இணைய இதழ் 107கட்டுரைகள்

இரு சொல் கவிதைகள் – மணி மீனாட்சிசுந்தரம்

கட்டுரை | வாசகசாலை

(கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை)

இரு சொல் கவிதைகள் என இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது இரு சொற்களால் ஆன கவிதைகளை அல்ல. கவிதை முழுதும் இரு சொற்களை மையமாக வைத்து எழுதப்படும் ஓர் உத்தி பற்றியே ஆகும்.

நவீன கவிதையில் சொற்கள் தனக்கான பொருளை இழந்து நிற்கும் நிலையைப் பல இடங்களில் காண முடியும். உரையாடலில், உரைநடையில் வழக்கமான பொருளுடன் பயன்படுத்தப்படும் சொற்கள் கவிதையில் கவிஞனது மனவொழுங்குக்கு ஏற்ப ஒருவித அனுபவப் பூச்சுடன் மிளிர்கின்றன.

சொற்கள் தமது தனித்த பொருளை விட்டுக் கவிதையின் கூட்டுப்பொருள் அல்லது கவிதை உணர்த்த விரும்பும் மெய்ப்பொருளுக்குத் துணை செய்வதால் இந்நிலை ஏற்படுவதாகக் கருதலாம்.

நவீன கவிஞன் கவிதையில் வெளிப்படுத்த முயலும் ஒன்றினுக்குச் சொற்களை மட்டும் துணையாகக் கொள்ளாததும் இதற்குரிய காரணங்களுள் ஒன்றாகக் கொள்ளலாம். இத்தன்மை நவீன கவிதைச் செயற்பாட்டின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

கவிஞன் சொற்களின் துணையின்றி, தான் கூறவந்த ஒன்றைக் கவிதையில் எவ்வாறு சொல்லிவிட முடியும் என்று நமக்குக் குழப்பமாக இருக்கலாம். பொருள் தரும் சொற்களைக் கொண்டுதானே கவிஞன் கவிதையில் தான் கூற வந்ததைக் கூற முடியும் என்று நாம் எண்ணலாம்.ஆனால், உண்மையில் நவீன கவிஞன் தான் சொல்ல விரும்பும் ஒன்றினுக்கு, பொருத்தமான சொற்களை மட்டும் துணையாகக் கொள்வதில்லை. தன் எண்ணவோட்டம் எனும் வலைப்பின்னலுக்குத் தொடர்புப் புள்ளிகளாகவே சொற்களை அமைக்கிறான். அச்சொற்கள் மையமான தம் பொருளை விட்டு வலைப்பின்னலின் கூட்டுப் பொருளுக்குத் துணை செய்வதாகவே கவிதையில் அமைகின்றன. அக்கூட்டுப்

பொருள் தரும் இன்பம் நவீன கவிதை தரும் இன்பங்களுள் ஒன்றாகவும் இருக்கின்றது.

நவீன கவிதையில் சொற்களின் பயன்பாடு இவ்விதமாகவும் இருப்பதை மனதில் கொண்டே மனுஷ்யபுத்திரனின் இருசொற் கவிதைகளை அணுகுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

மனுஷ்யபுத்திரன், தான் கவிதையில் கூற விரும்புகின்ற ஒன்றை, இரு சொற்களைக் கொண்டு விளக்கிக் கூறுவதைப்போல் பல கவிதைகளைப் படைத்திருக்கிறார். அதை ஓர் உத்தியாகவே தன் கவிதையில் தொடர்ந்து பயன்படுத்துகிறார். கவிதையில் அவர் இரு சொற்களின் பொருளை விளக்குவதுபோல் தன் எண்ணங்களையே விளக்குகிறார்; தான் வேறுபடுத்திக் காட்ட விழையும் இரு உணர்வு நிலைகளுக்கான வாய்ப்பாகவே அச்சொற்களைக் கையாளுகிறார்.

