இரண்டு ஆண்டுகள் கிழக்கு ஐரோப்பிய வாழ்க்கை சற்றே இறுக்கமானது. ரஷ்யா, போலந்து, உக்ரைன், பல்கேரியா, லித்துவேனியா, மால்டோவா இதெல்லாம் வேறு உலகம். இப்பட்டியலில் போலந்து கொஞ்சம் வளர்ச்சியடைந்த நேட்டோ நாடு. ஏழை பணக்காரர் ஏற்றத்தாழ்வு குறைவாக இருப்பதால், மக்கள் ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள். நேர்த்தியாக உடையணிவார்கள். சுத்தம் பார்ப்பார்கள். வரிசையில் நிற்பார்கள். நள்ளிரவு இரண்டு மணிக்கு கூட சாலையில் பச்சை விளக்கு மாறும் வரை காத்திருப்பார்கள். சென்னைக்காரனாகிய எனக்கு இந்த ஒழுங்கெல்லாம் கட்டுப்படியாகாது. கடுமையான குளிர், பனிப்பொழிவின் போது மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தால், சென்னைக்காரனாக மாறத்தான் செய்வேன். “போலிச்சியா” பிடித்தால் அப்புறம் திருந்திக் கொள்ளலாம் என சிகப்பு விளக்கிலேயே சாலையை கடப்பேன். இந்த ஆஸ்பத்திரி சுத்தம், ஒழுங்கு நம்மைக் கடுப்பேற்றும் போதெல்லாம் பாரிசுக்கு போய் விட வேண்டுமென இப்போது நினைக்கிறேன்.
“மெனில் மோன்தான்” சாலை கீழிருந்து மேல் நோக்கி போனது அல்லது எங்கள் ஊபர் ஓட்டுநர் பள்ளத்திலிருந்து மேட்டிற்கு வண்டியை மெதுவாக நகர்த்தினார். அந்த மேட்டில் தான் நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த தங்கும் விடுதியும் இருந்தது. ஏதோ ஒரு கடையின் கழிவு நீர் மேட்டிலிருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து “மெனில் மோன்தான்” மெத்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தது. வங்கதேச மளிகை கடை, இத்தாலிய பீட்சா கடை, துருக்கிய கசாப்பு கடை, பத்தடிக்கு ஒரு கஃபே என நெரிசலான சாலை அது. வார்சாவிலிருந்து அதிகாலை விமானம் என்பதால் பாரிஸ் வந்திறங்கியவுடன் நல்ல பசி. இட்லி தோசை மாதிரி எதாவது சாப்பிட்டால் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. எதுவும் சிக்காமல், கட்டக் கடைசியில் ஒரு வங்கதேச கடையில் பொறித்த கோழி இறக்கைகளை (சிக்கன் விங்க்ஸ் என புரிந்து கொள்க! ) காலை உணவாக உண்டோம். வேறு வழி?
கம்பெட்டா என்கிற மெத்ரோ ரயில் நிலையத்தில் ஒருநாள் பயணச்சீட்டு எடுத்துக் கொண்ட போது, பாரிஸ் நகரத்தின் வரைபடத்தையும் இலவச இணைப்பாக கொடுத்தார்கள். அவ்வளவு இடியாப்பச் சிக்கலான மெத்ரோ இணைப்புகளை புரிந்து கொள்வதற்கே மூன்று நாட்களாகும். எல்லாம் பழைய ரயில் நிலையங்கள். மங்கலான விளக்குகள், நம்மூர் ஆஸ்பத்திரி டைல்ஸ் பதிக்கப்பட்ட சுவர்கள், கழிவு நீர், சிகரெட் துண்டுகள், பியர் போத்தல்கள், பிளாஸ்டிக் குப்பைகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது தான் பாரிஸ் மெத்ரோக்கள். வந்து நின்ற ரயில், அதை விடப் பழமையானது. எல்லாவற்றையும் தாண்டி, கூகிள் மேப்பை ஆராய்ந்து, ஒன்றிரண்டு மைல்கள் நடந்து, லூவ்ர் அருங்காட்சியகத்தை வந்தடைந்தோம். டாவின்சி கோட் படத்தில் வரக் கூடிய அதே லூவ்ர் தான். கடல் மாதிரியான அருங்காட்சியகம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரம் பேர் வரிசையில் நிற்கிறார்கள். முன் கூட்டியே இணையத்தில் பதிவு செய்து விட்டதால் தப்பித்தோம். லட்சக்கணக்கான மக்கள் ஆண்டு முழுவதும் பார்த்துச் செல்லக் கூடிய லூவ்ர் தான் மோனாலிசா ஓவியத்தின் இருப்பிடம். நெப்போலியன் முதல் பல மன்னர்கள் போரில் கைப்பற்றியவை, உலகின் எல்லா மூலை முடுக்கிலும் தேடித் தேடிச் சேர்த்த பொக்கிஷங்கள். ஒவ்வொன்றையும் பார்த்து, ரசித்து, படித்து முடிக்க குறைந்தது ஒரு மாதம் அவகாசம் வேண்டும். ஆகவே, பெரும்பாலும் மக்கள் நேரடியாக மோனாலிசா ஓவியம் பார்க்கவே வரிசையில் நின்றார்கள்.
