![](https://vasagasalai.com/wp-content/uploads/2021/08/Metallic_nodules1.jpg)
ஆழ்கடலில் ஒரு அலிபாபா குகை
தெற்கு பசிபிக்கில் இருக்கும் ஒரு குட்டியூண்டு தீவு நௌவ்ரூ. வெறும் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, உலகின் மிகச்சிறிய நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடிக்கிறது. பரப்பளவை மட்டும் வைத்துப் பார்த்தால் பாண்டிச்சேரியை விட சற்றே பெரிய நிலப்பரப்பு. அவ்வளவுதான்.
ஜூலை 2021ல் நௌவ்ரூ வெளியிட்ட ஒரு அறிவிப்பால் சர்வதேச கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் திடுக்கிட்டுப் போயிருக்கிறார்கள். சர்வதேச கடற்படுகை ஆணையத்துக்கு (International seabed authority) இந்தத் தீவு நாடு ஒரு கெடு விதித்திருக்கிறது. அந்தக் கெடு முடிவதற்குள் சில விதிமுறைகள் உருவாக்கப்படாவிட்டால் பல விளைவுகள் ஏற்படும் என்று சூழலியலாளர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
அப்படி என்ன கெடு அது?
தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடற்பகுதிகளில் கனிமங்கள் எடுப்பதற்கான வழிமுறைகளை இரண்டு ஆண்டுகளுக்குள் சரியாக வரையறுக்க வேண்டும். ஒருவேளை இந்தக் காலகட்டம் முடியும்போதும் இந்த வேலை முடியவில்லை என்றால் கனிம வளங்களை எடுப்பதற்கான அனுமதியை நௌவ்ரூவுக்கு அப்போதைய அரைகுறை விதிகளோடு தரவேண்டும்.
எப்படி ஒரு சிறிய நாடு சர்வதேச ஆணையத்துக்கே கெடு விதிக்கிறது?
சர்வதேச கடற்படுகை ஆணையத்தின் விதிகளில் உள்ள ஒரு ஓட்டை இது. அதை சரியாகக் கண்டுபிடித்த நௌவ்ரூ, இப்போது ட்ரிக்கரை அழுத்தியிருக்கிறது. கெடு முடிவதற்குள் ஆணையம் முடிவு செய்யாவிட்டால் நௌவ்ரூவுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்பது போக, அதைப் போலவே பல நாடுகள் அடுத்தடுத்து அனுமதி கேட்கும். வேலை நடக்கிற வேகத்தைப் பார்த்தால் ஆணையம் சறுக்குவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
நௌவ்ரூ உருவாக்கிய நெருக்கடியால் சர்வதேச கடற்பகுதிகளில் சுரங்கங்கள் தோண்டுவதற்கான ஒரு சரியான வழிமுறையை உடனே உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன உலக நாடுகள்.
![](https://vasagasalai.com/wp-content/uploads/2021/08/Metallic_nodules.jpg)
“கடலுக்கடியில் அப்படி என்னதான் இருக்கப் போகிறது?” என்று நமக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஒரு கட்டத்தில் ஆழ்கடலில் உயிர்கள் வசிப்பதே சாத்தியமில்லை என்று நம்பப்பட்டது. சூரிய வெளிச்சம் இல்லாத உறைகுளிரில் ஆளை நொறுக்கும் அழுத்தத்தில் உயிர்களால் வாழ முடியாது என்றே அறிவியலாளர்களும் உறுதியாகத் தெரிவித்தார்கள். ஆனால் எங்கிருந்தாலும் உயிர் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு செழிக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தும்படி சூரிய வெளிச்சமே படாத ஆழ்கடலிலும் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடலுக்கடியில் உப்புநீர்க் குளங்களும் மீத்தேனால் உருவான உணவுச் சங்கிலிகளும், சூரிய வெளிச்சமே இல்லாவிட்டாலும் உணவு தயாரிக்கும் பாக்டீரியாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொரு முறை ஆழ்கடலுக்குப் போகும் இயந்திரமும் புதிதாக ஏதோ ஒன்றை அறிவியலுக்குக் கற்றுத் தருகிறது. வருடாவருடம் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் ஆழ்கடல் விலங்குகள், “இப்படியெல்லாம் கூட உயிர்கள் இருக்குமா?”என்று விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆழ்கடலை அதிசயங்களின் சுரங்கம் எனலாம்.
