இணைய இதழ்இணைய இதழ் 74சிறுகதைகள்

கறையான் – தேஜூசிவன்

சிறுகதை | வாசகசாலை

கித்தாரின் E ஸ்ட்ரிங்கின் மென் அதிர்வு.

தீபுவின் காலர் ட்யூன்.

”சொல் தீபு”

மெலிதாக விசும்பினாள்.

“என்னடா செல்லம்”

“அப்பா…”

“என்ன?”

“அப்பா எனக்கு ஒரு மெய்ல் அனுப்பிருக்கார்.”

“எப்ப?”

தயங்கினாள்.

“அன்னக்கு ராத்திரியே.. நான் அப்பவே பாத்திருந்துருக்கலாம்.”

விசும்பினாள்.

“இப்பத்தான் படிச்சேன்.”

“என்ன எழுதிருக்கார்?”

“ரொம்ப கஷ்டமா இருக்கு மது.. நான் உனக்கு ஃபார்வேர்ட் பண்றேன். படி.”

“தைர்யமா இரு தீபு.”

“ம்”.

பாப்பா ,

நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்று தெரியும். நேற்று வரை என்னைத்தான் உன் ஹீரோ என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும். இன்று உன் முன் நான் ஒரு அசிங்கமாய் நின்று கொண்டிருக்கிறேன்.

என் தவறு தான் ஒத்துக் கொள்கிறேன். 

கடைசியாக சில விஷயங்களை உன்னிடம் சொல்லிவிட்டு போகலாம் என்று நினைக்கிறேன். இது ஒரு அப்பா தன் மகளிடம் சொல்லக்கூடாத விஷயம் தான். ஆனால் எனக்கு வேற வழி தெரில குட்டிம்மா.

என்னோடமுப்பத்தைந்து வயசில் எனக்கும் உன் அம்மாவுக்கும் கல்யாணம் நடந்தது.

 இரண்டு வருடங்கள் கழித்து நீ பிறந்தாய். 

ஆனால்..

சொல்லக் கஷ்டமாகத்தானிருக்கிறது. 

அதன் பின் உன் அம்மாவுக்கு செக்ஸ் பிடிக்காமல் போய்விட்டது. என்ன காரணம் என்று என்னால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஒரு விஷயத்தைத் தவிர மத்த எல்லா விஷயங்களிலும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்கிக் கொண்டிருக்கிறாள். ஆனால் எனக்கு அது போதவில்லை.

என் உடல் ராட்சஷனாய் மாறி என்னை சித்திரவதை செய்து கொண்டேயிருந்தது.

இந்த அம்பத்தெட்டு வயசிற்கு வெறும் ரெண்டு வருஷ சுகம்  போதலை.செக்ஸ் உணர்ச்சி என்னை கறையானாய் அரித்துக் கொண்டேயிருந்தது. என்னன்னமோ செய்து பாத்தேன். யோகா செய்தேன். கோயில் கோயிலாய் நடை பயணம் போனேன். காசி, இமயம் என போகாத இடம் இல்லை. ரெண்டு மூணு சாமியார் பின்னாடி சுத்தினேன்.

முடியலை.

என் உடம்பு ஓலமிட்டுக் கொண்டேயிருந்தது.

ஆனால் உன் அம்மாவைத் தவிர வேறு யாரையும் நினைக்கத் தோணலை.

ஆனால்.. நேற்று..

ஒரு நொடியில் மூழ்கிப் போனேன்.

பஸ்ஸில் பின்னால் நின்றிருந்த பெண்ணின் உடல் மிக எதேச்சையாக என் மேல் பட்டது. என்னுள்ளிருந்த ராட்சஷன் கண் விழித்தான். அறிவு எச்சரிக்கை செய்வதற்குள் உடல் முந்திவிட்டது.

எத்தனை வலுவான காரணம் இருந்தாலும் தவறு தவறு தான். இதை நியாயப்படுத்த இதெல்லாம் சொல்லவில்லை. இது உனக்கான என்னுடைய கடைசி கடிதம்.

இது என்னுடைய குற்ற ஒப்புதல் வாக்குமூலம். என்னை மன்னிச்சிடு குட்டிம்மா.

வேறு எதைக்கொடுத்தும் உன்னை சமாதானப்படுத்த முடியாது என்பதால் 

இந்த முடிவை கண்ணீருடன் எடுக்கிறேன்.

இதில் அந்தப் பெண்ணின் தவறோ, உன் அம்மா தவறோ ஏதுமில்லை.

தயவு செய்து உன் அம்மாவிடம் இதை சொல்லிவிடாதே. அவள் மென்பூ போன்றவள். தெரிந்தால் தாங்க மாட்டாள். அவளைப் பொறுத்த வரை என் சாவு புதிராகவே இருந்து விட்டுப் போகட்டும்.

முடிந்தால் என்னால் பாதிக்கப் பட்ட அந்தப் பெண்ணிடம் நான் மன்னிப்புக் கேட்டதா சொல்லிடு.

