தொடர்கள்
Trending

காகங்கள் கரையும் நிலவெளி;2 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

ஒரு படைப்பு என்ன செய்யும்?

அது முதலில் உள்ளுணர்வின் அகக் கண்களைத் திறக்கிறது. அதன் பிறகு நமக்குள் நிகழ்வதெல்லாம் மேஜிக் மட்டும்தான். பார்வையாளர் மனதில் மாயாஜாலம் நிகழ்த்தும் அப்படியானதொரு ஆவணப் படத்தைப் பற்றி இந்த வாரம் முதலில் பார்க்கலாம்.

ஆக்னஸ் வர்தா ஒரு பிரெஞ்ச் திரைப்பட இயக்குநர். பிறந்த நாடு பெல்ஜியம். VEGABOND உள்ளிட்ட சில முக்கியமான  புனைவுத் திரைப்படங்களை எடுத்திருந்தாலும் இவர் ஆவணப்பட இயக்குநராகவே அதிகம் அறியப்படுகிறார். ஆவணப்பட உலகில் அசலான கதை சொல்லல் முறைகளுக்காகவும், தேர்ந்துகொள்ளும் படைப்பு வகைமைகளுக்காகவும், அதன் அரசியல் மற்றும் பரிசோதனை முயற்சிகளுக்காகவும் அறியப்படும் சென்ற நூற்றாண்டின் முக்கியமான ஆவணப்பட பெண் இயக்குநர் ஆக்னஸ் வர்தா.

ஆக்னஸ் வர்தாவின் ஒரு முக்கியமான ஆவணப் படம் The Gleaners And I. இது மனிதர்களின் உணவு வீணாதலைப் பற்றிய ஆவணப்படம். நாகரீக சமூகம் வேண்டாம் என்று வீசியெறியும் உணவுப் பொருட்களைக் கொண்டு ஜீவிக்கும் மனிதர்களைப் பற்றிய ஆவணப் படம் இது. நுட்பமான உள்ளடங்கிய அரசியல், அழுத்தமான தத்துவப் பார்வை, வரலாற்றுப்பூர்வமான ஓவியங்களிலிருந்து பெற்ற தரவுகள் என விரியும்  இந்த ஆவணப்படம், முன்னேறிய மேற்கத்திய சமூகத்தின் பொறுப்பற்ற தனத்திற்கு எதிரான ஓர் வாள் வீச்சு எனலாம். ஆக்னஸ் வார்தாவின் படங்களை  நாம் டிஜிட்டல் மயத்திற்கு எதிரான ஓர் பெறுமதியான எதிர்வினை என்றுதான் விளங்கிக் கொள்ளவேண்டும்.

விளைச்சலுக்குப் பிறகான வயல்வெளிகளில், கொல்லைகளில் மீதமிருக்கும் தானியங்களை, கிழங்கு வகைகளை, நிலக்கடலை முதலான பணப்பயிர்களை சேகரிப்பதை நம் முந்தைய சமூகம் வழக்கமாகக் கொண்டிருந்தது. கொல்லையில்  விடுபட்டுப்போன மல்லாட்டை செடிகளைப் பிடுங்கிச் சேகரிப்பதற்கு எங்கள் ஊரில் ‘’தப்புச் செடி பிடுங்குதல்’’ என்று பெயர். அவ்வாறு மீதமிருக்கும் தானியங்களைச் சேகரிப்பவர்கள் பெரும்பாலும் நிலமற்ற விவசாயக் கூலிகள் அல்லது இருளர் முதலான சமூகப் படிநிலையில்  கீழே இருப்பவர்கள்தான். என் சிறுவயதில் இவ்வாறான செயல்களை நான் பார்த்திருக்கிறேன். இப்போது நிலங்கள் மட்டுமே மீதம் இருக்கின்றன. விவசாயமும் விளைச்சலும் இல்லை என்றாகிவிட்டது.

