கடலும் மனிதனும் 16: மனித அறிவின் எல்லை: பதில்களும் பல கேள்விகளும்- நாராயணி சுப்ரமணியன்
நியூஸிலாந்தில் உள்ள நேப்பியர் மீன் காட்சியகத்தில் இங்க்கி என்ற பெயருள்ள ஒரு விலங்கைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அங்கிருந்த மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது இங்க்கி புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறது என்று பேசிக்கொண்டார்கள் பணியாளர்கள்.
2016ம் ஆண்டு “இங்க்கி தப்பித்துவிட்டது” என்று மீன் காட்சியகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. “இங்க்கியுடன் கூடவே ஒரே தொட்டியில் வசித்த ப்ளாட்சிக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. கேள்வி கேட்ட அதிகாரிகளுக்கு ப்ளாட்சி ஒத்துழைப்பு தரவில்லை” என்றெல்லாம் பத்திரிக்கைகள் நகைச்சுவையாக எழுதின.
“குற்றம் நடந்த” இடத்தை ஆராய்ந்தபோது, கண்ணாடித் தொட்டியை விட்டுத் தள்ளி, ஒரு சிறிய துளையையும் கவனித்தார்கள். கண்ணாடித் தொட்டிக்கும் அந்தத் துளைக்கும் இடையே ஆங்காங்கே தண்ணீர் சிதறியிருப்பதைப் பார்த்தவர்கள், இந்த வழியாகத்தான் இங்க்கி போயிருக்க வேண்டும் என்று யூகித்தார்கள். அந்தத் துளையின் மறுபக்கம் 50 மீட்டர் நீளக் குழாய் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. கடலில் சென்று முடியும் குழாய் அது!
நீர்த்தொட்டியிலிருந்து வெளியேறி, மரத்தாலான தரையில் சில மீட்டர்கள் உடலை இழுத்தபடி ஊர்ந்து, 150 மில்லிமீட்டர் மட்டுமே விட்டம் உள்ள சிறு துளைக்குள் உடலைக் குறுக்கிக்கொண்டு நுழைந்து, ஐம்பது மீட்டர் நீளக் குழாயில் நெளிந்து நீந்தி, கடலின் விடுதலையை அடைந்திருக்கிறது இங்க்கி!
கடல்சார் சூழலியலின் மறக்கமுடியாத Shawshank redemption நிகழ்வு இது.
“இங்க்கிக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். ஆகவே தப்பிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடுதான் அது கிளம்பியது என்று உறுதியாக சொல்லமுடியாது” என்றார்கள் காட்சியகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள். ஒரு சிலரோ “இவ்வளவு புத்திசாலியான ஒரு விலங்கைக் கண்ணாடித்தொட்டிக்குள் அடைத்தால் அது எப்படி தாக்குப்பிடிக்கும்? இங்க்கி தப்பித்துப்போனதில் ஆச்சரியமே இல்லை” என்றார்கள்.
“என்ன நடந்திருக்கும்?!” என்று ஒரு பெரிய ஆராய்ச்சியாளர் குழுவையே சில நாட்கள் குழப்பிவிட்ட இங்க்கி ஒரு சிறிய பேய்க்கணவாய் (Octopus).
தப்பித்தல் எனும் நுண்கலை:
எஸ்கேப் ஆர்டிஸ்ட் (Escape artists) என்ற ஒருவகை மாயாஜாலக் கலைஞர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கைவிலங்குகள், பூட்டப்பட்ட ஒரு சவப்பெட்டி, கூண்டு, பீப்பாய், நீர் நிரம்பிக்கொண்டேயிருக்கும் கண்ணாடித் தொட்டி என்று அவர்களால் எல்லா தளைகளிலிருந்தும் தங்களை விடுவித்துகொள்ளமுடியும்.
