இணைய இதழ் 107தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள்;14-மு.இராமநாதன்

தொடர் | வாசகசாலை

யூனூஸ் பாய் எனும் மானுடர்

“அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்பது காமத்துப் பாலில் இடம்பெறும் குறள். தலைவன் கூற்றாக வருவது. “இவளிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவது போல் இருக்கிறது” என்பது கலைஞர் தரும் பொருள். இந்தக் குறள்  இலக்கிய நுகர்வுக்கும் எடுத்துக்காட்டாக அமையும். சில காத்திரமான படைப்புகளை அடுத்தடுத்து வாசிக்கும்போது புதிய புதிய பொருள் ஊறி வரும். அதாவது அறிதோறும் அறியாமை தோன்றும். சில ஆளுமைகளுக்கும் இந்தக் குறளைப் பொருத்தலாம். அணுக்கமாக அறியுந்தோறும் அவர்தம் புதிய புதிய பரிமாணங்கள் தெரிய வரும். அப்படியான ஒருவர்தான் செ.முஹம்மது யூனூஸ் (1924-2015). ஹாங்காங் இந்தியர்களுக்கு, ‘யூனூஸ் பாய்’.

நான் முதன்முதலாக யூனூஸ் பாயைச் சந்தித்தது 1996இல், ஒரு பொது நிகழ்ச்சியில். பாய் எப்போதும் மிடுக்காக உடை அணிவார். பார்த்தவுடன் மதிப்பு ஏற்படுத்தும் தோற்றம் அவருடையது. ஏற்றுமதி வணிகம் செய்து வந்தார். இந்தியர்கள் பங்கேற்கும் எல்லாப் பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார். இந்திய சமூகத்தின் அறிவிக்கப்படாத பிரதிநிதிகளுள் ஒருவராக இருந்தார். 1997இல் அதுகாறும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவின் ஆளுகையின் கீழ் வந்தது. அப்போது ஹாங்காங் வாழ் இந்திய சமூகத்தினரின் கருத்தை அறிய ஊடகங்கள் யூனூஸ் பாயைத்தான் நேர்கண்டன. அந்த நேர்காணல்கள் அவரது பொறுப்புணர்வையும் தேசப் பற்றையும் புலப்படுத்தின.

எமக்கு யூனூஸ் பாயை நெருக்கமாக்கியது, ‘இலக்கிய வட்டம்’. 2001இல் நண்பர்கள் சிலர் சேர்ந்து வட்டத்தைத் தொடங்கினோம். எல்லாக் கூட்டங்களிலும் பாய் கலந்து கொள்வார்; உரையாற்றுவார். அந்த உரைகள் அவரது தமிழார்வத்தையும் இலக்கிய ஈடுபாட்டையும் புலப்படுத்தின.

யூனூஸ் பாய் பர்மாவில் பிறந்தவர். இராமநாதபுர மாவட்டம் இளையாங்குடி அவரது பூர்வீகம். அவரது பாட்டனார் காலத்தில் பர்மாவுக்குப் புலம்பெயர்ந்த குடும்பம். 42 ஆண்டுகள் பர்மாவில் வாழ்ந்து, அங்கு இந்தியர்களுக்கு வாழ்வுரிமைச் சிக்கல்கள் மிகுந்தபோது ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்து, 49 ஆண்டுகள் ஹாங்காங்கில் வாழ்ந்து மறைந்தவர்.

இரண்டாம் உலகப் போரின்போது பர்மாவில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இவரது பள்ளிக்கல்வி தடைப்பட்டது. ஆனால் தனது சொந்த முயற்சியில் தமிழ், ஆங்கிலம், பர்மீயம் ஆகிய மொழிகளைக் கற்றார். கம்பனில் அவருக்குப் புலமை உண்டு. எனது கணிப்பில் அவருக்குக் கம்பனின் நூறு பாடல்களேனும் காணாப் பாடமாகத் தெரியும்.

