
”ஷீலு, எனக்குத் தண்ணி வேணும்”
ஸ்டாண்ட் அப் காமெடி இரைச்சலின் ஊடே, நவீன் குரல் கொடுத்தான்.
ஷீலு சமையலறையில் கவனமாக இருந்தாள்.
இரண்டாவது முறை :”ஷீலு, தண்ணி குடு”
ஷீலுவுக்கு எரிச்சல். இரண்டு வேளைக்கான உணவைத் தயார் செய்த பின், தானும் தயாராக வேண்டும்.
நவீனுக்கு இன்று ஆஃப். கட்டாயம் மதியம் வீட்டுச் சாப்பாடுதான். அவன் வேலைக்குப் போவதாக இருந்தால், ஷீலு லன்ச் ரெடி பண்ணவில்லை என்றால், சற்று நேரம் புலம்பிவிட்டு,”சரி… கெஃப்டீரியாவில பாத்துக்கிறேன்” என்று சொல்லிவிடுவான்.
இன்று வீட்டில் இருப்பதால், வீட்டில் மதிய சாப்பாடு இல்லையென்றால், அதற்காக வெளியே போக வேண்டி வருமே என தாம்தூம் எனக் குதிப்பான்.
தான் பிசியாக இருக்கும் போது, காமெடி பாத்துக் கொண்டு, தண்ணி கொண்டு வரச் சொல்வது என்ன நியாயம்? பக்கத்தில் இருக்கும் ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணியை எடுத்துக் குடிக்க, ஒருவர் சேவகம் செய்ய வேண்டுமா?
கொஞ்சம் சூடாக வெந்நீர் போட்டு ஒரு லோட்டாவில் எடுத்துக் கொண்டு போய் அவனிடம் கொடுத்தாள்.
சட்டெனப் பிடித்தவன் கையில் பட்டெனச் சுட்ட வெப்பம்.
“ஆ.. ஆ… ஏய், என்ன வெந்நீரைக் கொடுக்கற?”
“பின்ன, இஞ்சி தட்டி டீ போட்டுத் தரவா?” தன் நக்கல் சற்றும் வெளிப்படாமல், அழகாய், அமைதியாய்… ஷீலு.
”ஃப்ரிட்ஜ்ல தண்ணி இல்ல?”
“ஆங், இங்க, ஹாலில உங்க பக்கத்திலதான் ஃப்ரிட்ஜ் இருக்கு. ரெண்டு ஸ்டெப் எடுத்து வச்சு எழுந்து பாருங்க”
இந்த முறை, அவளது குரல் அவளது எள்ளலைத் துல்லியமாகக் காட்டியது.
இருவரும் பொறியியல் பட்டதாரிகள். மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள். பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம். நிச்சயம் முடிந்த பின், நவீன் சில மாதங்கள் நெதர்லாந்து சென்றான். அவ்வளவாக வாட்ஸ் அப்பில் கூட பேசிக் கொள்ளாத அக்மார்க் அரெஞ்டு மேரெஜ் .
இருவரின் பெற்றோருமே கிராமங்களில் வாசம். அதனால், சென்னையில் தனிக்குடித்தனம். முதல் மாதம் நவீன் அம்மா சில நாட்கள் இருந்தார். பிறகு, ஷீலாவின் அம்மா அப்பா இருவரும் சில நாட்கள் இருந்தார்கள்.
நிறைய விஷயங்களில் கருத்தொருமித்தாலும், சில விஷயங்கள் நெருடலாக நாட்கள் போய்க் கொண்டிருந்தது.
ஷீலா வேலைகளை முடித்து, அலுவலகத்துக்கு ரெடியாகி, கையில் டிபன் தட்டுகளுடன் வந்தாள்.
“இந்தாங்க”, என்றவளிடம், ”இப்போ எனக்கு வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, மெனக்கெட்டு எழுந்து, டீவியை ஆஃப் செய்து விட்டு, ரூமுக்குப் போனான்.
சாப்பிடும் சமயத்தில் டீவி பார்த்துக் கொண்டு சாப்பிட வரும் ஷீலுவை எரிச்சல் படுத்த வேண்டும்!
