அவள் பெரியம்மாவின் தோழியின் மகள். காவ்யாவுக்கும், பிரகதிக்கும் அவளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. அக்கா, அக்கா என்று மொய்த்துக்கொண்டனர். அக்காவும் ஒட்டிக்கொண்டாள்.
அம்மா ஒருகை கூட்டும், இரண்டு கரண்டி சாம்பாரும் சேர்த்து சமைத்தாள். அனல் காய்ச்சிய பகல் பொழுதுகளில் வீட்டில் சிரிப்பலை பொங்கி வழிந்தது. இரவில் நிலவு, அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் ஸ்திரமாக நின்றிருந்தது.
பன்னிரண்டு, ஒன்று என்று நேரம் போவது தெரியாமல் அக்கா, காவ்யா,பிரகதி மூவரும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தனர். தென்னையோலை இடுக்குகள் வழியாக நிலவு வெளிச்சம் கசிந்து கிடந்தது.
அக்காவுக்குப் பாட்டு பாட பிடித்திருந்தது. பழைய பாட்டுகளை ராகமாய்ப் பாடினாள். மற்ற இருவரும் தங்களுக்குப் பிடித்த இளையராஜா பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டனர். அக்காவின் சொந்த விஷயங்கள் பற்றி பேசக்கூடாது என்று பெரியம்மா கட்டளையிட்டிருந்தார். அம்மா அதில் அதிக கவனமாயிருந்தாள்.
சில நேரங்களில் அவளும், அவர்களோடு சேர்ந்து கொண்டாள். மதிய உணவு முடிந்ததும் டிவியில் படங்கள் பார்த்தனர். அம்மா ஒரு சோபாவில் படுத்துக் கொள்ள மற்ற மூவரும் இருவர் அமரும் சோபாவில் நெருக்கியடித்து அமர்ந்து கொள்வர்.
படத்தில் வரும் வசனங்கள் போலவே அக்கா பேசிக் காட்டுவாள். விளம்பர இடைவேளைகளில் அந்தாக்ஷரி விளையாடுவார்கள்.மாலையில் வாசல் தெளித்து அக்கா கோலம் போட்டாள்.
“ஒருவேளை போட்டாப் போதும்” என்று அம்மா சொல்லிப் பார்த்தாள்.
அக்காவுக்குக் கோலம் போடுவது பிடித்திருந்தது. அரிசி மாவில் பிசிறில்லாத கோலங்கள் போட்டாள். மயில் தோகையில் இறகுகள் மிதந்தன. சீதை முந்தானையும், மிட்டாய் தட்டுமாய் கோலங்கள் கண்ணைப் பறித்தன.
அக்காவின் விரல்களுக்குள் வளைவு கோடுகள் எப்படி ஒளிந்திருந்தன என்று பிரகதிக்கு ஆச்சர்யமாயிருந்தது.
” ரங்கோலி போடுவீங்களாக்கா…?”
பூக்களும், வண்ணங்களும் இழையோடும் ரங்கோலி காவ்யாவுக்குப் பிடிக்கும். ரங்கோலி வந்த புத்தகங்களின் பக்கங்களைக் கத்தரித்து சேகரித்து வைத்துள்ளாள். அதை அக்காவிடம் காட்டினாள்.
தோட்டத்தில் மாமர நிழலில் ரங்கோலிக்கான ஏற்பாடு ஆரம்பித்தது. பிரகதி புற்களைச் செதுக்கி தூர எறிந்தாள். காவ்யா, மண்ணை நிரவி தட்டினாள். அக்கா வாளியில் நீர் எடுத்து வந்தாள். அம்மாவுக்கு மாலை நேர சிற்றுண்டிக்கான நேரம். அவளின் நெற்றியில் வியர்வை மினுங்கியது.
மாமரம், ஒரு பார்வையாளன் போல நின்றிருந்தது. வெயில், உதிர்ந்து கிடந்த இடங்களிலெல்லாம் நிழல், பரவத் தொடங்கியிருந்தது. பறவைகள், சாவகாசமாக வாழ்விடம் நோக்கிப் பறந்தன. மாமரக் கிளைகள் மெல்ல அசைந்ததில் அக்காவின் முன் நெற்றி முடிகள் காற்றில் அலைந்தன.
அக்கா, புடவையைத் தூக்கி சொருகியிருந்தாள். நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மின்னின. பிரகதி, டிரான்சிஸ்டர் கொண்டு வந்தாள்.
