டைட்டானிக் 2.0
“கறுப்பு நிறத்தில், தீய எண்ணங்களுடன் ஒரு அலையின் மீது வருகிறேன்
நான் தொடும் உயிர்கள் மரிக்கும்
என் முத்தத்தின் விஷம் அவற்றைக் கொல்லும்
என் கொடூர சுருள் கைகளால் அவற்றைத் திணறடிப்பேன்
தார் நிறைந்த என் தழுவலால் அவற்றை இறுக்கப் பிடிப்பேன்”
என்று தன் கவிதையில் எழுதுகிறார் ரோஸி வெலான். கடல் பேரிடர் என்றதும் நம் நினைவுக்கு வரும் சுனாமி, சூறாவளிப் புயல் போன்றவை, கடலுக்குள்ளிருந்து வந்து மனிதர்களை பாதிக்கின்றன. ஆனால், கடலுக்குள் மனிதன் சென்று பேரிடர்களை உருவாக்கிய நிகழ்வுகளும் வரலாற்றில் உண்டு. 1989ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் ஆண்டு அலாஸ்காவின் கடற்பகுதியில் நடந்த ஒரு பேரிடர் அப்படிப்பட்டது. டைட்டானிக்கைப் போலவே பனிப்பாறைகளுக்கும் ஒரு கப்பலுக்குமான கண்ணாமூச்சி விளையாட்டால் நிகழ்ந்த பேரிடர் அது. ஒரே ஒரு முக்கியமான வேறுபாடு – இந்தப் பேரிடரில் மனிதர்கள் யாரும் இறக்கவில்லை, ஆனால் கடல் சூழலே உலுக்கப்பட்டது!
தன்னுடைய கூடு முழுக்க எண்ணெயை ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடங்கியது எக்ஸான் எண்ணெய் நிறுவனத்தின் எக்ஸான் வால்டெஸ் கப்பல். விதிமுறைகளை மீறி ஒரு அதிகாரி மட்டுமே கப்பலைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார். சுற்றியுள்ள சூழலை கவனித்துச் சொல்லும் ரேடார் மாதக்கணக்கில் பழுதாகியிருந்தது, அதை சரி செய்வதற்கு செலவாகும் என்பதால் எக்ஸான் நிறுவனமும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் எல்லாம் ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருந்ததால் களைப்படைந்திருந்தனர். பனிப்பாறைகள் நிறைந்த கடற்பகுதி என்பதால் அதைத் தவிர்க்க ரேடார் உதவியும் இன்றி நெரிசல் மிகுந்த கடற்பகுதியில் கப்பல் செலுத்தப்பட்டது.
கப்பலை செலுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் சரியாக நள்ளிரவு 12.04 மணிக்கு ஆறு முறை குலுங்கிவிட்டு ஒரு உறுமலோடு எக்ஸான் வால்டெஸ் கப்பல் தரைதட்டியது.
எண்ணெய் இருந்த கலன்கள் உடைந்தன. அடுத்த மூன்று மணிநேரங்களுக்குள்ளாக 5.8 மில்லியன் காலன் எண்ணெய் கடலுக்குள் கசிந்தது. மொத்தம் 42 மில்லியன் லிட்டர் எண்ணெயைக் கடலுக்குள் துப்பிய கப்பல் மெல்ல ஆசுவாசமடைந்தது.
