பயப்படாதே ஜானு
காலை எட்டு மணி
ஜானு.. பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டு அவளின் அறையில் ஒரு பக்கச் சுவர் ஓரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொம்மைகளுக்கு எதிரே தரையில் உட்கார்ந்து அந்த பொம்மைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
முகம் முழுக்க சோகமும் பயமும் படர்ந்திருந்தது.
நீண்ட யோசனை
கொஞ்சம் நேரத்துக்குப் பிறகு
“ஜானு.. நேரம் ஆச்சு பாரு. கிளம்பிட்டியா. வந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடு வா” அம்மா வெளியே இருந்து அழைத்தார்
“கிளம்பிட்டேன்ம்மா. இதோ வரேன்” – பொம்மைகளையே பார்த்துக்கொண்டிருந்த ஜானு அவள் கையில் வைத்திருந்த சின்ன காகிதத்தில் ‘பயமா இருக்கு’ என்று எழுதி அவளுக்கு மிகப்பிடித்த சிகப்பு நிற பொம்மையின் சட்டை பாக்கெட்டுக்குள் வைத்தாள்.
பின் காலை உணவை உண்டு முடித்துவிட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பினாள்.
பள்ளிக்குப் போகும் வழியில் சாலையெங்கும் பலத்த யோசனையோடே நடந்தாள்.
பின் வகுப்புக்குள் நுழைந்தவுடன் ஜானுவின் தோழி கேத்ரின், ஜானுவை தமிழ் ஆசிரியை அழைத்ததாய்ச் சொன்னாள்
ஜானு இரண்டு நொடி யோசனைக்குப் பிறகு அவளுடைய ரஃப் நோட்டை எடுத்துக்கொண்டு ஆசிரியர்கள் அறைக்குச் சென்று தமிழ் அம்மாவின் அருகில் போய் நின்றாள்.
“அம்மா.. காலை வணக்கம் அம்மா”
“ஓ ஜானகி வா. காலை வணக்கம். விழாவுக்கான உன்னோட உரையைத் தயார் பண்ணிட்டியா?”
“பண்ணிட்டேன் அம்மா” – என்று சொல்லி அவளின் ரஃப் நோட்டைத் தமிழ் அம்மாவிடம் கொடுத்தாள்
அவள் எழுதி இருந்ததைப் படித்துப் பார்த்த தமிழ் அம்மா புன்னகைத்தார்
“ரொம்ப நல்லா இருக்கு. நல்லா பயிற்சி பண்ணு சரியா?”
“சரி அம்மா”
“சரி வகுப்புக்குப் போ” என்றார் புன்னகையோடு
“நன்றி அம்மா”
அன்றைய நாள் முழுக்க அமைதியற்று ஈடுபாடு இல்லாமல் யாருடனும் பேசாமல் கடந்தது ஜானுவுக்கு
எதுவும் புரியாத நிலை
***
அன்று மாலை வீட்டுக்கு வந்து சீருடை மாற்றிவிட்டு ரஃப் நோட்டை எடுத்துக்கொண்டு வாசல் செடிகளுக்கு அந்தப்பக்கம் இருக்கும் ஊஞ்சலுக்குப் போனாள்.
ஒரு ஊஞ்சலில் ராகுலின் தங்கை அஞ்சலி விளையாடிக் கொண்டிருந்தாள்
ஜானு அஞ்சலிக்கு அருகிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.
கொஞ்சம் நேரம் எதிரில் காலியாக இருந்த இரண்டு ஊஞ்சல்களின் மேல் கண்களைப் பதித்து யோசித்துக் கொண்டேயிருந்தாள்.
கோபால் தாத்தா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.
பின் ரஃப் நோட்டைத் திறந்து எழுதி வைத்திருந்த உரையைப் படித்துக் கண்கள் மூடி நினைவில் பதித்துக் கொண்டிருந்தாள்.
நடு நடுவே நிறுத்திச் சுற்றும் முற்றும் பார்த்து யோசனை செய்தாள்
அரை மணி நேரப் படித்தலுக்கும் நினைவில் பதித்தலுக்கும் பிறகு அஞ்சலிக்கு ‘பை’ சொல்லிவிட்டுக் கிளம்பி டியூஷன் போனாள்.
***
இரவு ஏழு மணி
வாசல் படியில் வந்து அமர்ந்தாள்.
ராகுல், ஆத்யா, ஆதினி, அஞ்சலி எல்லாரும் ஒவ்வொருவராய் வந்தார்கள்.
எல்லாரும் வந்த பிறகும் அமைதியாகவே உட்கார்ந்திருந்தாள் ஜானு
ராகுல்,”ஹே ஜானு, ஏன் இவ்ளோ டல்லா இருக்க?”