” மாலையில் யாரோ மனதோடு பேச”…
ஸ்வர்ணலதாவின் வசீகரிக்கும் குரலுக்கு அக்கா, சொக்கிப் போய் நின்றிருந்தாள். கையிலிருந்த வாளியில் நீர் தளும்பியது. வண்ணப் பொடிகளடங்கிய தட்டுடன் வந்த காவ்யா, தண்ணீரையள்ளி அக்காவின் மேல் தெளிக்க விளையாட்டு ஆரம்பமானது.
ஆளாளுக்கு தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டனர். அக்காவும், பிரகதியும் தொப்பரையாக நனைந்து விட்டனர். அக்காவின் புடவை, நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டதில் அழகுகள் ததும்பி நின்றன.
சிலையின் வளைவுகளை அக்காவின் மேனியில் கண்ட காவ்யா, விரித்த வழிகளை இமைக்கவில்லை. அக்காவின் முகம் பனியில் நனைந்த பூ போல பளீரிட்டது. பிரகதி, அதை காவ்யாவுக்கு சுட்டிக்காட்டினாள்.
” அக்கா, நீங்க ரொம்ப அழகு….”
” உங்களை விடவா…….” அக்கா மடக்கினாள்.
” போதும் விளையாட்டு, ரங்கோலி என்னாச்சு?”
அம்மா உள்ளிருந்து சத்தம் போட்டாள். வெங்காய பக்கோடாவின் வாசம் மூக்கைத் துளைத்தது. மூவரும் உடைமாற்றி பக்கோடாவை கொறித்தபடியே ரங்கோலியில் மும்முரமாயினர்.
அடுத்த ஒருமணி நேரத்தில் ரங்கோலி உருவானது. பிசிறில்லாத கோடுகளும், வண்ணங்களும் வடிவங்களாய் மாறியிருந்தன. வண்ணப் பொடிகளின் அளவான தூவலில் வட்டத் தட்டு போல ரங்கோலி, ஜொலித்தது. அக்கா, விரல்களிலும், இடுப்பிலும், முகத்திலும் வண்ணங்கள் பூசி நின்றிருந்தாள். அந்தியின் இதமான ஒரேயொரு துளி வெயில், அவள் முகத்தில் சிந்தியிருந்தது. இயற்கை வரைந்த ரங்கோலியாக அக்கா மாறியிருந்தாள்.
காவ்யா, ரங்கோலியை அலைபேசியில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். அம்மாவுக்கு பேச்சே எழவில்லை. மூன்று வட்டங்களுக்குள் நிறைந்திருந்த வடிவங்களும், பூக்களும், அதில் கொட்டிக் கிடந்த நிறங்களும் மாமரத்தடியை மாயலோகமாக்கியிருந்தன.
மாம்பிஞ்சுகள் காற்றில் அசைந்து தங்கள் பங்குக்கு ஆர்ப்பரித்தன. அக்கா, கைகட்டி நின்று கொண்டிருந்தாள். பார்வை எங்கோ பதிந்திருந்தது.
“போய் குளிச்சிட்டு வா. உடம்பெல்லாம் கலர் அப்பியிருக்கு.”
அம்மா அவளை சுய நினைவுக்குக் கொண்டு வந்தாள். அன்றிரவு அம்மாவும் அவர்களது பேச்சில் கலந்து கொண்டாள். தூக்கம் அவள் கண்களில் உறைந்து கிடந்தது. அடிக்கடி கொட்டாவி விட்டாள்.
பன்னிரண்டுக்கு மேல் அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அப்படியே சுருண்டு படுத்து விட்டாள். அக்கா, காவ்யா, பிரகதி மூவரும் அதற்குப் பிறகு ஒரு மணிநேரம் சீட்டு விளையாடி விட்டு உறங்கினர்.
அக்கா, அம்மாவுக்கு சமையலில் உதவினாள். மாவு வழிக்க, மசாலா அரைக்க, தேங்காய் துருவ, மிளகாய் கிள்ள என்ற சகலத்திற்கும் அக்கா வந்து நின்றாள்.
“புடவை கசங்காம வேலை செய்ய அவளைப் பார்த்து கத்துக்குங்க” என்றாள் அம்மா.
அக்கா, அதை காதில் வாங்காமல் தேங்காய்த் துருவிக் கொண்டிருந்தாள். செழுமையான அவள் கைகளில் சிவப்பு நிறக் கண்ணாடி வளையல்கள் குலுங்கின. ஒன்றில் ஐந்தும் இன்னொன்றில் மூன்றும்.
அக்காவின் இடுப்பில் உருகிய பனி போல வியர்வை பளபளப்பு. வெண்ணையைக் குழைத்து செய்த இடுப்பில் துளிர்த்த வியர்வையில் இரு மச்சங்கள் ஒளிர்ந்தன. அக்கா புடவைத் தலைப்பால் இடுப்பைத் துடைத்துக் கொண்டாள். சமையலறை சுவரில் அக்காவின் நிழல் ஒரு ஓவியம் போல விழுந்து கிடந்தது.