 

ஆப்பிள் தோட்டங்களில் உருளைக்கிழங்கு தோட்டங்களில் அறுவடைக்குப்  பின்பு மிஞ்சியிருக்கும் ஆப்பிள் மற்றும் உருளைக்கிழங்குகளை சேகரிப்பவர்களை ஒரு தியானம் போல காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆக்னஸ் வார்தா. வெறுமனே காட்சிகளையும் மனிதர்களின் பேச்சுக்களையும் மட்டுமே ஆக்னஸ் வர்தா ஆவணப்படத்தில் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக ‘The Gleaners and I’ படத்தில் அவர் பிரான்ஸ் ஓவியர் ‘ழான் பிரான்சே மில்லெட்’ டின் ஓவியத்தை  தன்னுடைய ஆவணப்பபடத்தில் ஆரம்பக் காட்சியாக வைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் அறுவடைக்குப் பின்பு தானியங்களை சேமிப்பது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.  அதற்கான  தரவுகளை அவர்  ஓவியத்திலிருந்தும், சட்ட விதிமுறைகளிலிருந்தும், பாரம்பரிய விவசாயிகளிடமிருந்தும் நம் முன் வைக்கிறார்.

 

தானியங்களை உணவுப் பொருட்களை வீணாக்காமல் சேகரித்துப் பயன்படுத்துபவர்களை வார்தா சிக்கனவாதிகளாக, உயர் நோக்கம் கொண்டவர்களாக, சூழலியல்வாதியாகக் காண்கிறார். இந்த ஆவணப் படத்தில் ஒருவர், ”வீணாகக்  குப்பைத் தொட்டியில் விழும்  உணவுப்பண்டங்களைத்தான் பதினைந்து ஆண்டுகளாக நான் உண்டு வாழ்ந்து வருகிறேன். இதுவரை எனக்கு உடல்நலக் குறைவே ஏற்பட்டதில்லை” என்கிறார். ”கடற்கரையில் கொட்டப்படும் எண்ணெய்ப் படலத்தால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. அது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் மனிதர்களை விடுவோம், பறவைகள் இந்த உலகுக்கு மிக முக்கியம்” என்கிறார்.   ”பணக்காரர்களோ ஏழைகளோ உணவை ஏன் வீணாக்குகிறார்கள்  என்பது  எனக்குப் புரியவேயில்லை” என்கிறார். இத்தனைக்கும் ஒரு வேலையில் இருக்கும் அவர், இப்படி குப்பையில் வீணாகும் பொருட்களை எடுத்து உண்பது பற்றி தனக்குக் கவலையேதுமில்லை, மற்றவர்களைப் பற்றி தான் கவலைப்படுவதில்லை என்கிறார். ”அழிவிலிருந்து நல்லதைக் காப்பாற்றுவதே என் அறம்” என்கிறார் அவர்.

இந்த ஆவணப்படம் அக்கறையின் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அழகான வீடு என்று சொல்லலாம். மனித வாழ்வு பற்றிய கூர் நோக்கும், சூழல் சமநிலையின் முக்கியத்துவமும் ஒருங்கே கொண்ட ஆவணப்படம் இது.

இப்படி தானியங்களை  வீணாக்காமல்  சேகரித்துப் பயன்படுத்தும் மனிதர்களை நாம் சுற்றுச் சூழல் விரும்பிகள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ”தானியங்களைப் புசியுங்கள்; அவற்றை வீணாக்காதீர்கள்” என்கின்றன நமது புனித நூல்கள். நாம் அனைவரும் மனதில் கொள்ளவேண்டியது இதைத்தான். உணவுப் பொருட்களை  தேவைக்கு மட்டும் சமைப்போம். உபரியை  வீணாக்காமல் பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம். இயற்கையை அளவுக்கு அதிகமாக சுரண்டாமல் பூமியின் சூழல் சமநிலையைக் காப்போம்.

***

தமிழில் ஒருமாய யதார்த்த சினிமா

கடந்த மாதம் ஆகஸ்ட் 31ஆம் தேதி இயக்குநர் பா.இரஞ்சித் ’குதிரைவால்’ திரைப்படத்தின் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நடந்து செல்லும்  கதை நாயகனின் சுவரின் மீது படியும் நிழலில் அவருக்கு குதிரை வால் முளைத்திருக்கும். தமிழில் ஒரு மாய யதார்த்த சினிமா என்ற டேக் லைனுடன் குதிரை வால் படத்தின் முதல் அறிவிப்பு படம் பற்றிய எதிர்பார்ப்பை நிச்சயம் தூண்டியிருக்கிறது.   இந்தப் படத்தின் இயக்குநர்கள் மனோஜ் மற்றும் ஷ்யாம் இருவரும் சென்னை பிரசாத் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள்.

