
சர்வதேச சினிமாக்களும், திரைப்பட விழாக்களும் கொண்டிருக்கும் வளர்ச்சி பார்வையாளர்களை ஒரு பெரும் மாற்றத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதை உறுதியாக நம்புகிறேன். கேன்ஸ், பெர்லின், வெனிஸ் போன்ற விழாக்கள் புது முயற்சிகளை ஊக்குவிப்பதிலும் , நல்ல படங்களை பார்வையாளர்களுக்காக தயாரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நான் பார்த்த வரையில் பெரும்பாலான நாடுகளிலும் அவர்களின் நிலப்பரப்பு சார்ந்து கலாச்சாரம் சார்ந்த மக்களின் கதைகள்தான் படமாகின்றன. எத்தனையோ படங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடியவை, நாம் ஏற்கனவே சந்தித்த ஒரு பிரச்சனைக்கு தீர்வாக சில படங்கள் இருக்கும். எப்படி புத்தகத்தை வாசித்து உங்களின் கேள்விகளுக்கான பதிலை அங்கே தேடுகிறீர்களோ, அதே போலத்தான் சினிமாவிலும். மற்ற நாடுகளிலும் கமர்சியல் மற்றும் பொழுதுபோக்கு படங்களும் உள்ளன. ஆனால், அங்கே எபப்டியும் ஒரு புது முயற்சி படமாவது வெளிவந்துவிடும். சுயாதீன படங்களுக்கான அங்கீகாரம் என்பது சர்வதேச திரைப்பட விழாக்கள்தான், பெரும்பாலும். அங்கேதான் உலக சினிமாவில் பல்வேறு திரைப்பட வகைமைகளில் சிறந்த படைப்புகள் வெளியாகின்றன. ஆனால், பல போலி மற்றும் சோதிக்கக்கூடிய படங்களும் (போஸ்டரில் இரண்டு இலைகளைக் கொண்டு) அவ்வப்போது இந்த விழாக்களில் சுற்றும், அவற்றை அடையாளம் கண்டு தவிர்த்து விட்டு நல்ல படங்களை மட்டுமே பார்ப்பதும் அதை மற்றவருக்கு பரிந்துரைப்பதும் உங்களை பெரும் ரசனைக்கு சொந்தக்காரர்களாக்கும்.
சினிமா எங்கிருந்து தொடங்கியது? அது அடைந்திருக்கும் வளர்ச்சி, என்ன இனி எதிர்காலம் என்னவாக மாறும்? எல்லாமே பெரிய கதை. தொலைக்காட்சி தொடங்கி, வாடகைக்கு டெக் எடுத்து , திருட்டு VCD , பிறகு Blu Ray க்கள் , பின் பென்ட்ரைவ் காலம் மாறி இப்போது OTT வரை வந்துள்ளோம் இன்னும் பல மாற்றங்கள் வரலாம்.