பிரகதிக்கு விழிப்பு வந்தபோது அக்கா அருகிலில்லை. சன்னலருகில் நின்று வெளியே உறுத்துக் கொண்டிருந்தாள்.
“அதுக்குள்ள எழுந்தாச்சா?”
பிரகதியின் குரலுக்கு காவ்யாவும் எழுந்து கொண்டாள். அக்கா திரும்பிப் பார்த்து சிரித்தாள்.
” வெளியில என்ன வேடிக்கை, அதுவும் இந்த காலங்கார்த்தால……”
பிரகதி, எட்டிப் பார்த்தாள். வானத்தில் கிள்ளியெறிந்த நகத்துண்டு போல நிலவு. முழுவதும் விடியாத கருக்கலில் அது ஓடம் போல மிதந்து கொண்டிருந்தது.
” தூக்கம் வரலையாக்கா……?”
காவ்யா கொட்டாவி விட்டாள். பிரகதிக்கும் கண்களை அசத்திற்று. இருவரும் நிமிடத்தில் உறங்கிப் போயிருந்தனர். அக்கா சன்னல் கம்பிகளைப் பற்றியபடி நிலவை வெறித்தாள். புகை போல சில மேகங்கள் நிலவை மறைத்து நகர்ந்தன.
இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும். நிலவை தொலைத்துவிட்டு வானம் சூரியனைச் சுவீகரித்துக் கொள்ளும். அதையும், இதையும் மாற்றி, மாற்றி தக்கவைத்துக் கொள்ளும் வானத்திற்கு எதுவும் சொந்தமில்லையென்று அக்காவுக்குத் தோன்றியது.
மறுநாள் காவ்யாவும், பிரகதியும் மெகந்தி போட்டுக் கொள்ள தயாராயினர். அக்கா மருதாணிப் பொடியை அளவான நீர் விட்டுக் குழைத்தாள். நீலகிரி தைலத்தை சில துளிகள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தாள்.
பிளாஸ்டிக் தாளை சதுரத் துண்டுகளாக வெட்டி நான்கைந்து சுருள்கள் செய்துகொண்டாள். அதில் மருதாணிக் குழைவை இட்டு நிரப்பினாள். செலோ டேப் கொண்டு வாயை மடித்து ஒட்டினாள். மருதாணிக் கூம்புகள் தயாராகிவிட்டன.
காவ்யாவும், பிரகதியும் அவசர, அவசரமாக சோற்றை விழுங்கிவிட்டு அவள் முன் அமர்ந்தனர். யாருக்கு முதலில் போடுவது என்ற போட்டி உருவானது. அம்மா நடுவில் புகுந்து சமரசம் செய்தாள்.
“பிரகதி அவசரக்குடுக்கை. எதிலேயும் பொறுமை கிடையாது. அதனால அவளுக்கு முதல்ல போட்டு விடு. காவ்யாவுக்கு அப்புறம் போடலாம்.”
அக்கா பொறுமையாக இருவருக்கும் போட்டுவிட்டாள். இருகைகளையும் ஒன்றாக சேர்த்தால் இணைகிற மாதிரியான அற்புதமான டிசைன் அக்காவின் கற்பனையில் உருவாகியிருந்தது.
“நீங்களும் போட்டுக்கோங்கக்கா”
பிரகதி, வற்புறுத்த அக்கா பிடிவாதமாய் மறுத்து விட்டாள். எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து அவர்கள் கைகளில் அடிக்கடி தடவி விட்டு, மதிய உணவை உருட்டி வாயில் போட்டு அக்காவுக்கு அன்று நிறைய வேலைகளிருந்தன. அவள் அலுத்துக்கொள்ளவில்லை. அம்மாவையும் அந்த வேலைகளைச் செய்ய அனுமதிக்கவில்லை.
“நீங்க ரெண்டு பேரும் கையை நீட்டி உட்கார்ந்துட்டீங்க. பாவம், அவளுக்குத்தான் கை ஒழியாம வேலை.” அம்மா புலம்பினாள்.
அன்று மாலை திடீரென்று மழை கொட்டியது. கோடை மழை சூடாகிக் கிடந்த மண்ணை குளிர, குளிர தழுவிக்கொண்டது. அக்குளிர்ச்சியான கூடுகையில் காற்று சிலீரிட்டது. அக்கா முந்தானையால் போர்த்திக் கொண்டு தெருவில் கொட்டும் நீர்க் கம்பிகளை வேடிக்கைப் பார்த்தவாறிருந்தாள்.