அவனது டிபன் சூடு ஆறாமல் இருக்க, அதனை உள்ளே வைத்து விட்டுத் திரும்பிய ஷீலா, “ ஹேய், ஏன் அணைச்சுட்ட? நா பாக்கணும்”
”ம், பக்கத்தில தான இருக்கு, போட்டுக்கோ” என்ற படியே திரும்பிய நவீனுக்கு அவளின் சிகையலங்காரமும், பளிச்சென்ற முகப்பொலிவும் ஒரு கிறக்கத்தைக் கொடுத்தது.
திரும்பி வந்து, டீவியைப் போட்டு விட்டு, கிச்சனுக்குப் போய் தனக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தான். அவளுக்கு மிக அருகில் உட்கார்ந்து, அவள் மேல் சாய்ந்து கொண்டு,” வாசம் தூக்குது” என்றான்.
“ம்.நேத்தைக்கு வாங்கினேன்! கார்ல்டன் லண்டன்! எனக்கே ரொம்ப புடிச்சுருக்கு!”
“இஞ்சி பூண்டு பேஸ்ட் கார்ல்டன்ல வாங்கிப் போட்டயா சாம்பாரில?” என்று சொல்லிய நவீன், அவளுக்கு ஒருவாய் ஊட்ட, ஷீலா மெல்ல விலகினாள்.
“போகணும்பா, நீயும் வந்து கிச்சன்ல ஹெல்ப் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்ச நேரம் நமக்குக் கிடைச்சிருக்கும்” என்றபடி, ஆஃபிஸ் கிளம்ப ஆயத்தமானாள்.
திரும்பவும் ஸ்டாண்ட் அப் காமெடியில் இறங்கிய நவீன், வாசலில் அழைப்பு மணி ஒலிக்கவே, யார் இந்த நேரத்தில் என்ற ஆச்சரியத்துடன் போய்ப் பார்த்தான்.
பெரியப்பா பையன் கிருஷ்ணா நின்று கொண்டிருந்தான்.
“பழி! ஏண்டா போனே எடுக்கல்ல!”
முன்பே இன்று வருவதாகச் சொல்லி இருந்தான். அதனால், சொல்லாமல் வந்து விட்டான் என்று புலம்ப முடியவில்லை நவீனுக்கு.
கிருஷ்ணா தன் பையன் முதல் ஆண்டு பிறந்த நாளுக்கு அழைக்க வந்திருந்தான்.
“வாட்ஸ் அப் போதாதா, அண்ணா”
“மரியாதை உனக்கில்ல! சித்தப்பாவுக்கு! ஊருக்குப் போக முடியாது. அதனால உன் கிட்ட குடுக்கிறேன். அப்புறம், மேரிட் லைஃப் எப்படி போகுது?”
”போயிட்டு இருக்கு, நெக்ஸ்ட் வீக் மால்தீவ்ஸ் போலாம்ன்னு இருக்கோம்.”
“ம்ம்… என்ன ஹெல்ப் பண்ற சமையலுக்கு?”
“சாப்பிடுவேன். ஹா .. ஹா..” என்றான்.
“பரவால்லியே! புத்திசாலிடா நீ! முதல்லயே உஷாராயிட்ட .. இல்லன்னா, வாழ்க்கை பூரா, டீ போட்டு, பாத்திரம் துலக்க வேண்டியதுதான்!”
“இப்ப விளம்பரமெல்லாம் அப்படித்தானே அண்ணா, டீ போட்டுத் தரதும் வாஷிங் மெஷின்ல துணி போட்டு வைக்கறதும் பாத்திரத்தைக் கழுவி வைக்கறதும்தான நல்ல புருஷ லட்சணம்.”
“மங்களாவுக்குக் கூட நா ஆரம்பத்தில அவ்வளவா செய்யல்ல… போக போகப் …”
“அண்ணா, நா செய்ய மாட்டேன்.”
“சித்தப்பா இப்பக்கூட உங்கமாவுக்கு ஒண்ணும் செய்ய மாட்டார். அவர் பையன்தான நீ! ஒரு முறை தண்ணி கொண்டு வந்து தரல்லன்னு, கிச்சனுக்கு வந்து, கொதிக்கிற உலையை உங்க அம்மா மேல தள்ளி விட்டுட்டாரு!”
