இணைய இதழ்இணைய இதழ் 75தொடர்கள்

பல’சரக்கு’க் கடை; 22 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

பஞ்சுவிரட்டு உருவானது!

தினமலரில் பணி செய்து கொண்டிருந்த முகநூல் நண்பரொருவர் ஒருநாள் என்னை அழைத்தார். “எங்க நாளிதழ் சார்பா தாமரை பப்ளிகேஷன்ஸ்ன்னு ஒண்ணு ஆரமிச்சிருக்கோம். மாத நாவல்கள் வெளியிடலாம்னு ஐடியா இருக்கு. உங்களால ஒரு நாவல் தர முடியுமா..? ஆபீஸ் வந்தீங்கன்னாப் பேசிடலாம்” என்றார். நிறையச் சிறுகதைகள் எழுதியிருந்தேன் என்றாலும் நாவல் என்ற நிலையில் யோசித்ததில்லை. ஆனால் நாவல் எழுதுவதன் நுட்பம் எனக்கு ஓரளவு தெரியும் என்பதால் எழுதிவிட இயலும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் சொன்னேன் : “ஓகே சார். செஞ்சிடலாம். இன்னிக்கு லன்ச் டயத்துக்கு மேல உங்க ஆபீஸ் வரேன்.”

மதியம் பார்ததபோது சொன்னார். “மாசத்துக்கு நாலைஞ்சு நாவல்கள் வெளியிடறதா ப்ளான் இருக்கு. ஆர்னிகா நாசர்ட்ட கேட்ருக்கோம். குலசேகர் எழுதறேன்னிருக்கார்.” என்று துவங்கி வேறுசில பெயர்களையும் சொன்னார். “நீங்களும் மாசம் ஒரு நாவல் தந்தீங்கன்னா நல்லாருக்கும்.”

“எப்போ தரணும்.? என்ன சப்ஜெக்ட் வேணும்..?”

“எங்க சார் இன்னிக்கு ஊர்ல இல்ல. நாளைக்கு காலைல வந்தீங்கன்னா அவரை இன்ட்ரட்யூஸ் பண்ணி வெச்சிடறேன். ரெண்டு மூணு வெரைட்டி சப்ஜெக்ட் கதைச்சுருக்கம் கொண்டு வாங்களேன். அவர் பாத்துட்டு சொல்லட்டும்.”

“டன் சார். நாளைக் காலைல வரேன்..” என்றுவிட்டு, திரும்பி விட்டேன். மறுநாள் காலை சந்தித்துக் கதைச் சுருக்கம் சொல்வதென்றால் அதற்கு முதலில் கதை வேண்டுமே..? அதற்கென்ன செய்வது..? இரவு முழுவதும் யோசித்ததில் ஒரு நகைச்சுவைக் கதைக்கான ஒன்லைன் கண்டுபிடித்தேன். வேறுவேறு வெரைட்டி கேட்டாரே… என்ன செய்யலாம்..?

யோசித்தபடியே பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தபோது, முன்பொரு சமயம் நண்பர் பாரா சொல்லியிருந்த ஒரு ஐடியா நினைவில் வந்தது. அந்த மெத்தடைப் பின்பற்றி யோசித்ததில் மற்றொரு கதைக்கான ஐடியா கிடைத்தது. சரி, பார்த்துக் கொள்ளலாம் என்று துணிவாகப் போய்ச் சேர்ந்தேன்.

நண்பர், அவரது பாஸை அறிமுகம் செய்து வைத்தார். மிக இளைஞர். என்னைத் தினமலரில் அப்பாயிண்ட் செய்தவரின் அடுத்த தலைமுறை. மேற்படி நண்பர் சொன்ன விஷயங்களையே இவரும் கொஞ்சம் விரிவாகச் சொன்னார். “ஸ்டோரி அவுட்லைன் சொல்லுங்களேன்.” என்றார்.

“சார், நகைச்சுவை நாவல்ன்னு முடிவு பண்ணிட்டப்பறம் அதோட சுருக்கத்தை நாலு வரில சொன்னா எந்த நகைச்சுவையையும் நீங்க ஃபீல் பண்ண முடியாது. இருந்தாலும், இதப் பாருங்க..” என்று எழுதி வைத்திருந்த சுருக்கத்தைக் காட்டினேன். பொறுமையாகப் படித்தார்.

