பொதுவான சாமி கோயில்ல நாங்க போனா வருதாக்கும்?” – என்று சேரிப் பகுதிக்கான வார்டு மெம்பர் பேசியதும் கூச்சல் குழப்பமாகி ஊராட்கள் வெளிநடப்புச் செய்தனர். வருவாய் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கத்தியபடியே வெளியேறினர் ஊராட்கள்.
“நீங்களே பாருங்க சார். ஒத்துப் போகனும்கிற எண்ணமில்லாம பிச்சிக்கிட்டுப் போறாங்க. கலெக்டர் கிட்டப் பேசி முடிவெடுங்க. ஒரு தேதியச் சொன்னா அன்னிக்கி சாந்தியோட பிரார்த்தனய நிறைவேத்திக்கிறோம். அப்புறம் என்ன நடக்கிறதோ பார்ப்போம்” – சேரி நாட்டாமை சொல்லிவிட்டு எழுந்தார். கூடவே சேரிவாழ் முக்கியஸ்தர்கள் எழுந்து கலைந்து சென்றனர்.
ஒரு வாரம் கழித்து கலெக்டர் வருகையையும், சாந்திக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தி அவளது பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் சேரி மக்களின் ஆலயப் பிரவேசம் நடக்கப் போவதையும் ஊருக்கும் சேரிக்கும் வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சொல்லிவிட்டுப் போனார்கள்.
ஊர்க் கூட்டம் போட்டு கலெக்டர் வருகையைப் புறக்கணிப்பதென்றும் ஆலயத்தில் சேரி ஜனங்கள் நுழைவதை அனுமதிக்கப் போவதில்லை எனவும் முடிவெடுத்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துவிட்டார்கள் நாட்டாமை வகையறாக்கள். தகவல் கலெக்டருக்குப் போனது.
அந்த ஊரின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுக்கா தலைநரத்துக்குத் தனி அரசுப் பேருந்து டவுன் பஸ் கோரிக்கை நிலுவையாக இருப்பதை நிறைவேற்றினால் நம்பக்கம் மக்கள் நிற்பார்கள் என்று சீனியர் அதிகாரிகள் கலெக்டர் கூட்டத்தில் தெரிவித்தனர்.
கலெக்டர் சமயோசிதமாக புதிய டவுன் பஸ் விடுவதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்தார். பஸ்ஸைக் கொடியசைத்துத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியையும் சாமர்த்தியமாக நிகழ்வில் சேர்த்துவிட்டார் கலெக்டர்.
புதிய டவுன் பஸ் வருவது எல்லோருக்குமே மகிழ்ச்சியைக் கொடுத்தது. பெண்கள் இலவசமாக டவுனுக்குப் பயணிக்கும் வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தனர். புதிய டவுன் பஸ் விடுவதற்கு வரும் கலெக்டரை சேரி ஜனங்களுடன் கோயிலுக்கு வராதே என்று எப்படிச் சொல்வது? என்பதே இப்போது பெரிய கேள்வியாக இருந்தது. டவுன் பஸ் இந்த நேரத்தில் வந்தால்தான் உண்டு, இதை விடக்கூடாது என்றனர். பத்தாண்டு கால கோரிக்கை கைகூடுவது குறித்து மகிழ்ந்தனர் மக்கள். நாட்டாமை வகையறாக்கள் பத்திருபது பேர் மட்டும் கரைச்சல் செய்து கொண்டிருந்தனர்.
குறித்த நாளும் வந்தது. ஊரே விழாக்கோலம் பூண்டது. இளைஞர்கள் தங்கள் ஊரிலிருந்து டவுனுக்கு பஸ் விடப்போகிறார்கள் என்பதறிந்து உற்சாகமாக தோரணம் கட்டியும் பிட் நோட்டீஸ் கொடுத்தும் கலெக்டருக்கு வரவேற்பு பேனர் வைத்தும் அசத்தினர்.
