“முன்னொரு காலத்தில் முள்ளம்பன்றி ஒன்று, அலுப்பூட்டுகிற தன் வாழ்க்கை பிடிக்காமல், உயிர்சக்தியான மானிட்டௌ ஆவியிடம் போய் முறையிட்டது. மானிட்டௌ ஆவி, முள்ளம்பன்றியின் தோலை வெளியிலிருந்து உள்பக்கமாகத் திருப்பியது. அதன் உடலுக்குள் இருக்கிற தசை முழுக்க முட்கள் நிரம்பின. பிறகு மானிட்டௌ ஆவி, அந்த முள்ளம்பன்றியை நீருக்குள் தூக்கிப்போட்டது. மீனாக மாறிய முள்ளம்பன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தது!“
Shad என்று அழைக்கப்படும் மீன் வகைமையில், பல மீன்களின் உடலில் அதிக அளவில் முட்கள் (ஊசி எலும்புகள்) இருக்கும். அந்த முட்கள் எப்படி வந்தன என்று விளக்குவதற்காக, அமெரிக்கப் பழங்குடியினரிடையே சொல்லப்படும் கதை இது. இந்த மீன் இனங்களிலேயே மிகவும் பிரபலமானது ஹில்ஸா (Hilsa). இரண்டரை கிலோ வரை வளரக்கூடியது. கடலில் வசிக்கிற இந்த மீன், இனப்பெருக்கத்துக்காக, முகத்துவாரங்களின் வழியாக நதிகளுக்குச் செல்லக்கூடிய இயல்பு உடையது. ஆகவே, நதிக்கரையோரம் வசிப்பவர்களுக்குப் பரிச்சயமான மீன் இது. கிழக்காசியாவின் பல்வேறு நாடுகளில் உள்ள பண்பாட்டு மரபுகளோடு பின்னிப் பிணைந்த மீன் ஹில்ஸா.
இராக்கில் இந்த மீனின் பெயர் ஸ்பூர். ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து, பிறகு வறுக்கப்படும் இந்த மீன், டைக்ரிஸ்–யூஃப்ரடிஸ் நதியில் அதிகமாகக் கிடைக்கிறது. மெசபடோமியன் நாகரிகத்தின் காலகட்டத்திலேயே இந்த மீன் அறியப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மலேசியாவில் இதன் பெயர், டெருபோக். வாழையிலைகளில் மடித்து வேகவைத்துப் பரிமாறப்படும் இந்த மீனுடன் புளி, சின்ன வெங்காயம், மிளகாய் சேர்த்த ஒரு சாறு தரப்படுகிறது.
`மீன்களிலேயே நல்ல மீன் வேண்டுமென்றால், நீங்கள் ஹில்ஸாவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்கிறது ஒரு பர்மியப் பழமொழி. ஐராவதி நதியிலிருந்து ஹில்ஸா மீன்கள் பிடிக்கப்படுகின்றன. நொதிக்கவைக்கப்பட்ட மீன் விழுதும் தக்காளியும் சேர்த்த குழம்பில், வறுக்கப்பட்ட ஹில்சா முட்டைகள் சேர்க்கப்படும். அரிசிச் சோற்றுடன் பரிமாறப்படும் இந்தக் குழம்பு, ஐராவதி ஆற்றங்கரையோர மக்களின் விருப்ப உணவு.
சீனாவில் இதன் பெயர், ஷி யூ. ஷி யூ என்றால் `கால மீன்’ என்று பொருள். வருடா வருடம் சொல்லிவைத்தார்போல ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவை வலசைப் பயணத்தைத் தொடங்குவதால் வந்த காரணப் பெயர். மூங்கில் குருத்துக்களுடன் இந்த மீன் சமைக்கப்படுகிறது. `பால்போன்ற மென்மை ஷி யூவுக்கு உண்டு’ என்கிறன 11ம் நூற்றாண்டின் சீன இலக்கியக் குறிப்புகள்.
