தொடர்கள்
Trending

காற்றில் கரைந்த கந்தர்வன்;1 – மானசீகன்

தொடர் | வாசகசாலை

சில மனிதர்களின் மரணங்கள் வெறும் உடலின் மரணமல்ல…அது கோடிக்கணக்கான உணர்வுகள் மௌனமாகி உறைகிற திடீர் பனிப்பாறை…ஒரு காலகட்டத்தின் மீது இயற்கை வலிந்து போடும் முடிவுத் திரை…சில தலைமுறைகளின் ரசனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல் திடீரென ஒலித்து உலகத்தையே அழ வைக்கிற   சாவுமணி…எஸ்.பி.பி.யின் மரணம் அப்படியான ஒன்றுதான்.

தமிழ்த் திரையிசையில் நூற்றுக்கணக்கான சிறந்த  பாடகர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள்… இனியும் கூட உருவாகலாம்…ஆனால் இவர்களில் எவருமே எட்ட முடியாத உயரத்தையும், பெரும்புகழையும் ஒரு மனிதர் எவ்வாறு சம்பாதித்தார்?  கடைசி வரை அதை எப்படித் தக்க வைத்திருந்தார்? அவருடைய கலைத் திறமைக்கு வெளியிலும் பண்பாக, பணிவாக, நன்னடத்தையாக, நன்னெறியாக, கனிவாக, மனிதமாக அதற்கான ஆயிரம் காரணங்கள் ஒளிந்திருக்கின்றன. என்றாலும் நாம் அவர் கலையிலிருந்தே தொடங்குவோம்.

தமிழ்த் திரையிசையில் முடிசூடா சக்கரவர்த்திகளாக தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும் கோலோச்சியிருந்தனர்.தொடக்க காலத்தில் பாடகன்தான் இங்கு நட்சத்திர நடிகர்  அந்தஸ்திலும் இருந்திருக்கிறான். அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கும் , புதிதாய் வந்த பிறருக்கும் கர்நாடக சங்கீதமே பாடுவதற்கான அடிப்படைத் தகுதியாக இருந்திருக்கிறது. முதல் பின்னணிப் பாடகர் என்றழைக்கப்பட்ட திருச்சி லோகநாதன் தொடங்கி இதுதான் நிலை. ‘விஸ்வநாதன் – ராமமூர்த்தி ‘என்கிற இரட்டைச் சாதனையாளர்கள் வந்த பிறகுதான் இங்கு ‘ராவான  கர்நாடக இசையின்’ ஆதிக்கம் ஒளிந்து மெல்லிசையின் ஜனநாயகம் மலர்ந்தது. அவர்களுடைய காலத்தின் தனிப்பெரும் நாயகனாக டி.எம்.எஸ்.கோலோச்சினார்.

புராண காலத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட தமிழ்த்திரை கூட்டுக் குடும்பத்தின் நாடகீய உணர்ச்சிகளையும், இனம்,தேசிய, மொழி சார்ந்த பெருமிதங்களையும், திராவிடக் கருத்துக்களையும் பேசத் தொடங்கிய போது அதன் முன்னணி நாயகர்களாக உருவாகி வந்த சிவாஜிக்கும், எம்.ஜி.ஆரு க்கும் டி.எம்.எஸ்.குரல் அப்படியே பொருத்திப் போனது. அல்லது பொருத்திப் போனதாக ரசிகர்கள் கற்பனை செய்து கொண்டனர். டி.எம்.எஸ் ஸின் உரத்த குரலும், பல்வேறு நாடகீய உணர்ச்சிகளை மிகைப்படுத்திப் பாடுகிற அதீதத் திறனும் அந்தப் படங்களுக்குரிய நியாயங்களை சரியாகச் செய்தன.

பண்ணையாரை எதிர்த்துக் கேள்வி கேட்கிற போதும், கார் ரிப்பேராகி நடுக்காட்டில் நிற்கிற போது அவர் மகளைக் கேலி செய்து கொக்கரிக்கிற போதும், மழைக்கு ஒதுங்கி குடிசைப் பக்கம் நிற்பவர்களை புரட்சிக்கு(?) அழைக்கிற போதும், ஆணையிட்ட அன்னைக்கு வாழ்த்துப் பா பாடுகிற போதும், பிரிந்த காதலுக்காக ஊர் காணக் கசிகிற போதும் இந்த உரத்த குரலே தேவைப்பட்டது.