“சேச்சே, அவ்வளவு குருரமா அதிகாரம் பண்ண மாட்டேன்”
“உக்கும்! பண்ண முடியாது இப்பல்லாம்! எப்பவும் பண்ணவும் கூடாது”
ஷீலு செய்திருந்த லன்ச் கிருஷ்ணாவுக்கும் போதுமானதாக இருந்தது.
“சமையல் பிரமாதம். நீ கொடுத்து வைச்சவன்டா” என்றான் கிருஷ்ணா.
“ஹலோ, மங்களாகிட்ட சொல்லிடவா… அண்ணா ரொம்ப அலுத்துக்கறாப்பலன்னு…”
“சொல்லித்தான் பாரேன்.அதெயெல்லாம் அவ மதிக்கவே மாட்டா, போடா” என்று சொன்னபடி நடையைக் கட்டினான் கிருஷ்ணா.
கொஞ்ச நேரத் தூக்கம். மாலையில் சூடாக ஒரு கப் காபி போட்டுக் குடித்துவிட்டு, ஒரு ரவுண்டு போய் வரலாம் எனக் கிளம்பிவிட்டான் நவீன்.
தளர்வாய் வரும் தனக்கு, இன்றாவது ஒரு டீயோ காபியோ கிடைக்கும் என நினைத்து வந்த ஷீலுவுக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே!
முதலில் எரிச்சலாக இருந்தாலும், கட்டிலில் ஹாயாக சற்று நேரம் படுக்க அவகாசம் கிடைத்த சந்தோஷம் .
அனுப் ஷங்கர் பாடல்களை இதமாகக் கேட்டபடி… ஆஹா, விட்டில் தனிமையில் கொஞ்ச நேரம் இருப்பதுதான் என்ன சுகம்…!
டின்னருக்கு, சரியாக எட்டு சப்பாத்திகளும், மட்டர் பனீர் கிரேவியும் செய்து வைத்தாள். விரவிக் கிடந்த துணிகளை மடித்து வைத்தாள். மாலத்தீவு பயணத்துக்குத் தேவையானவற்றை ட்ராவல் ட்ராலியில் வைத்தாள். சில டாய்லெட்டரிஸ் வாங்க வேண்டும். செக் லிஸ்ட் ஒன்றைத் தன் நோட்ஸில் பதிவு செய்தாள்.
நவீனுக்காகக் காத்திருப்பு! இவள் அழைத்தாலும் ’பிசி’ என்று வந்தது. அவனாகவும் அழைக்கவில்லை.
”நோ வெயிட்டிங், அர்ஜண்ட்” என்று வயிறு சொல்லியது. சாப்பிட்டவள் நன்கு தூங்கியும் போனாள்.
மறு நாள் காலை நான்கு சப்பாத்திகளும் சலுத்துப் போன சப்ஜியும் கேஸ் மேடை மீது!
“என்ன நவீன் சாப்பிடல்லய்யா?”
“ம்.. வரதுக்கு முன்ன தூங்கியாச்சு?”
“எடுத்து உள்ள வச்சுருக்கலாமில்ல. சப்ஜியை”
“ஓ! சப்ஜியைப் பத்திதான் கவல… கட்டின புருஷனப் பத்தி இல்ல”
“ஸ்… நூத்துக் கிழவன் மாதிரி பேசாத. பாரு, எவ்வளவு போன் பண்ணி இருக்கேன்னு”
“எனக்காக முழிச்சுகிட்டு இருந்தியா?”
“எனக்காக வீட்டில இருந்தியா?”
”இங்க பாரு, ஏற்கனவே நா டென்ஷன்ல இருக்கேன். எங்க டீம் லீடு ஓலையை அனுப்பிச்சுட்டா,”
“என்னவாம்?”
“புலவரே நீ எழுதிய தமிழ்ப்பாட்டில் குற்றம் உள்ளது” அப்படின்னுதான்..
“நீர்.. நீரேதான டிக்கெட் க்ளோஸ் பண்ணியிருக்கிறீரா” …ஷீலு
“விளையாடத ஷீலு, மூடு புரியாம பேசாத.”