எங்கே மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அங்கிருந்து வெளியேறும் வழிகளை கவனித்து, தப்பித்துச் செல்வதற்கான ஒரு திட்டம் போடவேண்டும். பிறகு யாரும் பார்க்காதபோது குறிப்பிட்ட வேகத்தில் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும். ஏற்படும் திடீர்த் தடங்கல்களுக்கும் மாற்று வழி கைவசம் வைத்திருக்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் அதீதமான நுண்ணறிவு தேவை. அது கணவாய்களிடம் நிறையவே உண்டு.
விலங்கு உலகில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்ற பட்டத்துக்குத் தகுதியான ஒரே உயிரி இந்தப் பேய்க்கணவாய். இங்க்கியின் கதை பிரபலமாகிவிட்டது. ஆனால் வெளியில் அதிகம் பகிரப்படாமல் கடல்சார் ஆராய்ச்சியாளர்களிடம் இப்படிப்பட்ட பல கதைகள் உண்டு.
அந்தமான் கடற்பகுதிகளிலிருந்து சிறிய வகை கணவாய் ஒன்றை ஆராய்ச்சிக்காகப் பிடித்துக் கொண்டுவந்திருந்தேன். கண்ணாடித் தொட்டியின் புதிய சூழலுக்குப் பொருந்தட்டும் என்று தொட்டியில் விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது தொட்டி காலியாக இருந்தது! கணவாய் மேசையின்மீது உட்கார்ந்திருந்தது!
தொட்டியின் மேல் மூடியிருந்த கனமான கண்ணாடித் தட்டை லேசாகத் தள்ளி ஒரு இடைவெளி ஏற்படுத்திக்கொண்டு தொட்டியிலிருந்து வெளியேறியிருந்தது! இந்த வழியில் தப்பிக்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு அதை செயல்படுத்த அந்தக் கணவாய் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் பத்து நிமிடங்கள்!
“நாம் கவனிக்கிறோமா என்று கணவாய்கள் கவனிக்கின்றன. தப்பித்துச் செல்வது, சேட்டைகள் செய்வது என்று எல்லாவற்றையுமே நாம் கவனிக்காத அந்த நொடிப்பொழுதில் செய்வதற்கு எப்படியோ கற்றுக்கொண்டிருக்கின்றன” என்று சொல்கிறார்கள் மீன்காட்சியகங்களில் தொடர்ந்து பணியாற்றியவர்கள்.
நூறு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் ப்ரைட்டன் மீன் காட்சியகத்தில் நடந்த நிகழ்வு ஒன்று உண்டு. ஒரு மீன் தொட்டியில் மட்டும் மீன்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து வருவதை பணியாளர்கள் கவனித்தார்கள். “அது எப்படி சொல்லி வைத்தாற்போல ஒரு நாளைக்கு ஒரு மீன் குறையும்?” என்று ஆச்சரியப்பட்டார்கள்.
பல நாட்கள் இது தொடர்ந்தது.
ஒருவழியாகக் காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. கற்பனைக்கும் எட்டாத காரணம்.
மீன் தொட்டி இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் பேய்க்கணவாய் இருக்கும் தொட்டி ஒன்று இருந்தது.
தினமும் இரவில் யாரும் பார்க்காதபோது தனது தொட்டியை விட்டு வெளியேறுகிற பேய்க்கணவாய் , பக்கத்து அறையில் இருக்கும் தொட்டிக்குள் போய் மீனை சாப்பிட்டுவிடும்! பிறகு கீழே இறங்கி, தரையில் ஊர்ந்து, திரும்ப தனது தொட்டிக்குள் வந்து உட்கார்ந்துகொள்ளும்! மறுநாள் காலை பணியாளர்கள் வந்து பார்க்கும்போது ஒன்றுமே நடக்காததுபோல இயல்பாக நீந்திக்கொண்டிருக்கும் என்பதால் யாராலும் இதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை!
இந்த நிகழ்வுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலும் கணவாயின் கூர்மையான அறிவுத்திறனும் இன்றுவரை ஆச்சரியத்துடன் விவாதிக்கப்படுகிறது.