“இவளுக்கு ஸ்டேஜ் ஃபியர் இருக்குல்ல. அதான் பயம்” என்றாள் ஆத்யா
“என்ன ஃபங்க்ஷன்?” ராகுல்
“டமில் லிட்ரரி ஃபங்க்ஷன்” – ஜானு
“தமிழ் இலக்கிய விழா” – ஆத்யா
“ம்ம். தமிழ் இலக்கிய விழா” – ஜானு
“மூணு மாசம் முன்னாடி இங்கிலிஷ் லிட்ரரி ஃபங்க்ஷன் வந்தப்போ இவங்க ஸ்வேதா மிஸ் இவளை அதுல கலந்துக்கச் சொல்லி சொன்னாங்க. அவங்க அவ்ளோ கம்பல் பண்ணியும் இவ கலந்துக்கல. மேடைல பேச பயம்” – ஆத்யா
“இப்போ தமிழ் மிஸ் கம்பல் பண்றாங்களா ?” ராகுல்
எல்லாரும் சிரிக்க.. ஜானு முகம் தொங்கிப்போனது.
இல்லை என்று தலை அசைத்தாள்.
ராகுலுக்கு அவளைப் பார்க்கப் பாவமாய் இருந்தது.
“ஹே ஜானு. அதை ரொம்பக் கஷ்டமான விஷயமா எடுக்காதே. ஆடிட்டோரியத்துல யாருமே இல்ல. நீ மட்டும் தான் இருக்கன்னு நினைச்சுட்டுப் பேசு” – ராகுல்
ஜானு அதிர்ச்சியாய் நிமிர்ந்து பார்த்தாள்
“ம்ம். அவ்ளோதான் ஈஸி” ராகுல்
“ஆனா, ஆடிட்டோரியத்துல எல்லாரும் இருப்பாங்களே” – ஜானு
ஆத்யாவுக்கும் ராகுலுக்கு சிரிப்பும் வந்தது. இவளைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது.
“ஹே, நீ அவளைக் கிண்டல் பண்ணாத” – ஆத்யா
அப்போது ஆதினி சைகை மொழியில் சொன்னாள்” பயப்படாதே ஜானு. நீ சரியாப் பேசுவ”
“ம்ம்..”
சோகமாகக் குனிந்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அழுது விடுவாள் போல் உட்கார்ந்திருந்தாள் ஜானு
அஞ்சலி ஜானுவின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்தாள்
“நல்லா பிராக்டிஸ் பண்ணா சரியாப் பேசிடலாம்” – ஆத்யா
தலையை அசைத்தாள் ஜானு
“நம்ம எல்லாரும் சேர்ந்து பிராக்டிஸ் பண்ணலாம். என்னைக்கு விழா?” என்றான் ராகுல்
“திங்கள் கிழமை”
“இன்னிக்குத்தான் வியாழக்கிழமை. இன்னும் மூணு நாள் இருக்குல்ல “ – ராகுல்
“ம்ம்” – ஆதினி
“யெஸ். நாளைக்கு சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சதுக்கு அப்புறம் இருந்து பிராக்டிஸ் ஸ்டார்ட் பண்றோம். மொட்டை மாடில”
முடிவு செய்துவிட்டு எல்லாரும் வீட்டுக்குச் சென்று இரவு உணவு உண்டு முடித்து உறங்கிப் போயினர்
ஜானு அவளின் அறையின் ஜன்னல் வழியே வந்த கொஞ்சம் வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் தூங்காமல் இருந்தாள்.
பின் தலையணையை எடுத்துக்கொண்டு சுவர் ஓர பொம்மைகளின் அருகே போய்ப் படுத்துக்கொண்டாள்.
***
அடுத்த நாள் காலை
பள்ளி
அன்று முழுவதும் வகுப்புகள் நடக்காது என்று அறிவிக்கப்பட்டது.
முழு நாளும் விழாவுக்கான பயிற்சிகள் நடக்கும்.
பயம் இன்னும் அதிகம் ஆனது.
எங்கயாவது ஓடிப்போய் ஒளிந்து கொண்டால் நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியது ஜானுவுக்கு
மூன்றாவது மாடியில் காலியாக இருந்த வகுப்பறைகளில் பயிற்சிகள் தொடங்கின.
நடனப் பயிற்சிகள்.. நாடகங்கள்.. விவாத மேடைகள்.. இப்படி இன்னும்..
ஜானு.. அவள் பயிற்சி செய்வதற்காக.. யாருமே இல்லாத ஒரு வகுப்பறை எங்கே உள்ளது என்று தேடிக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.
கூட துணைக்கு அவளின் தோழி கேத்ரின் வந்திருந்தாள்.
