ஆழ்கடலின் இடிமுழக்கங்களுக்கும் கீழே….
பாதாளத்தையொத்த கடலுக்கும் அடியில்
தொன்மம் மிக்க, கனவுகளற்ற,
யாரும் குறுக்கிடாத ஒரு உறக்கத்தில் இருக்கிறது க்ராக்கென்
என்று தனது க்ராக்கென் பற்றிய கவிதையைத் தொடங்குகிறார் ஆங்கிலக் கவிஞர் டென்னிசன். “தேவதைகளும் மனிதர்களும் பார்க்க, அது உறுமியபடி உறக்கத்திலிருந்து எழுந்துவரும்” என்கிறார்.
கடல் பற்றிய நமது ஆதாரமான உணர்வுகளில் பயம் முக்கியமானது. அதிலும் மேற்பரப்பில் இருக்கும் கடலையும் கடற்கரைகளையும் விரும்புபவர்கள்கூட ஆழ்கடல் என்றால் தயங்குவார்கள். இருட்டு, சுற்றி எங்கு பார்த்தாலும் வெறும் தண்ணீர், அமைதி என்று ஒரு திகில் கதையின் முதல் காட்சிக்கான எல்லா கூறுகளும் ஆழ்கடலுக்கு உண்டு. காலம்காலமாக மனிதர்களை பயமுறுத்திக்கொண்டிருக்கும் க்ராக்கென் என்ற கடல் அரக்கனும் இப்படி ஒரு காட்சியிலிருந்துதான் பிறந்திருக்கிறது.
க்ராக்கெனைப் பற்றிய முதல் பதிவே அரசர் ஒருவரால் எழுதப்பட்டதுதான். 1180ல் நார்வேயின் அரசர் ஸ்வெர்ரே தனது குறிப்பில் கடலில் வாழக்கூடிய ஒரு பூதத்தைப் பற்றி எழுதுகிறார். பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமான உருவம், கப்பலையே கவிழ்த்துவிடும், அதனிடம் மாட்டிக்கொண்டால் தப்பிக்கவே முடியாது என்று குறிப்பிடுகிறார். “கோணலான உருவம்” என்ற பொருள் தரக்கூடிய நார்ஸ் மொழிச் சொல்லிலிருந்து க்ராக்கென் என்ற பெயரும் இந்த பூதத்துக்கு வைக்கப்படுகிறது.
அடுத்தடுத்து க்ராக்கென் பற்றிய குறிப்புகள் எழுதப்படுகின்றன. கடலில் பயணம் சென்று திரும்பியவர்கள் எல்லாரும் தாங்கள் க்ராக்கெனை நேரில் பார்த்த கதைகளை நடுக்கத்துடன் தெரிவிக்கிறார்கள்.
நவீன உயிரியல் வகைப்பாட்டியலின் தந்தை என்று சொல்லப்படும் லின்னேயஸ் பற்றி அனைவரும் பள்ளிகளில் படித்திருப்போம். அவரது புத்தகத்தின் முதல் பதிப்பில் 1735ல் க்ராக்கென் என்ற விலங்கு அறிவியல்பூர்வமாக வகைப்படுத்தப்படுகிறது! என்ன நினைத்தாரோ…..அடுத்தடுத்த பதிப்புகளில் க்ராக்கென் காணாமல் போய்விட்டது.
1752ல் “நார்வே நாட்டின் இயற்கை வரலாறு” என்ற புத்தகத்தில் “க்ராக்கென் என்பது கட்டுக்கதையல்ல, அது நிஜத்தில் இருக்கிற உயிரினம், பைபிளில் வருகிற லெவியதான் போன்றது அது” என்று எழுதுகிறார் எரிக் பாண்டோபிடியன் என்பவர்.
இந்தக் க்ராக்கெனின் குணநலன்களாக (?!) இந்தக் குறிப்புகளில் காணப்படும் வர்ணனைகள் படிப்பதற்கு சுவாரஸ்யமானவை. “நாங்கள் வெகுநாட்களாகக் கடலில் பயணித்துகொண்டிருந்தோம். நிலத்தையே காண முடியவில்லை…. ஒருநாள் ஒரு தீவைக் கண்டுபிடித்ததும் மகிழ்ச்சிதாளாமல் கப்பலைத் திருப்பினோம். கப்பல் அருகில்போய் நின்றதும் தீவே ஆடத்தொடங்கியது. அடுத்த சில நொடிகளில் தீவு மேலெழுந்தது. பெரிய இரு கண்கள்! அப்போதுதான் புரிந்தது…. அது தீவல்ல, க்ராக்கெனின் முதுகு!” என்று எழுதுகிறார் ஒருவர்.
