இணைய இதழ் 108தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள்;15-மு.இராமநாதன்

தொடர் | வாசகசாலை

அழகப்பரின் பிள்ளைகள்

அந்த நகருக்கு நான் போனது அதுதான் முதல் முறை. அங்கே அரசாங்க ஆலையொன்று இருந்தது. பள்ளியில் உடன் படித்த நண்பன் அதில் பணியாற்றினான். வேதியியல் ஆய்வகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தான். அந்த நகருக்குப் போகக் கிடைத்த வாய்ப்பில் நண்பனின் வீட்டிற்கும் போனேன். அது புதிய வீடு. புது வீடுகளுக்குப் போனால் வீட்டைச் சுற்றிக் காட்டுவார்கள். அது ஒரு சடங்கு. வரவேற்பறையில் தொடங்கிய உலா, அடுப்படி, சாப்பாட்டுக் கூடம், பிள்ளைகளின் அறை, படுக்கையறை, பால்கனி வழியாக மீண்டும் வரவேற்பறைக்கு வந்தது. ஓர் அறை பாக்கி இருந்தது. அது சாப்பாட்டுக் கூடத்திற்கும் வரவேற்பறைக்கும் இடையில் இருந்தது. அதை அறையென்று சொல்ல முடியாது. அலமாரி என்றும் சொல்ல முடியாது. மணிக் கதவம் பொருத்தியிருந்தது. தாழ் இல்லை. ‘சாமியறை’ என்று சொல்லியபடியே கதவைத் திறந்தார் நண்பனின் மனைவி. திருச்செந்தூர் முருகன், திருப்பதி வெங்கடாசலபதி, காரைக்குடி கொப்புடையம்மன் படங்களுக்கு அருகே அந்தப் படத்தை நான் எதிர்பார்க்கவில்லை. பள்ளி நாட்களில் கையேடுகளிலும் ஆண்டு மலர்களிலும் ஆசிரியர் அறைகளிலும் பார்த்து நெஞ்சில் பதிந்த படம். பட்டமளிப்பு உடையில் வள்ளல் அழகப்பரின் நின்ற கோலம்.

நண்பனின் ஊர் காரைக்குடிக்கு ஐந்தாறு கிமீ தொலைவில் ஒரு கிராமம். கடை, கண்ணி, மருந்து, மாத்திரை எல்லாவற்றுக்கும் காரைக்குடிக்குத்தான் வர வேண்டும். அப்படியான எண்ணற்ற கிராமங்கள் காரைக்குடியைச் சுற்றி இருந்தன. அந்நாளில் முறையான பேருந்து வசதி கிடையாது. சைக்கிள் ஓர் ஆடம்பரம். எல்லோராலும் வாங்க முடியாது. நண்பனின் தந்தை ஒரு வாடகை சைக்கிள் கடை  வைத்திருந்தார். சைக்கிள்களைப் பழுதும் பார்ப்பார். நண்பன் பள்ளிக்கு நடந்துதான் வருவான். ஆறாம் வகுப்பில் அழகப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கிய பயணம், அழகப்பா கலை அறிவியல் கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளங்கலை, முதுகலை வரை தொடர்ந்தது. அரசுப் பணியில் சேர்ந்த பிறகு முனைவர் பட்டமும் பெற்றான்.


நான் அழகப்பரின் படத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து நிற்பதைக் கண்ட இணையர்கள் ஒன்றும் பேசவில்லை. நண்பனின் மனைவி கதவை மென்மையாகச் சாத்தினார். நண்பனின் கண்களில் நீர் திரண்டிருந்தது. செய்நன்றி அங்கேயே தேங்கி நின்றது, கீழே விழவில்லை. அன்று நாங்கள் பள்ளி நாட்களைப் பற்றித்தான் பேசினோம். நாங்கள் பிறப்பதற்கு முன்னரே இறந்து போன வள்ளல் அழகப்பரைப் பற்றியும் பேசினோம்.