அப்போது வெவ்வேறு வகுப்பறைகளில் சீனியர்கள் அவர்கள் விழாவில் பேசப்போகும் உரைகளை நண்பர்களோடு சேர்ந்து பேசிப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள்
அவர்கள் எல்லாரும் எந்த பயமோ தயக்கமோ இன்றி ஒவ்வொரு வார்த்தைகளையும் அத்தனை கம்பீரத்தோடு உச்சரித்த விதத்தைக் கண்டு திகைத்து நின்றாள் ஜானு
பயத்தில் தன்னையுமறியாமல் அவளின் கை அவளின் ரஃப் நோட்டை இறுகப் பற்றிக்கொண்டது
கண்கள் விரிந்து மிரண்டன.
“ஹே ஜானு, என்ன நின்னுட்ட?” கேத்ரின்
“.”
“ஜானு..”
“.”
ஒன்றுமே பேசாமல் திரும்பி வேகமாக நடந்து போய்க்கொண்டே இருந்தாள் ஜானு. அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு.
கேத்ரின் அவள் பின்னாலேயே,”ஹே ஜானு, நில்லு நில்லு” என்று கூப்பிட்டுக்கொண்டே ஓடினாள்
பயிற்சி எதுவும் செய்யாமல் பயத்தோடே அன்றைய நாள் பள்ளி நேரம் முடிந்தது
***
அன்று மாலை
நண்பர்கள் கூட்டம் மொட்டை மாடியில் ஒன்று கூடியது
ஜானு மூன்று நாட்களுக்கு டியூஷனுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டாள்
எல்லாரும் அருகிலிருக்க ரஃப் நோட்டைப் பார்த்து ஜானு படித்து நினைவில் பதிய வைத்துக்கொண்டிருந்தாள்
“எதைப்பற்றிப் பேசப்போற ஜானு” என்று கேட்டபடியே ஆத்யா ரஃப் நோட்டை வாங்கிப்பார்த்தாள். கூடவே ராகுலும் ஆதினியும் இணைந்து கொண்டார்கள்.
படித்து முடித்த மூன்று பேர் முகத்திலும் மலர்ச்சி
மூன்று பேரும் ஜானுவைப் பார்த்தார்கள். ஜானுவோ அஞ்சலி அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆத்யா சொன்னாள்” ரொம்ப கியூட்டா இருக்கு ஜானு டாபிக்”
ஆதினியும் ராகுலும் புன்னகைத்தார்கள்
அப்போது ராகுல் சொன்னான்
“பயப்படாதே ஜானு ஈஸியா பேசிடலாம். ஆத்யா அக்கா நீங்க ஸ்டேஜ்ல நிறைய பெர்பார்ம் பண்ணி இருக்கீங்க இல்ல. ஜானுவுக்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்க”
“ம்ம்ம்..”
ஆத்யா, ஜானுவின் அருகே சென்றாள்.
ஜானு தலை குனிந்தபடியே நின்றிருந்தாள்
ஆத்யா ஜானுவின் கன்னத்தைக் கரிசனமாகக் கிள்ளினாள்.
“ஜானு.. நீ தயார் செய்து வெச்சிருக்கும் வரிகளை எல்லாம் உனக்கு ஈஸியா நினைவு இருக்கக்கூடிய விதத்துல எழுதி ஒரு கதை மாதிரி நினைவு வெச்சுக்கோ. அப்போ உனக்கு மறக்காது. பேசும்போது கையை அசைச்சு அசைச்சுப் பேசணும்னு நினைச்சின்னா அப்படிப் பேசு. அப்படி இல்லைன்னா ரெண்டு கையையும் முன்னாடி கோர்த்துக்கோ.”
ஜானு ஆத்யா சொன்னதைக்கேட்டுத் தலையை அசைத்துக்கொண்டிருந்தாளே தவிர கொஞ்சமும் நம்பிக்கையே இல்லாமல் தானிருந்தாள். அதைக் கவனித்த ஆத்யா,”எதுக்கு ஜானு இப்படி பயப்படுற. நீ இவ்ளோ பயப்படும் அளவுக்கு அது கஷ்டமான விஷயம் கிடையாது. நீ இப்போ இத முழுசாப் படிச்சு முடி. அதுக்கப்புறம் நீ எப்படிப் பேசணும்னு நினைக்கிறியோ அந்த மாதிரி பேசிக்காட்டு.”
ஆத்யா சொன்னதுபோல் ஜானு பேசிக்காட்டினாள். எல்லாரும் சேர்ந்து நின்று கவனித்தார்கள்
அவள் நன்றாகவே படித்திருந்தாள். ஆனால், அவளின் பயத்தினால் நடுவே நடுவே நிறைய மறந்து திக்கித் திணறி முழுதாய் முடிக்கவும் கூட இல்லாமல் நிறுத்திவிட்டாள்.