சிந்து நதிக்கரையோரம் இந்த மீனின் பெயர், பல்லா. `பல்லா, ஹல்வா இரண்டையும் ஒப்பிட்டால், பல்லாவே சிறந்தது. ஹல்வாவை ஒரு அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. ஆனால், பல்லா மீனை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்று சிந்து நதிக்கரையில் ஒரு சொலவடை உண்டு. சிந்து நதியின் கடவுளுக்கு, பல்லா மீன்தான் வாகனமாகக் கருதப்படுகிறது. பச்சை நிற மசாலாவும் பச்சை மிளகாய்களும் அடைக்கப்பட்ட பல்லா மீனை, ரொட்டி மாவில் சுருட்டி, கொதிக்கும் பாலைவன மணலில் வைத்துப் புதைத்துவிடுவார்கள். சில மணி நேரங்கள் கழித்து, மீனை மணலுக்குள்ளிலிருந்து தோண்டியெடுத்து உண்பார்கள். சிந்து நதிக்கரையோரம் வசிக்கும் பல குடும்பங்களில் இன்றும் இதே முறையில் பச்சை நிற மசாலாவோடு பல்லா மீன்கள் சமைக்கப்படுகின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தினர்கூட இந்த மீனை அறிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
நர்மதா நதிக்கரையில் இருக்கும் அனைவருக்குமே இந்த மீன் விருப்ப உணர்வு. பார்சி இன மக்கள் இந்த மீனை `பிங்’ என்று அழைக்கிறார்கள். பிங் மீனின் முட்டைகளை ஊறுகாயாகப் போட்டு விரும்பி சாப்பிடுகிறார்கள்.
தமிழகத்தில் இந்த மீனின் பெயர், `உள்ளம்/உல்லம்’. சித்த மருத்துவத்தின் குறிப்புகளில் இந்த மீன் விவரிக்கப்படுகிறது. `உள்ளதை விற்று உள்ளம் மீன் வாங்கி சாப்பிடு’ என்று ஒரு சொலவடையும் உண்டு.
கோதாவரி ஆற்றின் கரையோரம் இந்த மீனுக்குப் பெயர், புலஸா. அங்கே ஆந்திராவுக்கேயுரிய காரத்துடன், புளி, மாங்காய் ஊறுகாயின் எண்ணெய் ஆகியவற்றோடு நான்கு மணிநேரம் குறைவான தீயில் இந்த மீன் சமைக்கப்படுகிறது. பாரம்பரிய புலஸா குழம்பில் வெண்டைக்காய்கள் சேர்க்கப்படுகின்றன. `தாலியை விற்றுகூட புலஸா வாங்கித் தின்னலாம், தப்பில்லை’ என்று ஒரு தெலுங்குப் பழமொழி உண்டு!
மேற்கு வங்காளத்தில் இந்த மீனின் பெயர், இலிஷ். கங்கை மற்றும் அதன் துணை ஆறுகள் அனைத்திலும் இந்த மீன் காணப்படுகிறது. ருசியானது/நல்ல கொழுப்புச்சத்து இருப்பதால் உடலுக்கு நல்லது என்பதையெல்லாம் தாண்டி, இந்த மீன் ஒரு கலாசார அடையாளமாகவே மாறிப்போவது மேற்கு வங்கத்தில்தான். மழைக்காலம் தொடங்கிய பின்னர் சந்தித்துக்கொள்ளும்போது, `இந்த சீசனின் இலிஷ் சாப்பிட்டீர்களா?’ என்றுதான் வங்காள மக்கள் பேச்சையே தொடங்குவார்கள்.
செழிப்பான நிலத்திலிருந்து விளையும் அரிசி, நிலத்தின் குறுக்கே ரத்தநாளங்களாய் ஓடும் ஆறுகளில் தழைக்கும் மீன்கள் என, `அரிசியும் மீனும்’ என்கிற வங்காள உணவு மரபின் காரணத்தை எளிதாக நாம் புரிந்துகொள்ளலாம். “பல வங்காள இனக்குழுக்களின் உணவுப் பட்டியலில், பருப்பு என்பதே பல நூற்றாண்டுகள் வரை காணக்கிடைப்பதில்லை. தேவையான புரதச்சத்துக்கள் எல்லாம் மீன்களிலிருந்தே கிடைத்தன” என்கிறார் உணவியல் அறிஞர் சிரித்ரா பேனர்ஜி. 12ம் நூற்றாண்டின் வங்காள நூல்களில்கூட இலிஷ் பற்றிய குறிப்புகள் உண்டு.
வங்காளத் திருமணங்களின்போது சிவப்புப் பட்டுத்துணியில் சுற்றி, தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட இலிஷ் மீனை, மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டுக்குப் பரிசாகத் தருவது வழக்கம். சரஸ்வதி பூஜையில் இந்த மீன் வழிப்பாட்டின்போது படைக்கப்படுகிறது. குழந்தைகளின் முதல் உணவூட்டும் நிகழ்வு (அன்னப்ராஷோன்), மாப்பிள்ளை விருந்து (ஜமாய் சோஷ்டீ), வங்காளப் புத்தாண்டு (போய்லா போய்ஷாக்), காளி பூஜை என்று எல்லா சுபநிகழ்ச்சிகளிலும் கட்டாயமாக இலிஷ் பரிமாறப்படும். உண்பதற்கு சுவையான இலிஷ் மீன்களைத் தேடி அலைகிற `மேச்சோ பூத்’ என்கிற மீன் பூதத்தைப் பற்றி வங்காள நாட்டார் மரபில் பல பேய்க் கதைகள் உண்டு!