“அது கறுப்பு நிறத்தில் ஒரு மையைத் துப்பியது, கடலே கறுத்துப்போய்விட்டது. தனது பல கைகளால் கப்பலைக் கவிழ்க்கிறது. அதுவும் முடியாவிட்டால் தனது பிரம்மாண்டமான உடலை அது அசைத்தால் போதும், கடல்நீரில் ஒரு புயலும் சுழற்சியும் வரத்தொடங்கிவிடும், கப்பல் அதில் மாட்டி சுக்குநூறாகிவிடும். சில க்ராக்கென்கள் கோபமாக இருந்தால் கப்பலையே ஆழ்கடலுக்கு இழுத்துச் சென்றுவிடும். ஒரு கப்பலையே விழுங்கக்கூடிய அளவுக்கு அதற்குப் பெரிய வாய்” என்றெல்லாம் விதவிதமான குறிப்புகளைக் காணமுடிகிறது.
க்ராக்கென் கதைகள் பண்டைய நார்வேயோடு நின்றுவிடவில்லை. க்ரேக்கத்தின் ஸ்கில்லா என்ற கடல் அரக்கன், சீடஸ் என்ற கடல் பூதம் ஆகிய பலவகை விலங்குகளும் க்ராக்கெனும் ஒன்றுதானா என்று விவாதிக்கப்பட்டது. “நாம் ஒரு ஃபோர்க் வைத்து உணவைக் குத்திக் குத்தி சாப்பிடுவதுபோல ஒரு கப்பலிலிருந்து ஒவ்வொரு மனிதனாக எடுத்து எடுத்து ஸ்கில்லா உண்கிறது” என்கிறது ஒரு குறிப்பு.
க்ராக்கென் கதைகள் வழிவழியாக சொல்லப்பட்டன. ஜூல்ஸ் வெர்ன், ஹெர்மன் மெல்வில், விக்டர் ஹுயூகோ போன்ற பலரின் கதைகளில் க்ராக்கென்கள் சித்தரிக்கப்பட்டன. க்ராக்கென்கள் பூமியை ஆள வந்த வேற்றுகிரகவாசிகள் எனவும், முதலில் அவர்கள் கடலை ஆக்கிரமிப்பதிலிருந்து தங்கள் திட்டத்தைத் தொடங்குவார்கள் எனவும் 1953ல் ஒரு நாவல் எழுதினார் ஜான் விண்டம் என்ற எழுத்தாளர்.
க்ளாஷ் ஆஃப் டைட்டன்ஸ் என்கிற திரைப்படத்தில் வருகிற “Release the Kraken” என்கிற வசனம் மிகவும் பிரபலமானது. எதிரியை ஜெயிக்க வேறு வழியில்லை என்றாகிவிட்டபின்பு இறுதியாகக் கட்டவிழ்த்துவிடப்படும் பிரம்மாண்டமான, யாராலும் அழிக்க முடியாத விலங்காக க்ராக்கென் சித்தரிக்கப்படுகிறது. “க்ளாஷ் ஆஃப் டைட்டன்ஸ் கிரேக்கர்களைப் பற்றிய கதை, இதில் க்ராக்கென் எங்கே வந்தது” என்று கிரேக்கவியலாளர்கள் கொதித்தபோது, “க்ராக்கென் என்று சொல்லும்போதே பயங்கரமாக இருக்கிறது இல்லையா… அதனால்தான் அந்தப் பெயரை வைத்தோம்” என்று படக்குழுவினர் விளக்கம்வேறு தந்தார்கள்.
நிண்டெண்டோ-வில் ஆரம்பித்து எந்த வீடியோகேம் தயாரிக்கும் நிறுவனமானாலும், கடலுக்கடியில் நடக்கிற சண்டை என்றால் நிச்சயம் ஒரு முக்கிய வில்லனாகக் கிராக்கெனை சேர்த்துவிடுவார்கள். பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன், கிங்காங்: ஸ்கல் ஐலண்ட் போன்ற படங்களில் க்ராக்கென் காட்சிப்படுத்தப்பட்டது. புகழ்பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரிலும் க்ராக்கென் பற்றிய காட்சிகள் உண்டு. ஹாரி பாட்டர் கதைகளின் க்ராக்கென் ஒரு நன்மை செய்யும் விலங்காகக் குறிப்பிடப்படுகிறது. காமிக்ஸ் புத்தகங்கள், திரைப்படங்கள் என்று தொடங்கி க்ராக்கென் செண்ட், க்ராகென் ஹெட்செட் வரை உண்டு! “க்ராக்கெனைப் போலவே சக்தி கொண்டது” என்று க்ராக்கென் ரம் விளம்பரப்படுத்தப்படுகிறது!