மாணவர் அழகப்பர்

க.வீ.அள.ராம. அழகப்பச் செட்டியார் (1909-1957) காரைக்குடிக்கு அருகில் கோட்டையூரில் பிறந்தார். அங்கிருந்து மாட்டு வண்டியில் வந்து காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் படித்தார். அழகப்பரின் அப்பாவுக்கு மலேயாவில் வட்டிக் கடை இருந்தது. பள்ளிப் படிப்பு முடித்ததும் அழகப்பரைப் பெட்டியடியில் கைபழக வருமாறு பணித்தார். அழகப்பருக்கு ஆர்வம் கல்வியில் இருந்தது.  ஆனாலும் அப்பாவை மீற முடியவில்லை. சென்னையில் கப்பலேறினார். நல்வாய்ப்பாகக் கப்பலில் அவருக்குக் காய்ச்சல் கண்டது. நாகப்பட்டினத்தில் இறக்கி விடப்பட்டார். காய்ச்சல் குறைந்தது. மகனில் தகிப்பது சுரம் மட்டுமல்ல, கல்வி வேட்கையும்தான் என்பது தந்தைக்குப் புரிந்தது. அழகப்பர் சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். ஆங்கில இலக்கியத்தில் FA, BA என்று தொடர்ந்து MA-இல் முடித்தார். ஆண்டு: 1930. பிறகு லண்டன் போனார். பார்-அட்-லா தேறி வழக்கறிஞரானார். சார்டட் வங்கியில் பயிற்சியும் பெற்றார். அப்படிப் பயிற்சி பெற்ற முதல் இந்தியர் அழகப்பர்தான். எல்லாம் மூன்றாண்டுகளில் நடந்தது. தாயகம் திரும்பினார்.

வணிகர் அழகப்பர்

கொச்சியில் நூற்பாலை தொடங்கினார். திருச்சூர், கண்ணூர், ஆலுவா ஆகிய நகரங்களில் நெசவாலை தொடங்கினார். வணிகம் வளர்ந்தது. ஆனால் சில ஆண்டுகளில் நாடெங்கும் ஆடை வணிகம் நசிந்தது. பெரு நட்டம் வந்தது. ஆனால் ஒரு வணிகராகத் தொடர்ந்து முனைந்தார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். மருந்து, ரப்பர், நட்சத்திர விடுதி, திரையரங்கு, இரும்பு, ரியல் எஸ்டேட், வங்கி, காப்பீடு என்று பல துறைகளைத் தொட்டார். அவை துலங்கின. மும்பையில் பங்கு வணிகத்தில் ஈடுபட்டார். அங்கு முக்கியப் புள்ளியானர். அழகப்பர் வாங்கியதாலேயே பல பங்குகளின் மதிப்புகள் உயர்ந்தன. ஆனால் அந்தச் சந்தையின் கரடி முகம் மேலெழுந்தபோது அழகப்பரின் கைவசமிருந்த பங்குகள் மட்டுமல்ல, அவர் கட்டி எழுப்பிய பல தொழிற்கூடங்களின் அடித்தளமும் ஆட்டம் கண்டன. ஆனால் அவர் வீழவில்லை. மீண்டார். உயர்ந்தார். இந்தக் கதையை யாரேனும் விரிவாக எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி எழுதினால் அந்த நூல்  வள்ளுவர் சொல்லும் வினைத்திட்பத்திற்கும் மனத்திட்பத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும். எனில், அழகப்பரின் பெயர் நிலை பெற்றிருப்பது அவர் வெற்றிகரமான வணிகர் என்பதனால் அல்ல, அவர் மனிதநேய மிக்க வள்ளல் என்பதால்.

‘பித்துக் கொடையாளன்!’