ஜானுவின் பயத்தை நினைத்து எல்லாருக்குமே ரொம்ப வருத்தமாக இருந்தது.
இன்றைக்கான பயிற்சி போதும். நாளை எப்படியாவது சரியாகப் பயிற்சி எடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர்.
கொஞ்சம் நேரம் வேறு ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போதும் ஜானு மட்டும் சோகமாகவே இருந்தாள்
இரவானதும் அனைவரும் வீட்டுக்குப் போய் இரவு உணவு முடித்து விட்டுத் தூங்கினர்.
இன்றைய இரவிலும் ஜானு மட்டும் தூங்காமல் விழித்திருந்தாள்
அப்போது அவளின் அம்மா அவளின் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்து
“ஜானு.. ஆத்யா, ஆதினி, ராகுல், அஞ்சலி நாலு பேரும் வாட்சப் ல மெசேஜ் பண்ணிருக்காங்க.. ‘பயப்படாத ஜானு. நாளைக்கு சரியா பிராக்டிஸ் பண்ணிடலாம். இப்போ அதைப் பத்தி யோசிக்காம தூங்கு ‘ அப்படின்னு”
ஜானு இதைக்கேட்டு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டாள்.
ஏதோ ஒரு தைரியம் உருவாகத் தொடங்கியது. கொஞ்சம் நேரத்தில் தூங்கிப்போனாள்.
***
அடுத்த நாள்…
சனிக்கிழமை காலை 10 மணி.
நண்பர்கள் எல்லோரும் ஊஞ்சலில் ஒன்று கூடினார்கள்.
அப்போது செக்யூரிட்டி கோபால் தாத்தா இவர்களிடம் வந்தார்.
“குழந்தைகளா.. நீங்க எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் முகிலன் சார் உங்க எல்லாரையும் அவர் வீட்டுக்கு வரச் சொன்னார். எல்லாரும் போங்க”
“இப்போவா தாத்தா..”
“ஆமா ராகுல்”
உடனே எல்லாரும் முகிலன் அங்கிள் வீட்டுக்குப் போய் ஹால் சோபாவில் உட்கார்ந்தார்கள். முகிலன் அங்கிள் சமையலறையில் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார்.
பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார்.
வரும்போது எல்லாருக்கும் குடிக்க ஹெல்த் ட்ரிங்க் கொண்டு வந்தார்.
எல்லாருக்கும் கொடுத்துட்டு ஒரு க்ளாஸ் எடுத்துக்கொண்டு வெளியே போய் கோபால் தாத்தாவை அழைத்து அதைக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட கோபால் தாத்தா அங்கிருந்து நகர்ந்தார்.
பின் முகிலன் அங்கிள் தனக்கென ஒரு கிளாஸை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்கு எதிராக ஒரு சேரில் உட்கார்ந்தார்.
எல்லாரும் குடித்து முடிக்கும் வரை காத்திருந்த அவர்,”சொல்லுங்க கிட்ஸ்.. என்ன நடந்துட்டு இருக்கு?”
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்
அவர்களின் தயக்கத்தைக் கவனித்த முகிலன் அங்கிள்,”ஆத்யா நீ சொல்லுமா.”
ஆத்யா தொடக்கத்திலிருந்து இப்போது வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.
அவள் சொல்லி முடிக்கும் வரை ஜானு தலை குனிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
எல்லாவற்றையும் கேட்டு முடித்த முகிலன் அங்கிள்,”ஜானு”
“அங்கிள்”
“இங்க வா”
இன்னொரு சேரை அவரின் அருகே எதிராக இழுத்துப்போட்டார் முகிலன் அங்கிள்
ஜானு எழுந்து வந்தாள்.. ரஃப் நோட்டைக் கையிலேயே வைத்துக்கொண்டு
“அந்த நோட்டை அங்க வெச்சுட்டு வா..”
முகிலன் அங்கிள் முன் வந்து நின்றாள் ஜானு
“உட்காரு”
சேரில் உட்கார்ந்தாள்
“என்ன பயம் உனக்கு?”
அமைதியாகவே இருந்தாள் ஜானு. மிகுந்த கரிசனத்தோடு கேட்டார் முகிலன் அங்கிள்.
“சொல்லு ஜானு”
“எனக்கு ஸ்டேஜ்ல பேசுறதுன்னா ரொம்ப பயம் அங்கிள்”
“சரி, அப்போ கலந்துக்காம விட்டுடு”
இந்த பதிலை எதிர்பார்த்திருக்காத ஜானு அதிர்ச்சியாய் முகிலன் அங்கிளைப் பார்த்தாள்.
“இல்ல அங்கிள். நான் கலந்துக்கறேன்.”