அறிவுக்கான கூறுகள்
- முகங்களை அடையாளம் காணும் திறன் (Facial Recognition Capacity): பேய்க்கணவாய்களுக்கு மனித முகங்களை இனம்காணும் ஆற்றல் இருப்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கடலுக்கடியில் சுவாசிப்பதற்கான முக்ககவசங்களோடு இருக்கும்போதுகூட மனிதர்களை அவை சரியாக அடையாளம் கண்டுபிடிக்கும்! மீன் காட்சியகங்களில் தனக்குப் பிடிக்காத பணியாளர்கள் வரும்போது அவர்கள்மீது பேய்க்கணவாய்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்த கதைகளும் உண்டு.
- உணர்வுகளை வெளிப்படுத்துதல் :ஒரு மீன் காட்சியகத்தில், கணவாய்க்குப் பிடிக்காத ஒரு வகை உணவு தொட்டிக்குள் போடப்பட்டது. பணியாளர் தன்னை கவனிக்கிறாரா என்று பார்த்து, அவர் பார்க்கிற நேரத்தில், அவரிடமிருந்து கண்ணை எடுக்காமலேயே அந்த உணவை தொட்டியின் வெளிப்புறத்தில் கொண்டுபோய் கணவாய்கள் கொட்டிவிட்டன! “இது பிடிக்கவில்லை” என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தின.
- விளையாட்டு: பொதுவாக விலங்குகள் முன்பு எதைக் கொண்டுபோய் வைத்தாலும் குறிப்பிட்ட சில எதிர்வினைகள் இருக்கும் – பெரிய பொருளாக இருந்தால் முதலில் அந்த விலங்கு பயப்படும், பிறகு அந்தப் பொருளால் ஆபத்து இல்லை என்று தெரிந்தால் அதைக் கடித்துப் பார்க்கும். அந்தப் பொருள் உணவும் இல்லை என்பது தெரிந்தபின் விலங்குகள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாது (செல்லப்பிராணிகள் நடந்துகொள்வது விதிவிலக்கு).
பேய்க்கணவாய் இருந்த ஒரு மீன் தொட்டியில், ஆராய்ச்சியாளர்கள் ஒரு காலியான சிறிய ப்ளாஸ்டிக் டப்பாவைப் போட்டார்கள். தூரத்திலிருந்து அதை தொட்டுப்பார்த்த பேய்க்கணவாய், அதைக் கடித்துப் பார்த்தது, உணவு இல்லை என்று தெரிந்தபின் கொஞ்ச நேரத்திலேயே அதை அப்படியும் இப்படியுமாகத் தூக்கிப்போட்டு விளையாடத் தொடங்கிவிட்டது! அதன்மீது நீரைப் பீய்ச்சியடித்து அந்த பாட்டிலைப் பறக்கச்செய்தது. அது கீழே வந்தபின் மீண்டும் நீரை அடித்து விளையாடியது.
“மனிதர்கள் ஒரு பந்தை சுவரிலோ தரையிலோ அடித்து அடித்து விளையாடுவதைப் போன்றது இது. உங்களிடம் ஒரு பந்தைக் கொடுத்தவுடன் நீங்கள் அதைத் தூக்கிப் போட்டுப் பார்ப்பீர்கள். ஏன்? அந்தப் பந்தை வைத்து விளையாடுகிறீர்கள், பந்தால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள். அந்தக் கணவாயும் அதைத்தான் செய்தது” என்று விவரிக்கிறார் ஆராய்ச்சியாளர் ஜெனிஃப்ர மாதர்.