உயிர்களுக்கு நிகரான ஆச்சரியம் தருபவை ஆழ்கடல் கனிமங்கள். 1868ல் ரஷிய கடற்பகுதியில் மீன்பிடி உலோகக் கூடு ஒன்றைக் கடற்படுகையிலிருந்து மீட்டபோது, பெரிய அளவிலான இரும்புத் தாது ஒன்று கிடைத்தது. 1872ல் கடலை ஆராய்ந்த சாலஞ்சர் கப்பல், பல உலோகத் திரளைகளை (nodules) ஆழ்கடலில் கண்டுபிடித்தது. 1960ல் ஜான் மீரோ என்ற விஞ்ஞானி, “கடலுக்கடியில் கனிமங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அழுத்தமாகக் கேட்டுக்கொண்டதோடு, அதுபற்றிய விரிவான ஒரு புத்தகத்தையும் எழுதினார்.
இது பற்றிய விவாதங்கள் பொதுவெளியில் அதிகரித்தவுடன் முதல் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தார் மால்டாவைச் சேர்ந்த அறிஞர் அர்வித் பார்தோ. ஐக்கிய நாடுகள் சபையிலும் முக்கியப் பொறுப்பில் இருந்த அவர், “கடலுக்கடியில் கனிம வளங்கள் இருப்பதெல்லாம் சரிதான். ஆனால் இப்படி சும்மா பேசிக்கொண்டேயிருந்தால் தொழில்நுட்பம் இருக்கிற யார் வேண்டுமானாலும் அதைப் போய் எடுத்துக்கொள்வார்கள். வரைமுறையே இல்லாமல் கடல் வளங்கள் சுரண்டப்படும்” என்று 1967ல் ஐ.நா உறுப்பினர்களிடையே ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். அவரது தொடர் முயற்சிகளால் கடற்படுகை பற்றிய ஆரம்பகட்ட சர்வதேசக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. கடற்படுகையில் உள்ள கனிமங்கள் மனித இனத்தின் பொது சொத்து எனவும், அது பற்றிய சர்வதேச முடிவுகள் எடுக்க ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் ஐ.நா அறிவித்தது.
பார்தோ ஒரு மிகப்பெரிய தீர்க்கதரிசி என்றுதான் சொல்லவேண்டும். அவர் மட்டும் குரல் எழுப்பவில்லை என்றால் இப்போது இருக்கிற குறைந்தபட்ச கட்டுப்பாடு கூட இல்லாமல் பெருநிறுவனங்கள் எப்போதோ கடலை சுரண்டித் தின்று ஏப்பம் விட்டிருக்கும்.
1970களில் கடல் கனிமங்கள் பெரிய அளவிலான உற்சாகத்துடன் விவாதிக்கப்பட்டன. ஆனால் உலக அளவிலான உலோக விலை வீழ்ச்சி, வளரும் நாடுகளில் குறைந்த செலவில் கிடைக்கும் கனிமங்கள், போதுமான தொழில்நுட்பம் இல்லாமை போன்ற பல காரணங்களால் இது கிடப்பில் போடப்பட்டது. 1994ல் சர்வதேசக் கடற்படுகை ஆணையம் உருவாக்கப்பட்டது. அப்போதும்கூட கனிமங்கள் பற்றிய விவாதங்கள் பெரிதாக எழவில்லை.
தூக்கத்திலிருந்து உலுக்கப்பட்டது போல 2000களில் பெருநிறுவனங்கள் விழித்துக்கொண்டன. உலகமயமாக்கலும் தொழில் வளர்ச்சியும் அதிகரித்ததால் உலோகங்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போனது. அதே சமயம் நிலத்தில் கிடைக்கும் கனிமங்களின் அளவும் குறைந்துகொண்டே போனது. புதிய இடங்களைக் கண்டுபிடித்து அங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அதிக பணம் தேவைப்பட்டது, அதில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இருந்ததால் உரிமம் வாங்குவதும் சிரமமானதாக இருந்தது. இன்னொருபுறம் ஆழ்கடலை அணுகும் தொழில்நுட்பங்களும் பெரிதும் வளர்ந்திருந்தன. எல்லாவற்றையும் கணக்கிட்ட பெரிய நிறுவனங்கள், “அந்த பழைய ஃபைலை எடுங்க” என்றபடி மறந்துபோயிருந்த ஆழ்கடல் கனிமங்கள் மீது கவனத்தைத் திருப்பின.