வேப்ப மரத்தின் பூக்கள் உதிர்ந்து சிறு, சிறு தோடுகளாக நீரில் மிதந்தன. இலைகள் புழுதி விலகி கூடுதல் பச்சையோடு மிளிர்ந்தன. மரங்களிலிருந்து கனத்த சொட்டுகளாக மழைநீர் விழுந்த வண்ணமிருந்தது. காவ்யாவும், பிரகதியும் சிவந்த கைகளை மழை நீரில் காட்டி விளையாடிக்கொண்டிருந்தனர்.
அம்மா, இரவு உணவு தயாரிப்பில் மும்முரமாயிருந்தாள். அக்காவுக்குப் பிடித்த அடையும், அவியலும் தயாராகிக் கொண்டிருந்தன.மிகவும் வற்புறுத்திக் கேட்டபோது அக்கா சொன்னது. அம்மாவுக்கு எளிதாக கை வரக்கூடியது அவள் அதில் நிபுணி. அதனால் அசத்திவிட்டாள்.
“அம்மா எப்பயாவது அடை செய்வாங்க. அவியல் ஒருமுறை கல்யாண வீட்டுல சாப்பிட்டிருக்கேன். அப்பலேருந்து அவியல் மேல ஒரு ஈர்ப்பு. இப்பதான் இரண்டாவது முறையா அவியல் சாப்பிடற வாய்ப்பு கிடைச்சிருக்கு. சும்மா சொல்லக்கூடாது. அருமையா இருக்கு. இந்த சுவை என் நாக்குல எப்பவும் தங்கியிருக்கும்மா.”
அக்கா கரகரத்தாள். சாப்பிட்டதும் காவ்யாவும், பிரகதியும் டிவி பக்கம் நகர, அக்கா சமையல் மேடை துடைக்க அம்மாவுக்கு ஒத்தாசை செய்தாள்.
“போதும் நீ போய் உட்காரு. நான் முடிச்சிட்டு வர்றேன்.”
“உங்ககிட்ட என்னைப் பத்தி சொல்லணும்மா.”
மேடை துடைத்த அம்மாவின் கைகள் அப்படியே நின்றன. அக்காவின் கண்கள் சுவரில் ஊர்ந்த பல்லியை வெறித்தன. சமையலறையின் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அவள் ஒரு ஓவியம் போல நின்றிருந்தாள். டிவியின் சத்தத்தில் அவள் குரல் மெலிதாய் கேட்டது.
“எனக்கு, அவனை ரொம்பப் பிடிச்சிருந்தது. மனசுக்குள்ள அவன் மேல ஒரு ஈர்ப்பு. ஆனா அவன் கீழ் சாதியாம். நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். யாருமே என்னைப் புரிஞ்சிக்கலை. அன்னிக்கு நடந்த கைகலப்புல என்னோட கண்ணாடி வளையல் நொறுங்கிப் போச்சு. அதுக்கப்புறம் உங்கக்கா வந்து சமாதானப்படுத்தி என்னை இங்கே கொண்டு வந்து விட்டாங்க.”
அக்கா கண் விளிம்பில் எட்டிப்பார்த்த நீரை நாசூக்காக துடைத்துக் கொண்டாள். அம்மா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கும், அவனுக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப் போனது, ஆனா சாதி பெரும் பிரச்சனையா மாறி எங்களுக்குள்ள ஏற்றதாழ்வுகளை உண்டாக்கிடுச்சு. நிறைய நாள் தூக்கம் வராம தவிச்சிருக்கேன். மனசை மாத்திக்க முடியாம துடிச்சிருக்கேன்.”
அக்கா சொல்வதை நிறுத்திவிட்டு பெருமூச்சுவிட்டாள். காவ்யாவும், பிரகதியும் திகில் படத்தில் ஆழ்ந்திருந்தனர். அக்காவுக்கு மேலும் சொல்வதற்கு ஒரு விஷயமிருந்தது. அம்மாவும் அதைக் கேட்பதற்கு தயாராயிருப்பது போல சமையலறையை விட்டு நகராமல் நின்றிருந்தாள்.
“இங்கே இருந்த நாட்களை என்னால மறக்க முடியாதும்மா. இங்கே இருக்க ஒவ்வொரு நாளும் வண்ணங்களால நிறையுது என் வாழ்க்கை. இங்கேயிருந்து போகும் போது எனக்காக அங்கே மாலை காத்திருக்கும். அதை வேறொரு ஆண்மகன் கையில வச்சிருப்பான்.”
அக்கா சொல்லிவிட்டு கூடத்திற்கு நடந்தாள். மழை விடத் தொடங்கியிருந்தது.