“அடுத்த பேஜ்லயே இன்னொரு கதைச்சுருக்கம் இருக்கு பாருங்க சார்..” என்றேன். அதையும் படித்தார். பஸ்ஸில் வரும்போது நான் யோசித்தது அது. மாநில முதல்வர் இறந்து போகிறார், அவரது மரணத்தைச் சுற்றியிருக்கும் மர்மங்கள் என்று லேசாக நிஜவாழ்வின் சாயல் அடிக்கும் ரிஸ்கியான க்ரைம் கதை அது. படித்ததுமே புன்னகைத்தார்.

“ரைட்டு. எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க. எந்த சப்ஜெக்ட்ன்னு சொல்லிட்றேன். இந்த மாச எண்டுக்குள்ள எழுதிக் குடுத்துடுங்க.” என்று கை குலுக்கி வழியனுப்பி வைத்தார். அவர் முகபாவனைகளை அளந்ததில் க்ரைம் கதையைத்தான் எழுதச் சொல்வார் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக, முதலில் சொன்ன நகைச்சுவை நாவலையே எழுதச் சொன்னார். “ஏன் சார் இதை செலக்ட் பண்ணீங்க.?”

“ஏழெட்டு வரில கதைச் சுருக்கம் சொன்னாலும் இதுல கலகலப்பான நிறைய சம்பவங்கள் இருக்கும்ங்கறதை புரிஞ்சுக்க முடிஞ்சது. அதுனால நகைச்சுவையையே பண்ணுங்க.” என்றார். இதற்குமுன் நான் எழுதியிருந்தவைகளில் தொண்ணூறு சதவீதம் நகைச்சுவைச் சிறுகதைகளே என்பதை விசாரித்தறிந்துகூட நகைச்சுவை நாவல் எழுதச் சொல்லியிருக்கக்கூடும் அவர் என்றொரு எண்ணமும் மனதில் ஓடியது. என்னவாயிருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே… நல்லதொரு வாய்ப்பு, அதை விடுவானேன் என்றுதான் மனம் சொன்னது.

அடுத்த தினத்திலிருந்து அந்த எட்டுவரிச் சுருக்கத்தை எப்படி விரிப்பது என்பதை யோசித்து எழுதத் துவங்கினேன். முதலில் கதையைப் பகுதியாகப் பிரித்து, 10 அத்தியாயங்களுக்கான அத்தியாயச் சுருக்கத்தை எழுதிக் கொண்டேன். பிறகு அதை விரித்து எழுத ஆரம்பித்தேன். மாதநாவல் என்பதால் 96 பக்கத்தைத் தாண்டவேண்டாம் என்று சொல்லப்பட்டிருந்ததால், முதல் ஐந்து அத்தியாயங்கள் எழுதியதுமே கணக்குப் பார்த்தேன். ஐந்தாயிரத்து ஐநூறு. பத்து அத்தியாய முடிவில் டார்கெட் வந்துவிடும் என்று நம்பிக்கை பிறந்தது.

ஆனாலும் ஏதோ குறைவாக இருப்பதாக ஒரு எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. சட்டென்று சேட்டைக்காரன் அண்ணாவுக்கு போன் செய்து, முன்கதைச் சுருக்கத்தைச் சொன்னேன். “அதுனால அண்ணா, எழுதின அஞ்சு சாப்டரை மெயில் பண்றேன். கொஞ்சம் திருத்திக் குடுத்துடுங்க, ப்ளீஸ்..” என்ற வேண்டுகோளுடன் மெயில் செய்தேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன்.

இரண்டாவது நாளில் அவரிடமிருந்து திருத்திய பதிப்பு வந்தது. படித்துப் பார்த்ததுமே நகைச்சுவையை அவர் எப்படி மேம்படுத்தியிருக்கிறார் என்பதைக் கவனித்தேன். நான் எந்த இடங்களைக் கவனிக்க வேண்டும் என்பதும் புரிந்தது. அதன்பின் எழுதியிருந்த சாப்டர்களை அப்படியே திருத்தி எழுதினேன். இப்படியாகத்தானே, பத்து நாட்களில் நாவல் மெல்ல மெல்ல வளர்ந்து நிறைவு பெற்றது- அதாவது, ஒரு தினத்துக்கு ஓர் அத்தியாயம் என்று.