பஞ்சாயத்துத் தலைவரும் உறுப்பினர்களும் மேள வாத்தியத்துடன் கலெக்டருக்கு வரவேற்பு கொடுத்தனர். எப்போதும் எதுவும் நடக்கலாம் என்று நிலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். எஸ்.பி, டி.எஸ்.பி. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. என போலீஸ் அதிகாரிகளும் ஆர்.டி.ஓ. முதல் சிப்பந்தி வரை வருவாய் அதிகாரிகளும் புடை சூழ வந்தார் மாவட்ட ஆட்சியர். பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வெளியே போடப்பட்ட துணிப்பந்தலின் கீழ் மேசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஊரின் இளைஞர்கள், பெண்கள் உட்பட நாற்காலிகள் நிரம்பி வழிந்தன. சேரி ஜனங்கள் தனியே தரையில் விரிப்புகள் விரித்து அமர்ந்திருந்தனர். மேள வாத்தியங்களோடு சென்ற கலெக்டர் யாரும் எதிர்பாராத வகையில் தரையில் போடப்பட்டிருந்த விரிப்பில் உட்கார்ந்திருந்த சேரி ஜனங்களுடன் அமர முற்பட்டார்.
வருவாய் அதிகரிகளும் காவல்துறை அதிகாரிகளும்கூட இதை எதிர்பார்க்கவில்லை. சங்கடமாகிவிட்டது அவர்களுக்கு. சேரி ஜனங்கள் எழுந்து மரியாதை செய்தனர். ஊர் மக்கள் கலெக்டரிடம் வந்து நாற்காலிகளுக்கு வருமாறு அழைத்தனர்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு ரெண்டாயிரம் வருசங்களுக்கு முன்னாடியே வள்ளுவர் சொல்லிட்டார். நம்ம கண்முன்னாடியே அவங்கள தரையில் உக்காரவச்சிட்டு நாம நாற்காலியில் உக்காரலாமா? எல்லோரும் ஒன்னா உக்கார்றதுன்னா நாள்காலிகள்ல உக்காருவோம். இல்லன்னா இப்படியே நான் உக்காந்துக்கறேன்.” என்று செக் வைத்தார் மாவட்ட ஆட்சியர்.
இயல்பாகவே இளைஞர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.
“சார், எல்லாரும் சேர்லயே உக்காரலாம். வாங்க சார். நீங்களும் வாங்க” என்றபடி விரிப்பில் உட்கார்ந்திருந்த சேரி ஜனங்களைப் பார்த்து அழைத்தனர்.
எல்லோரும் எழுந்து சென்று நாற்காலிகளில் உட்கார்ந்தனர். பெண்கள் அலங்கரிக்கப்பட்ட புதிய டவுன் பஸ்ஸையும் கலெக்டரையும் மாறி மாறிப் பார்த்தனர்.
மக்கள் தொடர்பு அலுவலர் ஏற்கெனவே கலெக்டர் திட்டப்படி முதலில் பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்த சாந்தியைப் பாராட்டிப் பேச மாவட்ட ஆட்சியரை அழைத்தார்.
“நான் நீண்ட நேரம் பேசப் போவதில்லை. செயலே வலிமையான சொல். அதைத்தான் சாந்தி சாதித்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட ஏழையாக இருந்தாலும் வைராக்கியத்துடன் படித்து பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்து இந்த ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரையும் அவருக்கு உற்றதுணையாக தாயும் தந்தையும் ஆக இருக்கும் அஞ்சலியை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.” என்றதும் மக்கள் எழுப்பிய பலத்த கரவொலிக்கிடையே இருவரும் மேடைக்குச் சென்றது நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது சேரி ஜனங்களை மட்டுமல்ல, ஊர் ஜனங்களையும்தான்.
“இப்போது உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லப் போகிறேன். உங்களின் பத்தாண்டு கால கோரிக்கை இன்று நிறைவேறக் காரணம் சாந்தியும் அவளது அப்பா கௌதமும்தான். பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்ததை அறிந்து சாந்தியை ஆபீசுக்கு வரவழைத்து அவளது கோரிக்கை ஏதாவது இருந்தால் சொல்லும்படிக் கேட்டேன். உங்கள் ஊருக்கு டவுன் பஸ் வேண்டும் என்றார். தொலைபேசி மூலம் அவளது அப்பாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோதும் மகளைப் போலவே டவுன் பஸ் கோரிக்கையைத்தான் வைத்தார். இந்த முக்கியமான நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ள முடியாமல் நாட்டின் பார்டரில் சேவை புரியும் ராணுவ வீரரின் கோரிக்கையும், இந்த ஊருக்கு நற்பெயர் வாங்கிக் கொடுத்து பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த சாந்தியின் கோரிக்கையும் ஒன்றாக இருப்பதும் அது ஊருக்கானதாகவும் மக்களுக்கானதாகவும் இருப்பதால் அதை நிறைவேற்றியே தீர வேண்டும் என முடிவெடுத்து அரசிடம் பேசி இப்போது டவுன் பஸ் விடப்போகிறோம்.