வங்கதேசமும் மேற்கு வங்கமும் ஒன்றாக இருந்த காலம், 1971ல் நடந்த பிரிவினை எனப் பல்வேறு வரலாற்றுப் பக்கங்களிலும் இலிஷ் இடம்பெறுகிறது. பிரிவினைக்கு முன்னும் பின்னும் வாழ்க்கை முறை எப்படி மாறியது என்று வங்கதேச மக்கள் பேசும்போது, இலிஷ் பற்றிய நினைவுகளும் வந்து சேர்ந்துவிடும்.
வங்கதேசத்தில் கங்கை நதியின் பெயர் ,பத்மா. `பத்மா இலிஷ் – கங்கை இலிஷ்: எது ருசியானது?’ என்று ஒரு செல்லச் சண்டை நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது. “அது அனுபவத்திலிருந்து வரும். மீனைப் பார்த்தாலே இது பத்மாவிலிருந்து வருகிறதா கங்கையிலிருந்து வருகிறதா என்று சொல்லிவிடுவோம்” என்பார்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். பத்மா இலிஷில் எண்ணெய் அதிகம் எனவும், கங்கை நதியின் மீன் கொஞ்சம் மெலிந்து இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கும் ஒரு கவித்துவமான காரணத்தை முன்வைக்கிறார்கள் – “கங்கை நதியில் வண்டல் மண் அதிகம். கலங்கலான மண் நிறைந்த நதியில் எதிர்நீச்சல் போட்டு இந்த மீன் நீந்துவதால் இளைத்துவிடுகிறது!”
இந்த மீன்களை சமைக்கும் முறையும் முற்றிலும் வேறானது. இஞ்சி, பூண்டு, சீரகத்தோடு பத்மா இலிஷ் சமைக்கப்படுகிறது. ஆனால், கங்கை இலிஷ் சமையலில் இஞ்சியும் பூண்டும் பயன்படுத்தப்படுவதில்லை. மரபார்ந்த வங்காள சமையல் முறைகளின்படி, கடுகு எண்ணெயில் தாளித்து, தயிரும் கடுகு விழுதும் எலுமிச்சை சாறும் சேர்த்து இந்த மீன் சமைக்கப்படுகிறது. `சோர்சே இலிஷ்’ என்கிற இந்த மீன்சேர்த்த மோர்க்குழம்பும், வறுக்கப்பட்ட இலிஷ் முட்டைகளும், அரிசிச்சோறும் மழைக்காலத்தை அறிவிக்கும் வங்காள உணவுகள்.
பாரம்பரிய வங்காள சமையலில் இலிஷ் மீன், ஒரு முறைக்கு மேல் கழுவப்படுவதில்லை. திரும்பத் திரும்பக் கழுவினால் அதிலிருக்கும் சுவை போய்விடுமாம். “இலிஷ் மீனில் இருக்கும் முட்கள் வாய்க்குள் கீறாமல் சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் நாக்கில் கீறல் விழும், ஈறுகளில் ரத்தம் வடியும். சாப்பிட்ட மீனில் இருக்கும் முட்களை வாய்க்குள்ளேயே பிரித்து, தசையை மட்டும் விழுங்கிவிட்டு முட்களைத் துப்பத் தெரியவேண்டும். எங்கள் பிள்ளைகள் 12 வயதிலேயே இந்தக் கலையைக் கற்றுக்கொள்கிறார்கள்” என்கிறார்கள் வங்காளத்தின் முதியவர்கள். அதிகம் முட்கள் இருக்கும் இலிஷ் மீனுக்குத்தான் சுவை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒரு கிலோ மீனை 1800 ரூபாய்கூடக் கொடுத்து வாங்குவதற்குப் பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களின் மரபணுவோடு கலந்துவிட்ட மீன் இது. ஆனால், அந்த மீன் கிடைப்பது அரிதாகியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இலிஷ் சீசன் தொடங்கும்போது, இந்த வருடம் மீன் கிடைக்குமா இல்லையா என்று மீனவர்களும் பொதுமக்களும் நகம் கடித்தபடி காத்திருக்கிறார்கள். 2000ல் இருந்த இலிஷின் எண்ணிக்கையில் இப்போது பத்து சதவிகிதம் மட்டுமே பாக்கி இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்!