இன்னொரு புறத்தில் சிவாஜி மகனாகி மனம் கசிந்து, அண்ணனாகி அழுது, காதலனாகிக் கதறி, மணாளனாகி மண்டையிலடித்து, அப்பாவாகி அதரம் துடிக்க உணர்ச்சியால் குமுறி, கிழவனாகிக் கீழே விழுந்தாலும் அந்த 180 டிகிரி கோணத்தின் நடிப்போடு டி.எம்.எஸ் சும் குரலால் கூடவே சுற்றிக் கொண்டிருந்தார். போதாக்குறைக்கு அப்பர், வ.உ.சி, கட்டபொம்மன், கர்ணன் என்று எவர் வேஷத்தில் சிவாஜி வந்தாலும் டி.எம்.எஸ் ஓடிப் போய் வரலாற்றுக்கு உள்ளே  நுழைந்து குரலாய் எட்டிப் பார்ப்பார்.

பக்தியாயிருந்தாலும் கூட  கடவுளிடம் கையேந்தி நாயன்மார்களை நேரில் பார்த்து விட்ட பாவனையில் உருகினார். அந்த உருகல் போதொன்று இயக்குநர்கள் கருதினால் அவரை விட உச்சஸ்தாயியில் பாடி சிவபெருமானின் கையைப் பிடித்து வீட்டுக்கு இழுத்து வரும் திறன் கொண்ட சீர்காழி கோவிந்தராஜனை கை வசம் வைத்திருந்தனர்.

இந்த உக்கிரமான சாமியாடல்களுக்கு நடுவே மற்ற நாயகர்களுக்கும், சில இயக்குநர்களின் புதிய முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர்களாக ஏ.எம்.ராஜா, ஏ.எல்.ராகவன், பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோர் சாதாரண மனுஷர்களின் குரலில் பாடிக் கொண்டிருந்தனர். சிவாஜி வேறு சிலருடன் இணைந்து நடித்தால் பி.பி.ஸ்ரீநிவாஸ் டி.எம்.எஸ் உடன் இணைந்து பாட அழைக்கப்படுவார். குரல் இனிமையாக இருந்தாலும் டி.எம்.எஸ்.ஸின் பாவனைகளும், சிவாஜியின் திரை ஆக்ரமிப்பும் அவருக்கான இடத்தைக் குறைத்து விடும்.

இந்தச் சூழலில் அறுபதுகளின் இறுதியில்  ஓரளவிற்கு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக கல்லூரி சென்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட இயக்கங்களின் கருத்தியல் திரைப்படங்களில் குறைந்திருந்தது. பாசம் , அன்பு , பதி பக்தி ,போன்ற பழைய மாவு அதே கிரைண்டரில் போட்டு  மீண்டும் மீண்டும் அரைக்கப்பட்டதால் ரசிகர்கள்  தோசை புளித்து விட்டதாய் உணர்ந்தனர். சரித்திரப் படங்கள், புராணப் படங்கள், பக்திப் படங்கள் ஆகியவை கிட்டதட்ட தன் செல்வாக்கை இழந்திருந்தன. அசைக்க முடியாத ஜோடியாக இருந்து தமிழ்த் திரையுலகை ஆட்சி செய்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை பிரிந்து விட்டது. பாலச்சந்தர் போன்ற புதிய இயக்குநர்களும், எழுபதுகளின் மத்தியில் வேறு சில இயக்குநர்களும் வேறொரு பாணியில் படம் எடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு திரையுலகிற்கு வந்தனர். கர்நாடக சங்கீத மெட்டை எளிமையாக்கி போதுமான அளவு மெல்லிசையை இரட்டையர்கள் வழங்கியிருந்ததால் வேறொரு புதிய பாதைக்கான தேவை உருவாகியிருந்தது.