அடுத்த சில நாட்களில், உள்ளூர் மக்களும் எக்ஸான் பணியாளர்களுமாக சேர்ந்து சுமார் 11,000 பேர் இந்த எண்ணெயை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கசிந்த எண்ணெயில் 10%க்கும் குறைவான அளவையே நீக்க முடிந்தது. அதற்குள் 2.5 லட்சம் கடற்பறவைகள், 2800 கடல் நாய்கள், 300 சீல்கள், 247 வழுக்கைத்தலைக் கழுகுகள், 22 ஆர்காக்கள் இறந்தன. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் ஹெரிங் மீன்களின் எண்ணிக்கை கிடுகிடுவென்று சரிந்தததில் அந்தப் பகுதியின் முக்கிய வாழ்வாதாரம் அறுந்து போனது. சொந்த வேலைகளில் இல்லாமல் எண்ணெய் நீக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் உள்ளூர் மக்களின் வருமானம் போனது, அந்த இடத்தின் தூய்மை குலைந்ததில் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தவறான வேதிப்பொருட்களைக் கொண்டு எண்ணெயை நீக்க முயன்றதால் எண்ணெய் நீக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, நிமோனியா போன்றவை ஏற்பட்டதாகவும் பல உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பான முதல் வழக்கு 1989ல் தொடுக்கப்பட்டது. தொடுத்தது யார் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதற்குத் தாமதமாக அனுமதி வழங்கி சுத்தப்படுத்தும் பணியில் குறுக்கிட்டதாக அலாஸ்காவின் அரசு மீது எக்ஸான் நிறுவனம் வழக்குப் பதிந்தது! தனது கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் திணறிக்கொண்டிருந்த அலாஸ்கா அரசு, எக்ஸானுக்கு பதில் சொல்லும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. அடுத்தடுத்து எக்ஸான் அங்குமிங்கும் சுட்டுவிரலை நீட்டி பழி சுமத்தியது. “நாங்கள் அறிவியல் இதழ்களில் வரும் கட்டுரைகளை ஆதாரமாக சமர்ப்பிக்கிறோம், நீங்கள் சொல்லும் அளவுக்கு சூழல் பாதிப்பு கடுமையாக இல்லை. அலாஸ்காவின் கடற்பகுதி இயல்பு நிலைக்கு வந்துவிட்டது” என்று எக்ஸான் வாதிட்டது. வருடக் கணக்கில் வழக்குகள் நீடித்தன, இழுத்தடிக்கப்பட்டன. ஒருவழியாக 2008ம் ஆண்டில், மொத்தப் பொருளாதார இழப்பில் பத்தில் ஒரு பங்கை இழப்பீடாகத் தருவதற்கு ஒப்புக்கொண்டது எக்ஸான். இந்த வழக்கை விவரிக்கும் கட்டுரையாளர் கைலி க்ரோ, “இதில் நீண்டகால பாதிப்புகளுக்கு எந்த இழப்பீடும் வரவில்லை, வழக்கு பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது. செய்த தவறுகளுக்காக ஒரு நிறுவனத்திடம் அபராதம் விதிக்கும்போது கடுமையாக நடந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் ஆகும்” என்று எழுதுகிறார்.
பனிப்பாறைகளிடமிருந்து தப்புவதற்காக புதிய பாதையில் பயணித்தது, வழக்கமான சோதனைகளுக்குக் கப்பலை உட்படுத்தாதது, விதிமுறைகளுக்கு மாறாக குறைவான எண்ணிக்கையில் இருந்த சோர்வடைந்த பணியாளர்களுடன் கப்பலை செலுத்தியது, போதுமான ரேடார் உபகரணங்கள் இல்லாமை ஆகியவை இந்த விபத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. எக்ஸான் வால்டெஸ் எண்ணெய்க் கசிவின் பாதிப்பு அதிகமாக இருந்ததற்கு அந்த நிலப்பகுதி ஒரு முக்கியக் காரணம். சிந்திய எண்ணெய் அங்கு இருந்த சிறு இடுக்குகளில் புகுந்துகொண்டது. அதை நீக்குவதும் கடினமான வேலையாக இருந்தது. 2014ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வில் கூட, விபத்து நடந்த இடத்திலிருந்து 725 கிலோமீட்டர் தொலைவில் கூட எண்ணெய் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது! 2018ம் நடந்த ஒரு ஆய்வில், பாதிக்கப்பட்ட 24 இனங்களில், 19 இனங்கள் மீண்டுவிட்டதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஹெரிங் மீன்கள், முரலெட் என்ற ஒரு வகை கடற்பறவை இனம் ஆகியவை மீண்டு வர வாய்ப்பில்லை என்கிறார்கள். அந்தக் கடற்பகுதியில் மட்டுமே காணப்படும் ஒரு ஆர்கா குழுவும் மீள வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. ஆர்காக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு குழுவும் ஒரு தனி இனத்தைப் போல தனித்துவமானது என்பதால் சூழல் பார்வையில் இது ஒரு பேரிழப்புதான்.