பாண்டிச்சேரி பாரிஸ் போல இருக்கிறது எனச் சொன்னால் நம்ப மாட்டோம் அல்லவா? ஆனால், பாரிஸ் வந்ததும் எனக்கு பாண்டிச்சேரி ஞாபகம் தான் வந்தது. சில சாலை சந்திப்புகளை பார்க்கும் போது பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலயம் அருகில் உள்ள ஒரு சந்திப்பு தான் நினைவுக்கு வந்தது. பிரெஞ்சுப் பெயர்கள் தாங்கிய வீதிகள், குறுகிய தெருக்களில் வளைந்து நெளிந்து செல்லும் மாநகரப் பேருந்துகள், நள்ளிரவு வரையிலும் நிறைந்திருக்கும் கஃபேக்கள், கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் சுற்றுலாப் பயணிகள் என பாரிஸ் நகரம் ஒரு கொண்டாட்டத்தின் நகரம் தான். சில ஆண்டுகளுக்கு முன் தீயில் சிதைந்து போன “நாட்ரடாம்” தேவாலயத்தைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. முகப்பை மட்டும் பார்க்க முடிந்தது. சாம்ஸ் எலிசே என்கிற வரலாற்று சிறப்பு மிக்க சாலையொன்றில், குழந்தைகள் நல்ல பிரெஞ்சு இனிப்பு பண்டங்களைச் சுவைத்தார்கள்.
உட்கார்ந்து யோசித்தால் கூட இப்படி ஒரு நகரை கற்பனை செய்ய முடியாது. பிரெஞ்சு மக்களின் கட்டடக்கலை, பாரிஸ் நகரின் வடிவமைப்பு, கஃபேக்கள் என இவ்வளவு கலைநயம் மிக்கவர்களா பிரெஞ்சு மக்கள் என வியந்து வியந்து திகட்டி விட்டது. ஒரு மாலை நேரத்தில் “செய்ன்” ஆற்றின் மீது படகில் வைன் அருந்திக் கொண்டே, பாரிஸ் நகரின் அழகைப் பார்ப்பதெல்லாம் கனவுக் காட்சிகளாகத் தான் இருக்கும். எல்லாம் ஒருபுறமிருக்க, ‘பாரிசுக்கா போகிறீர்கள்? பர்ஸ் பத்திரம்’ என ஒரு நண்பர் வாட்சப்பில் எச்சரித்தார். இன்னொரு பள்ளி நண்பனும் அதையே சொன்னான். மெத்ரோவில் பாரிஸ் வரைபடம் கொடுத்தார்கள் அல்லவா? அவரும் ‘பை பத்திரம்’ என எச்சரித்தார். டிக்கெட் வாங்கி நடைமேடைக்கு ஏறுமுன்னர், ஒரு வட இந்திய அங்கிள் பதறியடித்துக் கொண்டு வந்து, ‘ஊருக்கு புதுசா? உங்கள் பை பத்திரம்’ என அதட்டினார். பாரிஸில் இவ்வளவு பேரும் எச்சரிக்கிறார்களே? அப்படியென்றால் யார் தான் திருடப்போவது என ஒரே திகிலாக இருந்தது. ஈபிள் கோபுரம் அருகில் அமைந்திருக்கும் பீர் ஹகீம் நிலையம் செல்ல, மெத்ரோ பிடித்தோம். பார்த்தால் ரயிலின் ஒளிவிளக்கு பலகையிலும் ‘Beware of pick pockets’ என்று அறிவிப்பு ஓடுகிறது. ஈபிள் கோபுரம் சென்றால் அதன் உச்சிக்குச் செல்ல வேண்டுமல்லவா? டிக்கெட் வாங்கிக் கொண்டு கோபுரத்தின் உச்சிக்குச் செல்லும் மின் தூக்கியில் ஏறினால் அங்கும் ‘Beware of Pick pockets’ என LED பேனல் ஒளிர்கிறது.திருட்டு இருக்கிறது. ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக இப்படியா?