மிகச்சரியாக இந்தக் காலகட்டத்தில்தான் எஸ்.பி.பி. விஸ்வநாதன் அவர்களைச் சந்திக்கிறார். ‘தமிழ் கற்று வா’ என்று அனுப்பிய பிறகு மீண்டும் மொழியறிந்த பாடகராக திரும்பி வருகிறார். சில பாடல்கள் பதிவாகி வெளியாகவில்லை என்றாலும் எம்.எஸ்.வி  இசையில் ‘இயற்கையெனும் இளைய கன்னி’ என்று தமிழ்த் திரையிசையின்புது சகாப்தம் சத்தமில்லாமல் தொடங்கியது.

உண்மையில் எம்.எஸ்.வி இல்லையென்றால் ‘பாடும் நிலா’ பாலு இல்லை. அவரை முழுவதுமாகச் செதுக்கியவர் எம்.எஸ்.வி.தான்.

எம்.எஸ்.வி.போதுமான அளவு கொண்டாடப்படவில்லை என்கிற ஆதங்கம் எனக்குண்டு. கூடுதலாக எஸ்.பி.பி.யின் இசைப் பயணத்திலும் அவரது பங்கை பலரும் குறைத்தே மதிப்பிடுகின்றனர்.

ஆனால் எஸ்.பி.பி.எனும் இசை மாளிகை எழுந்து நிற்பதற்குரிய அத்தனை அஸ்திவாரங்களையும் அவர்தான் போட்டிருக்கிறார்.

மொழியறிவின் முக்கியத்துவம், உச்சரிப்பு ஆகியவற்றை சரிவரப் பேணுகிற பழக்கத்தை எஸ்.பி.பி‌‌.கடைசி வரை பின்பற்றியதற்கு விதை போட்டவர் எம்.எஸ்.வி தான்.

எஸ்.பி.பி க்கென்று தனித்தன்மை உருவாகி அவர் பலவிதமான வகைமைகளில் பாடத் தொடங்கினார். அவருக்குப் பின்னால் வந்த நூற்றுக்கணக்கான பாடகர்களுக்கு அவரே ஆதர்ஸமாக இருந்தார்.ஆனால் அத்தனை வகைமையிலான பாடல்களையும் ஆரம்ப காலத்திலேயே அவருக்குத் தந்து அழகு பார்த்தவர் எம்.எஸ்.வி.

சொல்லப் போனால் தமிழ்த் திரையிசையின் முதல் ‘மெல்லிசைப் பாடகர்’ அவர்தான். இசையில் மெல்லிசை வந்து விட்டாலும் ஆண் பாடகர்களைப் பொறுத்தவரை இங்கு பக்தி மரபின் தன்மையே கோலோச்சியது.

தியாகராஜ பாகவதர் போன்றோர் இசைக் கச்சேரிகளிலிருந்து உருவாகி வந்தவர்கள் எனில் டி.எம்.எஸ், சீர்காழி ஆகியோர்..கோவில்களின் பக்திப்  பாடல்களைக் கேட்டு வளர்ந்து அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள். ஆனால் எஸ்.பி.பி.சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மேடைக் கச்சேரிகளில் பாடிய மெல்லிசைப் பாடகர். அதுவும் புகழ்பெற்ற இந்திப் பாடகர் முகம்மது ரஃபி தான் அவருக்கு ஆதர்ஸம். அதனால் இயல்பாகவே அவர் குரலில் கர்நாடக சங்கீகதத்திலிருந்து வேறுபட்ட இந்துஸ்தானி பாவனை இருந்தது. போதாக்குறைக்கு அவர் குரலில் இருந்த துள்ளல் தன்மை மேற்கத்தியத் தன்மை கொண்ட ஜாலியான பாடல்ளைப் பாடுவதற்கு பெருமளவு துணை நின்றது. ராமமூர்த்தியை விட்டுப் பிரிந்த பிறகு தன் தனித்தன்மையை புதுபாணியில் நிலைநாட்டிக் காட்ட வேண்டும் என்கிற தவிப்பில் இருந்த எம்.எஸ்.வி க்கு லட்டு மாதிரி கிடைத்தவர்தான் எஸ்.பி.பி.