எக்ஸான் வால்டெஸ் எண்ணெய்க் கசிவு, உலகின் மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு அல்ல. ஆனால் சிறு சிறு தவறுகளின் சங்கிலித் தொடரால் நிகழ்ந்த விபத்து இது என்பதாலும், இந்த விபத்தால் ஏற்பட்டிருக்கும் சூழல் பாதிப்புகள் அதிகம் என்பதாலும் இந்த நிகழ்வு உலகெங்கிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வின் தாக்கத்தால் 1990ம் ஆண்டு எண்ணெய் மாசு சட்டத்தை (Oil pollution Act, 1990) இயற்றியது அமெரிக்க அரசு. ஒருவகையில் எக்ஸான் இந்த வழக்கைக் கையாண்ட விதமும் அனைவரையும் கவனிக்கவைத்தது எனலாம்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் விபத்தாகப் பார்க்கப்படுவது 2010ல் மெக்சிகோ வளைகுடாவில் டீப் வாட்டர் ஹொரைஸான் (Deep water Horizon) என்ற எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட பேரிடர்தான். கடலில் இருந்த இந்த எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பால் 11 பேர் இறந்தனர், 17 பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் 650 மில்லியன் லிட்டர் எண்ணெய் கடலுக்குள் கசிந்தது. பத்து லட்சம் கடற்பறவைகள், 1000 ஓங்கில்கள் உட்பட அதீத எண்ணிக்கையில் கடல் உயிரிகள் அழிந்தன. எண்ணெயில் இருந்த வேதிப்பொருட்களால் கடல் உயிரிகளின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டது. பாதிக்குப் பாதி இறால்கள் கண்கள் இன்றிப் பிறக்கத் தொடங்கின. மீன்வரத்து குறைந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
1991ல் வளைகுடாப் போரின்போது ஏற்பட்ட ஒரு எண்ணெய்க் கசிவு, சூழல் தீவிரவாத நிகழ்வாகப் (Eco terrorism) பார்க்கப்படுகிறது. தங்களுடைய எண்ணெய்க் கப்பல்களைஅமெரிக்கா மூழ்கடித்ததால் இது நடந்தது என்று ஈராக் சொல்கிறது. அமெரிக்காவோ, தாங்கள் ஈராக்கை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க ஈராக் வேண்டுமென்றே கச்சா எண்ணெயைக் கசிய விட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியது. கடலில் உண்மையாகவே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. எது எப்படியோ, ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்கள் தொடர்ந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு 240 மில்லியன் காலன் எண்ணெய் கடலில் கசிந்தது!
1976ல் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் எண்ணெய்க் கசிவு நடந்ததாக சொல்லப்படுகிறது. தமிழகத்திலும் 2017ம் ஆண்டு நடந்த எண்ணூர் எண்ணெய்க் கசிவு பலருக்கு நினைவிருக்கலாம். எண்ணெய்க் கசிவிற்குப் பிறகான சூழல் மீட்டெடுப்புப் பணிகளில், சிந்திய எண்ணெயில் மூன்று முதல் பதினேழு சதவிகிதத்தை மட்டுமே திரும்ப அள்ள முடியும் என்பதை எண்ணெய் நிறுவனங்களே பல அறிக்கைகளில் தெரிவித்திருக்கின்றன. “எண்ணெய் சிந்திய பிறகு அதை சுத்தம் செய்வதே ஒரு கண்துடைப்பு வேலை. உண்மையில் இந்த செயல்பாடுகளால் எதுவும் நடக்கப்போவதில்லை. நாம் எதாவது முயற்சி எடுத்தோம் என்று வெளியில் காட்டிக்கொள்வதுபோன்ற வித்தை இது” என்கிறார் சூழலியல் அரசியல் எழுத்தாளர் ஆண்ட்ரூ நிகிஃபாருக்.
எண்ணெய்க் கசிவு, அதை சுத்தம் செய்வது ஆகியவை பற்றிய அரசியல், எண்ணெய் நிரம்பிய கடலைப் போலவே தெளிவின்றி கறுப்பாக இருக்கிறது. எண்ணெயை நீக்குவதற்கான வேதிப்பொருட்கள் சூழலை பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் வந்தபிறகும் வேதிப்பொருட்கள் மூலம் எண்ணெயை கொஞ்சம் விரைவாக எடுத்துவிடலாம் என்பதால் நிறுவனங்கள் அதில் விடாப்பிடியாக இருக்கின்றன. எண்ணெய்க் கசிவைத் தடுப்பதற்கான நிதி ஒதுக்கீடு 2025ம் ஆண்டுக்குள் 178 பில்லியன் டாலராக உயரக்கூடும் என்பதால், எங்கெல்லாம் செலவை மிச்சம் பிடிக்கலாம் என்பதே முக்கிய குறிக்கோளாக மாறிவிட்டது. பணம், பொதுமக்களின் அதிருப்திக்கு உள்ளாகாமல் இருப்பது, உடைந்த கப்பல் அல்லது எண்ணெய்க் கிணற்றை செப்பனிடுவது போன்ற தொடுகோடுகளில் இந்தப் பிரச்சனை தீவிரமாக இயங்குவதால்,எண்ணெய்க் கசிவால் ஏற்படும் சூழல் பிரச்சனைகள் கரையொதுங்கிவிடுகின்றன.