சினிமா தொடங்கிய வரலாறு பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
அறிவியலின் முக்கிய கண்டுபிடிப்புகள் பல இருந்தாலும் சினிமாவின் வளர்ச்சியும் மாற்றமும் பெரும் சிறப்புக்குரியது. 24 புகைப்படங்களை வேகமாக ஓடவிடுகையில் திரையில் தெரியும் அசையும் படங்களின் தோற்றத்தைக் கண்டு ஆச்சர்யமானவர்கள் பலர். இப்படி ஒரு விஷயத்திற்கு எதிர்காலத்தில் பெரும் பலன் உண்டாக போகிறது என நினைத்திருப்பார்களா? இந்த சினிமா உலகம் முதலில் பல முயற்சிகளை எடுத்தாலும் பலரும் அறியப்பட்ட ஒரு கருவி என்றால் ‘ஜோட்ரோப்’ என்னும் உருளை வடிவவிலான கருவிதான். இந்த கருவியைச் சுழற்றும் போது அங்கே பொருத்தப்பட்ட படங்கள் அசைந்து ஒரு காட்சியை உருவாக்குகிறது. புகைப்படம் என்ற கண்டிபிடிப்பு வந்தது முதல் பல வருடங்களாக இந்த முறையை பயன்படுத்திதான் வந்துள்ளார்கள். இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கம் இருந்தது.. அதில் பாடல்காட்சிகளை ஒவ்வொரு பிரேம் ஆக கட் செய்து ஸ்டாப் மோஷன் முறைப்படி வேகமாக ஓடவிட்டு அது அசைவதை பதிவிடுவார்கள், இதுவும் சினிமாவின் தொடக்க காலங்களில் வெளியான ஒரு முறைதான். தொடர் வரைபடங்கள் அல்லது புகைப்படங்கள் சீரிசை வேகமாகத் திருப்பும் போது அசையும் Flipbook முறையில் காட்சிகளை உருவாக்குதல். அதுவும் ஒரு தொடர் காட்சிதான். அதன் பிறகுதான் முதல் முறையாக உலகத்தின் First Motion விதத்தில் ஒரு காட்சியை எடுக்கிறார்கள் 12 கேமராக்களை வைத்து 1 செகண்ட் இடைவெளியில் எடுக்கப்பட்ட குதிரை ஓடும் காட்சியை இணையத்தில் கண்டு இருப்பீர்கள் அதுவே முதல் முறை. அதன் பிறகு zoetropeஇல் மேம்படுத்தப்பட்ட கருவியை எமில் ரெய்னாட் உருவாக்குகிறார். அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளாக அசையும் காட்சியைப் படமாக்கினார்கள். பின்னர் எடிசன் கண்டுபிடிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற, வணிக அளவில் உலக அளவில் பரவியது. லூமியர் சகோதரர்கள் எடுத்த ஒரு சிறு காட்சி இணையதளத்தில் கண்டு இருப்பீர்கள். அதன் இணைப்பு – https://youtu.be/4td3ARcFOkM இது தான் உலகின் முதல் பிலிம், பின்னர் சிறு சிறு காட்சிகளாக எடுத்து ஒன்று சேர்க்கப்பட்ட தொகுப்பாக பல குறும்படங்கள் உள்ளன. குறிப்பிட்டு சொல்லும் படியாக ஒரு குறும்படம். அதுதான் ‘சந்திரனுக்குப் பயணம்’ என்ற குறும்படம். 11 நிமிடங்கள் ஓடக்கூடியது.
இருபதாம் நூறாண்டின் சிறந்த படைப்புகள் பட்டியலில் இந்தப் படமும் இடம்பெற்று இருக்கிறது. இதுமட்டுமல்ல உலக சினிமா வரலாறு சார்ந்து எந்த புத்தகம் படித்தாலும் நிச்சயம் இந்தப்படம் இருக்கும். சினிமா மற்ற நாடுகளில் படிப்படியாய் வளரத் துவங்கிய அதே சமயத்தில்தான் இந்தியாவிலும். இங்கே மொழி வாரியாக பல முயற்சிகளும் வரலாறும் உண்டு. 1913ல் ராஜா ஹரிச்சந்திராதான் முதல் இந்தியத் திரைப்படம், 1930ல் தமிழில் முதல் படம் காளிதாஸ். இப்படியாக சினிமாவின் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து முதல் கருப்பு வெள்ளைப் படம், முதல் கலர் படம் , கார்ட்டூன் , அனிமேஷன், 2d , 3d, 4dx, imax , புது டெக்னாலஜி என இன்னும் பல பல மாற்றங்களை கண்டு விசுவலில் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது. குறிப்பாக, அயல் தேசத்து சினிமாவை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு பெரிய அளவில் முன்னேறி இருக்கிறது. அவர்களின் கதைகளும் நம்மை வெகுவாக கவர்கின்றன , இன்னும் பல கண்டுபிடிப்புகளும் முயற்சிகளும் நடந்துகொண்டும் இருக்கின்றன.