ஐம்பது, அறுபதுகளில் இங்கு நிலை பெற்றிருந்த இசை மரபை உடைத்து கொண்டாட்டம் மிகுந்த துள்ளலான இசையை எழுபதுகளில் எம்.எஸ்.வி அறிமுகப்படுத்திய போது அதற்கான தலைசிறந்த பிரதிநிதியாக எஸ்‌.பி.பி யே  இருந்தார். அவர் குரலை இளைஞர்கள் தம் குரலாகவும், இளம் பெண்கள் தமக்கான குரலாகவும் அடையாளம் கண்டனர். இதை மிகச் சரியாக ஊகித்து உணர்ந்ததால்தான் எம்.எஸ்.வி ஒரு தந்தையைப் போல் அந்த  விரல்களைப் பற்றிக் கொண்டார். ஆம்;ஒரு குரலின் துணை கொண்டே எம்.எஸ்.வி இருபது ஆண்டு சகாப்தத்தை விளையாட்டாகத் தாண்டிச் சென்றார்.

தமிழில் எண்பதுகளை மேடைப் பாடல்களே ஆட்சி செய்தன. கமல், விஜயகாந்த், மோகன், முரளி, கார்த்திக், பிரபு, டி.ஆர்  என்று சகலரும் மைக்கோடு நின்றனர். இதற்கும் விதை போட்டவர் எம்.எஸ்.வி தான். அவர் கையில்தான் எஸ்.பி.பி.எனும் துருப்புச் சீட்டு இருந்ததே..?’ கடவுள் அமைத்து வைத்த மேடை’ என்று ஆரம்பித்து ஜமாய்த்து விட்டார். அதற்கு முன்பாக மேடைப் பாடல்கள் வந்திருந்தாலும் அவையெல்லாம் கர்நாடக இசை அல்லது தெருக்கூத்தின் சாயல் கொண்டவை. எம்.எஸ்.வி.மேற்கத்திய சாயல் கொண்ட துள்ளலான மேடைப் பாடல்களை அறிமுகம் செய்தார். அவருடைய மேடைப் பாடல்களின் கொண்டாட்டத் தன்மை எனக்கு ஒரு ரயில் ஆரவாரம் நிரம்பிய கூச்சலோடு  வேகமாய் நகர்ந்து வருவதையே நினைவூட்டும்.

அந்தப் பாடலில் மிமிக்ரியில் குதூகலத்தை வைத்து, கல்யாணத்தின் நிகழ்வுகளை வரிசையாய் அடுக்கிப் பாடுகிற போதே உருக்கமாகப் பாடுவார் எஸ்‌பிபி..கிளி காதல் , மான் மந்திரம் , யானை பரிவட்டம் என்று நீளும் பாடலில் கடைசி வரிகளில் கதைக்குத் தேவையான உணர்வை குரலில் கொண்டு வந்து விடுவார்…

“ஒரு கிளி கையோடு
ஒரு கிளி கை சேர்த்து
உறவுக்குள் நுழைந்ததம்மா
உல்லாச வாழ்க்கையை
உறவுக்குக் கொடுத்திட்ட
ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண்கிளி
தப்பாக நினைத்ததை
அப்போது உணர்ந்ததம்மா
அது எப்போதும்கிளியல்ல
கிணற்றுத் தவளை தான்
இப்போது தெரிந்ததம்மா ”

என்ற வரிகளிலேயே கதை வந்து விடும்.

பிரிந்து போன சகோதரர்கள் ஒன்று சேர்கிற சூழலை பாட்டுப் போட்டு அமர்க்களப்படுத்தியவர் எம்.எஸ்.விதான்..பிறகு இதைப் பின்பற்றியே ‘ குடும்பப் பாடல் ‘ மரபொன்று திரையிசையில் உருவானது..காணாமல் போகிற ஒவ்வொரு குழந்தையும் எதை மறந்தாலும் குடும்ப  பாட்டை மட்டும் மறப்பதில்லை..எல்லாம் எம்.எஸ்.வி ஐயா கைங்கர்யம் தான்..அந்த அழகிய பாடல் மிக இனிமையாகத் தொடங்கி இடையிலேயே  உற்சாகக் குதிரையில் ஏறி விடும்.இருவரில் மேடைப் பாடகனுக்கு மிகச் சரியாக எஸ்.பி.பி.யின் குரல்தான் பொருந்தும் என்று அவர் யோசித்திருக்கிறார்

தொடக்கமே அவ்வளவு அழகாக இருக்கும்.