சான்றாண்மை மேற்கொள்பவர்

இலக்கிய வட்டத்தில் இரண்டு முறை பர்மாவைக் குறித்து விரிவாகப் பேசினார். முதல் கூட்டம் ஜனவரி 2003இல் நடந்தது. அந்த உரையை  அதன் உள்ளடக்கத்திற்காக மட்டுமன்றி வேறு காரணங்களாலும் எங்களால் மறக்க முடியாது. அந்தக் கூட்டம் புலம்பெயர் வாழ்க்கை என்ற பொருள் பற்றியது.  நண்பர் குருநாதன் ஹாங்காங் பற்றியும் யூனூஸ் பாய் பர்மாவைப் பற்றியும் பேசுவதாக ஏற்பாடு. கூட்டத்திற்கு முந்தின நாள் தம்பி சபியூர் ரகுமான் என்னை அழைத்தார். யூனூஸ் பாயின் துணைவியாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அம்மாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அடுத்த நாள் கூட்டத்தில் பாய் கலந்துகொள்ள இயலாது என்றும் தெரிவித்தார். கூட்டத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்றும், அம்மாவைக் கவனமாய்ப் பார்த்துக் கொள்ளுமாறும் சபியூரிடம் கூறினேன். அடுத்த நாள் காலை சபியூர், அம்மாவின் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், எனில் இன்னும் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே அம்மா இருப்பதாகவும் கூறினார். கூட்டம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு சபியூர் மீண்டும் அழைத்தார். அம்மாவின் உடல்நிலை தேறி வருகிறது, பாய் டாக்டருடன் பேசிவிட்டார், கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறார், ஆனால் சற்றுத் தாமதமாக வருவார் என்று கூறினார். நண்பர் குருநாதன் பேசிக்கொண்டிருந்தபோது, பாய் அரங்கிற்குள் பிரவேசித்தார். தனது உரையின் துவக்கத்தில் தன்னுடைய தாமதமான வருகைக்கு மன்னிப்புக் கோரினார்; தாமதத்திற்கான காரணத்தை ஒன்றிரண்டு வரிகளில் சுருக்கமாகச் சொன்னார். தொடர்ந்து பர்மீய தமிழ்ச் சமூக வாழ்க்கையையும் வரலாற்றையும் எமக்காகத் திறந்து வைத்தார். அன்றைய தினம் கூட்டத்திற்கு சுமார் 25 பேர் வந்திருக்கலாம். எனில், ஒப்புக்கொண்ட பணியைச் செவ்வனே நிறைவேற்றுவதில் அவருக்கு இருந்த அக்கறையும் கடப்பாடும் அரங்கில் இருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

அடுத்து பர்மாவைக் குறித்து அவர் பேசிய கூட்டம் 2007இல் நடந்தது. இவ்விரு கூட்டங்களிலும் அவர் பேசியவை எதுவும் நாங்கள் முன்னெப்போதும் கேட்டிராதவை. இந்த வாய்மொழி வரலாறு யாரும் பதிவு செய்யாமல் கால வெளியில் பறந்து காணாமல் போய்விடக்கூடும் என்ற அச்சம் என்னை ஆட்கொண்டது. நவம்பர் 2007 முதல் ஜூலை 2009 வரை அவரைப் பலமுறை நேர்கண்டேன். அதுவே, “எனது பர்மா குறிப்புகள்” (காலச்சுவடு, 2009) என்ற நூலாகியது. இந்த நூல் உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் தனித்துவமானது.

இது ஒரு புது வகை

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பர்மீயத் தமிழர்களின்  வாழ்வியல், கலை, கலாச்சாரம், சமயம் முதலானவை குறித்து நூலில் விரிவாகப் பேசுகிறார் யூனூஸ் பாய். கூடவே பர்மீயர்களைப் பற்றியும் பர்மாவில் வாழ்ந்த சீனர்களைப் பற்றியுமான சித்திரமும் கிடைக்கிறது. அந்த வகையில் இஃதோர் இனவரைவியல் பிரதி. ஆனால், இந்த நூல் அது மட்டுமல்ல.

