நேர்காணல்கள்

”இருளுக்குள் புதைத்து, வெளியேற மறுப்பவன்” -கார்த்திகைப் பாண்டியனுடனான நேர்காணல்.

நேர்கண்டவர் : க.விக்னேஷ்வரன்.

தமிழ் இலக்கியச் சூழலில் வளரும் இளம் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இதுவரை ஒரு சிறுகதைத் தொகுப்பு (மர நிறப் பட்டாம்பூச்சிகள்) மற்றும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் (எருது, துண்டிக்கப்பட தலையின் கதை மற்றும் சுல்தானின் பீரங்கி) , மொழிபெயர்ப்பு நாவல் (ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்) மற்றும் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு (நரகத்தில் ஒரு பருவகாலம்) ஆகியவற்றை வெளியிட்டு தொடர்ந்து இயங்கும் ஒரு படைப்பாளி,  வாசகசாலை முதலாமாண்டு விழாவில் சிறந்த சிறுகதைத் தொகுப்பாக ”மரநிறப் பட்டாம்பூச்சிகள்”   வாசகசாலையின் ”தமிழ் இலக்கிய விருதுகள் 2015”  விருதை பெற்றது   என்பதும் குறிப்பிடதக்கது.

நமது இணையதளத்திற்காக அவரின் ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ சிறுகதைத் தொகுப்பு மற்றும் அவரின் மொழிபெயர்ப்புகளை முன்வைத்து  க.விக்னேஷ்வரன் நடத்திய நேர்காணல்.[/author]

தமிழ் இலக்கியச் சூழலில் நீங்கள் வளர்ந்து வரும் ஒரு படைப்பாளி. சிறுகதை என்கிற வடிவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் அல்லது அணுகுகிறீர்கள்?

வலசையில் வெளியான சிறுகதைகளை “இரண்டு பிக்சல் குறைவான கடவுள்” என்கிற தலைப்பில் நேசமித்ரனும் நானும் தொகுத்தோம். சிறுகதை, அதை எழுதியவரைப் பற்றிய குறிப்பு, தன்னுடைய உலகம் என்னவாக இருக்கிறது எனும் எழுத்தாளரின் வாச்சியார்த்தம், கதையைப் பற்றிய விமர்சனம் என வடிவ ரீதியாக சில புதிய முயற்சிகளை அந்தத் தொகுப்பில் செய்திருந்தோம். கே.என்.செந்திலின் ஒரு கதையும் அந்த தொகுப்பில் உண்டு. தன்னுடைய உலகத்தைப் பற்றிச் சொல்லும்போது அவர், “ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக இருக்கும் இந்த வாழ்க்கை எனக்குப் போதுமானதாக இல்லை, எனவே வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையை என் கதைகளின் வழியே நான் வாழ்ந்து பார்க்கிறேன்” எனச் சொல்லியிருப்பார். இந்த வார்த்தைகள் எனக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன, ஆனால் அதன் நேரெதிர் அர்த்தத்தில். ஏன் இந்த வாழ்க்கை ஒற்றைப் பரிமாணம் கொண்டதாகச் சுருங்கிப்போனது என்கிற ஆழ்மனதின் விசாரணையே என் கதைகள் என்று நம்புகிறேன். தனிமனித உலகம் இன்று என்னவாக இருக்கிறது, அவனையும் இந்த சமூகத்தையும் இணைக்கும் கண்ணிகள் அறுபடும் தருணங்களில் அவன் நிகழ்த்தும் எதிர்வினைகள் என்ன என்பதையே நான் மீண்டும் மீண்டும் என் கதைகளில் எழுதிப் பார்க்கிறேன். ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளாக இருந்தாலும் அவை சொல்லப்படாத பார்வைக்கோணத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்பதை மட்டுமே அளவுகோலாக வைத்துக் கொண்டு அத்தகைய உந்துதல்களைத் தரக்கூடிய கதைகளை மட்டுமே எழுத விழைகிறேன்.

21ஆம் நூற்றாண்டில் மனித வாழ்வு எவ்வளவோ தூரம் நகர்ந்து வந்திருக்கிறது, நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் வீச்சு அதிகமாகிறது, கலை வளர்ச்சியும் அதன் உச்சத்தில் இருக்கிறது. சொல்லப்போனால், இங்கு எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ச் சிறுகதை வடிவங்களில் இன்னும் சற்று தேக்க நிலை இருக்கிறதா அல்லது ஆரம்பித்த இடத்திலேயே அதன் வடிவம் இன்னும் தேங்கிக் கிடப்பது மாதிரியான தோற்றம் இருக்கிறதா?