“அன்பு மலர்களே…
நம்பியிருங்களே
தர்மம்உலகிலே…
இருக்கும் வரையிலே
நாளை நமதே…
இந்த நாளும் நமதே”

என்று ஒலிக்கிற போது எஸ்.பி.பி.குரல் கேட்டால் எனக்கே காணாமல் போக வேண்டும் என்று தோன்றும்..மேடைப் பாடல்களை மையமாக வைத்தே பாலச்சந்தர் எடுத்த படம்தான் ‘ நினைத்தாலே இனிக்கும்’..அது எம்.எஸ்.வி யின் புது அவதாரத்திற்கு மிகச் சரியாக  தீனி போட்ட  படம்..அந்தப் படத்தில் எஸ்.பி.பி தான் நிஜமான ஹீரோ…

“இனிமை நிறைந்த
உலகம் இருக்கு
இதிலே உனக்கு
கவலை எதுக்கு?
ஜாலி பேர்ட்ஸ்”

என்று அவரும், எல்.ஆர்‌.ஈஸ்வரியும் தொடங்குகிற போதே களை கட்டி விடும்..டிரம்பட்டும், கிடாரும் அதிர இருவரும் குரல்களால் மாபெரும் வித்தையை நிகழ்த்தியிருப்பர்.

“அடியே ராசாத்தி
சிரிச்சா ரோசாப்பூ
உனக்கா
சொல்லித் தரனும்”

என்கிற இடத்தில் உடல் முழுவதிலும் அலை அடிக்கும்படி அவர் சிணுங்குவது அவ்வளவு பரவசமாக இருக்கும்.

“இதுதான் ராஜாங்கம்
எதுக்கு பூர்வாங்கம்?
இனியா சொந்தம் வரனும்”

என்று தொடர்ந்து,

“இடை தங்கம் நடை வைரம்
இதழ் பவளம் நகை முத்து”

என்று வேகவேகமாக  சொற்களால் அடுக்கி,

“நீ விண்ணுலகப் பூந்தோட்டமா ?”

என்று கேட்கையில் நம் மனம் பார்வையாளர் வரிசையில் போய் அமரத்தானே செய்யும்…?

“ஒருத்தி BA வாம்
ஒருத்தி MA வாம்
இரண்டும் சேர்ந்தாக்கா
அடுத்தது BAMA வாம் ”

என்கிற வரிகளை அவர் கல்லூரி மாணவனுக்கே உரிய பாவனையோடு பாடியிருப்பார். இடையிடையே ‘ருக்கு ருக்குக்கு ருக்கு ருக்குக்கு’ என்கிற ஆலாபனை வேறு… இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் இளைஞர்களை என்ன பாடு படுத்தியிருக்கும்? என்று யோசிக்கும் போதே சிலிர்க்கிறது.

மேடைப் பாடகனாக வரும் நாயகன் பாடுகிற பாடலையும் தாண்டி  தன் சொந்த வலியை வெளிப்படுத்துவது  எப்போதும் வெற்றிகரமான காட்சியாகவே அமையும்..’ராஜபார்ட் ரங்கதுரை’ யில் நாடகக் கலைஞன் பப்பூன் வேஷத்தில் இருக்கும் போது  தங்கை இறந்த சோகத்தை டி.எம்.எஸ்.நுட்பமாகக் குரலில் கொண்டு வந்திருப்பார். ஆனால் அது வெளிப்படையாக சோகத்தை வெளிப்படுத்துகிற பாணி. எஸ்.பி.பி. மெல்லிய சோகத்தை பட்டும் படாமல் மேடையில் பாடுகிற பல பாடல்களை பின்னாட்களில் பாடியிருக்கிறார்.