இரண்டு  உலகப் போர்கள், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேதாஜியின் இந்திய சுதந்திர லீக், இந்திய பர்மீய விடுதலை இயக்கம், பர்மாவின் ராணுவ ஆட்சி, இந்தியர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலங்கள், பிற்பாடு அவர்களுக்கு நேரிட்ட வாழ்வுரிமைச் சிக்கல்கள் முதலானவற்றைக் குறித்த தெளிவான வரைபடம் இந்த நூலில் கிடைக்கும். இந்தப்  பதிவுகள் வெறும் தகவல்கள் மட்டுமல்ல. வரலாற்றின் போக்கை நுட்பமாகக் கவனித்த நீதியுணர்வு கொண்ட ஒரு மனத்தின் வெளிப்பாடும் ஆகும். ஆகவே இது வரலாற்று நூல் மட்டுமல்ல.

விடுதலைப் போராட்ட காலத்தில் பர்மாவில் நிகழ்ந்த தமிழ் நாடகங்களைக் குறித்த விவரணை பிரமிக்க வைக்கும். திரைப்படங்கள், இசை, பத்திரிகைகள், புத்தகங்கள் என்று விரியும் அனுபவங்கள் ஒரு காலகட்டத்தின் இலக்கிய மணத்தைக் கடத்தும். எனினும் இந்த நூலை கலை-இலக்கியப் பிரதி என்ற வகைமைக்குள் அடக்கிவிட முடியாது.

யூனூஸ் பாய், நூலில் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் வேகமாகச் சொல்லிச் செல்வார். எனில், இது வாழ்க்கை வரலாறோ சுயசரிதையோ நனவிடை தோய்தலோ மட்டும் அல்ல.

மேற்கூறிய எல்லா வகைமைகளும் கலந்த ஒரு புதிய வகை நூல் இது. இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய எழுத்தாளர் பாவண்ணன், “திறக்கப்பட்ட நெற்களஞ்சியத்தின் வாய்மடை வழியாக நெல் கொட்டிக்கொண்டே இருப்பது போல யூனூஸ் தகவல் மழையே பொழிகிறார்” என்று எழுதினார்.

நாலு பேருக்கு நன்றி

இந்த நூலின் உள்ளடக்கதைப் போலவே இதன் உருவாக்கமும் புதுமையானது. இலக்கிய வட்டம் வாயிலாக எனது நூலாக்க முயற்சியைக் குறித்து அறிவித்தேன். பத்து நண்பர்கள் ஒத்துழைக்க முன்வந்தனர். நான் யூனூஸ் பாயுடனான எனது நேர்காணல்களைத் துவக்கினேன். உரையாடல்களை ஒரு கையடக்க இலக்க-ஒலிப்பதிவுக் கருவியில் (digital audio recorder) பதிந்து கொண்டேன். அந்நாளில் செல்பேசிகளில் ஒலிப்பதிவு செய்துகொள்ளும் வசதி பரவலாகவில்லை. தொலைக்காட்சி அலைவரிசைகள் சூழலை ஆக்கிரமிக்கும் முன்பு செய்தியாளர் சிலர் இவ்வகை ஒலிப்பதிவுக் கருவியைப் பயன்படுத்தினார்கள்.

இந்தப் பதிவுகளை எனது கணினியில் தரவிறக்கி, ஒரு மென்பொருளின் துணையோடு எடிட் செய்து, பிற்பாடு அதை 20 நிமிட ஒலிக் கோப்புகளாக மாற்றி நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்தேன். இதற்காக ஒரு கூகுள் குழுமம் அமைத்துக்கொண்டோம். நண்பர்கள் ஒலிப்பதிவுகளைத் தட்டச்சு செய்து கூகுள் ஆவணங்களாகப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த இடத்தில் இரண்டு பிரச்சனைகள் எழுந்தன. நண்பர்கள் சிலர் உரையாடல்களை அப்படியே பகர்த்து எழுதாமல் சுருக்கத் தலைப்பட்டனர். சிலர் சொந்த வார்த்தைகளையும் பயன்படுத்தினர். ஆகவே அவர்களிடம் மீள எழுதுமாறு   கோரினேன். இது சிலரை அயர்வடையச் செய்தது.