ஒருமுறை சரிபார்த்துவிட்டு அனுப்பினேன். ‘நல்லா வந்திருக்கு. அடுத்ததும் நகைச்சுவை நாவலாகவே எழுதுங்கள்’ என்று மெசேஜ் வந்தது. இதுவரை எல்லாமே அழகாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. அடுத்த மாதத் துவக்கத்தில் நண்பருக்குப் போன் செய்து நாவல் வந்துவிட்டதா என்று கேட்டேன். ஆர்னிகா நாசர் உள்ளிட்ட இன்னுமிருவரின் நாவல் அச்சாகி வந்துவிட்டது என்றும், என் கதை இன்னும் ப்ராசஸிங்ல இருக்கிறது என்றும் சொன்னார். அந்தப் பக்கமாகப் போக நேர்ந்ததில், அவரை அலுவலகத்தில் சந்தித்து, அச்சான நாவல்களைப் பார்வையிட்டேன். நான் எதிர்பார்த்தது போல் இல்லாமல் நடுப்பக்கம் பின்னடித்து, வாரமலரை சற்றே அதிகப் பக்கங்களுடன் வெளியிட்டது போல் இருந்தது. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வந்துவிட்டேன்.

அடுத்த பத்து நாட்கள் கழித்து என் நாவல் வந்துவிட்டதாகப் போன் செய்தார். போய்ப் பார்க்கையில், இன்ப அதிர்ச்சி என்று பாக்யராஜ் சார் சொல்வாரே.. அது ஏற்பட்டது. என் நாவல் பதிப்பக நூல்களைப் போல பர்ஃபெக்ட் பைண்டிங் செய்து, கெட்டி அட்டையுடன் அழகாக வந்திருந்தது. இனிவரும் நாவல்களை இப்படி வெளியிடலாம் என்று நிர்வாகம் முடிவெடுத்து விட்டதாகச் சொன்னார். மிகவே மகிழ்ந்தேன். 

அத்தோடு சரி… தொடர்பு கொள்வது என்பது ஒருவழிப் பாதை ஆயிற்று. போன் செய்தால் யாரும் எடுக்க மாட்டார்கள். சலித்துப் போய் நேரில் சென்றுதான் பார்க்க வேண்டும். எழுத்தாளருக்கென்று பத்துப் பிரதிகள் பதிப்பகத்தார் தருவது உலக வழக்கம். அதைப் பெறுவதற்குள்ளேயே நாக்குத் தள்ளிவிட்டது எனக்கு. நாவல் கேட்ட நண்பரோ, ‘அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, சர்க்குலேஷன் பிரிவில் வாங்கிக்கோங்க’ என்று கை காட்டிவிட்டு ஜகா வாங்கிவிட்டார். அங்கேயோ செக்ஷன் இருக்கும், சீட் இருக்கும், ஆள் இருக்காது. முழுதாக நான்கு மணி நேரம் காத்திருந்து, வந்த ஆசாமிக்கு இந்த சம்பிரதாயத்தை விளக்கிச் சொல்லி – அப்போதும் ஐந்துதான் கொடுத்தார் -எனக்கான பிரதிகளைக் கையில் வாங்கிய கணம் எழுந்த மகிழ்ச்சியைச் சொல்லில் வடிக்க இயலாது.

மேற்படி நண்பரானவர், பிரதிகள் பெறுவதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றபோதே நான் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். அடியேனொரு பிரகஸ்பதி என்பதைப் பிறவியிலேயே எந்தையானவன் முடிவுசெய்து அனுப்பிவிட்ட படியால், ‘டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன்’ என்று அடுத்தொரு நகைச்சுவை நாவலையும் முடித்து அனுப்பினேன். முந்தைய அனுபவமே மறுபடி ரிப்பீட் ஆனது. இதற்கிடையில் நாவல் வெளிவந்து விட்டதென்றால் நாம் சும்மா இருப்போமா..? ஃபேஸ்புக்கிலும் இன்ன பிற இடங்களிலும் டமாரம் அடித்துக் குதித்துக் கூத்தாடாமல் இருந்தால் இப்பிறவி எடுத்தென்ன பயன்.? அப்படிச் செய்ததில், நண்பர்களான வாசகர்கள் பலரிடமிருந்தும் புகார்களை எதிர்கொண்டேன். தரப்பட்ட தினமலர் எண்களுக்குப் போன் செய்தால் யாரும் எடுப்பதில்லை, தப்பித் தவறி எடுத்தாலும் சரியான பதில் இல்லை என்று திட்டவாரம்பித்தார்கள்.