அழாதே.

மகிழ்ச்சியா இரு கண்ணம்மா.

 I miss You.

Bye.

ன்று வழக்கமாய் எங்களை டிராப் செய்ய வரும் கம்பெனி வண்டி வரவில்லை.

நானும், மிருதுளாவும் மட்டும் தான் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தோம். 

“ஓலா போடவா”

“வேண்டாம் பஸ்ல போய்க்கிறேன்.”

“பஸ்ஸா?”

“நீ வேணா கேப்ல போய்க்கோ. உன் தீபிகா பாத்தா காண்டாய்டுவா”

சொல்லி சிரித்தாள்.

யேய்.. லூசு.. அதெல்லாம் அவளுக்கு பிரச்னையில்ல.”

”பின்ன என்னதான் பிரச்னை?”

”எங்க கல்யாணத்தை சீக்கிரம் வைக்க சொல்லி என் அப்பா அவசரப்படுத்தறார்ல அதான்.”

“உன் அப்பா ஏன் அவசரப் படுத்தறார்”

“அப்பதான் அக்கா ஆஸ்ட்ரேலியாவிலிருந்து வர்றாங்க. அதான்..”

அப்ப சரி.”

நடந்தோம்.

ண்டக்டர் கத்தினார்.

“ஜென்ட்ஸ்லாம் பின்னாடி போய் ஏறுங்கோ”

“நான் டிக்கெட் எடுத்திடறேன்  தீபு.”

பஸ்ஸில் நெரிசல்.

ஓடிப்போய் பின்னால் தொத்திக் கொண்டேன்.

”டிக்கெட்..டிக்கெட்.”

கண்டக்டர் பின் பக்கம் வந்தார்.

திடும்மென பஸ்ஸின் முன் பக்கம் சப்தம் கேட்டது.

பஸ் வேகம் குறைந்து நின்றது.

இறங்கி கையை உதறிக் கொண்டேன்.

ஸ்ஸின் முன்பக்கம் சப்தம் அதிகமாகியது.

முன்னால் போனேன்.

கூட்டத்தின் நடுவே மிருதுளா .

“அவரை அடிக்காதீங்க.. விட்ருங்க…”

கதறிக்கொண்டிடுந்தாள்.

அப்போது தான் அவரைப் பார்த்தேன்.

தலை குப்புறக் கிடந்தார். 

அவர் தலையில் ஒருவன் மிதித்துக் கொண்டிருந்தான்.

கண்டக்டர் உள்ளே புகுந்து அவரைப் புரட்டினான்.

பரசுராமன் சார்.

“சார்..சார்..”

“உங்களுக்கு தெரிஞ்சவரா?”

”இந்தப் பொண்ணு மேல கையை வச்சுட்டான் கிழட்டுத்..”

அசிங்கமாய் ஒருவன் சொன்னான்.

“விடுங்க.. விடுங்க..”

அவரைத் தூக்கினேன்.

மயங்கியிருந்தார்.

“ஹாஸ்பிடல் போகணும்.”

அடுத்த ஸ்டாப் ந்யூ ஹாஸ்பிடல் தான்.

“ம்ருதுளா நீ போ.. எனக்குத் தெரிஞ்சவர்.. நான் பாத்துக்கறேன்..”

ம்ருதுளா நடுங்கினாள்.

“நான்…நான்..”

அவரைத் தூக்கினேன்.

கண்டக்டரும் ஒரு கை கொடுத்தார்.

ரிசப்ஷனில் கூட்டமாயிருந்தது.

“ப்ளீஸ் மேடம்.”

கத்தினேன்.

ரிசப்ஷனிஸ்ட் திரும்பினார்.

“பஸ்ல ஒரு சின்ன ஆக்சிடெண்ட்.”

கண்டக்டர் கோபமானார்.

“ஸார்.. ஆக்சிடெண்ட்னா எங்க ஓனருக்கு நாங்க பதில் சொல்லனும்.”

”என்னதான் ஆச்சு. ட்ரீட்மெண்ட் கொடுக்கணுமில்ல..”

கண்டக்டர் ரிசப்ஷனிஸ்ட்டிடம் சொன்னார்.

“இந்த ஆள் பஸ்ல வர்றப்ப ஒரு பொண்ணு மேல கை வச்சிட்டார். அந்தபொண்ணு கோபத்துல இவரை அறைஞ்சிடுச்சு. கூட்டம் இவரை அடிச்சு துவம்சம் பண்ணிடுச்சு. மூஞ்சி கிழிஞ்சுடுச்சு.”

“ப்ளீஸ் மேடம்.. இவர் எனக்கு தெரிஞ்சவர் தான். இவருக்கு ஹை பிபி இருக்கு. உடனே கவனிங்க. எல்லாத்துக்கும்  நான் பொறுப்பு.”

தலையசைத்தாள்.