“ம்ம்.. குட்.. கை கொடு”
ஜானுவின் வலது கையைப் பிடித்துக்கொண்டு பேசினார் முகிலன் அங்கிள்
“நீ பேச செலக்ட் பண்ணி இருக்குற டாபிக் உனக்கு யார் கொடுத்த ஐடியா?”
“என்னோட ஐடியா தான் அங்கிள்”
“உனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக்கா?”
“யெஸ் அங்கிள்”
“ம்ம் அப்புறம் என்ன பயம் உனக்கு ?”
மிகுந்த தயக்கத்தோடு அமைதியாகவே இருந்தாள் ஜானு
“சொல்லு ஜானு”
“என்னோட சீனியர்ஸ் பிராக்டிஸ் பண்றதைப் பார்த்தேன்”
“ம்ம்”
“அவங்க பேசுற மாதிரி இல்ல.. நான் பேசுறது”
“ம்ம். அவங்க எப்படிப் பேசினாங்க”
“சத்தமா. போல்டா”
“ம்ம்.. டேய் குட்டி.. எந்த ஒரு ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேச மாட்டோம்டா. ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் கிடையாது”
“.”
“இன்னும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு ஜானு”
ஜானு உன்னிப்பாக கவனித்தாள்
“அவங்க தேர்ந்தெடுத்து இருக்குற டாப்பிக்கு தகுந்த மாதிரி அவங்க குரலும் முக பாவங்களும் இருக்கும்”
ஜானு அன்று சீனியர்ஸ் பிராக்டிஸ் பண்ணும்போது பேசிய விஷயங்களைப் பற்றி யோசித்துப்பார்த்தாள்.
முகிலன் அங்கிள் சொன்னதில் இருந்த உண்மை புரிந்தது.
“உன்னோட டாபிக் என்ன?”
ஆத்யா ஜானுவின் ரஃப் நோட்டைக் கொண்டு வந்து முகிலன் அங்கிளிடம் கொடுத்தாள்.
அதைப் படித்துப்பார்த்த முகிலன் அங்கிள் ஜானுவின் தலையில் கை வைத்து”haha god bless you” என்றார்.
“நீ செலெக்ட் பண்ணிருக்குற டாபிக் போல்டா பேச வேண்டிய டாபிக் இல்ல. ரொம்ப ஸ்வீட்டா கண்களை அசைச்சுப் பேச வேண்டிய டாபிக்.”
தலையை அசைத்தாள் ஜானு
“வேற என்ன தயக்கம்?”
“பேசும்போது நடுல எதையாவது மறந்து போய்டுவேனோ இல்ல திக்கித்திணறிப் பேசிடுவேனோன்னு”
“haha ஜானு. ஒண்ணு நல்லா புரிஞ்சுக்கோ..”
“..”
“நீ படிச்சதை அப்படியே பேசணும்னு அவசியம் இல்ல. கொஞ்சம் மாத்திக் கூட பேசலாம்.தப்பில்ல”
தலையை அசைத்தாள் ஜானு
“உனக்கு ரொம்ப புடிச்சு தானே நீ கலந்துக்கற?”
“யெஸ் அங்கிள்”
“குட்.. புடிச்சு செய்ற வேலை என்னைக்குமே பெஸ்ட்டா தான் நடக்கும்”
ஜானு முகத்தில் கொஞ்சம் மாற்றம்
“ஸ்டேஜ்ல நிக்கும்போது confident-ஆ நில்லு. நடுல மறந்துச்சுன்னா யோசிக்க ஒரு நொடி இடைவெளி எடுத்துக்கோ. அப்போ கூட confident -ஆ ஆடியன்ஸை பாரு. நீ அவங்களைப் பார்ப்பது மறந்து போனதை யோசிக்கிற மாதிரி இருக்கக் கூடாது”
“.”
“நீ பேசும் விஷயங்களுக்கு அவங்களோட ரெஸ்பான்ஸ் என்னன்னு நீ தெரிஞ்சுக்க நினைக்கிற மாதிரி தான் இருக்கணும்”
ஆமோதித்தாள் ஜானு
“அதையும் தாண்டி நடுல ஒரு வரி மறந்தா அதைப் பற்றிக் கவலைப்படாதே. அப்டியே விட்டுடு. அப்புறம்.. நீ நிச்சயமா தப்பாவோ திக்கித் திணறியோ பேச மாட்ட. நிச்சயமா பேசவே மாட்ட. சரியா.அப்படி ஒரு சந்தேகத்தையே உன் மனசுல இருந்து எடுத்துடு.”
முகிலன் அங்கிள் பேசுவதைக் கேட்கக் கேட்க தெளிவும் குழப்பமும் சேர்ந்து உருவானது ஜானு முகத்தில்.