உலக சினிமா பரிந்துரை பட்டியல்கள் இங்கே நிறைய உண்டு உங்கள் ரசனை சார்ந்த படங்களை தேர்வு செய்து பார்க்க என் பரிந்துரை.
Here is my letterboxd lists – https://letterboxd.com/sivashankars/lists/
இப்படி சினிமாவின் வளர்ச்சி ரொம்ப பெரியது சர்வதேச படங்கள் உருவான கதை என இணையத்தில் தேடினால் இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும். ஐரோப்பிய சினிமா, ஆப்ரிக்க சினிமா, லத்தீன் அமெரிக்க சினிமா, ஆசிய சினிமா இன்னும் எத்தனையோ சினிமாக்களுக்கு நீண்ட நெடிய வரலாறினை தனித்தனியே கொண்டுள்ளது, எல்லாவற்றிக்கும் பல புத்தகங்களும் கட்டுரைகளும் உள்ளன. ஆங்கிலத்திலும் தமிழிலும் கூட சில சினிமா ஆர்வலர்கள், சீனியர் சினிமா விரும்பிகள் மூலமாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளிவந்து கொண்டு இருக்கிறது.
திரைப்பட விழாக்கள் :
கலையும் கலாச்சாரமும், பண்பாடும் நாடும், நாட்டு மக்களும் அவர்களின் கதைகளும், மொழிகளும்தான் உலக சினிமா! அதைத்தாண்டி வேறென்ன இருக்கிறது என்ற கேள்விக்கு அறியப்படாத இன்னும் எத்தனையோ இருக்கிறது. முழுதாகப் புரிந்துகொள்ள நல்ல படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்பதே சரியான பதிலாக இருக்கும் .
திரைப்பட விழா – சினிமா பிரியர்கள், சக படைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழிநுட்பக் கலைஞர்கள், திரைப்பட மாணவர்கள், ஒரே மாதிரி ரசனையுள்ள நண்பர்கள் என பலரும் ஒன்றுகூடுமிடம்தான் திரைப்படவிழா. அங்கே படைப்பாளன் தனது படத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம் என்ன என்பதை உணர முடியும். எழுந்து நின்று கை தட்டி பாராட்டை தெரிவித்த எத்தனையோ படங்கள் எத்தனையோ. ஒவ்வொரு விழாவிற்கு பல தனிச்சிறப்பு கதைகளும் உண்டு. சர்வதேச அரங்குகளில் மிக முக்கியமான படைப்பாளர்களின் படங்களையும் அறிமுக இயக்குனர்களின் புதுப்படைப்புகளும், கிளாசிக்குகளும் இன்ன பிற இளம், பெண் படைப்பாளர்களின் படங்களும் ஒரு சேர வெளியாகும். சில படங்களைத் தவிர மற்ற அனைத்தும் பெரும் வரவேற்பை பெரும். அரங்கம் நிறையும். என்னதான் ஏற்கனவே காணக் கிடைத்த படமாக இருந்தாலும், சிலரின் படங்களை பெரிய திரையில் காண உலக சினிமா பிரியர்களின் கூட்டம் திரளும் ஹவுஸ்புல் ஆகும். வரிசையில் நின்று உள்ளே சென்று ஒரு படத்தைப் பார்த்து முடித்தவுடன் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டோ அல்லது எதாவது ஒரு சிறிய மாற்றத்தையோ நம்மிடம் விட்டுச் செல்லும், அதுவே குறிப்பிட்ட படத்தின் வெற்றிதான்.