பரிணாமத்தில்  குரங்கிலிருந்து  மனிதன்  தோன்றினான் என்கிறது அறிவியல். நம் நடைமுறை வாழ்வின் அனைத்து வெளிப்படுகளிலும் அதற்கான வலுவான ஆதாரங்கள் உண்டு என்பதால் அதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மனோஜும் ஷ்யாமும் குதிரை வாலுக்குப் பதிலாக குரங்கு வால் முளைத்தது என்று சொல்லி கதை சொல்ல ஆரம்பித்திருந்தால் இது என்ன மாதிரியான படமாக இருந்திருக்கும் என்று சுவாரசியமான கற்பனையை ஓடவிட்டேன். அப்படியெனில் இது ஒரு அறிவியல் புனைவாக இருக்கக்கூடும் என்று நான் நினைத்துக் கொண்டேன். நமது தொன்மத்தில், இலக்கியங்களில்  குதிரை காமத்துடன் தொடர்புடையது. தனிமையில் மனச்சிக்கலில் இருக்கும் வங்கி ஊழியர், திடீரென தனக்கு குதிரை வால் முளைத்துவிட்டதாக நம்பத் தொடங்குகிறார். அதன் ‘பின் விளைவுகள்’ தான் மொத்தப்படமும். இதையெல்லாம் இயக்குநர்களின் பேட்டியிலிருந்துதான் நான் தொகுத்து எழுதியிருக்கிறேன். படம் பார்க்கும்போது வேறுவிதமான கதை சொல்லலும் அனுபவங்களும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கக்கூடும். எனவே ஒரு சுவராசியமான படம் நமக்காகக் காத்திருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்.  படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக்  முத்துக்குமாரும் பிரசாத் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்தான். இவர் Unto the Dusk, Briyanai, போன்ற விருது பெற்ற மலையாளப் படங்களுக்கும், தமிழில் வெளியாகக் காத்திருக்கும் இயக்குநர் சொர்ணவேலின் ‘கட்டுமரம்’ திரைப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தவர். ஆகவே  பிரசாத் திரைப்படக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சேர்ந்து கூட்டாக இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் ஒரு புதிய அலையை இந்தப் படம் தோற்றுவிக்குமா  என்பது  படம் வெளியான பின்னர்தான் தெரியும். குதிரைவால் திரைப்படம் மும்பை திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி  படம் பார்க்கக் காத்திருக்கிறேன்.

 

***

கன்னட லூசியாவும் கன்யகா டாக்கீஸும்

தியேட்டரில் வணிக ரீதியாக அல்லது பார்வையாளர்களின் அதிக கவனம் கிட்டாத படங்களின் மீது எப்போதும் ஒரு கண் உண்டு எனக்கு. வணிக ரீதியான வெற்றியை ஒரு படத்தின் வெற்றியாக சொல்ல முடியாது எனினும் படம் ஏதேனும் ஒரு வகையில்  பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை. அப்படித்தான் சமீபத்தில் ‘எனக்குள் ஒருவன்’ என்னும் மொழியாக்கப் படத்தைப் பார்த்தேன். கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு பெரும் கவனிப் பையும் வணிக வெற்றியையும்  ஒருங்கே பெற்ற படம் லூசியா. இயக்குநர் பவன் குமார். தமிழில் பிரசாத் ராமர் இயக்கியிருந்தார். ஒரு பழைய தியேட்டர்தான் படத்தின் கதைக்களம். தூக்கமின்மையால் அவதிப்படும் ஒரு சாதாரண தியேட்டர் ஊழியன் ஒருவன், தனக்குக் கிடைக்கும் ஒரு மாத்திரையை உட்கொண்டு கனவின் வழியே தான் விரும்பிய ஆனால் நிஜ வாழ்க்கையில் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்கிறான். நிஜமும் கனவும் மாறி மாறி அவன் வாழ்க்கையில் பகடையாட்டம் ஆடுகின்றன. ஆனால் படம் முடிவை நோக்கிச் செல்லும்போது எது கனவு? எது நிஜம்? என்ற கேள்வி எழுகிறது. படம் முடிவில் மேலே சொன்ன விஷயத்தைத் தலைகீழாக நினைத்துப்பாருங்கள். புகழும் வணிக வெற்றியும் உடைய ஒருவன் ஒரு சாதாரண தியேட்டர் ஊழியனாக வாழ ஆசைப்படுகிறான். அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன ? இதுதான் இந்தப் படம்.

எது கனவு? எது நிஜம்?

