தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்:5-கடுஞ் சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்- சு.நாராயணி

“அந்தக் காலத்துல வெறும் கெட்டுமரம், மோட்டார் போட்டு கிடையாது. அந்த சாதா கெட்டுமரத்துல நாங்கள் போயி ஸ்ராவு பிடிக்கும்…. எத்தனை கிலோ ஸ்ராவு கிட்டும் தெரியுமா?” என்று தூத்தூரைச் சேர்ந்த முதிய மீனவர் ஒருவர் கண்களில் பெருமிதம் பளபளக்க என்னிடம் சொன்னது பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் நினைவில் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் மீன்பிடி கிராமத்தின் மீனவர்கள் அறுபது ஆண்டுகளாக சுறாமீன்களை பிடிக்கும் தூண்டில்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது “சுறா வேட்டை” என்றே குறிப்பிடப்படுகிறது.

“கொம்பன் சுறா வேட்டையாடும் கடல்ராசா நான்” என்ற பாடல்வரிகளையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். மற்ற மீன்களைப் பிடிப்பது ஒரு தொழிலாக/செயலாகப் பார்க்கப்படுகிறது, ஆனால் சுறா மீனைப் பிடிப்பது என்றுமே “வேட்டை” தான். இதன் பின்னால் உள்ள உளவியலை அறிந்து கொள்ள நாம் சங்ககாலத்துக்குப் பயணிக்கவேண்டும்.

வயமீன், வயச்சுறா போன்ற சங்க இலக்கியப் பெயர்கள் சுறாமீன்களின் உடல் வலிமையைக் குறிப்பிடுகின்றன. வலைகளைக் கிழிக்கும் சுறாமீன், வலையை இழுத்தபடியே மீனவர்களையும் இழுக்க முயற்சி செய்யும் சுறா என்று சங்க இலக்கியங்களில் பல காட்சிகள் உண்டு. அப்படிப்பட்ட வலிமையான சுறாமீனைப் பிடிப்பவர்கள் வீரம் மிக்கவர்களாக, தற்கால நெய்தல் வழக்கில் சொல்வதானால் “வீரக்காரர்களாக” பார்க்கப்பட்டனர். 

திமில் என்கிற படகில் போய், பரதவர்களாகிய மீனவர் குடிமக்கள் கடுமையான சுறாமீனை வேட்டையாடுவதைச் சொல்கிறது “கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்” என்ற நற்றிணைப் பாடல் வரி. அதுபோன்ற வயச்சுறாக்களைப் பிடித்துவந்து துண்டங்களாக உலர்த்தி உணவாக உண்ட நெய்தல் மரபு சங்க இலக்கியங்களில் காட்டப்படுகிறது.

மீனவ மக்களை மிரட்டிக்கொண்டிருந்த சுறா மீன் பற்றிய திருவிளையாடற்புராணக் கதை ஒன்றுகூட உண்டு. திருவிளையாடல் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் கடற்கரையோரமாக எழிலாக நடந்துவந்து “ஜெயமுண்டு பயமில்லை” என்று சொல்லி கடலுக்குள் ஒரு படகில் செல்வார். சுறாமீனைக் கொன்றுவிட்டு வெற்றியுடன் திரும்புவார்!

“தொட்டிக்குள்ள சுறா மீன், திமிங்கிலம்லாம் வளர்க்குறாரு, எல்லாம் ரௌடி மீனுங்க” என்ற ஜெமினி திரைப்பட வசனமும் நினைவுக்கு வருகிறது. 

இந்தக் கதைகள், பாடல்களின் ஆதார உணர்ச்சியைப் புரிந்துகொண்டால் சுறாமீன்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவை எளிதில் அணுகிவிடமுடியும். சுறாக்கள் ஊன் உண்ணிகள், வேட்டையாடிகள், வலைகளைக் கிழிப்பவை, வலுவானவை, கூர்மையான பற்கள் உடையவை – ஆகவே அவை அச்சத்தைத் தருபவை. அப்படிப்பட்ட, பயமுறுத்துகிற ஒரு பெரிய மீனை வேட்டையாடிக் கொல்பவன் வீரம் உடையவனாகப் பார்க்கப்படுகிறான்.

வலிமையான, அச்சமூட்டக்கூடிய இந்த மீன் கடவுளாக வணங்கப்படும் தன்மை என்பது அதே அச்சத்தின் மறுபக்கம். உலகின் பல கடலோர மரபுகளில் சுறாமீன்கள் கடவுளர்களாக, மூதாதையர்களின் வடிவங்களாக வணங்கப்படுகின்றன. கடலுக்குள் போகும் மீனவர்களைக் காத்து, அவர்களுக்கு நிறைய மீன்களை வழங்கும் கடவுளர்களாக சுறாமீன்கள் போற்றப்படுகின்றன. 