இன்னொரு பிரச்சனையும் இருந்தது. யூனூஸ் பாய் இயன்றவரை ஒவ்வொரு அமர்விலும் ஒரே பொருளைக் குறித்துத்தான் பேசினார். எனில் வேறொரு அமர்வில் பிறிதொரு பொருளைக் குறித்துப் பேசும்போது, முந்தைய பொருளையோ காலத்தையோ சார்ந்த கருத்துக்களையும் சொன்னார். இவற்றை பொருள்வாரியாகத்  தொகுத்துக்கொள்ள சில ஒலிக் கோப்புகளை முன்பின்னாக அனுப்பினேன். இதுவும்  சில நண்பர்களை அயர்வடையச் செய்தது. எனது ஒருங்கிணைப்பிலும் குறைகள் இருந்தன.

இப்படியாக பத்து உறுப்பினர்களுடன் தொடங்கிய குழுமத்தின் எண்ணிக்கை எதிர்த் திசையில் வளர்ந்து நான்கு பேராகியது. அந்த நான்கு நண்பர்களும் தொடக்கம் முதல் இறுதி வரை, கால தாமதத்தைப் பொருட்படுத்தாமல், என் மீதும் இந்தத் திட்டத்தின் மீதும் நம்பிக்கையோடு பங்காற்றினார்கள். தொடர்ந்து ஒலிப்பதிவுகளையும், அவற்றிலிருந்து நான் பெயர்த்து எழுதிய குறிப்புகளையும் அசராமல் எழுதித் தந்தார்கள். அந்த நான்கு பேர்: ராஜேஷ் ஜெயராமன், ஜெய்னப் கதீஜா, கவிதா குமார், காழி அலாவுதீன் ஆகியோர்.

இந்த நூலுக்கு சென்னை, காரைக்குடி, ஹாங்காங் ஆகிய மூன்று நகரங்களில் வெளியீட்டு விழா நடந்தது. ஹாங்காங் விழா அவருக்கான பாராட்டு விழாவாகவும் அமைந்தது. அந்த விழாவை  தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், இந்திய முஸ்லிம் சங்கம், இலக்கிய வட்டம், ஹாங்காங்கில் தமிழ் வகுப்புகளை நடத்தி வரும் YIFC கல்விக் கழகம் ஆகிய நான்கு அமைப்புகள் இணைந்து நடத்தின. இந்தியத் தூதர் எல்.டி.ரால்டே நூலை வெளியிட்டார். தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வந்திருந்தார்.  ஹாங்காங் தமிழ்ச் சமூகம் திரண்டு வந்திருந்தது. அதற்கு முன்பும் நாளது வரையிலும் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்போடு அப்படியோர் நிகழ்வு நடந்ததில்லை என்று நினைக்கிறேன். யூனுஸ் பாய் மீது ஹாங்காங் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த பெருமதிப்பை அந்த நிகழ்ச்சி துலக்கமாக்கியது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், முத்துராமலிங்கத் தேவர் முதலான தலைவர்களோடு அவருக்கு அறிமுகம் இருந்தது. ஹாங்காங் வரும் தமிழ்ப் பிரமுகர்கள் பலரின் பயணப் பட்டியலில் யூனூஸ் பாயைச் சந்திப்பதும் ஓர் அம்சமாக இருக்கும்.