கவிதை : 1

பிரிந்திருக்கிறோம்பிரிந்துவிட்டோம்

———————————————————————–

பிரிந்திருக்கிறோம் என்பதற்கும்

பிரிந்துவிட்டோம் என்பதற்கும்

இடையே

எவ்வளவு தூரம்

எவ்வளவு வேறுபாடு

பிரிந்திருப்பதில்

நீந்திச் சேர வேண்டிய

மறு கரைகள் அழைக்கின்றன

பிரிந்து விட்டதில்

மீளவே முடியாத பாதாளங்களின் இருள்

இக்கவிதைத் தற்காலிகமான பிரிவு, அதன் எல்லைகள்; நிரந்தரமான பிரிவு, அதன் எல்லைகள் குறித்துப் பேசுகிறது. கவிதையில் பயன்பட்டிருக்கும் ‘பிரிந்திருக்கிறோம்’

என்னும் சொல் தற்காலிகப் பிரிவையும், ‘பிரிந்துவிட்டோம்’ என்னும் சொல் நிரந்தரப் பிரிவையும் சுட்டுகின்றன. ஆனால், தனித்துப் பார்க்கையில் தற்காலிகம், நிரந்தரம் என்னும் பொருள்களை இச்சொற்கள் தருவதில்லை.

மொழியமைப்பில் பிரிந்திருக்கிறோம், பிரிந்துவிட்டோம் ஆகிய இரு சொற்களும் கூட்டு வினைச் சொற்கள் ஆகும். ‘பிரிந்து’ என்பது முதல் வினை எனவும், ‘இருக்கிறோம்’

என்பது துணை வினை எனவும் கொள்ளப்படும்.

பிரிந்து + இருக்கிறோம்

= பிரிந்திருக்கிறோம்

பிரிந்து + விட்டோம்

= பிரிந்துவிட்டோம்

முதல் வினை + துணை வினை என்னும் அமைப்பை உடையவை.

அதாவது பிரிந்து என்னும் முதல் வினையோடு இரு , விடு ஆகிய துணை வினைச் சொற்கள் சேர்ந்து உருவானவையே பிரிந்திருக்கிறோம், பிரிந்துவிட்டோம் என்பவையாகும்.

பிரிந்திருக்கிறோம், பிரிந்துவிட்டோம் ஆகிய இரு சொற்களும் ‘பிரிதல்’ என்ற ஒன்றையே குறிக்கின்றன. தனியாகப் பார்க்கையில் ‘பிரிந்துவிட்டோம்’ என்பதில் ஓர் உறுதி தொனித்தாலும், ‘பிரிந்திருக்கிறோம்’ என்பதில் வேறு பொருள் ஏதும் தொனிக்கவில்லை.

பொதுவாகத் தமிழில் ‘இரு’ எனும் துணை வினைச்சொல்

வந்திருக்கிறோம்,

வந்திருந்தோம்,

வந்திருப்போம் என மூன்று காலங்களிலும் பயன்படுத்தப்பட்டாலும், தொடரில் ஓர் தொடர் நிகழ்வுத் தன்மையைக் குறிக்கவே பயன்பட்டு வருகிறது. நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் செயலைக் குறிப்பிடவும், கடந்த காலத்தில் நடந்த ஒன்றையும், எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒன்றையும் அதன் தொடர் நிகழ்வுத் தன்மையைக் கூறும் விதமாக ‘ இரு’ துணை வினையாகப் பயன்பட்டு வருகிறது.

இங்கு கவிதையில் வரும் ‘பிரிந்திருக்கிறோம்’ என்னும் சொல் கடந்த காலத்தில் நடந்துவிட்ட ஒன்றை நினைவு கூறும் விதமாகப் பொருள் தரவில்லை. பிரிந்தும் பிரியாமலும் இருக்கின்ற நிலையையே உணர்த்துகிறது. சொல்லின் இயல்பை மறுத்து, கவிஞன் தான் சொல்ல வந்ததைச் சொல்லுக்குள் திணிக்கும் சாமர்த்தியமாகவே இதைக் கருத வேண்டும்.

கவிதை, ‘பிரிந்திருக்கிறோம்’ என்பதைத் தொடரும் சாத்தியங்களைக் கொண்டதாகவும், ‘பிரிந்துவிட்டோம்’ என்பதை முற்றான பிரிவு என்பதாகவும் கவிதை கூறுகிறது.

‘பிரிந்திருப்பது’ மாற்றத்திற்கான வாய்ப்பையும், ‘பிரிந்துவிட்டது’ வாய்ப்பு மறுக்கப்பட்டதையும் உணர்த்தும் சொற்களாகக் கவிதை கூறுகிறது.

கவிதை : 2

தெரியும்தெரியாது

—————————————

எனக்கு அது தெரியும்

தெரியும் என்பது

இத்தனை துயரமான சொல்லா?