***
அடுத்த நாள்.
ஞாயிறு காலை 10 மணி.
முகிலன் அங்கிள் வாசலில் கோபால் தாத்தாவின் உதவியோடு சேர்களை அடுக்கி ஒரு மேடைப் பேச்சுக்கு ஏற்பாடு செய்தார்.
அங்கே அத்தனை பேரும் ஒன்று கூடினர்.
ஆதினி போய் ஜானுவையும் அம்மா அப்பாவையும் அழைத்து வந்தாள்.
நால்வரும் கீழே வந்தார்கள்
கீழே வந்து பார்த்த ஜானு.. அதிர்ந்தாள்.
அம்மா அப்பாக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும்
முகிலன் அங்கிளும் ப்ரெண்ட்ஸும் ஜானுவைப் பார்த்துச் சிரித்தபடி நின்றிருந்தனர்
ஜானு இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் பயங்கர பயம் தொற்றிக்கொண்டது.
நண்பர்கள் ஓடிப்போய் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டார்கள்
ஜானு செய்வதறியாது வாசல் படிகளின் மேல் நின்றிருந்தாள்
ஜானு பேசப்போவதை ஆத்யா அறிவித்துவிட்டுப் பின் போய் நண்பர்களோடு இணைந்து கொண்டாள்
ஜானு எல்லாரையும் ஒரு முறை பார்த்துவிட்டு முகிலன் அங்கிளைப் பார்த்தாள்
முகிலன் அங்கிள் அவளைப் பேசுமாறு சைகை செய்தார்.
அம்மா அப்பா புன்னகைத்தார்கள்.
“தைரியமா பேசு பாப்பா” கோபால் தாத்தா
திகைப்பில் இருந்த ஜானு ரொம்ப இயந்திரத்தனமாகப் பேச ஆரம்பித்தாள்.
“இங்கு குழுமியிருக்கும் ஆன்றோர்கள் சான் றோர்கள் மற்…றும் என் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.”
குரல் உடையத் தொடங்கியது
“என் பெயர் ஜானகி.. நான் நான்காம் வகுப்பு ‘பி’ பிரிவில் படிக்கிறேன்.”
நண்பர்கள் அதிர்ச்சியாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்
ராகுல் சொன்னான்”அவ படிக்கிறது ‘பி ‘ பிரிவு இல்ல. ‘ஏ’ பிரிவு”
நண்பர்களுக்குக் கவலை தொற்றிக்கொண்டது.
ஜானுவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஜானு அழுத் தொடங்கினாள்.
“இப்போ நா.ன்ன் பேசப்போகும் தலைப்..”
..அழுகை முற்றியது.
பிரெண்ட்ஸ் எல்லாரும் ஓடிப்போய் அவளைச் சூழ்ந்து கொண்டு சமாதானப்படுத்தினார்கள்.
அம்மாவுக்கு ஜானு தவிப்பதையும் அழுவதையும் பார்த்துக் கண்ணீர் வந்தது.
முகிலன் அங்கிளுக்கும் கோபால் தாத்தாவுக்கும் அவளைப்பார்க்கப் பாவமாய் இருந்தது.
அன்று முழுவதும் அவளைத் தனியே விட்டுவிடுமாறு முகிலன் அங்கிள் குழந்தைகளிடம் சொன்னார்.
அவ தனியா இருந்தா அவளே ஏதாவது முடிவுக்கு வந்து பயத்தில் இருந்து விடுபட்டு விடுவாள் என்று சொன்னார்.
குழந்தைகளும் முகிலன் அங்கிள் சொன்னதுபோலவே அன்று முழுதும் அவளைப் பார்க்கப்போகாமல் இருந்தனர்.
அவர்களுக்கு மிகுந்த வருத்தம். ‘நாம இப்போ மட்டும் தான் அவ கூட இருக்க முடியும். ஆனா, நாளைக்கு அவ தனியாத்தான் அந்த விழாவை ஃபேஸ் பண்ணி ஆகணும்’ என்று
அன்று முழுக்க அமைதியாய்ச் சென்றது.
ஜானு அவளின் அறைக்குள்ளேயே இருந்தாள்.
***
அடுத்த நாள்
திங்கள் கிழமை காலை.
அன்று மாணவர்களை சீக்கிரமாகவே பள்ளிக்கு வந்து விடுமாறு சொல்லி இருந்தார்கள் ஆசிரியர்கள்.
நேரத்தில் விழித்தெழுந்த ஜானு கொஞ்சம் நேரம் பொம்மைகளின் எதிரே உட்கார்ந்திருந்தாள்.
