அகம்
சாரல்
தூரல்
பெருமழை
அடைமழை..
மேகங்களை முப்பொழுதும்
சூடி நிற்கின்றன சிகரங்கள்…
எழும் இடியோசைகள்
எதிரொலித்து முடிகின்றன.
மின்னல் ஔியில்
மழைநில்லா குறுஞ்சியின்
பேரழகைக் கண்டு நிற்கிறது வெளி.
*****
ஏழு கடல்களுக்கு அப்பால்
காணக்கிடைக்காவிட்டால் என்னசெய்வது
தேடிக் கண்டடையும் ஒன்றா அது?
ஔியில் இருள் கலக்கும் நேரத்திலிருந்து
இருளில் ஔிகலக்கும் நேரம் வரை
எப்போதும் வானம் நோக்கித் திறந்திருந்தன…
மேகங்கள் சூழ்ந்த வானில்
அந்தப்புறம் இதழ்கள் மூடித்திறக்கும் ஔிப்பூவும்
இந்தப்புறம் ஔி..ஔி என்றே திறந்த கண்களும்.