“சரி எப்படியோ போங்க, சப்பாத்தி சப்ஜி சூடு பண்ணியிருக்கேன்”
“ஏய்! காஞ்ச சப்பாத்தி எனக்கு வேண்டாம்…”குரல் உயர்ந்து கத்தினான்.
அவனது ”ஏய்” விளிப்பு அவளை முகம் சுளிக்க வைத்தது. குரலை உயர்த்தியதோ உச்சக்கட்ட கோபத்துக்கே கொண்டு சென்றது.
“இந்த ஏய், கீய் உருட்டல் எல்லாம் வேண்டாம்” அவள் சொல்லி முடிப்பதற்கு முன் அவனுக்கு ஒரு கால் வரவே, உர்ரென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு, சுள்ளென்று அவளை ஒரு பார்வை பார்த்தபடி பால்கனி பக்கம் சென்றான்.
சப்பாத்தி இருக்கு. நமக்கு ஒரு ஓட்ஸ் கஞ்சி போட்டுக்கலாம் என்று, ஷாம்பு போட்டு நிதானமாகக் குளித்திருந்தாள். ட்ரையர் எடுத்து தலையைக் கோதிக் காய வைத்தாள்.
நாமதான் சமைக்கணும். அத சாப்பிடக் கூட மாட்டான். இவனுக்கு நான் ஜால்ரா அடிச்சுகிட்டு உட்காந்து இருக்கணும். என்ன கல்யாணமோ… என்ன புருஷனோ … சாமி …ரெண்டு மாசத்திலேயே புளிச்சு போயிடுச்சு.
”யா, யா … ஓன் மினட்’ என்ற படி உள்ளே வந்த நவீன், ட்ராவல் பேக் காலில் இடிக்க… ”டாமிட்… மாலத்தீவு.. ம..தீவு” என்று சத்தமாக புலம்ப, போனில் மறுபறத்தில் இருந்து என்னவெனக் கேட்க… “நத்திங் ப்ரோ… இங்க ஏதோ பக்கத்திலே.. யா, ஐ வில் டெல் யூ” என்றபடி அவசர கதியில் ஒரு டீ ஷர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தன் பேக்கை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.
நேற்று காலை செல்லம் கொஞ்சினானே… இன்று தொடருமா என்ற நினைப்பில் கருக்கலில் எழுந்தவளுக்கு ஆத்திரம்தான் மிச்சம்.
தன்னை ‘ஏய்’ என்று அவன் அழைத்ததும், அவனுடைய டீம் லீடு சந்திரிகாவை ‘முட்டக்கண்ணி, அடங்காப்பிடாரி, அந்தப் பொம்பள’ என்றதும் அவளுக்குள் கோபாக்னியைத் தூண்டியது.
பேசாம ஒரு ஆம்பளையைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே! இவனுங்களையெல்லாம் … இப்பவே தட்டி வைக்கணும். இல்லாட்டி ரொம்ப ஆடுவானுங்க… என்று இவள் தரப்புக்கு ஆண் ஹேட்டேர் டயலாக்குகளை மனதுக்குள் உலவ விட்டுக் கொண்டே,சப்பாத்திகளைத் தானே சாப்பிட்டு விட்டு, ஆஃபிஸுக்குக் கிளம்பினாள்.
முகநூலில் பிரபலமாக இருக்கும் பெண் ஒருவர் எழுதியிருந்தை அசை போட்டது அவள் மனது. அந்தப் பிரபலத்துக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் கணவர் அவரை அடிக்கடி ‘தே..” வார்த்தை சொல்லித்தான் விளிப்பாராம். தனியே வீட்டில் இருக்கும் போது… கோபம் வரும் போது என்றில்லை… எல்லோர் முன்பும்தான். அந்தக் கணவனுடன் முப்பது ஆண்டுகளாகக் குடும்பம் நடத்தும் அவர், இந்தியப் பெண்களின் பண்பாட்டு மங்கலச் சின்னங்களோடு சலனமில்லாமல் வளைய வருவாராம்.
பிரபலத்தின் பதிவுக்கு நிறைய எதிர்வினைகள். பெண்ணின் தனிப்பட்ட பொருளாதார நிலை, குழந்தை வளர்ப்பு, கல்வி, குடும்ப கௌரவம் என பல கருத்துகள் பின்னுட்டத்தில்.