யதார்த்தத்தின் சீற்றம் அதிகரிக்கும்போது நாம் கனவை நோக்கிப் போகிறோம். கனவின் பிரம்மைகள் சரிய ஆரம்பிக்கும்போது நாம் திரும்பவும் யதார்த்தத்தின் பக்கம் திரும்புகிகிறோம்.  கணவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையேயான அலைக்கழிப்பைதான் நாம் வாழ்க்கை என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கன்னடப் படமான லூசியாவில் இருந்த தீவிரமும் புனைவு அம்சமும் தமிழில் இல்லை என்பது என் கணிப்பு.

இந்தப் படம் யதார்த்தம் மற்றும் கனவு இரண்டுக்கும் இடையேயான ஒரு மெல்லிய கோட்டை இல்லாமலாக்க முயற்சி செய்துள்ளது என்கிற வகையில் இது ஒரு முக்கியமான முயற்சிதான். மனம் கீறும் யதார்த்தமும், மாயலோக கனவுலகமும் என இரட்டைக் களங்கள் இருந்தும் இந்தப் படம் ஏனோ சரியாக சோபிக்கவில்லை. ஆனால் ஒரு படத்தின் வெற்றி தோல்வி யாரிடத்தில் இருக்கிறது என்று யாரால்தான் உறுதியாகச் சொல்ல முடியும்?

 

இதேபோல் தியேட்டரை  மையமாக  வைத்து  மலையாளத்தில்  ஒரு அற்புதமான படம் வந்திருக்கிறது. ‘கன்யகா டாக்கீஸ்’. பரத் கோபி, அலான்ஸியர் லே லோபஸ், லேனா போன்ற மலையாளத்தின் முக்கியமான குணச்சித்திர நடிகர்கள் நடித்த படம்.[எழுத்தாளர் எம்.கே.மணி இந்தப் படத்தைப் பற்றி அருமையான ஒரு கட்டுரையை விகடன் இணையத்தளத்தில் எழுதியிருக்கிறார்] சாஃப்ட் போர்னோ வகைத் திரைப்படங்கள் திரையிட்ட ஒரு காலத்தில் பெரும் வணிக கேந்திரமாக விளங்கிய தியேட்டர்கள் அதன்பின் தங்களது முக்கியத்துவத்தையும் வணிக வருமானத்தையும் ஒருங்கே இழக்கின்றன. தியேட்டர் இல்லாமலாகி அந்த இடத்தில் ஒரு தேவாலயம் எழும்புகிறது. அங்கே ஊழியம் செய்ய வரும் பாதிரியார் உளவியல் ரீதியான தொல்லைகளை அனுபவிக்க ஆரம்பிக்கிறார். எனில் இதுநாள் வரை அந்த தியேட்டர் என்ன விதமான உளவியல் பங்கை அம்மக்களுக்கு அளித்துவந்தது என்ற கேள்வி மனதுக்குள் எழுகிறது. அதுதான் இந்தப் படம் நம்மக்குள் எழுப்ப விரும்பும் கேள்வியும் கூட. கேளிக்கை என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதும் பாலக்காடு மக்களின் மனங்களில் மாயஜாமம் செய்துவிடும் சினிமா என்ற அற்புதக் கலை குறித்த பிரம்மிப்பும் ஒருங்கே நமக்குள் கிளைக்கின்றன.

கன்யகா  டாக்கீஸ் படம் பார்த்து முடிந்ததும் என் சிந்தனைக்குள் வந்தது இதுதான். மலையாளத் திரைப்படங்கள் எழுப்பும் தீவிர அகச் சலனங்களை ஏன் தமிழில் தீவிர நோக்கில் எடுக்கப்படும் படங்கள் கூட அளிப்பதில்லை என்பதுதான். அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி என்ற போதிலும் கூட. ஜல்லிக்கட்டு, ஈ மா யு, கன்யகா டாக்கீஸ், கம்மாட்டிப்பாடம், தொண்டிமுதலும் திருசாக்சியும், மகேஷிண்ட பிரதிகாரம், கெட்டியாள எண்ட மளகா, போன்ற மலையாளப் படங்கள் தமிழில் உருவாகும் சாத்தியம் இல்லை. அதே போல அட்டக்கத்தி, ஆரண்ய காண்டம், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், பண்ணையாரும் பத்மினியும், போன்ற படங்கள் மலையாளத்தில் எடுக்கப்படவும் சாத்தியமில்லை என்பதையும் சொல்லவிரும்புகிறேன்.

 

தொடரும்…     

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button