எனக்குத் தெரியாது என்பது

கையில் ஒரு பிளேடின் கீறல்

எனக்குத் தெரியும் என்பது

அந்தக் கையே இல்லாமல் போவது

பொதுவாக,தெரியும் என்பது தெரிய முடிந்த ஒன்றையும், தெரியாது என்பது தெரிய முடியாத ஒன்றையும் சுட்டப் பயன்படுகிறது. ஆனால், கவிதையில் தெரியும் என்ற சொல்லோடு ஒரு துயர உணர்ச்சி இணைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். அதாவது, சொல்லின் பொருள் எதுவாக இருந்தாலும் கவிதை தரும் உணர்ச்சி அச்சொல்லோடு இங்கு இணைக்கப்பட்டு வேறு பொருளைக் குறிக்கிறது.

இக்கவிதையில் ‘துன்பம்’ எனும் உணர்ச்சி ‘தெரியும்’ என்ற‌ சொல்லோடு இணைக்கப்பட்டிருந்தாலும், ‘தெரியாது’ என்னும் சொல் ‘துன்பமில்லை’ என்னும் உணர்வோடு இணைக்கப்படவில்லை. ‘தெரியாது’ என்பது சிறு துயராகவே கூறப்படுகிறது. ஆக, கவிதையில் ‘தெரியும்’ என்பதன் பொருள் பெருந்துயராகவும், ‘தெரியாது’ என்பதன் பொருள் சிறுதுயராகவும் முன் வைக்கப்படுகிறது.

தெரிந்தே நிகழ்ந்துவிட்ட ஒரு தோல்வி, தெரிந்தே நடந்துவிட்ட ஒரு தோல்வி, தெரிந்தே செய்து விட்ட ஒரு பிழை, தெரிந்தே நிகழ்ந்த ஓர் ஏமாற்றம், தெரிந்தே நிகழ்ந்துவிட்ட ஒரு முறிவு, தெரிந்தே தேடிக்கொண்ட ஒரு தீ நட்பு; ஒரு பழக்கம்; ஒரு நோய் …

இப்படித் தவிர்த்திருக்க வேண்டியவற்றைத் தெரிந்தே தேடிக்கொண்டதால், அதனால் அடையும் துன்ப உணர்ச்சியும், தெரியாமல் நடந்துவிட்ட ஒன்றிற்கான துன்ப உணர்ச்சியும் (தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாமே என்கிற சமாதானம்) ஒன்றல்ல என்பதைக் கவிதை கூறுகிறது.

‘தெரியும்’ என்ற சொல்லில் தவிர்த்திருக்கலாமே என்கிற குற்ற உணர்வும், நிகழ்ந்துவிட்ட ஒன்றின் இழப்பும் சேர்ந்துப் பெருந்துயரமாகப் பெருகுகிறது.’தெரியாது’ என்பதில் நிகழ்ந்துவிட்ட ஒன்றின் இழப்பு தரும் துன்பத்தைத் தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் என்கிற சமாதானம் நீர்த்துப்போகச் செய்கிறது; சிறு துன்பமே அங்கு விளைகிறது.

இவ்வாறு

பிரிந்திருக்கிறோம் ( கூடும் வாய்ப்புள்ள பிரிவு) – பிரிந்துவிட்டோம்( முடிந்த உறவு) ;

தெரியும் (பெருந்துயர்) – தெரியாது ( சிறு துயர்) என இரண்டிரண்டு சொற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கவிதைகளை இரு சொல் கவிதைகள் எனக் கூறலாம்தானே?!

இந்த உத்தி திட்டமிட்ட ஒன்றல்ல; கவிஞனின் மனத்தில் இயல்பாக நிகழும் கவிதைச் செயற்பாட்டில் கவிஞனது அனுபவச் செறிவு, மொழிநுட்பம், படைப்பாற்றல், வெளிப்படுத்தும் திறன் முதலிய திறன்களால் இவ்வுத்தி கூடி வருகிறது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் இரு சொற்களை விளக்குவதுபோல் தன் உணர்வுகளை முன் வைக்கும் இவ்வுத்தி வாசகனுக்குப் புதியதோர் கவி இன்பத்தைத் தருகிறது.

நூல்:

அலெக்சா ….. நீ என்னைக் காதலிக்கிறாயா? (மனுஷ்யபுத்திரன்)

உயிர்மை பதிப்பகம், சென்னை -20.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button