அதே நேரத்தில் இத்தகைய பெருமைக்குக் காரணமான தான் வணங்கும் குலதெய்வம் மாரியம்மனுக்கு பிரார்த்தனை செய்ததை நிறைவேற்ற வேண்டியது சாந்தியின் கடமை. அதற்கு நாம் துணையாக இருப்போம். சற்று நேரத்தில் புறப்படும் டவுன் பஸ்ஸில் எல்லோரும் சாதி பார்க்காமல் ஒற்றுமையாகச் செல்ல இருக்கிறீர்கள். பெண்கள் அனைவருக்கும் இலவச பயணமும் பொதுவானது. அதே மாதிரி நாம் இப்போது அனைவரும் சேர்ந்து சாந்தியை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று அவளது பிரார்த்தனையை நிறைவேற்றும் அதே நேரத்தில் இனி கோவிலில் எல்லோரும் வழிபட உறுதி எடுத்துக் கொண்டு புறப்படுவோம். வாருங்கள்” என்றபடி புறப்பட, இயல்பாகவே சாந்தியும் சேரி ஜனங்களும் ஊர் ஜனங்களைம் கலந்தபடி சென்றனர்.
முன்புறம் மங்கள வாத்தியம், இருபுறமும் போலீஸ், நடுவில் மாவட்ட ஆட்சியருடன் மக்கள் என சென்றது கண்கொள்ளாக் காட்சியானது. ஊடக நபர்கள் மாறி மாறி வளைத்து வளைத்து ஒலியும் ஒளியும் ஆக்கிக் கொண்டிருந்தனர். ஆலயத்தின் முன் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துப் பேரும் எதிர்வரும் கூட்டம் மற்றும் போலீஸைக் கண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆலயத்திற்குள் மாவட்ட ஆட்சியர் முதலில் நுழைய அவருடன் சாந்தியும் சேரி ஜனங்களும் ஊர் ஜனங்களும் கலந்தபடி நுழைந்தனர். பூசாரி கலெக்டரை வணங்கினார். கலெக்டர் சாந்தியைப் பார்த்தார். சாந்தி அவளது அம்மாவைப் பார்த்தாள். அஞ்சலி பெரிய தாம்பாளத் தட்டில் அம்மனுக்குப் புத்தாடை மாலையை பூசாரியிடம் நீட்டினாள். பூசாரி தலை குனிந்து பெற்றுக் கொண்டு ‘அர்ச்சனை யார் பெயரில்?’ எனக் கேட்டார்.
கலெக்டர் சாந்தியைப் பார்த்தார். சாந்தி “அர்ச்சனை கலெக்டர் சந்துரு” என்றாள். கலெக்டர் கண்கள் கலங்கின. ஊர் ஜனங்கள், ஆங்காங்கே இன்னமும் ஒதுங்கியிருந்த சேரி ஜனங்களை முன்னுக்குச் செல்லக் கேட்டுக் கொண்டனர். முதன்முதலாக மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபடும்போது பலர் கண்கள் கலங்கின. அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார் பூசாரி.
கலெக்டருடன் சிந்தாமல் சிதறாமல் கூட்டம் போய்க்கொண்டிருந்தது டவுன்பஸ்ஸை நோக்கி. டவுனுக்குப் போகிறவர்கள் ஊர் ஜனங்களும் சேரி ஜனங்களும் ஆண்களும் பெண்களும் என ஒன்றாகக் கலந்து ஏறி அமர, மாவட்ட ஆட்சியர் சந்துரு தன்னருகிலிருந்த சாந்தியைப் பார்த்து முறுவலித்தபடி கொடியசைத்தார். டவுன் பஸ் ஒலியெழுப்பிப் புறப்பட்டது.
கீழே இருந்த கலெக்டரின் சிந்தனையும் சாந்தியின் சிந்தனையும் பார்டரில் சேவை செய்து கொண்டிருக்கும் கௌதமைச் சுற்றி வந்தது.