அப்படியான நேரத்தில் என் இரண்டாவது நாவலும் வெளியாகி விட்டது என்று பதிவிட்டால் எப்படியிருக்கும்..? அப்படியேதான். புகார் மழையில் நனைந்து நானே அந்த அலுவலகத்துக்குப் பலமுறை சென்று சொல்லியும்…. செ.கா.ஊ.ச. தான். பயனொன்றும் இல்லை. இந்தச் சமயத்தில்தான் ஜனவரியில் நடக்கும் புத்தகக் கண்காட்சி வந்தது. அதில் தாமரை பிரதர்ஸ் பதிப்பகம் ஸ்டால் போட்டிருந்தார்கள். அந்த ஸ்டால் எண்களைக் கொடுத்து, புகார் தந்த நண்பர்களை வாங்கிக் கொள்ளச் சொன்னேன். பு.க. என்றால் ஸ்டால் எதுவும் போடாவிட்டாலும், அனேகமாகத் தினம் போகிற வழக்கம் உள்ளவனாதலால் பலருக்கு நானே புத்தகத்தை வாங்கித் தந்து, கையெழுத்திட்டும் தந்தேன். (ஆட்டோக்ராப் கேட்டால் எப்படிப் போடவேண்டும் என்பதையே அப்போதுதான் பழகிக் கொண்டேன், ஹி… ஹி..) ஆக, அந்த ஆண்டின் பு.க.வில் என் புத்தகம் நிறையப் பிரதிகள் விற்றது என்பது நேரில் பார்த்தும், ஊகித்தும் உணர முடிந்த விஷயம்.

ஓராண்டும் முடிந்தது. ராயல்டி என்ன, சிங்கிள் டீ கூட வரவில்லை. வழக்கம்போலவே நாவல் கேட்ட நண்பர், அது வேற டிபார்ட்மெண்ட் என்று ஒதுங்கிக் கொள்ள, முட்டிமோதி சலித்துப் போய் அதன்பின் நாவல் எழுதித் தரவில்லை அவர்களுக்கு. அதன்பின் என்னினிய நண்பர் இந்திரா சௌந்தர்ராஜன் மேலிடத்துக்கு என் புகாரைக் கொண்டு சென்று பேசியதற்குப் பின் ‘உங்கள் புத்தகம் 75 பிரதிகள் விற்றன. அதற்கான ராயல்டி இதோ’ என்றொரு கடிதமும் ஒரு சிறுதொகைக்கான செக்கும் வந்தது.

அவ்வளவுதானா விற்றிருக்கும்..? நாம் நண்பர்களுக்கு வாங்கித் தந்ததும், மற்றவர்கள் தானாகவே வாங்கிப் படித்துவிட்டு ரிவ்யூ எழுதியதையும் வைத்துப் பார்த்தால்…. சரி, போகட்டும். இதுவாவது வந்ததே என்று திருப்திப்பட்டுக் கொண்டேன். அதன்பிறகு அந்த இரண்டு நாவல்களையும் நானே பதிப்பித்து, என்னிடமே கிடைக்கும் என்று சமூக ஊடகங்களில் அறிவித்து, நானே விற்பனை செய்தேன். இத்தனைக்குப் பின்னரும் 300 புத்தகங்கள் விற்பனையாகி எனக்கே நேரடி வருமானத்தைத் தந்தன.

இது முதல் புத்தக அனுபவம் என்பதற்குப் பின்னும் உஷாராக இல்லாமல் வருமானம் வராத ஓரிரு இடங்களுக்குக் கொடுத்து ஏமாந்தபின், இப்போது சரியான நபர்களிடம் மட்டுமே எழுத்தைத் தந்து வருகிறேன். என்ன செய்ய.. என்போன்ற சில பூனைகளுக்கு பெரிதாகச் சூடு பட்டால்தான் உறைக்கிறது. 

மீண்டும் வருவேன்….

முந்தையது

balaganessh32@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button