சரி…. முக்கியமான ஒரு கேள்விக்கு வருவோம். க்ராக்கென் உண்மையா?
இதற்கு ஒற்றை வார்த்தையில் ஆம்/இல்லை என்று பதில் சொல்லிவிடமுடியாது. க்ராக்கென் என்பது நிஜத்தில் இருக்கிற ஒரு விலங்கை அடிப்படையாக வைத்து உருவான கற்பனை. ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் நிஜ விலங்கைப் பற்றி நமக்குத் தெரிந்த தகவல்கள் கொஞ்சம்தான் என்பதால் க்ராக்கென் கதைகளில் எது நிஜமாகவே நடந்திருக்கலாம் என்று உறுதி செய்யமுடியாமல் குழப்பம் நீடிக்கிறது.
கணவாய் என்ற கடல் உயிரினத்தை அனைவரும் அறிவோம். கணவா/கடம்பா/கடமா என்று இது பொதுவழக்கில் வழங்கப்படுகிறது. பேய்க்கணவாய் (Octopus), ஊசிக்கணவாய் (Squid), ஓட்டுக்கணவாய் (Cuttlefish)என்று இதில் மூன்று இனங்கள் உண்டு. இவற்றுள் ஊசிக்கணவாயில் Giant Squid என்ற வகை ஊசிக்கணவாய் 45 அடி நீளம் வரை வளரக்கூடியது! க்ராக்கென் கதைகளுக்கு அதுதான் அடிப்படை.
இந்தக் கதைகள் எல்லாம் வருவதற்கு முன்பே அறிவியலும் தர்க்கமும் சார்ந்த அறிஞர்கள் இந்த கணவாயைப் பற்றிய தெளிவான குறிப்புகளை எழுதிவிட்டார்கள். கி.மு நான்காம் நூற்றாண்டின்போது அரிஸ்டாட்டில் எழுதிய ஒரு புத்தகத்தில்கூட பெரிய கணவாய்கள் பற்றிய ஒரு குறிப்பு உண்டு. னால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் “இப்படி ஒரு விலங்கு உண்டு” என்பது முன்பே தெரிந்ததுதான் என்றாலும அதைப் பற்றிய பிற தகவல்கள் தெரிய பல ஆண்டுகளாகிவிட்டன.
அரிஸ்டாட்டில் காலத்திலேயே பேசப்பட்ட விலங்குதான் என்றாலும் 21ம் நூற்றாண்டு வரை இது உயிருடன் படம்பிடிக்கப்படவில்லை! வளர்ந்த, உயிருள்ள கணவாயின் முதல் புகைப்படம் 2004ல்தான் எடுக்கப்பட்டது. 1969ம் ஆண்டே நாம் நிலவில் காலடி எடுத்து வைத்துவிட்டோம் என்பதோடு இதைப் பொருத்திப் பார்த்தால் கடல்சார் ஆய்வுகளுக்கு மனிதர்கள் தரும் முக்கியத்துவம் என்ன என்பது புரியும்.
ஆங்காங்கே கரை ஒதுங்கும் கணவாய் உடல்கள், இந்த வகை பெரிய கணவாய்களை விரும்பி உண்ணும் ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கணவாய் மாதிரிகள் ஆகியவற்றை வைத்து, ஒரு புதிர் விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டுகளை சேர்ப்பதுபோல இந்த விலங்கைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்க முயற்சி செய்கிறது அறிவியல் உலகம்.
இதுவரை சேகரிக்கப்பட்ட அறிவியல் தகவல்கள் என்ன சொல்கின்றன…. க்ராக்கென் சாத்தியமா?
சாத்தியம்தான் என்பதற்கும் சில ஆதாரங்கள் உண்டு:
- சில வகை சிறு கணவாய்கள் கோபம் வந்தாலோ, நாம் சீண்டினாலோ நம்மைத் தாக்கும். அதனால் க்ராக்கென் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு.
