தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்: 13- வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி- நாராயணி சுப்ரமணியன்

“வேளா மீனையெல்லாம் இப்போ பார்க்கவே முடியுறதில்ல. அந்த காலத்துல சின்ன கட்டுமரத்துலதான் கடலுக்குப் போவோம். இது ரொம்ப பெருசா இருக்கும். அதனால, இந்த மீனை கட்டுமரத்துல வெச்சு எடுத்துட்டு வரமுடியாது. இந்த ரம்பம் மாதிரி மூக்கு இருக்கில்ல, அந்த மூக்கை இப்படியும் அப்படியுமா இந்த மீன் பக்கவாட்டுல வீசும். இது வீசும்போது கட்டுமரம் ரொம்ப ஆடும். என்ன பண்ணுவோம்னா, ஒரு பெரிய கயிறு எடுத்து, இந்த மீனைக் கட்டுமரத்துக்குப் பின்னாடி கட்டிவிடுவோம். அப்படித்தான் கரைக்கு இழுத்து வருவோம். இந்த மீனெல்லாம் பிடிக்கிறது சாதாரண விஷயமில்ல, மூக்கால ஒரு வீசு வீசும்போது, வலையே அறுந்து போயிடும்”

சென்னை ஊரூர் குப்பத்தில் இருக்கும் ஒரு வயதான மீனவர் சொல்லத் தொடங்கினார். சுற்றியுள்ள வயதான மீனவர்கள் புன்னகையுடன் தலையசைத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது இடைமறித்து கூடுதல் தகவல்கள் தந்துகொண்டிருந்தார்கள். வயது குறைந்த மீனவ இளைஞர்கள் இந்தக் கதைகளைக் கேட்டவாறு, நான் காட்டிய வேளா மீன் புகைப்படத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வடதமிழகத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தின் மீனவர், சிறு வயதில் அப்பாவுடன் கடலுக்குச் சென்றபோது, இந்த மீனைப் பிடித்து வந்ததாகக் குறிப்பிட்டார். அளவில் பெரியதாகவும், ரம்பம் போன்ற மூக்கும் எல்லாரையும் ஈர்த்ததால், கரைக்கு வந்த உடனேயே மீனைப் பார்க்கக் கூட்டம் கூடிவிட்டதாம். பிடித்த மீனை ஒரு கொட்டகையில் போட்டு வைத்து, மீனைப் பார்ப்பதற்குக் கட்டணம் வசூலித்திருக்கிறார்கள். வேளா பிடித்த கதைகளைச் சொல்லும்போதெல்லாம், மீனவர்கள் கண்கள் மின்னுவதைப் பார்த்திருக்கிறேன்.

வேளா மீன்கள் (Sawfishes) திருக்கை வகையைச் சார்ந்த குருத்தெலும்பு மீன்கள். இவற்றில் ஐந்து வகை உண்டு. அதில் மிகச்சிறிய வகைகூட 10 அடி நீளம் வளரக்கூடியது. பெரிய வகை வேளாக்கள் 24 அடி வரை வளரும். சிறிய மீன்களை உணவாக உண்ணக்கூடிய இந்த மீன்களின் தனிச்சிறப்பு,  மூக்குப் பகுதியில் உள்ள கொம்பு போன்ற அமைப்பு. இரண்டு பக்கமும் பற்களைக்கொண்ட ஒரு ரம்பம் போன்ற இந்த அமைப்பு, ஆங்கிலத்தில் rostrum என்று அழைக்கப்படுகிறது. இரை மீன்கள் எங்கிருக்கின்றன என்பதை அறியும் உணர் கருவியாக, இரைமீன் கூட்டங்களைக் கலைக்கும் ஓர் உறுப்பாக இது செயல்படுகிறது.

தமிழகக் கடற்பகுதிகளில் நான் நடத்திய கள ஆய்வுகளை வைத்துப் பார்த்தால், முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கும் மேலாக மீன்பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த மீனைத் தெரிந்திருக்கிறது. அதற்குப் பின்னால் மீன்பிடித் தொழிலுக்கு வந்தவர்களுக்கு, இந்த மீன் பெயரளவில் மட்டுமே பரிச்சயம். சிலருக்கோ பெயர்கூடத் தெரிவதில்லை.

இதில் சோகம் என்னவென்றால், தமிழகக் கடற்பகுதிகளில் ஒரு காலத்தில் மிக அதிகமாகக் காணப்பட்ட மீன் இது. பரபரப்பான ஒரு மீன் சந்தைக்கு நடுவே, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுக் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “இந்த மீன் மூக்கைக் காயவெச்சு சண்டைக்கு எடுத்திட்டு போவாங்க அந்த காலத்துல” என்று மீனவத் தொல்குடி ஒருவர் சொன்னது நினைவிலாடுகிறது.