ஒரு இளம் பெண் பொருளாதார நெருக்கடி தனக்கு இல்லை என்றாலும், கணவரது உதாசீனங்களையும் உக்கிரங்களையும் தானும் சலனமற்றுக் கடப்பதாகக் கூறினார். இன்றைய சூழலில், குழந்தைகளை ஒற்றைப் பெண்ணாக வளர்த்து ஆளாக்குதல் மிகக் கடினம். அலுவலகங்களில்,பொது இடங்களில், அநேக ஆண்களின் அதிகாரப் போக்கு மட்டும் குறைவாக உள்ளதா என்ன என்றும் எண்ணற்ற எதிர்வினைகள்.
காலையில் நவீன், மாலத்தீவு பயணம் குறித்து ’நல்ல’ தமிழில் சொன்னது ஷீலுவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மூன்று மாதத்துக்குள்ளாகவே இப்படி,”ஏய்” வேறு …
இதற்காகப் பொட்டியைத் தூக்கிக் கொண்டு பொறந்த வீடு போக முடியாது. ஏனென்றால், பொறந்த வீடு கிராமத்தில்… இவளுக்கு வேலை இங்கே… வேண்டுமானால், ஏதாவது விடுதிக்குப் போகலாம். அன்புடன் அறிவுரை சொல்லும் ‘சகுந்தலா அக்கா’ கூட பெண் என்பவள் குடும்பத்தைக் கொஞ்சம் அரவணைத்து அனுசரித்துப் போக வேண்டும் என்றுதானே சொல்லுவார்…
எப்படியோ, இதற்கு ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டும்.
டீ போட்டு, பாத்திரம் தேய்த்துக் கொடுக்க வேண்டாம். குறைந்த பட்சம் ஒருமையில் விளிக்காமல், கனியிருப்பக் காய் கவராமல், அதாவது… தே… ம… சொற்களைத் தவிர்த்து, ரொம்ப அடிமை போல வேலை வாங்காமல்… என் சுயமரியாதையை நான் இழக்காமல்….
அலுவலகம் வந்தாயிற்று. டாப் பிரியாரிட்டி டிக்கெட்ஸ் மட்டும் ஐந்து இருந்தன. டீமுக்குள்ளும், ப்ராஜெக்ட்டின் வேறு கம்பெனி பணியாளர்களுக்குமான எல்லா வாய்க்கா வரப்பு சண்டைகளைச் சரி செய்து, உண்மையான இஷ்யுஸ், அல்காரிதம் லூப்ஸ் சரி பண்ணி… ”வெல் டன் டீம், ஸ்பெஷல் க்ளாப்ஸ் டு ஷீல்” என்று ப்ராஜெக்ட் ஹெட் மெயில் அனுப்பியதுடன் இனிதே முடிந்தது அன்றைய நாள்.
வெற்றியின் களிப்பும், திறமையால் ஏற்பட்ட நன்னம்பிக்கையும் அவளிடம் மகிழ்ச்சியை நிறைத்திருந்தது.
முன்பு அவள் தங்கியிருந்த விடுதியில் ஆண்டு விழா. சிறிய அளவில் ஒரு பார்ட்டி. அங்கே சென்று விட்டு, தோழிகளுடன் அளவளாவி, ஆர்டர் செய்யப்பட்ட ஃப்ரைட் ரைஸ், வெஜ் ரோல், ரசமலாய், கோபி மஞ்சூரியன் என பல அயிட்டங்களை ஒரு கட்டு கட்டி விட்டு, ஷீலா வீடு திரும்பிய போது, நவீன் வீட்டுக்கு வந்து விட்டான்.
குப்புற படுத்திருந்தவன் முதுகு லேசாக குலுங்குவது போல இருந்தது.
இப்படி அவனைப் பார்த்ததே இல்லை இந்த இரண்டு மாதத்தில்… ஜூரமோ? மெதுவாக அவன் தோளில் கை வைத்து, ”ஹலோ, என்னாச்சு…?”