அழகப்பர் வழங்கிய கொடைகளின் பட்டியல் பெரிது. ஒரு பவுன் தங்கம் 25 ரூபாய்க்கு விற்ற காலத்தில் அவர் வழங்கிய கொடை இலட்சங்களிலும் பல்லாயிரங்களிலும் இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியற் கல்லூரி (ரூ 5 இலட்சம்), சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ரூ 5 இலட்சம்), திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை (ரூ.1 இலட்சம்), கொச்சி குழந்தைகள் பகலுணவு (ரூ. 1.5 இலட்சம்), மதுரை டோக் சீமாட்டி கல்லூரி (ரூ.25 ஆயிரம்), சென்னை சேவா சதனம் (ரூ.75 ஆயிரம்), எர்ணாகுளம் மகராஜா கல்லூரி (ரூ.80 ஆயிரம்), தில்லி தென்னியந்தியக் கல்விக்குழு (ரூ. 75 ஆயிரம்), சென்னை தக்கர் பாபா தொழிற் பள்ளி (ரூ.1.17 இலட்சம்), தமிழ்க் கலைக்களஞ்சியம் (ரூ.10 ஆயிரம்) என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவிய அண்ணாமலை அரசரே அழகப்பரை வள்ளல் என்று போற்றியிருக்கிறார். எனில், மக்கள் மனதில் அவர் வள்ளலாக நிலை பெற்றதற்குக் காரணம் காரைக்குடிக் கல்விச் சாலைகள். அதற்குக் கால்கோள் நாட்டப்பட்ட நாள்  ஜூலை 3, 1947.

‘எடுத்தான் பல பள்ளி ஈங்கு!’

அன்றுதான் அடையாறில் அன்னிபெசண்ட் அம்மையாரின் நூற்றாண்டு விழா நடந்தது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் லெட்சுமணசாமி முதலியார் உரை நிகழ்த்தினார். ‘நாம் அரசியல் விடுதலை பெறப் போகிறோம். நமது நாடு அறியாமையிலிருந்தும் விடுதலை பெற வேண்டும். அதற்குக் கல்விக் கூடங்கள் வேண்டும். நாடெங்கும் செல்வந்தர்கள் அவற்றைத் தோற்றுவிக்க வேண்டும்’ என்று பேசினார். அரங்கிலிருந்த அழகப்பர் அந்த அறைகூவலை ஏற்றார். அங்கேயே காரைக்குடியில் கல்லூரி தொடங்குகிறேன் என்றார். பல்கலைக்கழகத்திற்கு வைப்புத் தொகையாக அப்போதே ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.


கல்லூரிக்குக் கட்டடம் வேண்டுமே? ஊராட்சிக் கட்டடம் தற்காலிகக் கல்லூரி ஆகியது. ரயில்வே பீடர் சாலையில் அமைந்திருக்கும் அந்தக் ‘காந்தி மாளிகை’ இப்போது அரசு மருத்துவமனையாக இயங்கி வருகிறது. நாடு விடுதலை பெற்ற அதே நாளில் அழகப்பா கல்லூரியும் இயங்கத் தொடங்கியது. அப்போது தொடங்கிய ஓட்டம் அடுத்த பத்தாண்டுகளுக்கு, அழகப்பர் கண் மூடுகிற வரை, நிற்கவில்லை. அழகப்பா ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி (1950), அழகப்பா பொறியியற் கல்லூரி (1952), அழகப்பா மகளிர் கல்லூரி (1953), அழகப்பா பாலிடெக்னிக் (1955), அழகப்பா உடற்கல்விக் கல்லூரி (1956) என்று பட்டியல் வளர்ந்தது.

கல்லூரிகளுடன் பள்ளிகளும் நாட்டினார் அழகப்பர். முதலாவதாக, அழகப்பா மாதிரி உயர்நிலைப் பள்ளி (1951). இந்தப் பள்ளியில் படிக்கிற பேறு எனக்கு வாய்த்தது. மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளுடன் இணைக்கப்படுவதைப் போல் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டதுதான் எம் அழகப்பா மாதிரி உயர்நிலைப் பள்ளி. ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை குறிப்பிட்ட கால அளவில் (2 முதல் 3 வாரம்) எங்களுக்குப் பாடம் எடுப்பார்கள். இது ஆண்டிற்கு ஒரு முறை, சமயங்களில் இரு முறை நடக்கும். பயிற்சி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை, அவர்களது ஆசிரியரும் எங்களது ஆசிரியரும், கூடவே நாங்களும் மேற்பார்ப்போம்.

மாதிரிப் பள்ளியைத் தொடர்ந்து வந்த பள்ளிகள்: அழகப்பா மாண்டிசோரிப் பள்ளி (1953), அழகப்பா தொடக்கப் பள்ளி (1954), அழகப்பா ஆதாரப் பள்ளி(1955), அழகப்பா ஆயத்தப் பள்ளி (1956), அழகப்பா இசைப் பள்ளி (1956) முதலியன.