பின் அம்மாவின் அலைப்பேசியில் இருந்து நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
ஆத்யா, ஆதினி, ராகுல், அஞ்சலி நால்வரிடமும் இருந்து ஒன்று போல பதில் வந்தது
‘பயப்படாதே ஜானு. நீ நல்லா பேசுவ’
விரைவாகக் கிளம்பினாள் ஜானு. அவளுக்குப் பிடித்த வெள்ளை ஆடையை அணிந்து கொண்டாள்
நேற்று வரை இருந்த பயம் இப்போது அவளிடம் இல்லை என்று அம்மா அப்பாவுக்குத் தோன்றியது அவளைப் பார்க்கும்போது. இருந்தாலும் அவள் முந்தின நாள் அழுததை நினைத்து அவர்களுக்குக் கலக்கமாக இருந்தது.
‘ஸ்கூல்ல டிராப் பண்ணட்டுமா?’ என்று கேட்ட அப்பாவிடம் வேண்டாமென்று சொல்லிவிட்டு இருவரிடமும் ஆசி பெற்றுக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பினாள் ஜானு.
பள்ளிக்குச் சென்று முதல் வேலையாகத் தமிழ் அம்மாவைச் சந்தித்தாள்.
பின் கேத்ரினை அழைத்துக்கொண்டு விழா அரங்கிற்குச் சென்றாள்.
விழா அரங்கில் அலங்கரிக்கப்பட்ட மேடையின் அருகே வந்து மேடையில் அவள் நின்று பேச வேண்டிய இடத்தைப் பார்த்தாள்.
இவளுடையது நான்காவது நிகழ்ச்சி.
விழாவில் கலந்து கொள்ளப்போகும் மாணவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய் மேடைக்குப் பின்னாலிருந்த அறையில் ஒன்று கூடினார்கள்.
கேத்ரின், ஜானு கூடவே இருந்தாள்.
விழா தொடங்கியது.
முதல் நிகழ்ச்சியாக ஆறாம் வகுப்பு மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்கள்.
இரண்டாவது நிகழ்வு பத்தாம் வகுப்பு மாணவிகளின் பரதநாட்டியம்.
மூன்றாவது நிகழ்வு. மேடை நாடகம்.
நான்காவது நிகழ்வு.. ஜானுவின் உரை
மேடைக்குப்பின் தயாராக நின்றிருந்தாள் ஜானு.
தன் நிகழ்ச்சி பற்றி அறிவிக்கப்பட்டு தன் பெயர் சொல்லி அழைக்கப்பட்டதும் எந்தச் சலனமும் இல்லாமல் மேடை அருகே சென்று முதல் படியில் காலை வைத்தாள்.
அப்போது முகிலன் அங்கிள் சொன்ன வார்த்தைகள் இவள் மனதில் அழுத்தமாக ஓடியது.
‘நீ மேடைல ஏறின பிறகு வரப்போற முதல் ஐந்து வினாடி மட்டும் தான் உனக்கு பயம் இருக்கும் ஜானு. அதுக்கு அப்புறம் பயம் போய்டும்’
‘அந்த ஐந்து நொடிகளை ரொம்பப் பொறுமையா கடந்து போ’
‘படிகளை மெதுவா ஏறு’
‘மேடையோட அழகை ரசிச்சுப் பாரு’
‘அங்கதான் நம்ம நின்னு பேசப்போறோம்னு நினைச்சுப் பரவசப்படு’
‘மெதுவா நடந்துபோய் மைக் முன்னாடி நில்லு’
‘ஆடியன்ஸை நேராப் பார்த்துக் கொஞ்சமா ஸ்மைல் பண்ணு’
‘கீழ உட்கார்ந்து இருக்குற ஆடியன்ஸ் யாருக்குமே நீ பேசப்போற டாபிக் பற்றி எதுமே தெரியாது ஜானு. இப்போ தான். நீதான் அவங்களுக்கு முதன் முறையா சொல்லிக் கொடுக்கப்போற’
‘அடுத்த அஞ்சு நிமிஷம் உன்னோடது ஜானு’
‘ பேசு’
“இங்கு குழுமியிருக்கும் ஆன்றோர்கள் சான்றோர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பெயர் ஜானகி. நான் நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவில் படிக்கிறேன்.
இன்று நான் பேசப்போகும் தலைப்பு
‘எனக்குப் பறவைகளை மிகப்பிடிக்கும்’
இந்தத் தலைப்பைப் பற்றி நான் யோசித்தபோது பறவைகளிடம் என்ன இருக்கிறது என்பதை விட அவற்றிடம் என்ன இல்லை என்பதே எனக்கு நிறையத் தோன்றியது.