டீபியர்ஸ் (De Beers) என்ற நிறுவனத்தின் பெயரை அனைவரும் அறிந்திருப்போம். வைர விற்பனையில் ஜொலிக்கும் இந்த நிறுவனம், இப்போது ஆப்பிரிக்கக் கடலிலிருந்து வைரங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது! 2018ல் மட்டும் நமீபியாவின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளிலிருந்து 1.4 மில்லியன் கேரட் வைரம் எடுக்கப்பட்டிருக்கிறது! இது தரமான வைரமாகவும் இருக்கிறது என்று டீபியர்ஸ் தெரிவிக்கிறது. வைரங்களும் வேறு சில உலோகங்களும் அந்தந்த நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே கிடைக்கின்றன என்றாலும் சர்வதேச கடற்படுகைகளில் இருக்கிற கனிம வளங்களை எடுக்கும் வாய்ப்புக்காகப் பெருநிறுவனங்கள் சப்புக கொட்டிக்கொண்டு காத்திருக்கின்றன.
ஆழ்கடலில் அப்படி என்னதான் இருக்கிறது?
பல உலோகங்கள் சேர்ந்த திரளைகள் (Polymetallic nodules) கடற்படுகைகளில் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு அழுகிப்போன உருளைக்கிழங்கு மாதிரி கறுப்பாக இருக்கும் இந்தத் திரளைகள், கடல்நீரில் உள்ள உலோகங்களும் பாக்டீரியாக்களும் வினைபுரிவதால் உருவாகின்றன. இவற்றில் கோபால்ட், மாங்கனீஸ், மக்னீசியம், தாமிரம், நிக்கல் போன்ற பல உலோகங்கள் உண்டு. இவற்றுள் கோபால்ட் முக்கியமானது. ஐஃபோன் உள்ளிட்ட பலவகை அலைபேசிகளிலும் மின்னணு சாதனங்களிலும் உள்ள பேட்டரிகளுக்கு இது தேவைப்படுகிறது. “உலகின் பெரும்பாலான கோபால்ட் காங்கோ நாட்டிலிருந்து எடுக்கப்படுகிறது.ச சிறு குழந்தைகள் 24 மணிநேரம் வரை வேலை வாங்கப்படுகிறார்கள், சுரண்டல் நிரம்பிய துறை இது. கடலிலிருந்து இந்தத் திரளைகளை எடுக்கும்போது அந்த சுரண்டல் எல்லாம் இருக்காது” என்று பலர் தெரிவிக்கின்றனர்.
மீத்தேன் ஹைட்ரேட் என்று ஒரு சேர்மம் ஆழ்கடலில் கிடைக்கிறது. மீத்தேனுடன் நீர் சேரும்போது இந்த பனிகட்டி போன்ற படிகம் உருவாகிறது. மீத்தேன் வாயுவைச் சுற்றி தண்ணீர் ஒரு கூடு போல் உருவாகிறது. அது பனிகட்டி போலத் தோற்றமளிக்கிறது. ஆற்றலுக்காகத் தேவைப்படும் மீத்தேனை இதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இதைத்தவிர கோபால்ட் நிரம்பிய தகடுகள், இரும்புத்தூள் நிறைந்த மணல், சில வகை வைரங்கள் போன்ற பல கனிமங்கள் ஆழ்கடலில் கிடைக்கின்றன.
2018 நிலவரப்படி பார்த்தால், இந்தக் கடற்படுகையில் என்ன இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்வதற்கு 16 நிறுவனங்கள் 29 உரிமங்களைப் பெற்றிருக்கின்றன. வணிகரீதியான சுரங்கங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த ஆராய்ச்சிகள் முடியும்போது அந்த நிறுவனங்கள் வணிகரீதியான ஆழ்கடல் சுரங்கங்களுக்கு அனுமதி கேட்கும்.
ஆழ்கடலில் கனிமங்கள் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. வெந்நீர் ஊற்றுக்களுக்கு அருகில் உள்ள கனிமங்களை எடுக்க வேண்டுமானால் அந்த வாழிடத்தையே அழிக்கவேண்டிவரும். ஆழ்கடலில் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது அங்கு உள்ள மண் மேலெழும்பும். இதை Sediment plumes என்று அழைக்கிறார்கள். கடல்நீரை வடிகட்டி உணவு உண்ணும் விலங்குகள் இதனால் பாதிக்கப்படும். கனிமங்களை எடுக்கும்போது விபத்துக்கள் ஏற்பட்டால் அங்கு கடுமையான உலோக மாசு ஏற்படும். இயந்திரங்களை ஆழ்கடலில் பயன்படுத்துவதால் அதீத வெளிச்சமும் சத்தமும் வரும், அங்கு உள்ள விலங்குகள் இருட்டுக்கும் அமைதிக்கும் பழகியவை என்பதால் அதுவும் அந்த விலங்குகளை பாதிக்கும். ஆரம்பகட்ட ஆழ்கடல் கனிம ஆராய்ச்சி நடந்த தீவுப்பகுதிகளில் சூரை மீன்கள் மற்றும் சுறாக்களின் வருகை குறைந்துவிட்டது என்று மீனவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மீன்வளத்தைப் பெரிதும் நம்பியிருக்கிற தீவு நாடுகளுக்கு இது பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தலாம்.