1830 ஆம் ஆண்டு அல்ஜீரியாவை கைப்பற்றியதன் மூலம் பிரான்ஸ் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மாரிடோனியா, கினியா, மாலி, மொரோக்கோ என மத்திய ஆப்பிரிக்கா வரை பிரெஞ்சுக் கொடி பறந்தது. இந்த காலனியாதிக்கம் தான் ஏராளமான கறுப்பின மக்கள் பிரான்சில் குடியேற காரணமாக அமைந்தது. தலைமுறை தலைமுறையாக பிரான்சில் வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க கறுப்பின மக்கள், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள், ‘Jus Soli’- யாக பிறப்புரிமையின் அடிப்படையில் பிரெஞ்சுக்காரர்களாகத் தான் வாழ்கிறார்கள். இவ்வளவு கறுப்பின மக்களை ஐரோப்பாவின் வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது. அது மட்டுமின்றி, கறுப்பின மக்களிடையே இஸ்லாமும் வேகமாகப் பரவி நிற்கிறது. 2018 FIFA உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணியில் விளையாடியது 75% கறுப்பின இஸ்லாமியர்கள் தான். நாங்கள் தங்கியிருந்த மெனில் மோன்தான் பகுதியில் அதிகாலை வேலைக்குச் செல்ல ஏராளமான உழைக்கும் மக்கள் பேருந்துக்காக காத்து நிற்பார்கள். அருகில் உள்ள கஃபேக்களில் ஏதோ ஒரு பன்னோ, குரசோனோ உண்டு பசியாறி விட்டு, பேருந்தில் ஏறுவார்கள். ஹிஜாப் அணிந்த கறுப்பினப் பெண்களும், மெலிந்து நொடிந்த வயோதிகர்களும் கையில் ஒரு தஸ்பீஹ் மணியை (ஜெபமாலை) வைத்து உருட்டிக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.
பாரிஸ் நகரில் வாழும் மக்களில் 20% மக்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்தவர்கள். அதில் ஈழத்தமிழர்களும் அடங்குவர். செயின்ட் டெனிஸ் என்கிற பகுதியில் மட்டும் மூன்று லட்சம் அகதிகள் வாழ்வதாக ஒரு தகவல் சொல்கிறது. அதில் 135 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களாம். ஈபிள் கோபுரத்திலிருந்து ஆறு மைல் தொலைவில் தான் இந்த செயின்ட் டெனிஸ் பகுதி இருக்கிறது. போர்கள், வறுமை, அரசியல் எனப் பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்த மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக சிறு குழந்தைகளோடு, பஞ்சடைத்த கண்களோடு சாலைகளில் வாழ்வதைப் பார்க்க கொஞ்சம் மன உறுதி வேண்டும். அதை விடக் கொடுமை, ஹோட்டல் டி வில்லே என்கிற மிகப்பெரிய கட்டிடத்தின் முன் நூறு பேர் உணவுக்காக காத்திருக்கிறார்கள். ஏதோ ஒரு செல்வந்தர் அட்டைப்பெட்டியில் கொண்டு வந்து உணவு கொடுக்க முயன்று, பெரிய தள்ளு முள்ளு நடந்து சாப்பாடெல்லாம் சாலையில் விழுந்து சிதறியது. லட்சக்கணக்கான பன்னாட்டு உணவகங்கள், கஃபேக்கள் இருக்கக் கூடிய பாரிஸ் நகரில்தான் ஒரு வேளை சாப்பாட்டுக்காக இவ்வளவு களேபரமும் நடக்கிறது.
அனுமதிக்கப்பட்ட ‘அகதிகள்’, சலுகைக்காலம் கடந்து அங்கேயே தங்கி விட்டவர்கள், கடலில் கடவுச்சீட்டைத் தூக்கியெறிந்து விட்டு எவ்வித ஆவணங்களுமின்றி, பிழைப்புக்காக பிரான்ஸ் வந்து சேர்ந்த நாடற்றவர்கள் என மற்றொரு பெருங்கூட்டம் பாரிஸ் நகரம் முழுதும் இறைந்து கிடக்கிறது. கிடைத்த வேலையைச் செய்வது, மெத்ரோ வாசலில் கஞ்சா, சிகரெட் பாக்கெட் விற்பது, சுற்றுலாத் தலங்களில் வைன் போத்தல்கள் விற்பது என அவர்களுக்குமான நகரமாகத் தான் பாரிஸ் இருக்கிறது. அரசால் குற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்றால் பழியைத் தூக்கி வந்தேறிகள் மேல் போடுவதும் உலக வழக்கம் தானல்லவா? என நொந்து கொண்டே காரை ஓட்டினார் நம் ஈழத்தமிழர் ஒருவர். “பிரெஞ்சு கதைக்க, எழுதத் தெரிந்தால் தான் குடியுரிமை” என்பதால் பத்தாண்டுகளுக்கு பிறகுதான் தனக்கு குடியுரிமை கிடைத்ததாக அலுத்துக் கொண்டார். மதியம் சோற்றைக் குழைத்து உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்பதால் நேராக வண்டியை தமிழர் கடைக்கு விடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டோம். எங்கள் கவலை எங்களுக்கு! நேராக லாச்சப்பல் என்கிற பிரதான சாலையின் முகப்பில் வண்டியை நிறுத்திக் கொண்டார். இருபது யூரோக்களை அவர் கையில் கொடுத்தோம்.