கல்வியைப் போலவே ஆய்வும் முக்கியமானது என்று கருதினார் அழகப்பர்.  நேருவின் தலைமையின் கீழ் CSIR அமைப்பு நாட்டின் தலையாய நகரங்களில் ஆய்வு மையங்களை அமைத்து வந்தது. காரைக்குடியில் ஒரு மையம் நிறுவ விருப்புற்றார் அழகப்பர். நேருவிடமே நேரடியாகப் பேசினார். 300 ஏக்கர் நிலமும் ரூ.15 லட்சம் நிதியும் அரசுக்கு வழங்கினார். தான் வழங்கிய நிலத்தில் ஆய்வு மையத்திற்கு அவசியமான நீர் வளத்தையும் சுற்றுச் சூழலையும் உருவாக்கினார். நேருவே காரைக்குடிக்கு வந்து மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆண்டு:1948. அப்போது அவர் அழகப்பருக்கு வழங்கிய பட்டம்தான் ‘சோசலிச முதலாளி’. குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் மையத்தை திறந்து வைத்தார். ஆண்டு: 1953. அதுதான் ‘சிக்ரி’- மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute, CECRI). இந்தியாவில் இப்போது CSIRஇன் கீழ் 39 ஆய்வு மையங்கள் இயங்குகின்றன (தமிழகத்தில் மூன்று). இதில் தனி நபர் கொடையால் நிறுவப்பட்டது ‘சிக்ரி’ மட்டுமே.


கல்லூரிகளையும் பள்ளிகளையும் தொடர்ந்து அவற்றுக்கான விடுதிகளையும் நூலகங்களையும் ஆய்வகங்களையும் கூட்டரங்கங்களையும் கட்டினார் அழகப்பர். இந்தக் கல்விச் சாலைகளும் சிக்ரி மையமும் அமைந்திருக்கும் பரப்பு சுமார் 1000 ஏக்கர் இருக்கலாம். நாட்டின் தலை சிறைந்த அரசியலர்கள், அமைச்சர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் காரைக்குடிக்கு வந்து இந்தக் கல்விக் கூடங்களைத் திறந்து வைத்தனர்.


அழகப்பரின் 48ஆம் வயதில் காலன் அவரைக் கவர்ந்து போனான். ‘கல்வி நிலைப் பெருங்கடலை கணப்பொழுதில் முடித்தாயே, பாவி! பாவி!’ என்று காலனை சபித்தார் கண்ணதாசன்.

இந்தியா வெள்ளி விழா கொண்டாடிய போது (1972) நாங்கள் எட்டாம் வகுப்பில் இருந்தோம். அதே ஆண்டு அழகப்பா கல்லூரியும் வெள்ளி விழா கொண்டாடியது. பிரதமர் இந்திரா காந்தி வருகை தந்தார். காரைக்குடியில் ராத் தங்கினார். அதிகாலையில் புறப்பட்டார். முதல் நாள் நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தும் கண் நிறையவில்லை. அடுத்த நாள் ஹெலிகாப்டர் தளத்தில் திரளாகக் கூடி நின்றோம். கூட்டத்தைப் பார்த்த இந்திரா, ஜீப்பில் சுற்றி வந்தார். கண்ணெட்டும் தூரத்தில் ஆசை தீரப் பார்த்துக்கொண்டோம். இப்படியாக இரண்டு பிரதமர்கள் காரைக்குடி வருவதற்கு அதன் கல்விக்கூடங்களே காரணமாகின.


ஆசிரியர் பெருமை

எல்லாக் கல்விக் கூடங்களும் பன்னாட்டுத் தரத்தில் அமைந்தவை. நான் பயின்ற மாதிரி உயர்நிலைப் பள்ளியில் நான்கு மைதானங்கள் இருந்தன. இந்த மைதானங்களுடன்  நினைவுக்கு வருகிற ஆளுமை உடற்பயிற்சி ஆசிரியர் பழனியப்பன் சார். எங்கள் வட்டாரத்தின் எல்லா வசைச் சொற்களும் அவருக்கு அத்துப்படி. அவர் எப்படி ஏசினாலும் மாணவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். காரணம் அவருக்கு விளையாட்டிலும் மாணவர் நலனிலும் இருந்த அக்கறை. மாவட்ட மாநிலப் போட்டிகளில் எம் சகாக்கள் முன்னணி வகித்ததற்கு அவர்தான் காரணம்.