இதைத் தவிர ஒரு முக்கியமான பிரச்சனையும் இருக்கிறது – இதுபோன்ற சில அனுமானங்கள் தவிர, கடலுக்கடியில் இருக்கும் கனிம வளங்களை எடுப்பதால் என்னென்ன சூழல் பாதிப்புகள் வரும் என்பது நமக்கு இன்னும் தெரியாது. ஆழ்கடலின் சூழலியலையே நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை எனும்போது எந்தெந்த விலங்குகள் பாதிக்கப்படும் என்று எப்படித் தெரிந்துகொள்வது? செதில்கால் நத்தை (Scaly foot snail) என்று ஒரு ஆழ்கடல் நத்தை உண்டு. இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதே 2001ம் ஆண்டில் தான். ஆராய்ச்சிகள் எல்லாம் முடிந்து இது ஒரு தனி இனம் என்று அறிவிக்கப்படவே பதினான்கு ஆண்டுகளாயின. 2015ல் இதற்குப் பெயரிட்டு இதன் பண்புகளை அறிவியலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அலசத் தொடங்கினார்கள். அதற்குள் 2019ல் நடந்த ஒரு ஆய்வில் இது அழிந்துகொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது! வணிக ரீதியான கனிம வள சுரண்டல் இன்னும் தொடங்கவேயில்லை, நடந்து முடிந்திருப்பவை முதற்கட்ட ஆராய்ச்சிகள்தான், அதிலேயே இந்த நத்தையின் வாழிடம் அழிந்தததில் இது அழிவின் விளிம்புக்குப் போயிருக்கிறது! இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ உயிரினங்கள் இந்த கனிம வள சுரண்டலால் அழியலாம், அவை அழிவதையே நாம் அறியாமல் போகவும் வாய்ப்பு உண்டு. சில நுண் வாழிடங்கள் கனிம சுரண்டலிலிருந்து மீள நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என்கின்றன ஆய்வுகள்.
சூழலியல் பாதிப்புகள் ஒரு பக்கம் என்றால், இதிலிருக்கும் அரசியல் சர்ச்சைகள் தலைசுற்ற வைக்கின்றன. கடலுக்கடியில் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றவா என்று யார் கண்காணிப்பார்கள்? ஒருவேளை எதாவது சொதப்பிவிட்டால் அதை எப்படி சரிசெய்வது? நிலத்தில் நடக்கும் சுரங்க விபத்துகளைப் பற்றிய வரலாற்றுப் புரிதல் நமக்கு உண்டு. ஆனால் கடலுக்கடியில் இப்போதுதான் நாம் தேடலைத் தொடங்கியிருக்கிறோம் எனும்போது, எந்த அனுபவத்தின் அடிப்படையில் செயல்படப்போகிறோம்?
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இதுபற்றிய திட்டங்களை உலக நாடுகளிடம் முன்வைக்கும் நிறுவனங்கள் மிகவும் தெளிவாக செயல்படுகின்றன. “நிலவின் மனிதன் கால்பதித்ததைப் போன்ற நிகழ்வு இது. கடலுக்கடியில் இருக்கும் வளங்களை அணுகுவது மனித இனத்தின் கனவு” போன்ற ரொமாண்டிசிஸங்களால் தங்கள் அறிக்கைகளை நிரப்புகின்றன.
இதுபோன்ற பளபளக்கும் சொற்களை நிராகரித்தாலும் உலக நாடுகள் இந்த வாய்ப்பை அப்படியே தள்ளிவிடும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம். உலோகங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்னும் சொல்லப்போனால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதற்காக நாம் பசுமைத் தொழில்நுட்பங்களை நோக்கி நகர்வதால் முன்னெப்போதையும் விட உலோகங்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. மின்சாரத்தால் இயங்கும் காரை எடுத்துக்கொள்வோம். ஒரே ஒரு காரின் பேட்டரிக்கு மட்டும் 84 கிலோ தாமிரம், 55 கிலோ நிக்கல், 6 கிலோ கோபால்ட், 6 கிலோ மாங்கனீஸ் தேவைப்படும்! எல்லா கார்களையும் மின்சாரத்தில் இயங்கும் கார்களாக மாற்றினால்தான் காலநிலை மாற்றம் கட்டுப்படும் என்று சூழலியல் ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற பேட்டரிகளுக்கான உலோகங்களுக்கு நிலத்த்தில் தட்டுப்பாடு இருப்பதாக சொல்லிக்கொண்டு பெருநிறுவனங்கள் கடலைக் குறிவைக்கின்றன.