ஃபிஜி தீவுகளில் உள்ள சுறா கடவுளுக்குப் பெயர் டாகுவாகா. மீனவர்கள் டாகுவாகா-வுக்குக் காணிக்கையாக காவா பானத்தின் சில சொட்டுக்களைக் கடலில் விட்டு வணங்கியபிறகே மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்வார்கள்! ஹவாய்த் தீவுகளில் குறைந்தது ஒன்பது வகையான சுறா கடவுளர்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மார்ஷல் தீவுகளில் ஒவ்வொரு பழங்குடியினருக்கும் ஒவ்வொரு சுறாமீன் இனம் கடவுளாக இருக்கிறது. சிபாக்ட்லி என்ற ஒரு வகை நீர்க்கடவுள்தான் இந்த உலகத்தையே உருவாக்கியது என்று ஆஸ்டெக் பழங்குடி மக்கள் நம்பினார்கள். சிபாக்ட்லியின் சில உருவ வர்ணனைகள் சுறாமீன்களை ஒத்திருக்கின்றன. 

மாயன் பழங்குடி இனத்தவர்களுக்கும் சுறாமீன்களுக்குமான தொடர்பு இன்னும் விந்தையானது. பல அகழ்வாராய்ச்சிகளில் மாயன் புனிதத்தலங்களில் சுறாமீன் பற்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமல்லாது அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் கூட இந்தப் பற்கள் காணப்படுவதுதான் ஆச்சரியம். புனித சடங்குகளில் இந்த சுறாமீன் பற்கள் முக்கிய இடம் பெற்றிருந்திருக்கலாம் எனவும், அதனால் எல்லா பழங்குடியினரும் இவற்றை சேகரித்து வைத்திருந்தார்கள் என்றும் கருதப்படுகிறது. இந்தப் பற்கள், சுறாமீன்களைப் பற்றிய கடற்பயணிகளின் கருத்துக்கள் ஆகியவற்றை வைத்து இந்தப் பழங்குடியினர் உருவாக்கிய சுறாமீன் சித்திரங்கள், உலகின் முதல் சுறாமீன் உருவப்படங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது! 

பல பாலினேசியத் தீவுகளில் சுறாமீன்களைப் பிடிப்பதே ஒரு பெரிய சடங்கு. விரதமிருந்து பல கட்டுப்பாடுகளைப் பின்பற்றிக் கடலுக்குள் போகும் சுறா அழைப்பாளர்கள் (Shark callers) முதலில் படகை ஒரு இடத்தில் நிறுத்துவார்கள். லாரங்க், டுய் இபு என்று அழைக்கப்படும் தேங்காய் சிரட்டைகளாலான கிலுகிலுப்பைகளைக் கடல்நீருக்குள் ஆட்டி ஒலி எழுப்புவார்கள். ஒலியால் ஈர்க்கப்பட்டு வரும் சுறாக்களை ஒரு கயிற்றால் கட்டிப் பிடித்துக்கொள்வார்கள். “சுறாக்களுக்குக் காது கேட்கும் என்பது அறிவியலுக்குத் தெரிவதற்கு முன்பே இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது!” என்று வியக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

இப்படியெல்லாம் கொண்டாடப்பட்ட சுறாமீன்களின் எண்ணிக்கை இன்றும 90%க்கும் மேல் குறைந்து, வெறும் 10 சதவிகிதம் மட்டுமே பாக்கி இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். இந்த வேட்டையின் துவக்கப் புள்ளியைத் தெரிந்துகொள்ள நாம் கிபி 960ல் சீனாவுக்குக் காலப்பயணம் செய்ய வேண்டும்!

சாங் பேரரசுகள் சீனாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. சுறாமீன்களை உண்பது அரசர்கள், அரச குடும்பங்களுக்கும் மட்டுமே உரித்தான சலுகை என்று அரசர் டைஜூ நிறுவினார். 1368ல் மிங் பேரரசு காலத்தில் சுறாமீன் உணவு “ஆடம்பர உணவு” என்று கொண்டாடப்பட்டது. நாடெங்கிலும் உள்ள கடற்கரையோரங்களிலிருந்து “அரச குடும்பத்தினருக்கு மட்டும்” சுறாமீன் துடுப்புகள் கொண்டு வரப்பட்டு, சுறாமீன் துடுப்பு சூப் (Shark fin soup) பரிமாறப்பட்டது. சுறாக்களை சாப்பிடும்போது அவற்றின் வலிமை அரசர்களுக்கும் சென்று சேரும் என்று நம்பப்பட்டது! 

 

சில நூற்றாண்டுகள் வரை இந்த சூப் ஒரு விழாக்கால் உணவாக, திருமணங்களில் பரிமாறப்படும் உணவாக, தெற்கு சீனாவில் மட்டுமே பிரபலமாக இருந்தது. 1980களில் சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறையில் சுறாமீன் துடுப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளாக முன்னிறுத்தப்பட்டன. அதே சமயம் தெற்கு சீனா ஒரு மிகப்பெரிய வணிக மையமாக மாறி போக்குவரத்து அதிகமானதால் அங்கே மட்டும் இருந்த உணவு வகைகள் சீனாவின் பிற பகுதிகளுக்குப் பரவின. 