அடக்கம் அமரருள் உய்க்கும்

அடுத்த சில ஆண்டுகளில் அவரது இன்னொரு பங்களிப்பை அறிகிற வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. ஹாங்காங்கின் கவ்லூன் பகுதியில் நடுநாயகமாக அமைந்திருக்கும் பள்ளிவாசலை நகரின் அணிகலன் என்று வர்ணிக்கிறது சுற்றுலாத் துறைக் கையேடு. இந்த அழகிய பள்ளிவாசலை நிர்மாணித்த கட்டுமானக் குழுவில் யூனூஸ் பாய் செயலராகப் பங்காற்றினார். இந்தக் குழுவில் அங்கம் வகித்த ரஹ்மானி என்கிற அவரது நண்பர் Planning and Construction of the Kowloon Mosque and Islamic Centre (2012) என்கிற நூலை வெளியிட்டார். அதற்கான சில தரவுகளை நண்பருக்கு வழங்கினார் யூனூஸ் பாய். அவற்றை பதிப்புக்கு ஏற்றவாறு முறைப்படுத்தி வழங்கும் பணி எனக்குக் கிடைத்தது.

பிரிட்டிஷ் ராணுவத்தின் ஹாங்காங் ரெஜிமெண்டில் பணியாற்றிய இந்திய வீரர்களுக்காக இப்போது பள்ளிவாசல் இருக்கும் இடத்தை 1892இல் வழங்கியது ஆங்கிலயே அரசு. வீரர்கள் நிதி திரட்டி 1896இல் இந்த இடத்தில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். பள்ளிவாசல் காலப்போக்கில் சிதிலமடையத் தொடங்கியது. 1978இல் பள்ளிவாசலுக்கு அருகிலேயே மெட்ரோ சுரங்க ரயில் நிலையம் கட்டப்பட்டபோது கட்டடம் மேலும் பாதிப்புக்குள்ளானது. புதிய பள்ளி கட்டுவதென்று முடிவானது. 1980இல் பணி தொடங்கியது. 16,000 சதுர அடிப் பரப்பில் கலைநயத்தோடு கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் 1984இல் திறக்கப்பட்டது. இப்போது 3000க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பள்ளிவாசலில் தொழுவதற்கு வருகிறார்கள்.

தனது ஹஜ் பயணத்திற்காக சவுதி அரேபியா சென்ற யூனுஸ் பாய், நண்பர்களின் உதவியோடு சவுதி இளவரசரைச் சந்தித்து, புதிய பள்ளிக்காக நிதி கோரியிருக்கிறார். தொடர்ந்து கடிதப் போக்குவரத்தும் நடத்தியிருக்கிறார். நிதியும் கிடைத்திருக்கிறது. நூலில் உட்படுத்துவதற்காக நான் தொகுத்து வைத்திருந்த தரவுகளில் இந்தக் கடிதங்களையும் சேர்க்க விரும்பினேன். பாய் மறுத்துவிட்டார். கூட்டு முயற்சியில் உருவான கட்டுமானத்தின் வரலாற்றில் ஒரு தனி நபரை முன்னிறுத்துவது முறையாகாது என்று சொல்லிவிட்டார்.

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்

யூனூஸ் பாய் பர்மாவில் பிறந்தவர். பர்மாவிலும் ஹாங்காங்கிலும் வாழ்ந்தவர். ஆனாலும் அவர் கடைசிவரை இந்தியக் கடவுச்சீட்டுதான் வைத்திருந்தார். அதைப் பெருமையாகக் கருதினார்.

இந்தியாவிலிருந்து பர்மாவுக்கு போவதற்கும்  வருவதற்கும்  கடவுச்சீட்டு, விசா, அடையாள அட்டை என்பன அவசியமில்லாத காலமொன்று இருந்தது. பத்து ரூபாய் கட்டணம் – மூன்று நாள் பயணம். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி, சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் ஆகிய நிறுவனங்களின் கப்பல்கள் கல்கத்தாவிலிருந்தும் சென்னையிலிருந்தும் ரங்கூனை இணைத்தன. இந்தியர்களின் போக்கும் வரவும் அதிகமான போது, 1940 வாக்கில் பர்மாவிலிருந்து இந்தியா போகிறவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பர்மாவுக்குத் திரும்புவதற்காகக் கப்பலேறும்போது அதைக் காட்ட வேண்டும்.