இந்த லாச்சப்பல் பகுதி முழுவதும் தமிழர் கடைகள்தான். ஓரளவு இந்தியக் கடைகளும் இருந்தன. உணவகங்கள், பாத்திரக் கடைகள், துணிக்கடைகள், தமிழ் சினிமா டிவிடி கடைகள், ஜோதிட நிலையங்கள் என சென்னைக்கோ பாண்டிச்சேரிக்கோ வந்து விட்ட உணர்வு. சரவணபவன், திண்டுக்கல் தலப்பாகட்டி போன்ற தமிழ்நாட்டு உணவகங்கள் இருந்தன. மாறுதலுக்கு, ஈழத்தமிழர் கடையில் சாப்பிடுவோம் என முடிவு செய்தோம். “கபறினா இறைச்சிக்கடை”க்கு அருகில் உள்ள முனியாண்டி விலாஸ் என்கிற கடையின் முன் ஏற்கெனவே பலர் மேசைக்காக காத்திருந்தார்கள். பின்னால் வந்த ஈழத்தமிழ் இளம்பெண் “அண்ணா, கியூ செய்றீங்களா?” எனக் கேட்டார். “ஓம்” என்று பதிலளித்தேன். அரை மணி நேர காத்திருப்புக்கு பின், மேசை கிடைத்தது. பருப்பு கறி, கீரைக் கூட்டு, உறைப்பு அதிகமான கோழிக்குழம்பு என ஈழத்தமிழர் உணவின் சுவையில் மயங்கித் தான் விட்டோம். “முழுசா சாப்பிட்டு முடிங்க. அடுத்த ரவுண்டுக்கு சோறு போடுகிறேன்” என உரிமையோடு சொன்னார் ஊழியர். பாரிசில் வாழும் தமிழர்களும் பயங்கர ஸ்டைலாக இருப்பார்களோ என்றெல்லாம் நினைக்க வேண்டாம். சென்னையில் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் ஆட்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் அவர்களும் இருந்தார்கள். வெளிநாட்டில் அதுவும் ஒரு ஐரோப்பிய நகரத்தில் இருக்கிறோம் என்றெல்லாம் நமக்குத் தோன்றவில்லை. ஆண்டு தோறும் தைப்பூசத்திற்கு ஊர்வலமாக காவடி எடுக்குமளவுக்கு லாச்சப்பலில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
பாரிசில் தமிழர்கள் ஓரளவு நல்ல நிலைமையில் இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. யாழ்ப்பாண தமிழர் உணவகத்தில் சென்னை, நாமக்கல் போன்ற ஊர்களிலிருந்து வந்த ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பெயர்ப்பலகையில் இருந்த தமிழ்ப்பெயர்களை ஒவ்வொன்றாக சத்தமாக வாசித்துப் பார்த்துக் கொண்டோம். துதி அழகு நிலையம், தாய் உணவகம், பாண்டிச்சேரி உணவகம், ஸ்ரீ துர்கா ஜோதிடம், விஷ்ணு கஃபே, அண்ணாச்சி இனிப்பகம் என கடைக்கு கடை தமிழ்ப்பெயர்களாக இருந்தாலும் சட்டென “கபறினா இறைச்சிக்கடை” என்கிற ஒரு பெயர் மட்டும் மனதில் ஒட்டிக் கொண்டது. யார் அந்த கபறினாவாக இருக்கும்? பாரிஸில் சொந்தமாக இறைச்சிக்கடை வைக்குமளவு வெற்றி பெற்ற ஒருவரின் கனவு தேவதையாக கபறினா இருந்திருக்கக் கூடும். அல்லது, கடல் கடந்து சென்ற கணவனை திரும்பப் பெற முடியாமல், அவனுக்காக கண்ணீருடன் மறுகரையில் காத்து நிற்கும் ஒரு கபறினாவாக அவள் இருக்கக் கூடும். சொந்த மண்ணை விட்டு, உறவுகளை விட்டு புலம் பெயர் வாழ்வின் நீங்காத் துயரங்களின் மத்தியில் வாழும் கபறினாக்களும் இருக்கத் தானே செய்வார்கள்? குளிரிலும் பசியிலும் ஹோட்டல் டி வில்லேயின் வாயிலின் முன் கூட்டம் கூட்டமாக கபறினாக்கள் நிற்கிறார்கள். அவர்களுக்குமான காலம் என்று ஒருநாள் வரும். அது வரை பாரிஸ் நகரம் அவர்களைக் காத்து நிற்கும்.
*******