“ஹாய் மது.”

தீபிகா கொஞ்சினாள்.

”தீபு… வீட்ல தானே இருக்க.. ஒரு எமர்ஜென்ஸி.. உன் அப்பாவோட மெடிக்கல் ஃபைல் எடுத்துட்டு உடனே ந்யூ ஹாஸ்பிடல் வா..  அம்மாட்ட ஒண்ணும் சொல்லாதே.”

“ஏன்.. என்னாச்சு.. அப்பாக்கு என்னாச்சு”

“சின்ன ஆக்சிடெண்ட்.. நல்லாருக்கார்.”

“ப்ளீஸ்.. சொல்லுடா.. அப்பாக்கு ஒண்ணுல்லேல்ல..”

“நல்லாருக்கார். வா.”

ரசுராமன் தூங்கிக் கொண்டிருந்தார்.

தீபிகா மெளனமாய் சுவரை வெறித்துக் கொண்டிருந்தாள்.

“பயப்படாதே தீபு.. அப்பாக்கு ஒண்ணுல்ல..”

“என்ன நடந்துச்சு மது?”

“பஸ்ல கூட்டம்.. சடன் ப்ரேக் அடிச்சுருக்காங்க. இவர் தடுமாறி பஸ்சுக்குள் விழுந்துட்டார். கூட்ட நெரிசல் மிதிச்சுட்டாங்க.. இப்ப நல்லாருக்கார். ஒரு அரைமணி நேரத்துல மயக்கம் தெளிஞ்சுடும். வீட்டுக்கு அழச்சிட்டு போய்டலாம்.”

என் கண்களுக்குள் பார்த்தாள்.

“என்ன?”

“பொய் சொல்லாதடா..”

“என்ன பொய்?”

”ரிசப்ஷன்ல சொல்லிட்டாங்க.”

”இல்ல.. இல்ல”

முகம் பொத்தி அழுதாள்.

“அசிங்கமா இருக்கு மது.. என் அப்பாவா?”

“அதெல்லாம் இல்ல.. கூட்டத்துல தெரியாம கை பட்டுருக்கும்.”

“ச்சீய்.”

“நான் போறேன்.. நீ டிஸ்சார்ஜ் பண்ணி ஆட்டோல அனுப்பி விடு.”

“தீபு..”

கோபமாக கிளம்பினாள்.

ம்ருதுளா பதட்டமாகப் பேசினாள்.

“நேத்து நீ ஏன் ஆபிஸ் வரலை.. அன்னைக்கு என்னாச்சு அந்த ஆளுக்கு?”

“உனக்கு ஒரு மெய்ல் அனுப்பிருக்கேன்.. கால கட் பண்ணிட்டு உடனே படிச்சுட்டுக் கூப்பிடு..:

“என்ன மெய்ல்?”

முதல்ல படிச்சுட்டு கூப்பிடு.”

பத்து நிமிடத்தில் கூப்பிட்டாள்.

“அது யார்?”

“பரசுராமன்.. தீபிகாவோட அப்பா. என் வருங்கால மாமனார்..”

“அய்யோ”

”நான் எவ்ளோ மறச்சும் தீபுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு.. அவ அப்பாக்கிட்ட கடுமையா பேசிருக்கா..”

தயங்கினேன்.

“என்னாச்சு..?”

“அன்னைக்கு நைட் தொங்கிட்டார். சூயிஸைட்..”

”ஓ மை காட். நான் பாக்கணும்.. நான் பாக்கணும்”

“நேத்தே எரிச்சாச்சு..”

“இல்ல..இல்ல..இல்ல நான் தீபூவையும் அவ அம்மாவையும் பாக்கணும்.”

“கண்டிப்பா.. தீபு உன்ன பாக்க வெய்ட் பண்ணிட்டு இருக்கா.”

ரசுராமன் படத்துக்கு கீழே ஒரு சுடர் அசைந்து கொண்டிருந்தது.

வீட்டில் வேறு எவருமில்லை.

தீபிகாவின் அம்மா சுவரில் சாய்ந்திருந்தார். 

அவர் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

தீபிகா கண் பொத்தி நின்றிருந்தாள்.

ம்ருதுளா அவர் படத்தின் முன் தள்ளாடி சரிந்தாள்.

கதறினாள்.

தீபிகா குனிந்து அவள் முதுகு தொட்டாள்.

கை கொடுத்து எழுப்பினாள்.

ம்ருதுளாவின் கண்ணீர் துடைத்தாள்.

“அப்பாவை மன்னிச்சிடு ம்ருது. அவரோட கடைசி வேண்டுகோள்”.

ம்ருதுளா உடைந்து போய் அவளைக் கட்டிக் கொண்டாள்.

“நாந்தானே.. நாந்தானே காரணம்…”

ம்ருதுளா தேம்பினாள்.

தீபிகா மெளனமாய் திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.

*********

p.santhanakrishnan2@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button