1948இல் பர்மா விடுதலை பெற்றது. புதிய அரசு பர்மியர்களுக்குக் குடியுரிமையுடன் கூடிய அடையாள அட்டை வழங்கியது. வெளிநாட்டவர்களுக்கு அந்நியர்கள் என்பதற்கான அடையாள அட்டை வழங்கியது.  பத்தாண்டுகளுக்கு மேல் பர்மாவில் வாழ்ந்த வெளிநாட்டவர்களும் பர்மியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். யூனூஸ் பாய் பர்மாவிலேயே பிறந்தவர். ஆனாலும் அவர் பர்மீயக் குடியுரிமை கோரவில்லை. அந்நியராகப் பதிவு செய்துகொண்டார்.

இந்தியா 1950இல் குடியரசான பிறகு கடவுச் சீட்டு வழங்கத் தொடங்கியது. யூனூஸ் பாய் அந்த ஆண்டே ரங்கூன் இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்து இந்தியக் கடவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டார். அந்நாளில் அந்தக் கடவுச் சீட்டு பர்மாவில் மட்டுமே செல்லுபடியாகக் கூடியதாக இருந்தது. வேறு நாடுகளுக்குப் போவதெனில் முதலில் கடவுச்சீட்டில் இன்னின்ன நாடுகளுக்குப் போகலாம் என்று இந்தியத் தூதரகத்தில் குறிப்பு எழுதி வாங்க வேண்டும். பிறகுதான் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். பாய் இந்தச் சிரமங்களைப் பொருட்படுத்தவில்லை. இந்த நிலை 1977 வரை நீடித்தது. இதை மாற்றியவர் அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த வாஜ்பாய்.

யூனூஸ் பாய் 1966இல் ஹாங்காங் வந்து சேர்ந்தார். பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங், 1997இல் சீனாவுக்குக் கை மாறியது. அதற்கு முன்பாக சில ஹாங்காங் சீனர்கள், பிரிட்டிஷ் கடவுச்சீட்டு வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். இவர்களுக்காக ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் அயல்நாட்டுக் கடவுச்சீட்டு (British National (Overseas) Passport- BNO) என்கிற புதிய வகைமை ஒன்றைத் தோற்றுவித்து வழங்கலானது. இந்தக் கடவுச்சீட்டு இருந்தால் சுமார் 175 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம். அப்போது ஹாங்காங்கில் நெடுநாள் வாழ்ந்த இந்தியர்கள் பலரும் தங்கள் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு BNO கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டார்கள். பாய் மூன்று சிங்க இலச்சினையுடன் கூடிய கருநீல இந்தியக் கடவுச்சீட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

பிற்பாடு ஹாங்காங் அரசு, ஹாங்காங்கின் வளர்ச்சிக்கு உதவிய, நிரந்தர வதிவிட உரிமை பெற்ற வெளிநாட்டவர்களுக்கு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதியின் (Special Administrative Region- SAR)  குடியுரிமையும் கடவுச்சீட்டும் வழங்கியது. விண்ணப்பித்திருந்தால் அது யூனூஸ் பாய்க்கு கிடைத்திருக்கும். SAR கடவுச்சீட்டிற்கும் 170 நாடுகளின் குடிவரவு வாயில்கள் திறக்கும், விசா வேண்டாம். ஒரு வணிகராக அவரது அயல் நாட்டுப் பயணங்கள் இலகுவாயிருக்கும். SAR கடவுச்சீட்டும் கருநீல நிறத்தில்தான் இருக்கும். எனினும் யூனூஸ் பாய்க்கு இந்தியக் கருநீலம்தான் விருப்புடையதாயிருந்தது.