இந்த வீழ்ச்சி எதனால் ஏற்பட்டது?
- இழுவலைகளும் செவுள் வலைகளும் பொருத்தப்பட்ட பெரிய விசைப்படகுகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்திருக்கிறது. ஆகவே, இந்த மீன்கள் தேவைக்கதிகமாகப் பிடிக்கப்படுகின்றன.
- கங்கை நதியின் வண்டல்படிவு (siltation) காரணமாக அதன் ஆழம் குறைந்திருக்கிறது. சராசரியாக இலிஷ் மீன்கள் நீந்துவதற்கு 40 அடி ஆழம் உள்ள நீர்நிலைகள் தேவைப்படும். ஆனால், ஆற்றின் பெரும்பாலான இடங்களில் ஆழம் 30 அடிக்கு மேல் இருப்பதில்லை. நீந்துவதற்கு ஆழம் இல்லாததால், மீன்கள் ஆற்றை நோக்கி நீந்துவதையே குறைத்துக்கொள்கின்றன, இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.
- காலநிலை மாற்றத்தால் முகத்துவாரங்களை ஒட்டிய பகுதியில் கடல்மட்டம் உயர்ந்திருக்கிறது. ஆகவே, கடல்நீர் அதிக அளவில் உட்புகுந்து, நதியின் உப்புத்தன்மை மாறுகிறது. ஆகவே, மீன்கள் வலசை போகும்போது, அதிக தூரம் நீந்தினால் மட்டுமே நன்னீரை அடைய முடியும். இதனாலும் இனப்பெருக்கம் தடைபடுகிறது.
- ஓர் அணையை எதிர்கொள்ளும்போதே ஒரு வலசைமீனின் பயணம் நிரந்தரமாகத் தடைபட்டுவிடுகிறது. கங்கை நதியிலும் பத்மா நதியிலும் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. சில அணைகளில் மீன்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவையும் பயனுள்ளதாக இருப்பதில்லை. இலிஷ் மீன்களின் வலசை தூரம் சராசரியாக 720 கிலோமீட்டர்கள், ஒரு நாளைக்கு இவை 70 கிலோமீட்டர் தூரம் வரை நீந்திக் கடக்கும். கங்கை நதியை நோக்கி வலசை போகிற ஒரு இலிஷ் மீன், வெறும் 100 கிலோமீட்டர் நீந்தினாலே தன் முதல் அணையை அடைந்துவிடும். அதாவது இரண்டாம் நாளிலேயே பயணம் தடைபட்டுவிடும். காவிரி ஆற்றின் உள்ளம் மீன்களைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் மோசம். பயணம் தொடங்கி 30 கிலோமீட்டர் தாண்டிய பிறகு முதல் அணை வந்துவிடுகிறது. நர்மதா, தப்தி, பத்மா போன்ற பல ஆறுகளிலும் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் இலிஷ் மீன்களின் பயணத்தைத் தடை செய்கின்றன.
- மரபார்ந்த வங்காள மீனவர்களுக்கு இலிஷ் பற்றிய பல நம்பிக்கைகள் உண்டு. “லட்சுமி பூஜை தொடங்கி சரஸ்வதி பூஜை வரை நாங்கள் இலிஷ் பிடிப்பதில்லை. பொதுமக்களும் இந்தக் காலத்தில் இலிஷ் சாப்பிடுவதில்லை” என்கிறார்கள் வங்காள மீனவர்கள். இது எல்லா மதத்தினராலும் பின்பற்றப்படுகிறது. லட்சுமி பூஜை என்பது அக்டோபர் மாத இறுதியிலும், வங்காளத்தின் சரஸ்வதி பூஜை பிப்ரவரியிலும் கொண்டாடப்படுகிறது. இனப்பெருக்கத்துக்காக ஆற்றுக்குப்போன இலிஷ் மீன்கள், கடலுக்குத் திரும்பும் காலகட்டத்தோடு இது பிணைக்கப்பட்டிருக்கிறது. தவிர வங்காளத்தின் சிறு/குறு மீனவர்கள் யாரும் சிறிய இலிஷ் மீன்களைப் பிடிப்பதில்லை. ஆனால், பெரிய படகுகளை வைத்திருக்கும் முதலாளிகளோ அவற்றில் வேலை செய்பவர்களோ, பரம்பரை பரம்பரையாக மீன் தொழில் செய்பவர்கள் அல்ல, அவர்கள் வணிக ரீதியாகவே இதை அணுகுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு இதுபோன்ற நம்பிக்கைகளோ,எதிர்காலத்தில் இலிஷ் மீன்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணமோ இல்லை.