பாடகனின் மெல்லுணர்வுகள் அங்கிருக்கும் பார்வையாளர்களுக்கு துளியளவும் புலனாகாமல் நமக்கு மட்டும் புரிகிற உத்தி..இதுதான் கூடுதலாகக் கலங்க வைக்கும்..இந்த பாணியிலும் அவர்கள் இணைந்து பயணித்திருக்கின்றனர்..

அந்த வகைமையில் வந்த  எம்.எஸ்.வி – எஸ்.பி.பி ஜோடிப் பாடல்களில் எனக்கு மூன்று பாடல்களைப் பிடிக்கும்..’சிம்லா ஸ்பெஷல்’ திரைப்படத்தில் ‘உனக்கென்ன மேலே நின்றாய் ‘ நண்பனுடைய துரோகத்தின் வலியைச் சொல்கிற பாடல்..ஆரம்பம் படு துள்ளலாக இருக்கும்..

“ஆடாத மேடை இல்லை
போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை
சிரிப்புக்கும் பஞ்சமில்லை”

என்கிற வரிகளை இப்போது யோசிக்கிற போது அவருக்கே மிகச் சரியாகப் பொருந்துகின்றன..

“உன் கையில் அந்த நூலா”

என்கிற இடம் வருகிற போது விரக்தியாக ஒரு சிரிப்பு சிரிப்பார்…அந்தச் சிரிப்பே பாடலை நிறைத்து விடும்.

“பால் போல
கள்ளும் உண்டு
ரெண்டுக்கும்
பேதம் உண்டு
நானென்ன
கள்ளா ?பாலா ?
நீ சொல்லு நந்தலாலா?”

இதில் பின்னிரு வரிகளைக் கொஞ்சம் மாற்றி இரண்டாவது முறை பாடுவார்..அந்த உருக்கம் அபாரமாக இருக்கும். உண்மையில் அவர் நந்தலாலாவை நோக்கித்தான் பாடுவார். ஆனால் நம் மனம் ஓடிச் சென்று கமலை அணைத்து ‘நீ பால்தான்’ என்று ஆறுதல் சொல்லத் தவித்துக் கொண்டிருக்கும்.

நம்மையே நந்தலாலாவாக உணர வைத்து விடும் மந்திர சக்தி அந்தக் குரலுக்கு உண்டு.

‘வசந்த ராகம்’ விஜயகாந்தின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று…அந்தப் படத்தில் இடம் பெற்ற அழகான பாடல் ஒன்று எஸ்.பி.பி.யின் குரலாலேயே உயிர் பெற்றிருக்கும்.

“தேடாத இடமெல்லாம
தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆனாலும் நான்
தேடும்     பல்லவி
காணாமல் பாடினேன்
கண்ணீரில்…வாடினேன்”

என்று தனிமை நிரம்பிய துக்கத்தில் தொடங்கும் பாடல் நாயகியைப் பார்த்தவுடன்,

“இதுவரை பாட்டைப்  பிரிந்த பாடகன் எனக்கு
பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டைப் பிரிந்த
வார்த்தைகளுக்கொரு சரணம் கிடைத்தது ”

என்று துள்ளல் பாவனைக்கு மாறி விடும்.

சரணத்திலும் கூட,

“மெய் தொட்டுப் பழகிய மஞ்சள் நிலாவும்
கை விட்டுப் போனதம்மா என் கண்ணம்மா!
முன்னாளில் விலகிய வெள்ளைப் புறாவும்
இந்நாளில் சேர்ந்ததம்மா”

என்கிற இடத்தில் கொஞ்சம் உருக்கம் சேர்த்து,

“அடடா இதுதான் இறைவன் நாடகம்”

எனும் போது வியப்பிற்குத் தாவி,

“உறவும் பிரிவும் மனிதன் ஜாதகம்”

என்று சமநிலைக்கு வந்து,

கடைசியாக…

“என்னுடைய பல்லவி கிடைத்தது”

‘லல்லலல  லலல்ல லல்லாலா’

என்று உற்சாகமான துள்ளலோடு முடியும்.