சங்க இலக்கியங்களில் வாள்வாய்ச் சுறா, கோட்டு மீன், கோட்டுச்சுறா என்று பல பெயர்களில் இது அழைக்கப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய கழிமுகத்தில் இந்த மீன்கள் அதிகமாகக் காணப்பட்டதாகப் பதிவுசெய்கின்றன சங்க இலக்கியங்கள். “வலையின் நரம்புகளைக் கிழிக்கின்ற சுறா இது” என்கிறது நற்றிணை. சினைச் சுறாமீனின் கொம்பை நட்டு, பரதவர்கள் வழிபட்டதாகக் குறிப்பிடுகிறது பட்டினப்பாலை.நெய்தல் நிலத்தின் பரதவர்கள், வாள்சுறாவையும் வலிமையான மீன்களையும் பிடித்துக் கரைக்குக் கொண்டுவந்த செய்தியை பதிவிடுகிறது, `வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி’ என்ற நற்றிணை வரி.

வேளா மீனின் வயிற்றுக்குள் இருக்கிற முட்டையை அடித்துக் கூழாக்கி ஆப்பம் செய்வது, கடலோர கிராமங்களில் ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. “பெண் வேளா மீன் பிடித்த வலைக்காரர், கிடைக்கும் முட்டையைப் பணியாரம் செய்து, அதை ஊரில் எல்லாருக்கும் நண்பர்/பகைவர் பாகுபாடின்றி வழங்கவேண்டும்” என்று எழுதுகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.

சென்னை நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் பேசும்போது, “அந்தக் காலத்தில் இந்த மீனின் மூக்கை திருஷ்டிக்காக வீட்டு வாசலில் மாட்டிவைப்போம்” என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தின் ஓர் ஓரத்தில் இருந்திருக்கிற இந்த வழக்கத்தின் கண்ணியைப் பின் தொடர்ந்து தேடினால், அது எங்கெங்கெல்லாமோ இழுத்துப்போகிறது. ஆப்பிரிக்காவில், காம்பியாவில் உள்ள கடல் பழங்குடியினரிடமும் இதே வழக்கம் உண்டு. கெட்ட சக்திகள் எதுவும் அண்டாமல் இருப்பதற்காகக் குடிசையின் மேற்கூரையில் இந்த மீனின் மூக்கை சொருகிவைக்கிறார்கள் அவர்கள். இந்த மீனின் மூக்கு, கெட்ட சக்திகளை விரட்டும் என்ற நம்பிக்கை உலகின் பல பழங்குடியினரிடம் இருப்பதாக மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கரீபியன் தீவுகளில் உள்ள குனா பழங்குடியினரைப் பொறுத்தவரை, இந்த மீன் கடவுளைப் போன்றது. கடலுக்குச் செல்பவர்கள், நீருக்குள் மூழ்காமல் காப்பாற்றும் சக்தியுடையது இந்த மீன் என்று நம்புகிறார்கள்.

கினியா பிசௌ கடலோரப் பகுதிகளில், ஒரு சிறுவன் ஆணாக மாறுவதற்கான சடங்கில் இந்த மீனின் கொம்பு ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. “இயற்கையின் ஆற்றல் அனைத்தும் ஒரு மீனாக உருவெடுத்தால் அது இப்படித்தான் இருக்கும்” என்று சொல்கிறார்கள் கினியா பிசௌ மக்கள். இந்த மீனின் கொம்பால் செய்யப்பட்ட ஒரு முகமூடியை அணிந்து நடனமாடுகிறார்கள் பதின்பருவச் சிறுவர்கள். கரைக்கு அருகே இந்த மீன் வரும்போது உற்று கவனித்து, இந்த மீன் நீந்துவதைப் போலவே நடன அசைவுகளைச் செய்யவேண்டுமாம்!

தங்களது மூதாதையர்கள் இந்த மீனின் வடிவத்தில்தான் இருந்தார்கள் என்பது ஆஸ்திரேலியத் தொல்குடிகளின் நம்பிக்கை. தனது கூரிய மூக்கை வைத்து, நீருக்குள்ளிலிருந்து நிலத்தை மீட்ட வேளா மீன், சிறிது காலம் கழித்து மனிதர்களிடம் அந்த நிலத்தை ஒப்படைத்ததாகவும், மனிதர்கள் இப்போது வாழும் நிலமே வேளாவின் பரிசுதான் எனவும் அவர்கள் நம்புகிறார்கள்.