எனக்குப் பள்ளி நாட்களில் ஆதர்சமாக விளங்கிய ஆசிரியர்கள் இருவர். ஒருவர் அரசப்பன் சார். கணிதம் பயிற்றுவித்தார். மேல் சட்டையும் காற்சட்டையும் வெள்ளை நிறம்; இடையே மெலிதான கறுப்புப் பட்டியும் மினுக்கப்பட்ட காலணிகளும் அணிந்து வருவார். வகுப்பில் கணிதமன்றிப் பிறிதொன்றை அவர் பேசி யாரும் கேட்டிருக்க முடியாது.

நாங்கள் படித்த காலத்தில் பள்ளிப் படிப்பு 11 ஆண்டுகள். 11ஆம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு இருக்கும். ஒரு விருப்பப் பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். நான் எடுத்தது இயற்கணிதமும் வடிவகணிதமும் (algebra & geometry). ஆக, பொதுக் கணிதம், விருப்பக் கணிதம் என இரண்டு கணிதத் தேர்வுகள். நான் இரண்டிலும் நூறு மதிப்பெண் வாங்குவேன் என்று சார் நம்பியிருக்கிறார். அது எனக்குத் தெரியாது. சில ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறார். அது எனக்குப் பிற்பாடு தெரிய வரும். நான் பொதுக் கணிதத்தில் முழு மதிப்பெண் எடுத்தேன். விருப்பக் கணிதத்தில் குறைந்துவிட்டது. சான்றிதழ் கிடைத்ததும் சாரைப் பார்க்கப் போனேன். எனது மதிப்பெண்கள் அவருக்கு முன்பே தெரிந்திருந்தது. சார் என்னோடு பேசவில்லை. எனக்கு மதிப்பெண் குறைந்ததைவிட சாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாமல் போய்விட்டோமே என்கிற வருத்தம் நெடுநாள் நீடித்தது.

அடுத்த ஆதர்சம் நாகலிங்க ஐயா. தமிழைப் பரிந்து ஊட்டியவர். கம்பனின், ‘கண்டெனன் கற்பினுக்கணி’யும் இளங்கோவின், ‘தேரா மன்னா’வும் மனதுக்கு நெருக்கமாகக் காரணமானவர். யாரும் நோட்ஸ் படிக்கக் கூடாது என்பதில் ஐயா கறாராக இருந்தார். ஆனால் திருத்தணியிலிருந்து தென்குமரி வரை சந்தையில் கிடைக்கிற எல்லா உரை நூல்களையும் வாங்கிப் படித்துவிடுவார். ஒருமுறை, ரமேஷ் வட மாவட்டங்களில் மட்டும் புழக்கத்தில் இருந்த ஒரு நோட்ஸைப் படித்து எழுதிவிட்டான். ஐயா கண்டுபிடித்துவிட்டார். அது முதல் அவனை, ‘நோட்ஸ்காரா’ என்றுதான் விளிப்பார்.

ராமசந்திரன் சார் உலக வரைபடத்தையே எங்கள் தலைக்குள் கடத்திவிட்டவர். இப்போது மெக்சிகோ எல்லையில் டிரம்ப் சுவரெழுப்பப் போகிறார் என்று படித்தால் அதைப் புரிந்து கொள்வதற்கு உலக வரைபடமோ கூகுள் வரைபடமோ தேவைப்படுவதில்லை. டாட் டீச்சர் ஆங்கில இலக்கணம் என்று தனியாகப் பயிற்றுவிக்கவில்லை. ஆனால் பாடத்தில் வரும் வாக்கியங்களில் பயின்று வரும் இலக்கணத்தை விளையாட்டுப் போல் சொல்லிக் கொடுத்தவர். சாமிநாதன் சாருக்கு, ‘லாங் ஸ்டெப்’ என்று பட்டப் பெயர். ஒரே சீராக நீண்ட அடிகள் வைத்து நடப்பார். பராசக்தி சிவாஜியைப் போன்ற தளர்வான காற்சட்டை, அது நெஞ்சு வரை நிமிர்ந்திருக்கும். முழுக்கைச் சட்டை உள்ளிருக்கும்.