- இடம்சார் அறிவு (Spatial intelligence) : “கேரட்டை அடைய முயலுக்கு வழிகாட்டுங்கள்” என்பதுபோன்ற புதிர்விளையாட்டுகள் நினைவிருக்கிறதா? கணவாய்களால் அப்படிப்பட்ட புதிர்களுக்கு எளிதில் வழி கண்டுபிடிக்க முடியும். பவளப்பாறைத் திட்டு போன்ற சிக்கலான ஒரு வாழிடத்தில்கூட “இந்த இடத்தில் ஒரு கோணலான கல் இருந்தது” என்று அடையாளம் வைத்துக்கொண்டு அந்த நிலப்பரப்பையே ஒரு வரைபடமாக்கி நினைவில் வைத்துக்கொள்ள முடியும்! மீனவர்கள் கடலுக்கடியில் வைத்துச் சென்ற மீன்பொறிகளுக்குள் சென்று, அங்கிருக்கிற மீன்களைத் தின்றுவிட்டு, உள்ளே நுழைந்த வழியிலேயே மாட்டிக்கொள்ளாமல் மீண்டு வந்த கணவாய்கள் உண்டு.
- தனிப்பட்ட குணநலன்கள்: கோபக்காரன், சேட்டைக்காரி, அதிகம் யாருடனும் பழகாதவர் என்றெல்லாம் மனிதர்களுக்குள் குணநலன் சார்ந்த வேறுபாடுகள் இருப்பது போலவே கணவாய்களுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் உண்டு (Individual personality)! பவளப்பாறைத் திட்டுக்களில் வசிக்கும் கணவாய்களிடம் இந்த குணநலன்களை நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன்.
- நினைவுகள், கனவுகள்:நீண்டகால நினைவு/குறுகிய கால நினைவு என்று இரண்டு வகைமைகளில் கணவாய்கள் நினைவுகளை சேமித்துக்கொள்கின்றன என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வின் முதற்கட்ட முடிவு “கணவாய்கள் கனவுகாணும் திறன் உடையாக இருக்கலாம்” என்று சொல்கிறது!
- கருவிகளைப் பயன்படுத்துதல்: கடலின் படுகைகளில் கிடக்கும் தேங்காய் ஓடுகளைப் பாதுகாப்புக்காக பேய்க்கணவாய்கள் சேமித்துவைத்துக்கொள்வதைப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள், “இதில் இரண்டு விஷயங்களை கவனிக்கவேண்டும். முதலாவதாக, கணவாய்கள் தங்கள் புற உலகிலிருக்கும் பொருட்களைக் கருவிகளாகப் பயன்படுத்துகின்றன. இது அறிவின் அடையாளம். இரண்டாவது, தேங்காய் ஓடுகளை அவை எதிர்காலத்துக்காக சேமித்து வைக்கின்றன. அப்படியானால் கணவாய்களுக்கு எதிர்காலம் பற்றிய ஏதோ ஒரு புரிதல் இருக்குமோ என்றும் யோசிக்கவேண்டும்” என்று வியப்புடன் எழுதுகிறார்கள்.
- தீர்வு காணுதல் (Problem solving):கணவாய்களால் ஜாடிகளின் திருகுமூடிகளைத் திறக்க முடியும்! ஒரு சில கணவாய்களின் ஆற்றல் அதற்கும் ஒரு படிமேல் – மூடி போட்ட ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் இவற்றைப் போட்டு வைத்தால் உள்ளிருந்தபடியே இவற்றால் மூடியைத் திருகி திறக்கமுடியும்!
இத்தனை தகவல்களையும் நாம் ஒரு முக்கியமான பின்னணியோடு புரிந்துகொள்ளவேண்டும் – கணவாய்கள் முதுகெலும்பற்ற உயிரிகள்! ஒரு சிம்பன்சி குச்சியை வைத்து எறும்புப்புற்றை சிதைப்பதும் கணவாய்களின் அறிவாற்றலும் ஒன்றல்ல. சிம்பன்சிக்கும் கணவாய்க்குமான பரிணாமகால இடைவெளி மிகவும் அதிகம். பரிணாம வளர்ச்சியில் மிகவும் கீழே என்று சொல்லப்படுகிற தொல் உயிரிகளின் வகைமையைச் சேர்ந்தவை கணவாய்கள்.இவை மெல்லுடலி தொகுப்பைச் சேர்ந்தவை – சங்கு, கிளிஞ்சல், சிப்பி ஆகியவையே கணவாய்களின் உறவினர்கள்! இந்தத் தகவலோடு கணவாய்களின் சேட்டைகளை யோசித்தால் அவற்றின் செய்கைகள் எத்தனை வியக்கத்தக்கவை என்பது புரியும்.