இந்தப் பிரச்சனையின் மையப்புள்ளி, நிறுவனங்களின் அலட்சியமோ எண்ணெயை நீக்கும் தொழில்நுட்பத்தில் உள்ள போதாமையோ அல்ல. எண்ணெய் மீது நமக்கு இருக்கும் சார்பு நிலைதான், கிட்டத்தட்ட பித்துநிலை என்றே சொல்லலாம். 1859ல் கச்சா எண்ணெய் கண்டெடுக்கப்பட்டது என்பார்கள். அன்றிலிருந்து உலகப் பொருளாதாரத்தின் அச்சு எண்ணெயின் பிசுபிசுப்போடுதான் இயங்குகிறது. எண்ணெய்க்காகப் போர்கள் நடக்கின்றன, பல லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்…. இவ்வளவு ஏன், மனித இனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கும் காலநிலை மாற்றத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டுமானால் இந்த எண்ணெய்ப் பித்திலிருந்து நாம் விடுபடவேண்டும் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாமோ அதையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு இதுவரை தோண்டாத இடங்களில் எண்ணெய் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆர்டிக் பனிப் பிரதேசத்தை ஒட்டிய கடற்பகுதிகளில் எண்ணெய்ப் பணிகளுக்கான உரிமை தரப்படுவதற்கு முன்பாக, ஒருவேளை இந்த இடத்தில் எண்ணெய் விபத்து நடந்தால் என்னவாகும் என்ற சோதனை நடத்தப்பட்டது. சில பனிக்கரடிகளை எண்ணெயில் உலவவிட்டுப் பார்த்தார்கள், அடிக்கடி நாவால் உடலை சுத்தம் செய்துகொள்ளும் வழக்கம் கொண்ட கரடிகள், எண்ணெயை உட்கொண்டு சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டன! ஆய்வு முடிவுகள் வந்தபின்னும் உரிமம் தரப்பட்டதா இல்லையா என்பதை வரலாறு தெரிந்தவர்கள் எளிதில் யூகித்துவிடுவார்கள்.
எண்ணெயை இறுகப் பற்றியிருக்கும் நம்முடைய பொருளாதாரம் பிடியைத் தளர்த்த பல ஆண்டுகளாகலாம். அதற்குள் நடக்கப்போகும் எண்ணெய் விபத்துகளைத் தடுக்கவும் பாதிப்பைக் குறைக்கவும் சில வழிமுறைகளை முன்வைக்கிறார் ஆண்ட்ரூ நிகிஃபாருக்:
- எண்ணெய் சார்ந்த ஒரு திட்டம் (உதாரணமாக எண்ணெய்க் கிணறு போன்றவை) வருவதற்கு முன்பு அதை எதிர்க்கவும் மறுதலிக்கவும் உள்ளூர் மக்களுக்கு முழு உரிமை தரப்படவேண்டும். ஏனென்றால் ஒரு பேரிடர் வரும்போது அதன் பாதிப்பைத் தோளில் சுமக்கப்போவது அவர்கள்தான்.
- எண்ணெய்ப் பேரிடரை எதிர்கொள்வது ஒரு பூகம்பத்தை எதிர்கொள்வது போன்றது – இதில் ஒரு தீர்வு என்பது கிடையாது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மீட்புப்பணியை முடுக்கிவிட வேண்டும், மீட்புக்காக தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும்.
- ஒரு எண்ணெய் விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு மற்றும் அபராதமாக நிறைய பணம் தரவேண்டியிருக்கும் என்ற நெருக்கடியை நிறுவனங்களுக்கு ஏற்படுத்த வேண்டும், அவர்களுக்கும் இதனால் பண இழப்பு ஏற்பட்டால்தான் நிறுவனங்கள் விபத்தைத் தடுப்பதில் கவனம் செலுத்துவார்கள்.
“சுழலும் நிறங்கள் பரவுகின்றன
கடலைப் போர்த்துகிறது ஒரு வானவில்
அழகான விஷம்”
என்று எண்ணெய்க் கசிவை வர்ணிக்கிறது ஒரு ஹைக்கூ. இதோ இப்போது இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது கூட எண்ணெய்க் கசிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு சிறு கவனக்குறைவு உலகில் எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கலாம். பெரும்பான்மை பாதிப்பு கடல் சூழலுக்குத்தான் என்பதாலேயே எண்ணெய்ப் பேரிடர்களைத் தடுக்க பெருமுயற்சிகள் எடுக்கப்படாதது மனித இனத்தின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது.
எண்ணெயை, ’திரவத் தங்கம்’ என்பார்கள். தங்கத்தைப் போன்ற விலை உயர்ந்த பொருளாக மதிக்கப்பட்டு, செழிப்பின் அடையாளமாக இருந்த ஒரு கடல் உணவு உண்டு. அது என்ன உணவு?
தொடரும்…