வீடும் கொடுத்த விழுச்செல்வன்

இன்னொரு ஆசிரியரையும் மறக்க முடியாது. அவர் எங்கள் பள்ளி ஆசிரியர் அல்லர். ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியர், கவிஞர், பேச்சாளர், மா. கண்ணப்பன். ஒரு முறை கல்லூரியில் அழகப்பர் பிறந்த தின விழாக் கூட்டம் நடந்தது. நாகலிங்க ஐயா பள்ளி மாணவர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு போனார். மா.கண்ணப்பன் அன்று வ.சுப.மாணிக்கம் அழகப்பரைக் குறித்து எழுதிய பாடல்களை மையமாக வைத்துப் பேசினார்.

வ.சுப.மாணிக்கம் அழகப்பர் வாழ்ந்த  காலத்திலேயே  அழகப்பாக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராக விளங்கியவர். அழகப்பரின் மறைவுக்குப் பின்னர் கல்லூரி முதல்வரானார் (1964-70). ஒரு தமிழாசிரியர் கல்லூரி முதல்வரானது அநேகமாக அதுதான் முதல் முறையாக இருக்கும். வ.சுப பிற்பாடு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பணிபுரிந்தார்.

வ.சுப அழகப்பரின் கொடைச் சிறப்பை பண்டைய அரசர்களோடு ஒப்பிடுகிறார். முதலில் கரிகாலன். அவன் காடு வெட்டி நாடாக்கினான். சரி, அதை மக்களின் வரிப்பொருளால்‌தானே செய்தான்? (அழகப்பரைப் போல்) சொந்தப் பொருளால் செய்யவில்லையே என்பது வ.சுப.வின் கேள்வி. அடுத்து, பாரி. அவன் முல்லைக்குத் தேர் ஈந்தான். ஆனால் அவன் மாளிகையை ஈந்தானா? மூவேந்தர்களை நோக்கி ‘குன்றும் உண்டு’ என்றுதானே கபிலர் பாடுகிறார்? ஆனால் அழகப்பர் அவரது மாளிகையை ஈந்தார்.

கலைக் கல்லூரிக்கு அனுமதி வந்தபோது கட்டடம் இல்லாமல் எப்படிக் கல்லூரி, ‘காந்தி மாளிகை’யில் இயங்கியதோ, அது போல் மகளிர் கல்லூரிக்கு அனுமதி வந்தபோதும் கட்டடம் தயாராகவில்லை. கோட்டையூரில் தனது மாளிகையைக் கல்லூரிக்காகத் திறந்துவிட்டார் அழகப்பர். இதை வ.சுப இப்படிப் பாடினார்:

கோடி கொடுத்த கொடைஞன்; குடியிருந்த
வீடும் கொடுத்த விழுச்செல்வன்; – தேடியும்
அள்ளிக் கொடுத்த அழகன்; அறிவூட்டும்
வெள்ளி விளக்கே விளக்கு!

மா.கண்ணப்பனின் அந்த உரை என்னில் தங்கியது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கி.வா.ஜகந்நாதன் எழுதிய, ‘எழு பெரும் வள்ளல்கள்’ என்கிற நூல் துணைப்பாடமாக இருந்தது. பாரி, பேகன், அதியமான், காரி, ஓரி, ஆய், நள்ளி ஆகியோரின் வள்ளன்மை அந்த நூலின் வழி எங்களிடம் வந்து சேர்ந்திருந்தது. கூடவே அவ்வமயம் நாகலிங்க ஐயாவின் வழி யாப்பும் அணியும் பாடமாக வந்தது. எல்லாமாகச் சேர்ந்து எனது முதல் கவிதை உருவானது. புதுக்கவிதைக்கு இன்னும் சில ஆண்டுகள் இருந்தன. ஆகவே நான் எழுதியது ஆசிரியப்பா. ஒவ்வொரு வள்ளலின் வள்ளன்மைக்கு இரண்டு வரி, அழகப்பர் அதை எவ்விதம் விஞ்சுகிறார் என்று இரண்டு வரி. பலவிடத்தில் பா தளை தட்டியது. ஐயா தட்டித் தட்டி நேராக்கித் தந்தார். அந்தப் பாடலைப் பள்ளி விழாவில் என்னை வாசிக்கச் செய்தார்.