கணவாய்களின் வித்தியாசமான மூளை –நரம்பு மண்டல அமைப்புகள் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.”முதுகெலும்பற்ற உயிரிகளின் கடலில் நுணுக்கமான மூளைகள் உள்ள தீவுகளாக இவை தனியே மிதக்கின்றன” என்று எழுதுகிறார் பீட்டர் கோட்ஃப்ரே.
கணவாய்களின் அறிவாற்றல் பற்றிய செவிவழித் தகவல்களும் ஆராய்ச்சி முடிவுகளும் தினம்தினம் குவிந்தபடி இருக்கின்றன. “வேறு கிரகங்களில் அறிவாளியான உயிரிகள் இருக்குமானால், அவை கணவாய்களைப் போலத்தான் இருக்கும்” என்றுகூட ஒரு கருதுகோள் உண்டு! புவியைத் தவிர வேறு இடங்களில் அறிவுள்ள உயிரிகள் இருக்கின்றனவா என்ற தேடலில் (Search for Extra Terrestial Intelligence – SETI) அடிக்கடி கணவாய்கள் குறிப்பிடப்படுகின்றன. டெட் சியாங்க் எழுதிய வாழ்வின் கதை என்ற குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது அரைவல் (Arrival) திரைப்படம். அதில் வரும் Heptapod என்கிற வேற்றுகிரகவாசிகள் கணவாய்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்ததும் இந்த அடிப்படையில்தான்.
இந்த ஆச்சரியங்களுக்கு மத்தியில் சில அடிப்படையான கேள்விகளையும் நாம் கேட்க வேண்டும்.
“அறிவுள்ள” விலங்கு என்றால் என்ன?
அறிவுக்கான அலகுகளை மனிதன் நிர்ணயிக்கிறான் என்பதால், அது மனித அறிவின் எல்லைக்குட்பட்டுதானே இருக்கும்?
கடலுக்குள் வசிக்கிற ஒரு விலங்கின் அறிவுத்தேவை வேறு, நவீன சமூகத்தில் வாழும் மனிதனின் அறிவுத்தேவை வேறு. அப்படியானால், ஒரு கணவாயின் அறிவை அளக்கும் சோதனைகளை, மனிதனால் எப்படி வடிவமைக்க முடியும்? மனிதனின் பார்வையில் அறிவாளியாகத் தெரிகிற ஒரு கணவாய், அதே பவளத்திட்டில் வசிக்கிற சுறாமீனின் கண்ணுக்கு முட்டாளாகத் தெரியலாம். அப்படியானால் அறிவு என்பது சரியான சொல்லாடல் தானா?
“இல்லை” என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ” அறிவு என்ற சொல்லை இங்கு பயன்படுத்த முடியாது. இன்றுவரை ஐ.க்யூ தேர்வுகளின் போதாமைகளை விவரித்துக்கொண்டிருக்கிறோம். மனிதர்களின் அறிவையே நாம் சரியாக அளக்கிறோமா என்பது கேள்விக்குறி. அப்படி இருக்கும்போது அறிவு என்கிற ஒரு கருத்தாக்கத்தை வைத்துக்கொண்டு மற்ற விலங்குகளை மனிதன் எடைபோடுவது சரியல்ல” என்பது அவர்கள் வாதம். மூளையின் அளவு/எடை, நியூரான்களின் எண்ணிக்கை, மூளை மடிப்புகளின் எண்ணிக்கை, புதிர்களை அவிழ்க்கும் வேகம் எல்லாமே குறைபாடுகள் நிறைந்த அலகுகள் என்கிறார்கள் இவர்கள்.