நொடிக்கொருமுறை மாறும் கலைடாஸ்கோப் போல ஒவ்வொரு வரியையும் விதவிதமாய் பாடி எஸ்‌பி.பி‌ தன் ஆளுமையை வெளிப்படுத்தியிருப்பார்.

அதே போல் சூர்யகாந்தி படத்தில் ‘ நானென்றால் அவளும் நானும் ‘ என்று முத்துராமன் மேடையில் பாடுவதற்கு  பின்ணணி எஸ்‌பி‌.பி.தான்..ஒவ்வொரு வரிக்கும் நடுவில் ஜெயலலிதா அரைபோதைக் குரலில் ‘லண்டன் பேபி’ போல் ஆங்கிலத்தில் பிளிறிக் கொண்டிருப்பார்..தன் இல்வாழ்க்கையை பலர் பார்க்க பெருமிதத்தோடு புகழ்ந்து கொண்டு உள்ளுக்குள் அழும் ஒருவனின் மனதை தன் குரல் வழியாகவே எஸ்.பி.பி‌ காட்சிப்படுத்தியிருப்பார்..

முத்துராமனை விட அந்தக் குரலே மிகச் சிறப்பாக நடித்திருக்கும்.

உரத்த குரலில் தத்துவமோ , சமூக சீர்திருத்தமோ பாடுகிற பாணி பழையதாகி விட்ட பிறகு அடங்கிய குரலில் சற்று விரக்தியும் , கவலையும் கலந்த குரலில்  சமூக சிந்தனைகளையோ , எளிதான தத்துவங்களையோ பாடுகிற பாணி எஸ்.பி‌பிக்கு வசப்பட்டது..இதுவும் எம்.எஸ்.வி.யின் கொடைதான்..

‘ஆசை போவது விண்ணிலே’ பாடலில் இந்த பாணியைப் பார்க்க முடியும்..வர்க்க வேற்றுமையை பணக்காரர்கள் நிறைந்த கேளிக்கை விடுதியில் சுருதி கூடாமல் பாடியிருப்பார்.

“ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது”

என்று பாடியிருப்பார்.

‘வறுமையின் நிறம் சிவப்பு ‘ படத்தில் மேடையில் பாடவில்லை என்றாலும்’ பாரதத்தின் பெருமை பாடு தம்பி சோறு எதுக்கு ?’ கூட அந்தப் பாடலும் இதே தன்மை கொண்டதுதான்.

“பாட்டு ஒண்ணு பாடு தம்பி
பசியைக் கொஞ்சம் மறந்திருப்போம்”

என்கிற இடத்தில் பசிக்கிறவனின் குரலிலேயே பாடியிருப்பார்..இடையிடையே பிச்சைக்காரன் தொனியில் ‘தம்பியேய்’ என்கிற விளி வேறு..அந்தப் பாடலில் வெளிப்படையாக இந்திரா காந்தி படத்தை பாலச்சந்தர் காட்டியிருப்பார்..அந்த காலகட்டத்தில் வேலையில்லாத  சராசரி இந்தியன் எஸ்.பி.பி.யின் குரல் வழி தன்னை உணர்ந்திருப்பான்.

எஸ்.பி.பி.க்கு இன்னுமொரு பெருமை உண்டு.கிட்டதட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஆண் பாடகர்களுடன் ஜோடியாகப் பாடியவர் அவர் மட்டும்தான்..பிறர் இந்த பரிசோதனை முயற்சிகளை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்..டூயட் பாடலில் பெண்களோடு பாடுவது எளிது..ஆனால் இது விஷப் பரிட்சை..நாலு தடவை யாராவது இன்னொருவரோடு ஒப்பிட்டு விமர்சித்து விட்டால் கேரியரே அடி வாங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.. அவர்தான் எதற்கும் அசராத எம்.எஸ்.வி யின் மாணவராயிற்றே…?