மாணவர் மகிமை

படிப்பு எந்த அழுத்தத்தையும் தராத நாட்களாக அந்தக் காலம் இருந்தது.
அவரவர்கள் விருப்பமான துறையையும் தொழிலையும் தேர்ந்தெடுத்தோம். இயற்பியலை ஆர்வத்தோடு படித்த சந்திரமோகன் முனைவராகி ஒரு கல்லூரி முதல்வருமாகினான். லட்சுமணசாமி தனக்கு விருப்பமான வேதியியலைக் கடத்திக்கொண்டு போய் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கிறான். சுந்தரம் பென்சில் ஓவியத்தில் விற்பன்னன். அவனது நகைக் கடை கல்லுக்கட்டியில் இருக்கிறது. கடையின் சுவர்களை அவன் அச்சு அசலாக  வரைந்த ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. Rm.Rm.ராமசாமி பொறியாளன், இப்போது சிங்கப்பூர்க்காரன். மோகன் பெங்களூரில் மென்பொருள் எழுதுகிறான். கண்ணன் மின் பகிர்வில் கரை கண்டவன்.

MRT ராஜேந்திரன் கட்டுமான வேதிப்பொருட்களில் வல்லுநர். ‘ஸ்டைல்’ முரளி- வருமான வரி அலுவலர்,  லெட்சுமணன்- பல் மருத்துவர், ஷீலா சாந்தகுமாரி – விஞ்ஞானி, தெரசம்மா – ஆசிரியை. கே.எஸ். கிருஷ்ணனும், செல்வநாதனும், அப்துல் ஜபாரும் ஹர்ஷ்காந்தும் சொந்தத் தொழில் செய்கிறார்கள்.


எவர் மகவும் சொல்ல மகிழ்வான்!

இதில் ஹர்ஷ்காந்தைப் பற்றிச் சிறப்பாகச் சொல்ல வேண்டும். சேட்டு வீட்டுப் பையன்களின் சிவந்த நிறம் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனது அப்பா காரைக்குடி நகைக் கடையொன்றில் எழுத்தராக இருந்தார். நாங்கள் எல்லோரும் பள்ளிப் படிப்பு முடிந்ததும் புகுமுக வகுப்புக்குக்குப் (PUC) போனோம். ஹர்ஷ்காந்த் மும்பைக்குப் போனான். தந்தையாரின் உடல் நலம் குன்றியதால் இள வயதிலேயே ஆபரணத் தொழிலில் ஈடுபட்டான். பெரும்பாடு பட்டுக் கையூன்றி எழுந்தான். தம்பி, தங்கைகளைப் படிக்க வைத்தான். மணம் செய்வித்தான். நீண்ட நாள் மும்பை வாசத்திற்குப் பிறகு இப்போது சூரத்தில் வசிக்கிறான்.

கடந்த மாதம் ஓர் அலுவலின் பொருட்டு சூரத் போயிருந்தேன். ஹர்ஷ்காந்த் வீட்டுக்கும் போனேன். அந்த வீட்டை அவன் வாங்கி ஆண்டு சில ஆகியிருக்க வேண்டும். ஆகவே சுற்றிக் காட்டவில்லை. நாங்கள் இருவரும்  அழகப்பரைப் பற்றியும் பள்ளி நாட்களைப் பற்றியும் பேசலானோம்.  ஹர்ஷ்காந்தின் மனைவி ‘ஸ்கூலைப் பத்திப் பேச ஆரம்பிச்சா இவருக்கு வேற ஒண்ணும் வேண்டாம்’ என்று என்னிடம் செல்லமாக சலித்துக்கொண்டார். ஹர்ஷ்காந்த் மனைவியிடம் சொன்னான்:

‘அன்பே, நாங்கள் வேறு எதைப் பற்றிப் பேசுவோம்? நாங்கள் அழகப்பரின் பிள்ளைகள் அல்லவா?’

தொடரும்

Mu.Ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button