சிறார் இலக்கியம்

காய்க்கும் மரமும், காய்க்காத மரமும் (சிறுவர் கதை)

ஞா.கலையரசி

ஒரு தோட்டத்தில், இரண்டு நாவல் மரங்கள் இருந்தன.  முதலாவது நன்றாகக் காய்க்கக் கூடியது.  இரண்டாவது மரம், இதுவரை காய்க்கவே இல்லை.  

முதல் மரத்தில், நிறைய பழங்கள் இருந்ததால், ஏராளமான பறவைகள் வந்தன.  கிளி, குயில், கொண்டைக்குருவி, காகம், மைனா ஆகிய பறவைகள், கிளைகளில் வந்து அமர்ந்து, பழங்களைத் தின்றன.

அணில்கள் பழங்களைப் பாதிப் பாதித் தின்றுவிட்டுக் கொட்டைகளைக் கீழே எரிந்தன.  பழந்தின்னி வெளவால்களுக்கும், இரவில் நல்ல தீனி கிடைத்தது.

நாவல் பழம், மிகவும் சதையாகவும், இனிப்பாகவும் இருந்ததால், அந்த வழியே சென்றவர்கள், மரத்தில் ஏறிப் பழங்களைப் பறித்தனர்.  ஏற முடியாத சிறுவர்கள், குறிபார்த்துக் கல்லை விட்டெறிந்து, பழங்களைக் கீழே விழச் செய்தனர். இப்படியாக அம்மரத்தைச் சுற்றி, எப்போதும் கூச்சலும், கூப்பாடுமாக இருந்தது.  மரத்தடி மண் முழுக்க கருநீலமாகக் காட்சியளித்தது.

காய்க்காத மரத்தடியில், ஈ, காக்கா இல்லை.

முதல் மரம், இரண்டாவது மரத்தை நோக்கி,

“நண்பா! ‘காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும்,’னு பெரியவங்க சொன்னது எவ்ளோ உண்மை பார்த்தியா?  சின்னப் பசங்க, கல் எரிஞ்சும், கிளைகளை முறிச்சும், எவ்ளோ அட்டகாசம் பண்றாங்க பாரு! போதாக்குறைக்கு, இந்தப் பறவைகளும், அணில்களும் எப்பப் பார்த்தாலும் காச் மூச்சுன்னு ஒரே சத்தம்!  நானும் காய்க்காம இருந்திருந்தா, இந்தத் தொல்லையெல்லாம் இல்லாம, ஒன்ன மாதிரி, நிம்மதியா இருந்திருப்பேன்னு தோணுது,” என்று சொன்னது.

“அடப் போப்பா! நீ வேற ஏன், எரியிற நெருப்புல, எண்ணைய ஊத்துற?  நான் ஏற்கெனவே ரொம்ப நொந்து, நூடுல்ஸா இருக்கேன்,” என்றது இரண்டாவது மரம்.

“ஏன்பா என்னாச்சு?” என்று கேட்டது, முதல் மரம்.

“நேத்திக்கு  இந்த இடத்தோட உரிமையாளரு, ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்து, என்னைக் காட்டினாரு.  ‘இந்த மரம், இதுவரைக்கும் காய்க்கவேயில்ல; சும்மா மண்ணுக்குப் பாரமா, நின்னுக்கிட்டிருக்கு. அதனால, இதை ஒடனே வெட்டிடு,’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.  இன்னிக்கோ, நாளைக்கோ என்னை வெட்டப் போறாங்க. நான் சாகப் போறேன். நீ காய்க்கிறதினால தான், ஒன்னை விட்டு வைச்சிருக்காங்க! இல்லேன்னா, என் கதி தான், ஒனக்கும் ஏற்படும்,” என்றது, இரண்டாவது மரம்..

“அடப்பாவமே!  காய்க்கலேன்னா என்னா? ஒரு மரத்தை வெட்டுறது எவ்ளோ தப்புன்னு, அந்த மனுசனுக்குத் தெரியாதா?  ஏற்கெனவே இருந்த மரத்தையெல்லாம் அழிச்சதினால தான், கார்பன் டை ஆக்சைடு அதிகமாகி உலகமே ரொம்ப சூடாயிட்டு வருதாம்..  நாம தான், கார்பனை உறிஞ்சிட்டு, மக்களுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கிறோம்.

அவங்க சுவாசிக்கிற காத்தையெல்லாம் சுத்தப்படுத்தறோம்;  கடுமையான வெயில் நேரத்துல, ஒதுங்கறதுக்கு, நிழல் கொடுக்கிறோம். பறவைங்க கூடு கட்ட, இடம் கொடுக்கிறோம். இந்த மாதிரி, நாம செய்யற உதவி ஒன்னா, ரெண்டா? காய்க்கிறதை மட்டுமா, நாம செய்றோம்? இதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம, மரத்தை வெட்டுறதிலேயே, குறியா இருக்காங்களே, இந்தக் கூறு கெட்ட மனுசங்க?”  என்று வேதனையுடன் கூறியது, முதல் மரம்.

“நான் சாவறதுக்குக் கவலைப்படல நண்பா!  இந்த மனுசங்க தங்களோடத் தலையில, தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கிறாங்களேன்னு தான், வருத்தமாயிருக்கு.  நாளைக்கு இவங்க புள்ளைங்களோட நிலைமை தான், ரொம்ப பரிதாபம்! எப்பத் தான், இவங்களுக்குப் புத்தி வரப்போவுதோ தெரியல!.” என்று பதில் சொன்னது, இரண்டாவது மரம்.

அப்போது ஒரு ஆள், மரத்தை வெட்டும் கோடரியுடன், அங்கு வந்தான்.  அதைக் கீழே வைத்து விட்டு, அம்மரத்தின் நிழலில் அமர்ந்தான்.

“தோ பாரு. என்னை வெட்ட ஆள் வந்தாச்சு. வெட்டுறப்பக் கூட, இவருக்கு, என் நிழல் தேவைப்படுது!  நீயாவது நீண்ட காலம் உயிரோட இருந்து, இந்த உலகத்துக்கு உன்னால முடிஞ்ச மட்டும், நல்லது செஞ்சிட்டு வா,” என்று வாழ்த்தியது, காய்க்காத மரம்.

“சீக்கிரமே இந்த மக்களுக்கு, நம்ம அருமை புரிய ஆரம்பிச்சிடும்னு நம்புவோம்; நீ போய்ட்டு வா நண்பா!” என்று சொல்லி, கண்ணீருடன் விடை கொடுத்தது, காய்க்கும் மரம்!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அருமையான கதை, சிறுவர்களுக்குச் சொல்வது போல் பெரியவர்களுக்கான அறிவுரையை நச்சென்று பதிந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button