சீனாவில் வர்த்தகம் முன்னேறியபிறகு சமூக உறவுகளைப் பேணுதல் முக்கியமானதாக மாறியது. அடிக்கடி விருந்துகள் தரப்பட்டன. விருந்துகளில் முக்கியமான ஒரு நட்சத்திர உணவாக சுறாமீன் துடுப்பு சூப் பரிமாறப்பட்டது. இந்த சூப் முன்னேற்றத்துக்கான/கொண்ட்டத்துக்கான ஒரு அடையாளமாக, விருந்தினரை மதிக்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்கான உணவாக பல்வேறு கலாசாரப் பரிமாணங்களை உள்வாங்கியது.

அதே சமயம் பொருளாதார வளர்ச்சியால் மத்தியதர சீனக் குடும்பங்களையும் இது ஈர்த்தது. “சுறாமீன் துடுப்பு சூப் சாப்பிடுவது” என்பது ஒரு கார் வாங்குவதைப் போல, ஒரு ப்ராண்டட் உடை அணிவதைப் போல செல்வச் செழிப்பின் அடையாளமாக மாறியது. இன்றுவரை இந்த சுறாமீன் துடுப்புகள் சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டு, ஒரு பரிசுப் பொருளைப் போலவே  பல இடங்களில் விற்கப்படுகின்றன.

இந்தப் பழக்கங்கள் சுறாமீன்களின் துடுப்புக்கான தேவையை அதிகரித்தன. பல லட்சம் டாலர்கள் மதிப்புள்ள ஒரு தொழிலாக இது சர்வதேச அளவில் விரிவடைந்தது. ஒரு கிலோ சுறாமீன் துடுப்பு நானூறு டாலர்கள் வரை விலை வைத்து நேரடியாகவும் சட்டவிரோதமாகவும் விற்கப்பட்டது. உலக அளவில் இது இனவெறி நிறைந்த பல விவாதங்களுக்கு வித்திட்டது. “சீன உணவு” என்ற பெயர் கேட்டவுடனே நாவில் கத்தியோடு மேலை நாட்டு வல்லுநர்கள் விமர்சனத்தை ஆரம்பித்தார்கள். 

“இனவெறி இன்றி விவாதங்கள் நடத்தப்பட்டால் நாங்களும் கேட்போம். முன்னொரு காலத்தில் எங்கள் பெண்களின் கால்கள் அழகுக்காக நொறுக்கப்பட்டுக் கட்டப்பட்டன, இப்போது அந்த மரபை விட்டுவிடவில்லையா? சூழல் பாதுகாப்புக்காக சுறாமீன் துடுப்பு சூப்களைக் கைவிடத் தயார்” என்று சீன இளைஞர்கள் குரல் எழுப்பினார்கள். இதில் உள்ள சூழலியல் பாதிப்புகளை மக்கள் உணர்ந்ததாலும் பல சட்டங்களாலும் துடுப்புகளுக்காக சுறாக்களைக் கொல்வது இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது.

இருந்தும் ஒரு வருடத்துக்கு 100 மில்லியன் சுறாக்கள் கொல்லப்படுகின்றன!

உணவுக்காக, அவற்றின் சொரசொரப்பான தோலுக்காக, கல்லீரல் எண்ணெய்க்காக, தெரியாமல் வலையில் மாட்டிக்கொண்டு இறக்கும் தற்செயல் இறப்புகள், வாழிட இழப்பு, கடல் மாசு என்று காரணிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.  இதில் கல்லீரல் எண்ணெயும் சுறாத்தோலும் பல தொழிற்சாலைகளுக்குக் கச்சாப்பொருட்கள். வழுக்காத கால்பந்தாட்ட ஷுக்கள், மணிபர்ஸ், காலணிகள், பெல்ட், வாட்ச் பட்டை என்று பல பொருட்கள் செய்ய இந்த சுறாமீன் தோல் பயன்படுத்தப்படுகிறது. லோஷன், லிப் பாம், லிப் ஸ்டிக் போன்ற பல அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஸ்க்வாலீன் (Squalene) சுறாக்களிலிருந்து வருவதுதான்! 

சுறாமீன்கள் இல்லாத கடல் என்பது நோயுற்ற கடல் என்று வர்ணிக்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள். ஒருகாலத்தில் கடவுளாக வழிபட்ட சுறாமீன்கள் இப்போது மனித முயற்சியால் தான் மீளமுடியும் என்று நம்மை நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன!

கடவுளாக இருந்து இன்று காலணிகளாக மாறிய சுறாமீன்களின் வரலாறு ஒருபக்கம் இருக்க, கடல் தேவதைகளாக மாலுமிகளின் கனவுகளில் உலா வந்த கடல்வாழ் உயிரிகளின் கதை தெரியுமா?

தொடரும்….

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button