கலாச்சார தொடர்பை தாண்டி வெறும் திரைப்படத் தயாரிப்பாளர்களை சந்திப்பதின் மூலம் என்ன நடந்துவிட போகிறது? ஒரு குறிப்பிட்ட படம் உரிய அங்கீகாரம் பெற சந்தைப்படுத்துலும் விளம்பர யுக்தியும் அவசியம் உங்களிடம் நிறைய கதைகள் இருக்கலாம், ஒரு இரண்டு படத்திற்கு பிறகு மூன்றாவது படம் வெற்றியடைந்தால் கூட மற்ற இரண்டும் அவர்கள் கவனம் பெரும். இனி வரும் படங்களுக்கு பெரும் விளம்பர யுக்தியாக அமையும். உலகளாவிய கலைஞர்கள் பலரின் அறிமுகம் மூலம் வேறு சில திரைப்பட விழாவிற்கும் அவர்களுடைய படைப்பை அனுப்பி புதிய திறமைகளை வரவேற்பார்கள். ஒரு சில படங்களுக்கு அந்தந்த நாடுகளே நிதியுதவி செய்யும், குறிப்பாக தயாரிப்பு நிறுவனம் சந்தைப்படுத்தலும் சர்வதேச அரங்கிற்கு எடுத்து செல்வத்திலும் பெரும் கவனம் செலுத்துவார்கள்.
சிறந்த மற்றும் பாப்புலர் திரைப்பட விழாக்கள் என இணையத்திலோ இல்லை நண்பர்களிடம் கேட்டாலோ மூன்றை மட்டுமே சொல்வார்கள் அதைத் தாண்டி இன்னும் நிறைய இருக்கிறது, ஒவ்வொரு நாடுகளும் வருடத்திற்கு பல திரைப்பட விழாக்களை முன்னெடுக்கிறார்கள். இப்போதெல்லாம் குறிப்பிட்ட நாட்டிலுள்ள பெருநகரகங்கள் கூட தனித்தனியே திரைப்பட விழா காண்கிறார்கள். சில நாடுகளில் அரசாங்கமோ தனிப்பட்ட அமைப்புகளோ கூட திறம்பட நடத்துகிறார்கள். நான் சில விழாக்களை பரிந்துரை செய்கிறேன். அதில் என்ன மாதிரியான விருதுகள் கொடுக்கப்படுகின்றன? என்னென பிரிவுகளில் கொடுக்கிறார்கள் என்பதையெல்லாம் தேடிப்பார்த்தால் புதியதோர் அனுபவமும் சினிமா சார்ந்த ஆர்வமும் அதிகரிக்கும்.

திரைப்பட விழாக்கள் ;
கான்ஸ் திரைப்பட விழா – பிரான்ஸ்
வெனிஸ் திரைப்பட விழா – இத்தாலி
பெர்லின் திரைப்பட விழா – ஜெர்மனி
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா – கனடா
சன்டான்ஸ் திரைப்பட விழா – அமெரிக்கா
பூசன் சர்வதேச திரைப்பட விழா – தென் கொரியா
லோகார்னோ திரைப்பட விழா – சுவிட்சர்லாந்து ,
மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா – ஆஸ்திரேலியா,
டோக்கியோ திரைப்பட விழா – ஜப்பான்
கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழா – செக் குடியரசு ,
டர்பன் சர்வதேச திரைப்பட விழா – தென்னாப்பிரிக்கா,
சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழா – ஸ்பெயின்,
இந்திய(கோவா) திரைப்பட விழா – இந்தியா
இஸ்தான்புல் திரைப்பட விழா – துருக்கி ,
தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழா – எஸ்தோனியா ,
கெய்ரோ சர்வதேச திரைப்பட விழா – எகிப்து
சோபியா சர்வதேச திரைப்பட விழா பால்கெரியா இன்னும் பல.
இந்தியாவில் சில பெருநகரங்களில் தனித்தனியே விழா நடந்துகிறார்கள் , சென்னை திரைப்பட விழா, பெங்களூர் திரைப்பட விழா குறிப்பாக கேரளா திரைப்பட விழா, புனே திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா , ஜெய்ப்பூர் திரைப்பட விழா , கொல்கத்தா திரைப்பட விழா இன்னும் பல. இதில் எதாவது ஒரு விழாவிற்கு வருடத்திற்கு ஒருமுறை சென்று 20 லிருந்து 30 படங்களைப் பார்த்தல் என்பது அந்தந்த நாட்டிற்கே பயணம் செய்துவந்த அனுபவத்தை தரக்கூடியது. குறிப்பாக ரசனை மாறுபாடும். புதிய படைப்பை உருவாக்க வழிவகுக்கும்.