- சிறு இலிஷ் மீன்கள் `ஜட்கா’ என்று அழைக்கப்படுகின்றன. செவுள் வலைகளிலும், இறால் வலைகளிலும் இவை மாட்டிக்கொள்கின்றன. இறால் குஞ்சுகளைப் பிடிக்க, மிகச்சிறிய கண்ணிகள் இருக்கும் வலைகள் உண்டு (size zero nets). அவற்றிலும் ஜட்காக்கள் மாட்டிக்கொள்ளும். இதனால், இனப்பெருக்கத்துக்கு முன்பே பல இலிஷ் மீன்கள் அழிகின்றன.
- “இலிஷ் மீன்களைக் காப்பாற்றுவதற்காகப் பல்வேறு சட்டங்களும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், களத்தில் அவற்றை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன” என்கிறார்கள் மீனவர்கள். பெரிய விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், சட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய தடையாக இருக்கிறது.சிறிய அளவிலான இலிஷ் மீன்களைப் பிடிக்கக் கூடாது என்ற தடை, இலிஷ் மீன்களின் இனப்பெருக்க காலத்தின்போது ஒரு தடை, இலிஷ் மீன்களுக்கான சரணாலயம் என்று பல முன்னெடுப்புகள் உண்டு. ஆனால், இவற்றில் இருக்கும் ஓட்டைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பெரிய விசைப்படகுகள் செயல்படுகின்றன என்று குற்றம் சாட்டுகிறார்கள் சிறு/குறு மீனவர்கள். தடைக்காலத்தில் கண்காணிப்பு குறைவான பகுதிகளில் மீன்பிடித் தொழில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள். 23 செண்டிமீட்டருக்கும் குறைவான இலிஷைப் படகில் வைத்திருக்கக்கூடாது என்று மட்டும்தான் விதிமுறை சொல்கிறது. மூன்று நான்கு மணி நேரம் கழித்து வலையை மேலே இழுத்து, சிறிய மீனை மீண்டும் நீருக்குள் தூக்கிப் போடுவதற்குள் மீன் இறந்துவிடும். ஆகவே, இந்த விதிமுறையால் இலிஷ் மீன்களுக்கு எந்தப் பயனும் இல்லை. வலையின் கண்ணி அளவைப் பற்றித்தான் இந்த விதிமுறை இருந்திருக்கவேண்டும்.
- வலசை போகும் ஒரு மீனைப் பாதுகாப்பது என்பது எப்போதும் சிக்கலானது. 79% இலிஷ் மீன்கள் இந்தியா– வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லையைத் தாண்டிப் பயணிக்கின்றன. எல்லைகளைக் கடந்து நாடுகளின் ஒருமித்த பங்களிப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். மீன்பிடித் தொழில், மீன்கள் சார்ந்த சட்டங்கள், அமலாக்கம், கள நிலவரம், மீன்பிடிப் பொருளாதாரம் போன்றவை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் ஒருங்கிணைந்த பாதுகாப்பு என்பது மேலும் சிக்கலாகிறது.
உலக அளவில் ஹில்ஸா மீன் மற்றும் அதுசார்ந்த தொழில்களின் நிகர மதிப்பு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இருபத்தி ஆறாயிரம் மீனவர்களுக்கும், வங்கதேசத்தில் நான்கரை லட்சம் மீனவர்களுக்கும் இந்த மீன் மட்டுமே முக்கிய வாழ்வாதாரம். இந்த மீனின் ஏற்றுமதி மதிப்பு மட்டுமே வருடத்துக்குப் பத்துமில்லியன் டாலர்கள். இதைத் தவிர, இந்த மீனின் மரபார்ந்த பிணைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் இதன் மதிப்பு இன்னும் கூடும். பல்வேறு மொழிகளின் சொலவடைகளுக்குள் புகுந்து நூற்றாண்டுகளாக நீந்திய இந்த மீன், அணைகளில் மோதியும், இறால் வலைகளில் சிக்கியும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது.
வங்காள மீன் ஒன்றின் கதை இது என்றால்,உலகெங்கும் பல்வேறு பழங்குடியினரால் கடவுளாக மதிக்கப்பட்ட, இப்போது நம் கடல்களிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்ட மீனின் வரலாறு தெரியுமா?
தொடரும்…