பப்புவா நியூகினி யின் கடலோரப் பகுதிகளில், “மீன்பிடித் தொழில் சார்ந்து பல தொன்மையான நம்பிக்கைகளும் வழக்கங்களும் சட்டங்களும் உண்டு. அந்தச் சட்டங்களை மீறுபவர்களை வேளா மீன் தண்டிக்கும்” என்ற நம்பிக்கை பரவலாக இருந்துவருகிறது. தென்னமெரிக்காவின் மாயன் பழங்குடியினர், இறந்த மூதாதையர்களோடு இந்த வேளா மீனின் மூக்கையும் சேர்த்துப் புதைத்திருக்கிறார்கள். மெக்சிகோ சிட்டியில் உள்ள ஒரு ஆஸ்டெக் பழங்குடிக் கோயிலில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இந்த மீனின் கொம்புகள் கிடைத்திருக்கின்றன. இவை மதச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

“கடல் தேவதையின் நேரடிக் குழந்தை வேளா மீன்” என்பது சீனர்களின் நம்பிக்கை. ஒருவேளை, வேளா மீனை யாராவது பிடித்துவிட்டால், அவர்கள் கடல் தேவதையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும், மீனின் முள்ளைக் கடல் தேவதையின் கோயிலில் படைத்து வழிபட்டால், கோபத்திலிருந்து தப்பிக்கலாம் என்றும், அந்தக் காலத்தில் சீன மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். மகாராஷ்டிராவின் மீனவத் தொல்குடியினரான கோலிகளிடமும் இதே வழக்கம் இருந்திருக்கிறது. வேளா மீனைப் பிடிக்கும் கோலி மீனவர்கள், அந்தக் கொம்பை அறுத்து, அதில் தங்களது பெயர், படகு எண் ஆகியவற்றை எழுதி, நீரின் தேவதையான வேதாள் தேவ் கோயிலில் படைத்து வழிபட்டிருக்கிறார்கள்.

உலகின் பல்வேறு கடல் தொல்குடிகளிடையே ஊடுபாவாக ஓடும் இந்த மீன் பற்றிய நம்பிக்கைகளின் ஒற்றுமைகளை மட்டுமே தனி நூலாக எழுதலாம். தமிழகத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கையின் தொடர்ச்சி, ஆப்பிரிக்காவின் காம்பியாவுக்கு இட்டுச் செல்கிறது. சீனர்களின் நாட்டார் சடங்குகளின் எச்சம், மகாராஷ்டிரக் கோலி மீனவர்களின் வாழ்வியலுக்குள் புதைந்து கிடக்கிறது.

பாறை ஓவியங்கள், சடங்குகளில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுப் பொருட்கள், ஆயுதங்கள், முகமூடிகள் எனப் பல்வேறு தொல்குடிகளின் கலைப் பொருட்களில் திரும்பத் திரும்ப இந்த மீனின் உருவம் இடம்பெறுகிறது. நோட்டு/காசு ஆகியவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, கானா நாட்டின் அகா பழங்குடியினர், தங்கத்தை அளவிடுவதற்காக செய்த எடைக்கற்களில், வேளா மீனின் வடிவம் காணப்படுகிறது. “சட்டத்துக்கு முன்பு எல்லாரும் சமம்தான்” என்ற கருத்தை வலியுறுத்த, “வேளாவின் மூக்குக்கு முன்னால் அனைவரும் சமம்” என்ற ஒரு பழமொழி மேற்கு ஆப்பிரிக்காவில் சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் பொன்னாக மின்னிக்கொண்டிருந்த வேளாவின் நிலைமை இப்போது இருண்டுபோயிருக்கிறது. “எதிர்காலத்தில் நாட்டார் கதைகளிலும் சொலவடைகளிலும் பாறை ஓவியங்களிலும் மட்டுமே இந்த மீன்  நீந்திக்கொண்டிருக்கும்” என்று எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். ஒரு காலத்தில் 90 நாடுகளில் காணப்பட்ட மீன் இது. இப்போது 20 நாடுகளில் முற்றிலும் இந்த மீன் அழிந்துவிட்டது. கடல் மீன்களிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் மீதமிருக்கிற, அழிவின் விளிம்பில் இருக்கிற மீன் இனம் இதுதான். ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை சடங்குகளில் வைக்கக்கூட இந்த மீன் கொம்பு சரிவரக் கிடைப்பதில்லை. மரத்தில் செதுக்கிய கொம்பு வடிவத்தை முகமூடிகளில் பொருத்திக்கொள்கிறார்கள்.

இந்த மீனின் அழிவுக்கு என்ன காரணம்?

வேளா மீனின் துடுப்புகள் மென்று தின்பதற்கு உகந்தவை. இவற்றில் குழைவுத்தன்மை அதிகம். அதனால், சுறாமீன் சூப்களில் இந்த மீனின் துடுப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. துடுப்புகளுக்காக, உணவுக்காக, ஈரல் எண்ணெய்க்காக, தோலுக்காக இந்த மீன்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றன.