உதாரணத்திற்கு ஒரு திரைப்படவிழாவிற்குச் செல்கிறீர்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கே உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் அல்லது மக்கள் அன்றாட பிரச்சனைகள் குறித்து பேச கூடிய படங்கள், குடும்ப உறவுகள், காதலர்கள் குறித்த படங்கள், வேறொரு நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்களின் கதை, பள்ளி சிறுவர்களின் கதை, ஆசிரியர்களின் கதை, LGBTQ படைப்புகள், அறியப்படாத எதோ ஒரு நாட்டிலிருந்து வெளியான படம், போர்ச் சூழலில் அல்லது அதன் பிண்ணனியில் உருவான படம், உயிர் வாழப் பிடிக்காத நண்பனின் கதை, உயிர் வாழ்வதற்க்கான போராட்டம். கல்வியின் முக்கியத்துவம், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் கதை, சிறிய கிராம மக்களின் கதை, புத்தகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைகள், மேலும் நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை என பல்வேறு பிரிவுகளின் கீழ் படங்கள் பங்கு பெரும். கூடுதலாக நமக்கு பிடித்தமான அல்லது புகழ் பெற்ற இயக்குநரின் படங்களையும் திரைப்பட விழாக்களில் காண முடியும். ஆக, நல்ல சினிமாக்களை கண்டுகொள்ள சர்வதேச திரைப்படங்கள் விழாக்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
இதில் பார்க்கும் எல்லாமே அதி சிறந்த படங்கள்தானா என்றால் உறுதிபட பதில் கூற முடியாது. சில படங்கள் நம்மை ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டு செல்லும். ஆனால், அது தொடர்ச்சியாக படங்களைப் பார்த்ததன் காரணமாகவும் இருக்கலாம். ஆனால், பழமையான புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு விருதுகளை வாங்கிய அல்லது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த படங்களின் பட்டியலை கண்டுபிடித்து பார்த்தல் கூடுதல் சிறப்பு.
கூட்டுத்தயாரிப்பும் சந்தைப்படுத்தலும் :
இணை தயாரிப்புகள் மற்றும் நிதி ஆதரவு: உலக சினிமாவில் இன்று பல வேற்று மொழி படங்கள் மற்ற நாடுகளில் உள்ள ஸ்டுடியோக்களால் இணைந்து தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்த ஒத்துழைப்புகள் திரைப்படங்கள் பெரிய பட்ஜெட்டுகள், பரந்த விநியோக நெட்வொர்க்குகள் மற்றும் பல்வேறு ஆக்கப்பூர்வமான உள்ளீடுகளை அணுக அனுமதிக்கின்றன, இறுதியில் அவற்றின் உலகளாவிய வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
சினிமாவுக்கு நிதியளிப்பதில் அரசாங்கத்தின் பங்கு பெரும் ஆதரவு, பல நாடுகளில், அரசாங்கங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி மற்றும் ஆதரவை வழங்குகின்றன, உலகத் திரைப்படங்கள் தொடங்கும் போதே இந்தப் படத்திற்கு இந்த நாட்டின் மூலம் ஆதரவு என போடுவார்கள். சினிமாவை ஒரு கலை வடிவமாகவும் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உந்துதலாகவும் அங்கீகரித்தலின் அடையாளம் அது. எடுத்துக்காட்டாக, பிரெஞ்சு திரைப்படங்கள் உலகளவில் தங்கள் செல்வாக்கைத் தக்கவைக்கவும் உதவும்,