தவிர, எல்லா உயிரிகளையும் மனிதனைப் போல உருவகிப்பதும் மனித இயல்பு. “தந்திரமான நரி“, “நன்றியுள்ள நாய்“, “புத்திசாலி காக்கை” என்றெல்லாம் நாமாகத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம்,இவை விலங்குகளின் பண்புகள் அல்ல, மனிதப்பண்புகளை விலங்குகளின்மீது ஏற்றியதன் விளைவு. இது Anthropomorphism என்று அழைக்கப்படுகிறது. அறிவு பற்றிய சில சோதனைகளிலும் சிலநேரம் இந்த சிக்கல் வந்துவிடுகிறது. “புத்திசாலித்தனமான செயல்” என்று நாம் நினைப்பதை விலங்குகள் செய்தால் உடனே “அறிவாளி” விலங்கு என்று சொல்லிவிடுகிறோம்.
இந்த விவாதங்கள் எல்லாமே “அறிவு” என்கிற சொல்லாடல் மீதுதானே தவிர கணவாய்கள் நம் புரிதலுக்கும் அப்பாற்பட்ட விநோத உயிரிகள் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இல்லை. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், கணவாய்களின் அறிவுகள் பற்றிய பதில்கள் கிடைக்கக் கிடைக்க, கேள்விகளும் வளர்ந்துகொண்டே போகின்றன.
அறிவுத்திறன் சோதனைகள் பற்றிய பல அடிப்படை கருத்தாக்கங்களை அடித்து நொறுக்குகின்றன கணவாய்கள். “அறிவு என்றால் என்ன?” என்ற ஒரு ஆதாரமான முக்கியக் கேள்வியை மனித இனம் மீள் ஆராய்ச்சி செய்கிறது. கடலுக்குள் இருக்கும் இந்த விலங்கின் அறிவை அணுகுவதன் மூலம், பிரபஞ்சத்தில் உள்ள வேற்றுகிரகத்தின் அறிவாளி உயிரிகளையும் புரிந்துகொள்ள முடியுமா என்று மனிதன் யோசித்து ஏங்குகிறான்.
தன்னுணர்வு/தன்னையறிதல்:
கணவாய்களின் அறிவு தொடர்பான கேள்விகளுக்கே முடிவு கிடைக்காத நிலையில் கடந்த சில வருடங்களாக இன்னொரு கேள்வியும் முளைத்திருக்கிறது – கணவாய்களுக்குத் தன்னுணர்வு (consciousness) உண்டா?
இதைவிட சிக்கலான கேள்வி இருக்க முடியாது.
மற்ற விலங்குகளை ஒதுக்கிவிட்டு தன்னுணர்வு சார்ந்த கேள்வி கணவாய்களை நோக்கிக் கேட்கப்படுவதற்கும் சில தனிப்பட்ட காரணங்கள் உண்டு. கடலில் இருக்கும் மீன்களைப் பிடித்து கண்ணாடித் தொட்டிக்குள் வைக்கிறோம் என்றால், தாங்கள் தொட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்று மீன்களுக்குத் தெரியாது. ஆனால் “ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறேன்” என்பது கணவாய்களுக்குப் புரியும்! இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது உடல் வலி/காயங்கள் பற்றிய தன்னுணர்வு சார்ந்த சில செய்கைகளை அவை அடிக்கடி செய்கின்றன. தனிப்பட்ட குணாதிசயங்களோடு இருப்பதும் அறிவுசார் செய்கைகளும்கூட தன்னுணர்வின் வெளிப்பாடுகளாக இருக்கலாம்.
ஆனால் இந்த உதாரணங்களே பிழையானவை என்றும் ஒரு கருத்து உண்டு. “கணவாயின் தன்னுணர்வை மனிதனால் எப்படி அளக்க முடியும்?” என்று சில ஆராய்ச்சியாளர்கள் கேட்கிறார்கள்.
