1. இப்படித்தான் முடிகிறது
பாய்விரித்து முடங்குவாள்
அடுப்படியில் பூனையைப் போல்
வெறும் வயிற்றில் அம்மா
இணையரும் அவ்வாறே
இடம் மட்டும் சற்றே மாறும்
மாலையுடன் நிற்கும்
படத்தை
பாதியாய்க் கிழித்தெறிவாள்
பத்மா அத்தை
கோபத்தில் தின்று தின்று
ஊதிப் பெருத்திடுவாள்
வேணி அண்ணி
ஒரு பாட்டம் அழுதுவிட்டு
போதைக்கு வக்கனையாய்
மீன் குழம்பு வைத்திடுவாள்
ஆறுமுகம் பொண்டாட்டி
இப்படித்தான் முடிகிறது
இன்னமும்
இணையர்களின்
கோபம்.
***
2. சாமியாடி
அதிர்ந்து பேசினால்
ஆகாது
அம்மாவுக்கு
சில சமயங்களில்
அவள் பேசுவது
அவளுக்கேக் கேட்குமா
என்பது சந்தேகம்
குலதெய்வம் கோயிலுக்குக்
கும்பிடப் போகையில்
வேறு அம்மாவாய்
உருமாறிப் போவாள்
முன்னும் பின்னும்
ஆடியபடி
நாக்கு துருத்திக் கொண்டு
கண்கள் நெருப்பாக
‘முப்பூசை வேணுன்டா
குடும்பத்த அழிச்சிடுவன்’
எப்போதும் எலுமிச்சை
கைவசம் எங்களிடம்
கடித்துத் துப்பியபடி
மலையேறும் அம்மாவுக்கு
சாகும் வரை
அப்பாவை எதிர்த்து
ஒரு வார்த்தை
பேசவே தெரியாதது
இப்பவும் விளங்கவில்லை.
***
3. மூன்று நாட்கள்
உள்ளறையிலிருந்து கணவனுக்கு
குறுஞ்செய்தி
‘மேசையில் பொங்கல்’
கணவரிடமிருந்து மனைவிக்கு
‘இரவு உணவு வேண்டாம்
நண்பர் வீட்டில் பூஜை’
தானே நடை சாத்தி
திரை மூடி
முகம் பார்க்க விரும்பாமல்
முக்கண்ணனின் பாலகன்
அறிவிப்பு வெளியானது
மூன்று நாட்கள்
தரிசனம் ரத்து.
*****