சர்வதேச சினிமாவின் எதிர்காலம் உலகளாவிய சினிமா தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், தொழில்துறை முன்பை விட அதிகமாக ஒன்றோடொன்று இணைந்துள்ளது என்பது தெளிவாகிறது. எந்த நாட்டிலிருந்தும் திரைப்படங்கள் உலகில் எங்கும் பார்வையாளர்களைக் காணக்கூடிய உலகளாவிய சந்தையை உருவாக்குகின்றன. ஸ்ட்ரீமிங் தளங்களின் எழுச்சி, திரைப்பட விழாக்களின் வளர்ந்து வரும் முக்கியத்துவம் மற்றும் திரைப்படத் தயாரிப்பில் தொடர்ச்சியான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவை சினிமாவின் இந்த அற்புதமான புதிய சகாப்தத்திற்கு பங்களிக்கின்றன. இறுதியில், சர்வதேச சினிமாவின் எதிர்காலம், மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் கலாச்சாரங்கள் முழுவதும் பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் கதைகளைத் தொடர்ந்து சொல்லும் திறனால் வரையறுக்கப்படும். இப்படி பல்வேறு மக்களின் குரல்களையும், கதைகளையும் ஊக்குவிப்பதன் மூலமும், உலகளாவிய சினிமா நவீன யுகத்தில் அழியாமல் இருக்கிறது. நாட்டின் கலை வடிவம் எதுவாக இருந்தாலும் அழியாமல் பாதுகாத்து வைப்பதில் நம் பங்கும் கொஞ்சம் இருக்கிறது. சினிமா செழித்து வளரவும் நம் படைப்புகள் உலக அளவில் அங்கீகாரம் பெறவும் இனி வரும் இயக்குனர்கள் இங்கு கொஞ்சம் மாற்று சினிமாக்களையும் பதிவு செய்ய வேண்டும்.
உலக சினிமாக்களை திரைப்பட விழாக்களில் மட்டுமே காண முடியுமா?
தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் உலக சினிமாக்களின் பல்வேறு புது முயற்சிகளின் வரவேற்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களை விட மற்ற மொழிப்படங்கள் சர்வதேச அரங்கில் வெற்றி பெறுகின்றனர். இதற்கு இன்னும் பெரும் முக்கியத்துவமாக இருப்பது திரைப்பட விழாக்கள்தான். அதன் பிறகு ஸ்ட்ரீமிங் தளங்களின் எழுச்சியையும் ஒரு விதத்தில் உறுதியாக குறிப்பிடலாம். சர்வதேச திரைப்பட விழாவைக் காட்டிலும் இப்போது பல்வேறு நாடுகளிலும் இந்த OTT தளங்களில் வெளிநாட்டு மொழிப் படங்கள் மொழி பெயர்த்தோ அல்லது அந்தந்த மொழியிலோ காணக் கிடைக்கிறது. இப்படி திரைப்பட விழாக்களில் தவறவிட்ட அல்லது ஏற்கனவே பங்குகொண்ட முந்தைய வருடங்களில் வெளியான குறிப்பிட்ட பல படங்களை வாங்கி ஸ்ட்ரீமிங் செய்கிறார்கள். அதில் மிக முக்கியமான தளம் MUBI. மற்ற TUBI , Plex போன்றவை இருந்தாலும் MUBIஐ தாராளமாக மற்றவர்களுக்கு பரிந்துரைக்கலாம்.