- அமெரிக்காவைத் தேடி பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த கொலம்பஸின் பிண்டா கப்பல் வெறும் 60 அடிதான். இப்போது சாதாரணமாகத் தங்குமீன்பிடித்தொழில் செய்வதற்காகக் காசிமேடு துறைமுகத்திலிருந்து கிளம்பும் கப்பல்களே 62அடிக்கும் மேலே இருக்கின்றன. அந்தக் காலத்துக் கப்பல்கள் சிறியவை என்பதால் ஒரு பெரிய கணவாய் தெரியாமல் லேசாக மோதினாலே கப்பல் கவிழ வாய்ப்பு உண்டு.
- இதுவரை நாம் நீள அகலங்களை அளந்து பரிசோதித்திருக்கும் பெரிய கணவாயின் மொத்த எண்ணிக்கை 600 மட்டுமே. “இதுதான் சராசரி அளவு” என்று இந்தத் தரவுகளை வைத்து அறிவியலால் அறுதியிட்டு சொல்லவே முடியாது.
- இப்போதிருக்கிற விலங்குகளின் அளவை வைத்து பண்டைய விலங்குகளில் அளவை சரியாகக் கணிப்பது கடினம்.
- சில பெரிய கணவாய்கள் கப்பல்களை இடித்திருக்கின்றன. அதற்கான தரவுகள் உண்டு.
சாத்தியமில்லை என்பதற்கும் சில ஆதாரங்கள் காட்டப்படுகின்றன:
- போகும் இடங்களிலெல்லாம் கப்பலைக் கவிழ்க்கும் ராட்சத விலங்குகள் இருப்பது உண்மையானால் பண்டைய காலங்கள் தொடங்கி இன்றுவரை கப்பல் பயணமே சாத்தியப்பட்டிருக்காது. குறிப்பாக கடற்பயணங்களின்மூலமாக வரலாற்றில் தங்களை அழுத்தமாகப் பதிவு செய்துகொண்ட வைக்கிங் இனத்தவரின் வளர்ச்சியும் இருந்திருக்காது.
- க்ராக்கென் பற்றிய பயமுறுத்தும் கதைகள் உண்மையானால், ஏன் க்ராக்கெனை வென்று வீழ்த்திய ஒரு வீரனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு கூட காணக்கிடைக்கவில்லை?
- க்ராக்கென் கதைக்கு அடிப்படையான பெரிய கணவாய் இனம் வேகமாய் நீந்திச்சென்று தாக்கும் இனம் அல்ல. இரை வருவதற்காகக் காத்திருக்கும் வேட்டையாடி. ஒரு கப்பலைத் தேடிச்சென்று தாக்கி, மனிதர்களைக் கொல்லும் வேட்டைமுறை அதன் மரபணுவில் இயல்பாகக் காணப்படும் குணம் அல்ல.
- பெரிய கணவாய்களால் கடலின் மேற்பரப்பில் அதிக நேரம் வாழ முடியாது. அவை ஆழ்கடல் விலங்குகள். ஒரு கப்பலைக் கவிழ்த்து முடிக்கும்வரை அவை உயிருடன் தாக்குப்பிடிக்க வாய்ப்பு இல்லை.
- இதுவரை பெரிய கணவாய்கள் மனிதர்களை சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
“நம் எல்லாருக்குமே ஒரு பூதம் தேவைப்படுகிறது” என்கிறார் க்ளைட் ரோப்பர். உளவியலாளர்களிடம் கேட்டால் நமது பயங்களுக்கு உருவம் கொடுத்து எப்படி நாம் விதவிதமான பூதங்களை உருவாக்குகிறோம் என்று விவரமாகச் சொல்வார்கள். அளவில் பெரிய விலங்குகள் நமக்குள் அச்சத்தை விதைக்கின்றன. யானையைப் போல கண்ணுக்கெதிரே கரும்பைக் கடித்தபடி சாதுவாக இருக்கும்வரை பிரச்சனையில்லை. ஆழ்கடலில், இருட்டுக்குள் ஒரு பெரிய கணவாய் என்றால் நம் கற்பனை விரிந்துகொண்டே போகிறது. “ஊழியின் வேகத்தில் க்ராக்கென் எங்களைத் தாக்கியது” என்ற வரிகளின் உளவியல் இதுதான்.
பிரம்மாண்டமான இந்தக் கடல் அரக்கன் ஒருப்பக்கம் இருக்க… ஆறடிக்கும் குறைவான ஒரு சிறிய மீன் உலக அரசியலிலேயே விரிசல்கள் ஏற்படுத்திய வரலாறு தெரியுமா?
தொடரும்…..
அருமை. சில ஆங்கில வார்த்தைகளின் தமிழ் சொற்களும் தந்தமைக்கு மேலும் நன்றிகள். மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்.