எம்.எஸ்.வி. தேர்ந்த ஆசிரியருக்கே உரிய கவனத்தோடு அப்போது உச்சத்தில் இருந்த ஜாம்பவான் டி.எம்.எஸ் .கூடவே அவரை மோத விட்டார்…தான் வளர்த்த குட்டிப் பயலுக்கு கம்பு சொல்லிக் கொடுத்து பெரிய சண்டியருடனே நடுத்தெருவில் மோத விட்டுப் பார்க்கும் வாத்தியாரின் கரிசனம் அது.

பல பாடல்களில் டி.எம்.எஸ் வென்றிருந்தாலும் எஸ்.பி.பி.தன் தனித்தன்மை துளியளவும் கெடாமல் முத்திரை பதித்திருப்பார்..அவருடைய ரசிகர்களுக்கு அந்த காலகட்டத்தில் இந்த மோதல் மிகுந்த உற்சாகத்தைத் தந்திருக்கும்.

‘அன்பு மலர்களே’, ‘நடப்பது சுகமென நடத்து’ ஆகிய பாடல்களில் டி.எம்.எஸ் கை ஓங்கியிருந்தாலும் எஸ்.பி.பி விஸ்வரூபம் எடுத்து திருப்பியடித்த பாடல் ‘அச்சம் என்னை நெருங்காது’ (மூன்று தெய்வங்கள்) பாடலில்தான்.

அந்தப் படத்தில்  ஜெய் சங்கருக்கு இரட்டை வேடம்..பிற்காலத்தில் அவர் பாடிய ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா?’  வுக்கான முன்னோடிப் பாடல் அதுதான்..அந்தப் பாடலை படு ஸ்டைலிஷாக தெனாவெட்டோடு பாடியிருப்பார்..இடையிடையே ஆங்கில டயலாக் வேறு…பாடல் முழுவதும் அவர் ஆதிக்கம் தான்.

எம்.எஸ்.வி தந்த இந்தப் பயிற்சியே பிற்காலத்தில் போட்டிப் பாடல்களில் அவரை வெல்லவே முடியாது என்கிற நிலையை உருவாக்கியது..அப்போது வளர்ந்து வந்த ஜேசுதாஸூம் ,அவரும் இணைந்து பாடிய அற்புதமான பாடல் ‘ இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கும் தான் எதிர்காலம் ‘ ..( திரிசூலம் )உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்தப் பாடலில் ஜேசுதாஸின் குரல் அவ்வளவு அழகாக இருக்கும்..ஆனால் எஸ்.பி.பி.அதையும் மீறி தன் சேஷ்டைகளால் ஈடு கொடுத்திருப்பார்..ஒரு சிவாஜி சாலையைப் பார்த்தபடி அமைதியாகக் காரோட்ட இன்னொரு சிவாஜி எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரில் நின்று , நகர்ந்து , அண்ணன் தோளில் உட்கார்ந்து , காரின் விளிம்பில் தொங்கி, சீட்டில் வளைந்து விதவிதமாய் சேட்டை செய்து கொண்டிருப்பார்..அந்த சிவாஜிக்குத்தான் எஸ்‌பி.பி யின் குரல்..உண்மையில் அந்தக் காட்சியை இருவரின் (ஜேசுதாஸ், எஸ்.பி.பி)

குணச்சித்திரங்கள் பற்றிய உருவகமாகக் கூட அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்..

“இரண்டு கைகள்   நான்கானால்
இருவருக்கேதான் எதிர்காலம்
பகைவர்களே விலகுங்கள்
புலிகளிரண்டு வருகின்றன”

என்கிற வரிகளை ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரை உலகத்தை நோக்கி எஸ்பிபி, ஜேசுதாஸ் என்கிற இரு சங்கீதப் புலிகள் விடுத்த அறைகூவலாகவே நான் உணர்கிறேன். அதற்குப் பிந்தைய திரையிசை வரலாறு நமக்கு அதைத்தான் உணர்த்தி நிற்கிறது.

தொடரும்…

படங்கள் ; இணையம்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. எனக்கு இவர்களின் இணைவில் மிகவும் பிடித்த பாடல் வான் நிலா இல்லை உன் வாலிபம் நிலா
    பாலாவின் குரலும் வயலின் இசையும் சேர்ந்து அற்புதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button