“அதெல்லாம் சும்மா கட்டுக்கதை. செயல்திறனை அதிகப்படுத்தி மறுசுழற்சி செய்தாலே 90% தேவைகளைப் பூர்த்தி செய்யலாம், இவர்கள் கடல்பரப்பில் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதால் அங்கு சென்று சுரண்ட நினைக்கிறார்கள்” என்கின்றனர் இதுகுறித்து விரிவாக அலசிவரும் ஆராய்ச்சியாளர்கள்.
இதுபோன்ற விஷயங்களில் சர்வதேச அரசியலின் பங்களிப்பும் முக்கியமானது. மீண்டும் நௌவ்ரூ தீவுக்கே செல்வோம். இத்துணூண்டு தீவு ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறது? ஏனென்றால் அங்கு விவசாயம் பொய்த்துவிட்டது. காலனியாதிக்கவாதிகள் பாஸ்பேட் எடுப்பதற்காக ஏற்படுத்திய சுரங்கங்களால் நிலம் பாழ்பட்டுவிட்டது. அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துபோயிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் கடல்மட்டமும் உயரும் அபாயம் இருப்பதால் எதாவது செய்து தன்னை மீட்டெடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நௌவ்ரூ. அதனால் இப்படி ஒரு முன்னெடுப்போடு களமிறங்கியிருக்கிறது. ஆழ்கடல் கனிமங்கள்மூலம் பொருளாதாரம் மீண்டும் தூக்கி நிறுத்தப்படும் என்று நௌவ்ரூவின் தலைவர்கள் நம்புகிறார்கள். வெளிப்பார்வைக்கு இது சூழலை பாதிக்கும் முடிவாகத் தெரியலாம். ஆனால் காலனியவாதிகள் வந்து நிலத்தைப் பாழ்படுத்தும்போதோ காலநிலை மாற்றத்துக்குக் காரணமான உலக நாடுகளின் செயல்பாடுகளின்போதோ நாம் குரல் எழுப்பவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். தீவு நாடுகளின் தற்போதைய அவல நிலைக்கு எல்லா நாடுகளும் பொறுப்பு என்பதும், அவை உலக அரசியல் மோதல்களின்போது கைவிடப்படுகின்றன என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இது ஒரு சிக்கலான புதிர். உலோகங்களின் தேவையை வேறு வகையில் பூர்த்தி செய்ய முடியாதா, கடற்படுகைகள் திறந்துவிடப்பட்டால் பெருநிறுவனங்கள் கட்டுக்கடங்காமல் எல்லாவற்றையும் அழித்துவிடுமா, அப்படி அழிக்காமல் தடுக்க வழி உண்டா என்று பல கேள்விகள் எழுகின்றன. “சாதாரணமாக ஒரு விஷயம் தன் விஸ்வரூபத்தை அடைந்து, சூழல் முழுக்க பாதிக்கப்பட்டபின்புதான் சட்டங்களும் கட்டுப்பாடுகளும் வரும். ஆனால் இன்னும் கடலுக்கடியில் கனிமச் சுரங்கங்கள் அமைக்கப்படவில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். அது தொடங்குவதற்கு முன்பே நாம் விதிமுறைகளை உருவாக்க முடியும்” என்று நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்கள் சில சூழலியலாளர்கள். வேறு சிலரோ, பெருநிறுவனங்கள் எப்படியாவது லாபி செய்து விதிகளைத் தளர்த்திவிடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். இருட்டில் நீந்திக்கொண்டிருக்கும் ஆழ்கடல் உயிரினங்களின் எதிர்காலம் பச்சை மையால் இடப்படும் சில கையொப்பங்களில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
இது நிகழ்கால கடல் பிரச்சனை என்றால், வரலாற்றில் நிலைத்துவிட்ட சில கடந்தகால சூழல் பிரச்சனைகளும் உண்டு. காலனியாதிக்கம் அதில் பல பிரச்சனைகளின் அடிப்படையாகவும் இருக்கிறது. இதனால் அழிந்தேபோன விலங்குகளும் உண்டு. அது என்ன வரலாறு?
தொடரும்…
பல உண்மைகளை உள்ளடக்கியிருக்கும் ஓர் விழிப்புணர்வு காவியமாய் பார்க்க முடிகிறது.. Simply unique!