“வேளா மீனின் அழிவுக்கு அதன் கொம்புதான் காரணம்” என்ற கேமரூன் நாட்டுப் பழமொழி ஒன்று உண்டு. “ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தினால்தான் அழிவான்” என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழி அது. ஆனாலும் இதன் நேரடிப் பொருண்மையே உண்மையாகிவிடும்போல! கொம்புகளுக்காக இந்த மீன்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. ஆயுதமாக, வீட்டில் வைத்துக்கொள்கிற அலங்காரப் பொருளாக, கலைப்பொருளாக இந்த மீன் கொம்புகளுக்கு சந்தையில் நல்ல விலை உண்டு. வேளா கொம்புகள் சட்டவிரோதமாகத் தொடர்ந்து விற்கப்படுகின்றன. சமீபத்தில் ஈ-பே என்ற இணையச் சந்தையில் இந்த மீனின் கொம்புகள் விற்கப்பட்டது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

வேளா கொம்பில் மருத்துவத் தன்மை உண்டு என்று பல நாடுகளில் நம்புகிறார்கள். உடல்வலி, மூட்டு வலி, ஆஸ்துமா, முடக்குவாதம் என்று பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த வேளா கொம்புகள் தொல் மருத்துவ முறைகளில் பரிந்துரைக்கப்படுகின்றன. இதற்காகவும் இந்த மீன்கள் அதிகம் பிடிக்கப்படுகின்றன.

லத்தீன் அமெரிக்காவில் சேவல் சண்டை பிரபலமான பொழுதுபோக்கு. சண்டையின்போது சேவலின் கால்களில் சிறு வாள் ஒன்றை கட்டிவிடுவார்கள். விலங்குகளின் எலும்பு, திருக்கை வால் முள், கடலாமை ஓடு என்று பல்வேறு பொருட்களில் வாள் செய்வது வழக்கமாக இருந்தது. 1970களில் சேவல்களின் அளவு பெரிதான பிறகு, மற்ற வாட்களால் சண்டையின்போது பெரிய அளவில் காயத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், ஒரு சரியான மாற்றுப் பொருளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். வேளாவின் கொம்பில் இருபுறமும் இருக்கும் முட்களையும் சோதித்துப் பார்த்தார்கள். எத்தனை முறை சண்டை நடந்தாலும், கூர்மை குறையாமல் எதிராளிச் சேவலைக் காயப்படுத்தியது வேளாவின் முள். அதன்பிறகு சேவல் சண்டையில் ஈடுபடுபவர்கள், விரும்பி சேகரிக்கும் பொருளாக வேளா கொம்பு மாறியது. இன்றும் இணையத்தின் பல கறுப்புப் பக்கங்களில் இந்த வேளா முட்கள் சேவல் சண்டைகளுக்காகவே தயார்செய்து விற்கப்படுகின்றன.

வேளாக்கள் அழிவதற்குக் கடற்கரையோரச் சூழல் சீர்கேடு ஒரு முக்கியமான காரணம். வாழிடம் இல்லாமல் ஒரு விலங்கு எப்படி தப்பிப் பிழைக்கும்?

நூல்வலைகள் இருந்த காலத்தில், “வலையைக் கிழிக்கும்” என்று சொல்லப்பட்ட மீன் இது. ஆனால், கடினமான செயற்கை இழைகள்கொண்ட தற்கால வலைகளின் முன்னால், வேளாக்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சி தோற்றுவிடுகிறது. தவறுதலாக இதன் மூக்குப் பகுதி வலையில் மாட்டிக்கொள்வதால், பல வேளாக்கள் தேவையில்லாமல் இறக்கின்றன.

இருபது வருடங்களுக்கும் மேலாக வேளா ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் மெக்டேவிட், “இயற்கைச் சூழலில் ஒரு வேளா மீனைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை” என்று வருத்தத்துடன் சொல்கிறார். பல நாடுகளில் வேளாக்கள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டன. நீரைக் கிழித்து நிலத்தை உருவாக்கிய மூதாதையராகப் போற்றப்படும் ஒரு மீன், வசிப்பதற்கு வாழிடம்கூட இல்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது. சில வருடங்களுக்குப் பின் இது நம் நினைவுகளிலிருந்தும் கரைந்துவிடலாம். அப்போது களப்பணிக்குச் சென்றால், “எந்த மீன் இது? தெரியலையே” என்ற பதில் மட்டும் வரக்கூடும்.

வேளா மீன் பெரியதுதான். ஆனால், அதைவிடப் பெரிய மீன் ஒன்று கடலில் உண்டு, “பல நட்சத்திரங்களாலான மீன்” என்று மடகாஸ்கர் மொழியில் குறிக்கப்படுகிற மீன். அது என்ன?

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button