அதே வேளையில் அவர் பர்மாவின் மீதும் ஹாங்காங்கின் மீதும் மிகுந்த பற்று வைத்திருந்தார். அவர் பர்மாவைத் திருநாடு என்றுதான் சொல்லுவார். அவர் பிறந்து வளர்ந்த சவுட்டான் என்கிற ஊரைத்தான் தன்னுடைய ஊர் என்று சொல்லுவார். அவர் கையில் சொற்ப முதலுடன் தான் ஹாங்காங் வந்தார்.இங்கு அவர் நிலை கொண்ட கதை ஒரு சுய முன்னேற்ற நூலுக்கான எல்லா அம்சங்களும் அடங்கியது. அவர் ஹாங்காங்கைக் குறித்து எப்போதும் பெருமையுடன்தான் பேசுவார். ஆயினும் அவர் அடிப்படையில் இந்தியராகவே  வாழ்ந்தார். இந்தியாவின் 76ஆம் குடியரசு தின விழாக் கொண்டாடப்படுகிற இந்த வேளை, அவரது நூற்றாண்டும் ஆகும்.

மானுடம் வென்றதம்மா

தன்னைச் சமூகவியக்கத்தின் அங்கமாகத்தான் யூனூஸ் பாய் எப்போதும் கருதி வந்தார். தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள் மீது எல்லையற்ற நேசமும் அவருக்கு இருந்தது. அவர் மென்மையானவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிற உள்ளம் அவருடையது. அனுதினமும் நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் படிப்பார். தொலைக்காட்சிச் செய்திகளைத் தொடர்ந்து பார்ப்பார். மனிதர்கள் ஏன் இப்படிக் குரோதத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்று ஆவலாதிப்படுவார்.

 யுத்தத்தையும் மரணங்களையும் அருகாமையிலிருந்து பார்த்தவர். அகதி வாழ்க்கையும் அதன் அலைச்சலும் அவருக்குத் தெரியும். ஒருவன் நாடற்றுப் போவதன் துயரத்தை உணர்ந்தவர் அவர். இந்த மனிதர்கள் ஏன் வரலாற்றிலிருந்து பாடங் கற்றுக்கொள்வதில்லை என்று வருத்தப்படுவார்.

அவரை நான் அணுக்கமாக அறியுந்தோறும் அவரது பல முகங்கள் துலங்கி வந்திருக்கின்றன. அறிவு, ஆற்றல், அடக்கம், நட்பு, பொறையுடமை, பெருந்தன்மை, நாட்டுப் பற்று முதலான பண்பு நலன்கள் நிரம்பப் பெற்றவர் யூனூஸ் பாய். அவரது தெய்வ நம்பிக்கை மதச் சார்பின்மையோடு இயைந்தது. அவர் தமிழ் ஆர்வலராகவும் கலா ரசிகராகவும் இலக்கியச் சுவைஞராகவும் விளங்கினார். இவை எல்லாவற்றையும் விட அவரிடம் விஞ்சி நின்றது மானுட நேயம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

“பண்புடையர்ப் பட்டுண்டு உலகம்” என்பது பொருட்பாலில் இடம்பெறும் குறள். “பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது” என்பது சாலமன் பாப்பையா தரும் பொருள். யூனூஸ் பாய் போன்ற சான்றோர்கள் தங்கள் வாழ்க்கையின வாயிலாக அதை மெய்ப்பித்த வண்ணமிருக்கிறார்கள்.

தொடரும்…

Mu.Ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. சிறந்த பதிவு.
    பர்மாவின் தாக்கம் சில தமிழர்களின் தங்களின் முன்னோர்கள் வாயிலாக இருக்கக் கூடும் என் தாத்தாவும் பர்மாவில் தொழில் செய்து பின் சூழ்நிலை காரணமாய் இந்தியாவிற்குத் திரும்பியவர். என் போன்ற பர்மா குறித்த வரலாற்றை தொடர்பை மறந்த நிலையில் இந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button