நல்ல படங்களுக்கு மொழி தடையாக இல்லாமல் சப் டைட்டில்களின் உதவியுடன் பல்வேறு படங்களை பார்க்க வழிவகை செய்கிறது இந்த தளம் . பார்வையாளர்களின் பல்வேறு எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் பெரும் கதவைத் திறந்து வைக்கிறது. உள்ளே சென்று பார்த்தல் நீங்கள் தவறவிட்ட பல படங்களைக் காணலாம். முன்பெல்லாம் ஒரு நாளைக்கு இங்கு ஒரு படம் புதிதாக வரும்.. நாளுக்கு ஒரு படம் வீதம் 30 படங்கள் மட்டுமே காணக் கிடைக்கும். மாதத்தில் முதல் நாள் ஸ்ட்ரீமிங் ஆன படம் 30 வது நாளில் Expired ஆகி விடும். ஆனால், இப்பொது இந்த தளத்திற்கென தனி லைப்ரரி உண்டு. அதில் பல பிரிவுகளின் கீழ் படங்களை காணலாம். குறிப்பாக MUBI RELEASES , CURATOR’S SPOTLIGHT, FESTIVAL FOCUS கீழ் நிறைய வெளிநாட்டு விழாக்களில் பங்குகொண்ட படங்கள் இருக்கும். MODERN MASTERPIECES , புது அறிமுக இயக்குனர்களின் படங்கள் எளிதில் தேடிக் கிடைக்காத உலக சினிமாக்கள் மற்றும் காணக்கிடைக்காத க்ளாஸிக் படங்களும் இதில் உண்டு.
MUBI மொபைல் செயலியாகவும் இருக்கிறது. அதில் வருடத்திற்கு 1999 வருகிறது என நினைக்கிறன். சில சமயத்தில் கூப்பன் கொடுத்து Offer-களையும் தருகிறார்கள். சினிமா துறை சார்த்த மாணவர்கள் என்றால் இன்னும் குறைவுதான். இந்த தொகை வைத்து இங்கே பத்து படங்களை திரையரங்கில் பார்த்துவிடலாம் என்ற உங்களின் யூகிப்பு எனக்கு புரிகிறது. ஆனால், இரண்டு நண்பர்கள் கூட்டு சேர்ந்து இதனைப் பயன்படுத்தினால் சிறப்பு.
இதன் நிறுவனர் ஒருநாள் வேறெரு நாட்டிற்க்கு பயணம் செய்துள்ளார் .அப்போது நல்ல படமொன்றை பார்க்க தொலைக்காட்சியில் தேடி இருக்கிறார். முடிவில் அவர் அதற்காகவே ஒரு செயலியை நிறுவியுள்ளார் என்பதை இணையத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்.

உலக சினிமாக்களுக்கு என பிரத்தியோக OTT ஆக இந்தியாவில் MUBI – தாண்டி எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. குறிப்பாக நாம் பயன்படுத்தும் பிரபலமான Netflix, Amazon Prime லும் கூட சில வெளிநாட்டுப் படங்கள் தற்போது உள்ளன. அதைத் தேடிக் கண்டடைவதுதான் உங்களின் பயன். ஒரு படம் வேகமாக இருந்தால் நல்ல படம் என்பதை கொஞ்சம் ஓரம்தள்ளிவிட்டு பார்த்தால், உலகில் தரமான எத்தனையோ படங்கள் இருக்கிறது. புதிதாக சினிமாவில் சொல்லப்படாத கதை ஒன்று இருக்கிறதா? என்று உங்களுக்குத் தோன்றினால் பதில் நிச்சயம் இருக்கிறது என்பதே ஆகும். இன்னும் நமக்குச் சொல்லப்படாத, அறியப்படாத கதை கதைகள் ஏராளம். அதை அறிந்துகொள்ள உலக சினிமா நமக்கு கொஞ்சம் வழிவகை செய்யும். எப்படி ஒரு நல்ல வாசிப்பாளரை நல்ல புத்தகம் தேர்வு செய்கிறதோ, அதே போலத்தான் ஒரு சிறந்த பார்வையாளனை நல்ல திரைபடம் தேர்வு செய்வதும். உங்கள் மனதிற்கு விருப்பமான நல்ல படங்களை பாருங்கள். புதிய படைப்புகளை சர்வதேச அரங்குகளில் கொண்டு வாருங்கள். முன்னெடுப்புகளுக்கு வாழ்த்துகள். நன்றி!