ஆம். பறவைகளிடம் என்னவெல்லாம் இல்லை என்பதே எனக்குத் தோன்றியது
பறவைகளுக்கு முகவரி இல்லை
அவற்றுக்கென்று தனியே பெயர்கள் இல்லை
பறவைகளுக்குத் தனியாய் அடையாளம் இல்லை
அதோடு..அவற்றுக்குப் பறக்க எந்தத் தடையும் இல்லை
தினமும் அதிகாலையில் எங்கள் வீட்டுக்கு நிறைய பறவைகள் வரும்.
என் நண்பர்களும் நானும் அந்தப் பறவைகளுக்குத் தானியங்களும் தண்ணீரும் வைத்துக்கொண்டு காத்திருப்போம்.
நாங்கள் அந்தப் பறவைகளைக் கையில் எடுத்து வைத்து விளையாடுவோம்.
தானியங்களைச் சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பறவைகள் எல்லாம் ஒன்றாக மேலே பறந்து போவதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
கீழே விழுந்து விடுவோமோ என்ற பயமே கொஞ்சம் கூட அந்தப் பறவைகளுக்குக் கிடையாது.
அந்த பறவைகள் எல்லாம் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். முன்பு நான் சொன்னது மாதிரி தனியாக அடையாளம் தெரியாமல்.
பறவைகளுக்குத் தனி மொழி இருக்கிறது.
அந்த மொழியில் அவை ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும்.
பறவைகள் தலையை அசைத்து அசைத்துத் திரும்பும்போது அவை என்ன பேசிக்கொள்கின்றன என்று தெரிந்துகொள்ள நான் முயற்சி செய்து இருக்கிறேன்.
ஆனால், என்னால் கண்டுபிடிக்க முடிந்ததில்லை.
பறவைகளிடம் நிறைய அன்பு இருக்கிறது. மனிதர்களை அதற்கு அடையாளம் தெரியும்.
நம் பக்கத்திலேயே இருந்தும் பறவைகள் இந்த உலகத்தைப் பார்க்கின்றன
மிகவும் உயரத்தில் இருந்தும் அவை இந்த உலகத்தைப் பார்க்கின்றன
வெயில், நிழல், காற்று, மழை, பகல், இருட்டு இவை எல்லாவற்றிலும் இருக்கும் வித்தியாசத்தைப் பறவைகள் என்னவாய்ப் பார்க்கும் அப்படின்னு தெரிந்து கொள்ள ஆசை எனக்கு
பறவைகளால் மேகத்தைப் போய்த் தொட முடியும்.
மேகத்தைத் தாண்டிக்கூட பறக்க முடியும்.
உயரத்தில் இருந்து பார்க்கும்போது பறவைகளுக்கு இந்த உலகம் என்னவாய்த் தெரியும் என்று தெரிந்து கொள்ள ஆசை எனக்கு
தானியங்களை கொத்தித் தின்னும் பறவை அழகு
தண்ணீரில் முங்கி விளையாடும் பறவை அழகு
என் கையில் வந்து உட்காரும் பறவை அழகு
மரத்தில் கூடு கட்டும் பறவை அழகு
மழையில் நனைந்து நடுங்கும் பறவை அழகு
பறவை என்றாலே அழகு
அதனால் தான் எனக்குப் பறவையாய் வாழ்ந்திட ஆசை. முகவரி இல்லாத ஒரு பறவையாய் வாழ்ந்திட ஆசை
அனைவருக்கும் என் நன்றி”
***
அவள் நன்றி சொல்லி முடித்தவுடன் கைதட்டல் ஆரம்பம் ஆனது.
நொடி நேரத்தில் ஜானுவின் கண்கள் தமிழ் அம்மாவைத் தேடின
தமிழ் அம்மா மிகுந்த மகிழ்ச்சியோடு கைதட்டிக் கொண்டிருந்தார்
கைதட்டல் சத்தத்தின் ஊடே ஜானு திரும்பி நடந்து மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தாள்
நண்பர்கள் அவளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்
கேத்ரின் ஓடி வந்து அவளைக் கட்டிக்கொண்டாள்.” சூப்பரா பேசினடி” என்று மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ஜானுவின் கன்னத்தைக் கிள்ளினாள்.
கை தட்டல் தொடர்ந்து கொண்டிருந்தது.
அடுத்த நிகழ்ச்சி பற்றி அறிவிக்கப்பட்டது
அப்போது முகிலன் அங்கிள் சொன்னது எண்ணத்தில் ஓடியது ஜானுவுக்கு
‘ஒரு உண்மை என்ன தெரியுமா ஜானு. பேசி முடிச்சுட்டு மேடையில இருந்து நீ கீழ இறங்கினதுக்கு அப்புறம் உனக்கு உன் மேல ஒரு நம்பிக்கை வரும். இப்போ நீ காத்துட்டு இருப்பது அந்த நம்பிக்கைக்காகத்தான் ஜானு ‘
(ஜானு தொடர்வாள்…)