அவன் திரும்பவில்லை. தோளை அழுத்தமாகப் பிடித்தாள். தன் பக்கம் திருப்ப முயன்றாள்.
அவள் கைகளை நவீன் தட்டி விட்டான். அதில் கோபம் இல்லை எனப் புரிந்தது ஷீலாவுக்கு.
“ஹாஸ்டல் டே பத்தி மெசெஜ் போட்டேனே.. பாக்கல்லயா?”
ஒரு ஆண்மகன் கோபப்பட்டால், எதிர்வினை ஆற்றலாம்… திரும்ப கோபப்படலாம் அல்லது அமைதியாகப் போகலாம்…
இப்ப என்ன செய்வது? டீ யைப் போட்டு கொண்டு வரலாமா?
சூடாக ரெண்டு கப் டீ! குடிப்பானா?
“நவீ… நவீ…” என காதருகில் … ஏதோ ரகசியம் சொல்வது போல் சொன்னாள்.
அவனை அணுக தனக்குக் கொஞ்சம் பயமாக இருப்பது அவளுக்குப் புரிந்தது.
அவன் ஆக்ரோஷமாகவோ கோபமாகவோ இல்லை என்பதும் புரிந்தது.
கமல் பாணி கட்டிபிடி வைத்தியம் கைகொடுக்கும் என்று தோன்றியது.
சட்டெனக் கட்டியணைத்து அவனைத் திருப்பிவிட்டாள்.
அவனே அதை எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் சிவந்து இருந்தது.
அவன் தாடையை உயர்த்தி, “மொதல்ல சூடா ஒரு கப் டீ! அப்புறம் பேசலாம்.. சரியா?” என்று சொல்லியபடி எழுந்தாள்.
அவள் டீக்கப்பைக் கொண்டு வருவதற்குள் அவன் மீண்டும் கவிழ்ந்து விட்டான்.
ஷீலாவுக்குக் கோபம் வரவில்லை.
“போட்டுட்டு வரதே பெரிய விஷயம்… இதுல குடி..குடின்னு கெஞ்சனுமோ?” என்று நினைக்கவில்லை.
“நவீ, ப்ளீஸ் எழுந்திரும்மா! ரெண்டு கையிலயும் கப் வச்சுருக்கேன். ப்ளீஸ்..”
நவீன் எழுந்தான். இருவரும் அமைதியாக தேநீர் அருந்த விநாடிகள் யுகங்கள் போல இருந்தன ஷீலாவுக்கு.
நேற்றிரவு அவள் தூங்கிவிட்டாள். அவன் சாப்பிட்டானா எனக் கூடத் தெரியாது. இன்று காலையும் அவன் வீட்டில் சாப்பிடவில்லை. சக மனிதரிடம் காட்டும் பரிவு கூட இல்லையா தனக்கு எனத் தன்னையே கேட்டுக் கொண்டாள்.
”தோசை பண்ணட்டுமா?”
“கொஞ்ச நேரம் போகட்டும்”
திடீரென அவள் தோள் மேல் தலை வைத்து விசும்பினான் நவீன்.
“ஹேய், என்னாச்சு!”
“வேலையை விட்டு விடலாமான்னு இருக்கு, ஷீலு”
“அவசரத்தில ஆத்திரத்தில முடிவு எடுக்காத… கொஞ்ச நேரம் ஆறப் போடு. அப்பவும் வேலையை விடணும்ன்னு நினைச்சா… செய்”
“இன்னிக்கே பேப்பர் போட்டுடலாம்ங்கற அளவுக்குப் போயிட்டேன்”
“என்னாச்சு! என்ன பிரச்சினை”
“அதான், அந்த பிடாரி ரொம்பத்தான் கூவுறா. எப்பப் பாரு… ரெண்டு பேர் முன்னால நாலு பேர் முன்னால அவமானப்படுத்தறது. செஞ்ச வேலல ஏதாவது சொல்ல வேண்டியது.”
“சில பேர் அப்படித்தான். கத்தினாதான் அவங்களோட பவர்ன்னு நினைப்பாங்க”
“காலங்காத்தால பவுடரை அப்பிட்டு வந்துடரா! ஒரு பொம்பளை கிட்ட மிதி பட வேண்டி இருக்கு! சே! ஷிட்!”
