1. உவர்நீர்க் காதை
பேறுகாலத்தில்
வஞ்சிரமீன் சினையை
வறுத்து உண்கிற பெண்கள்
திரண்ட முத்துக்களென
குழந்தைகளைப் பிரசவிக்கிறார்கள்.
பால்சுறா புட்டு அவியும் வீடுகளில்
சிசுக்களின் கடைவாயில்
மீன்கவிச்சியோடு பால் வழிகிறது.
சிக்கெடுக்கும் சீப்பில்
சுருண்ட முடிக்கற்றைகளென
மணலில் உருள்கின்றன கடல்பரட்டைகள்.
பரட்டைமுள்ளைக் குச்சியாய் உடைத்து
சிலேட்டில் எழுதும் சிறுவனின் கைப்பிடித்து
மொழி கற்பிக்கிறது கடல்.
சிறுதேருக்கு பதிலாக நண்டு உருட்டியும்
ஊசலுக்கு பதிலாகக் கட்டுமரத்தில் ஆடியும்
பிள்ளைத்தமிழ் நீண்டு வளர்கிறது.
எதிர்காற்றில் சோற்றை நறநறவவெனப் பிசையும்
நெய்தற்குடிகள் மண்ணின் மைந்தர்கள்.
“மண்ணையா தின்கிறாய்? வாயைத் திற”
வரலாற்றின் முழுக்கதையும் வாய்க்குள் அலையடிக்கக்கூடும்.
**************
2. தட்டில் பரிமாறப்படும் கடல்
சுருள் உருளைக்கிழங்கு விற்கும் சுடிதார்ப் பெண்
எல்.ஈ.டி வெளிச்சத்தில் சிரிக்கிறாள்.
பலூன் துப்பாக்கியின் வெடிக்குப்
பதறியோடும் நண்டுகளின் கண்களில்
பட்டுத் தெறிக்கிறது சோளத் தீப்பொறி.
பங்குனியாமைகள் முட்டையிடவரும் நாட்களில்
அலைகளை மிக மெதுவாக அனுப்புகிறது நிலவு.
மீன்களோடு வறுபடும் இலி பூச்சிகள்
செஞ்சாந்தில் குழம்புகின்றன
பெசன்ட் நகர் என்பதைக்கூட
பெஸ்ஸீ என்றே அழைப்பவர்கள்
ஊரூர் குப்பத்தை அறிவதில்லை.
முகத்துவாரத்தில் கழிவுகள் கொட்டும்
நீளக்குழாய்க்குள்
கண்ணீர் மல்க அமர்ந்திருக்கிறான் ஒருவன்.
அதற்குள் சோர்ந்து அழுதால் எப்படி?!
இன்னும் கடலை அடைவதற்குள்
எத்தனையோ ப்ளாஸ்டிக் பைகளை
கட்டாயம் கடக்க வேண்டியிருக்கிறது!
**************