1974ல் தாமஸ் நகேல் என்ற அறிஞர் “ஒரு வௌவாலாக இருப்பது என்பது எப்படி இருக்கும்?” என்ற ஒரு புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார். விலங்குகளின் தன்னுணர்வு பற்றிய பல கேள்விகளுக்கு விடைதேட முற்படும் கட்டுரை அது. “வௌவாலாக இருப்பது என்றால் என்ன – என்பதை ஒரு மனிதனால் புரிந்துகொள்ளவே முடியாது” என்பதுதான் கட்டுரை முன்வைக்கும் முடிவு. “வௌவாலுக்குத் தன்னுணர்வு இருக்கிறது என்று ஒருவேளை நாம் நம்பினால்கூட, அந்தத் தன்னுணர்வு என்ன என்பதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது” என்கிறார் நகேல்.
விலங்குகளின் தன்னுணர்வை சரிவரப் புரிந்துகொண்டால், ஒருவேளை எதிர்காலத்தில் இயந்திரங்களுக்குத் தன்னுணர்வு வந்தால் அதை எளிதில் எதிர்கொள்ளமுடியும் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் இப்போது இந்தக் கேள்விக்குத் தீவிரமாக விடைதேடிக்கொண்டிருக்கிறது அறிவியல் உலகம். தன்னுணர்வு பற்றிய கேள்விகள், அதற்கான அறிவியல் பரிசோதனைகள், அந்த முடிவுகளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்று எல்லாமே மிகவும் சிக்கலானவை. அறிவியலும் மெய்யியலும் இணையும் விநோதமான புள்ளியில் அந்த ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்படவேண்டும். அறிவியலாளர்களும் மெய்யியலாளர்களும் காரசாரமாக விவாதித்து ஒரு முடிவை எட்டி இணைந்து செயல்படுகிறார்கள் என்பதே ஒரு எட்டாக்கனவுதான்!
முன்பே சொல்லப்பட்டதுபோல் இதில் இன்னொரு சிக்கலும் உண்டு – மனிதர்களால் நடத்தப்படும் இதுபோன்ற சோதனைகளில், நாம் பாரபட்சமின்றி முடிவுகளை அணுகுகிறோம் என்று சொல்லிவிட முடியுமா? நாம் எந்த முடிவைப் பார்க்க விரும்புகிறோமோ அதையே அடைந்ததாக (Confirmation bias) நாம் சொல்லமாட்டோம் என்று என்ன நிச்சயம்?
“இந்த உலகில் உள்ள ஒவ்வொரு விலங்குக்கும் மனிதனாகிய உன்னை விட அதிகமாகவே விஷயங்கள் தெரியும்” என்று ஒரு சிவப்பிந்தியப் பழமொழி உண்டு. கணவாய்கள் சார்ந்த தரவுகளைப் பார்க்கும்போது அது உண்மைதானோ என்று நினைக்கத்தோன்றுகிறது. அறிவு, தன்னுணர்வு குறித்த நமது பல பதில்களைக் கணவாய்கள் கேள்விகளாக மாற்றியிருக்கின்றன. மனித மூளையின் எல்லைகளை விரிவடையச்செய்யும் கேள்விகள் இவை. மனிதன் என்ற நமது அடையாளத்தையே மீட்டுருவாக்கம் செய்யும் கேள்விகள். நாம் கண்டடையும் பதில்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும், அவை நமக்கு உதவுமா என்பதெல்லாம் இன்னும் தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு பதில் தேடிப் போகும் பாதை புதிய திறப்புகளைத் தந்தபடியே இருக்கிறது.
நமது புரிதல்களை அசைத்துப்பார்க்கும் கணவாயின் கதை இது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பிடிக்கப்படுவதால் நாடுகளின் பொருளாதாரத்தையே அசைத்துப்பார்க்கும் மீனின் கதை தெரியுமா?
தொடரும்…
Excellent article. Just like that started reading… couldnt resist scrolling the page. Nice narration. Kudos