“நவீ, உன் பிரச்சினை என்ன? உன் வேலையைக் குத்தம் சொல்லறது பிடிக்கலயா அல்லது ஒரு பெண் அதாவது பொம்பளை உன் வேலையைக் குத்தம் சொல்றது பிடிக்கலயா?”
அவன் பதில் சொல்லவில்லை. அவள் தோள்களில் சாய்ந்து கொண்டான்.
சற்று நேர அமைதிக்குப் பின், ஷீலாதான் பேச்சை ஆரம்பித்தாள்.
“என்ன பிரச்சினை பிராஜக்ட்ல?”
“நேத்தைக்குள்ள ஒரு டார்கெட் முடிக்கணும். அந்த டிக்கெட் எனக்குத்தான் மார்க் ஆயிருந்தது.”
“எப்போ அசைன் பண்ணாங்க?”
“அது ரெண்டு நாள் முன்னால. நா எல்லாமே ரெடி பண்ணிட்டேன். ஆனா, ரிப்போர்ட் சப்மிட் பண்ண மறந்துட்டேன்”
”இன்னிக்கி மார்னிங் ஃப்ர்ஸ்ட் வொர்க்கா அனுப்பினயா?”
“எங்க? அதுக்குள்ள இஷ்யூ எஸ்கலேட் ஆயிடுச்சு”
“ஓ.கே விடு. மறக்கறதும் அதனால அவமானம், திட்டு வாக்கறது எல்லாம் நாம பாக்காததா? சரி, நா போய் தோசை பண்ணறேன்”
ஷீலுவைப் பின் தொடர்ந்து நவீனும் கிச்சன் வந்தான்.
”ஜஸ்ட் ரெண்டே ரெண்டு மேட்டரை ஃபாலோ பண்ணு! எல்லாம் சரியாயிடும்” என்றாள் ஷீலா.
என்ன என்பது போல் அவளைப் பார்த்தான் நவீன்.
“உன் பக்கம் தப்பு இருக்குன்னா, வெளிப்படையா ஒத்துக்கல்லைனாக் கூட, கோபப்பட்டு பொறுமை இழக்காம, அதை சரி பன்ணி, டேமெஜ் கண்ட்ரோல் பண்ணனும்.
இன்னொண்ணு, பொம்பளை திட்டாறாளேன்னு, யோசிக்கக் கூடாது.”
காரமான மிளகாய் பொடியுடன் சூடான தோசை, உருப்படியான யோசனையுடன் உள்ளே போனது.
சாப்பிட்ட தெம்பு, ஷீலுவின் அன்பு அவனைச் சற்று ஆசுவாசப் படுத்தியது.
“இந்த பொம்பளையா அவ… பிடாரி… வந்துட்டாளுக வார்த்தைகளை ஒரு பத்து நாள் மூட்டை கட்டி வச்சு பாருங்க.
யாரு திட்டினாலும் கோபம் வரும். அதுவே தேவையில்லாதது.. இதுல திட்டினது பொம்பளை, அதனால கோபம் ஜாஸ்தி ஆகுதுன்னு புலம்பறது அத விட தேவை இல்லாதது.”
கண்களில் நீர் வெளிய எட்டிப் பார்க்க ஆரம்பித்தது நவீனுக்கு.
“என்னப்பா இது!” – மெல்ல அவன் முகத்தைத் துடைத்தாள். இத்தனை நாள் அவனிடம் இத்த்னை வாஞ்சையாக அவள் இருந்ததே இல்லை.
பெண் என்ற பெருமையும் ஆண் என்ற அகங்காரமும் அலங்கார பூஷணமாக ஒளிரலாம். அமைதியைக் கெடுக்கும் தளைகளாக, தடைகளாக ஆகிவிடக்கூடாது. அகங் கரைந்த அகமே இனிக்கும்.
ஷீலுவின் யதார்த்தமான உண்மை பொதிந்த சொற்கள் அவனுக்குள் ஒரு தெளிவு பிறக்கச் செய்தது. நவீனின் காயம் பட்ட மனோநிலை ஷீலாவின் மனதுக்குள் இருந்த மென்மையை பொலிவுறச் செய்தது.