அல்தூஸ் ஹக்ஸ்லி எழுதிய “Brave New World” என்கிற நாவல் 1931-ல் வெளியானது. மனித வாழ்வின் அத்தனை சாராம்சங்களையும் தனதாக்கிக் கொண்டு தொழில்நுட்பவியல் இந்த உலகத்தை ஆள்வதாக எழுதப்பட்ட ஒரு டிஸ்டோபியன் நாவல். கிட்டத்தட்ட தொண்ணூறு வருடங்களுக்குப் பிறகு நாம் தற்போது அந்தச் சூழலைத்தான் வந்தடைந்திருக்கிறோம். சமூக ஊடகங்கள், கலைகளின் வளர்ச்சி, மாற்றங்கள் என நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மனிதனின் அடிப்படை உணர்வுகள் என்பவை மாறக்கூடியதா என்ன? எப்போதெல்லாம் மனித இனம் தங்களின் அடிப்படை ஆதாரங்களை மறந்து சங்கடங்களில் சிக்கிக் கொள்கிறதோ, அப்போதெல்லாம் அவர்களை மீட்டெடுக்கும் பணியைக் கலைகளே செய்து வந்திருக்கின்றன. எத்தனை இன்னல்களும் மாற்றங்களும் வந்தாலும் கலையின் இடத்தை இட்டு நிரப்ப கலையால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். இந்தப் புள்ளியிலிருந்துதான் தமிழ்ச் சிறுகதைகளின் தற்கால சூழல் குறித்தும் உரையாட முடியும். தமிழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே உச்சத்தைத் தொட்ட படைப்புகள் உருவாகி வந்திருக்கின்றன. அகம்/புறம் என இருவேறு பாதைகளில் பயணிக்கக்கூடிய கதைகள், மொழியின் வழியே உச்சம் தொட்ட கதைகள் என மிக நீண்ட பாரம்பரியம் நமக்கு உண்டு. இன்றளவும் அது தொடர்வதாகவே உணர்கிறேன், தேக்க நிலை என்றெல்லாம் சொல்லி விட முடியாது. பாலை நிலவன் (மனதின் அகவழிப் பயணத்தின் கதைகள்), குமார் அம்பாயிரம் (தொல்குடி மனதின் கதைகள்), பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (நவீன நகரத்தில் சிக்குண்டிருக்கும் தற்கால தொழில்நுட்ப மனிதனின் கதைகள்), சிவசங்கர்.எஸ்.ஜே (வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும் பின் தலித்தியக் கதைகள்) என நிறையக் குரல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தவிரவும் சுனீல் கிருஷ்ணன், தூயன், சித்ரன் என நம்பிக்கை தருகிற புதிய குரல்களும் இந்தக் காலகட்டத்தில்தான் உருவாகி வந்திருக்கின்றன. இவர்களெல்லாம் என்னுடைய வாசிப்பின் வழி நான் கண்டடைந்த மனிதர்கள். ஆக, இந்தியாவின் மற்ற மொழிகளோடு ஒப்பிட தமிழில் சிறுகதைகள் தங்களுக்கான சரியான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

மர நிறப் பட்டாம்பூச்சிகள் உங்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அதாவது, மொழிபெயர்ப்புகள் அல்லாத உங்கள் சிந்தனையிலிருந்து உருவாகிய தொகுப்பு. இப்போது அந்தத் தொகுப்பைப் பற்றி நீங்கள் முன்வைக்க விரும்பும் சில நல்ல விடயங்கள் எவை எவை? முக்கியமாக, சுய விமர்சனம் ஏதேனும்?

என்னளவில் திருப்தி தராத எந்தவொரு படைப்பையும் நான் பொதுவெளியில் பார்வைக்கு வைத்ததில்லை. மர நிறப் பட்டாம்பூச்சிகளின் அத்தனை கதைகளும் எனக்கு மிக அணுக்கமானவையே. இன்னும் கொஞ்சம் ஆழமாக எழுதிப் பார்த்திருக்கலாம் என்கிற எண்ணத்தைத் தந்த கதை என பெருத்த மார்புகளையுடைய ஆணின் கதையைச் சொல்லலாம். புறத்தின் நிகழ்வுகளைத் தீவிரமாகப் பதிவு செய்த அளவுக்கு கதாநாயகனின் அகம் சார் நெருக்கடிகளை தீவிரமாகப் பதிவு செய்யாமல் போனதாக உணர்கிறேன். முன்னுரை எழுதிய லக்ஷ்மி சரவணகுமார், தொகுப்புக்கு விமர்சனம் எழுதிய சுனீல் கிருஷ்ணன், ரா.கிரிதரன் என அனைவருமே அந்தப் பகுதியை குறிப்பிட்டுச் சொல்லி இருந்தனர். மற்றபடி, முதல் தொகுப்பு என்ற முறையிலும் குறைந்தபட்சம் ஒரு பார்வையாளனவாகவாவது நான் முழுமையாக நிறைந்திருக்கக்கூடிய கதைகள் என்கிற வகையிலும் மர நிறப் பட்டாம்பூச்சிகள் எனக்கு நிறைந்த மகிழ்ச்சியைத் தந்த தொகுப்புதான். சுய விமர்சனம் எனச் சொல்ல வேண்டுமென்றால், சுயத்திலிருந்து வெளியேறி மற்றவர்களின் கதைகளை அவர்களின் உலகத்துக்கு உள்ளிருந்து எழுதிப் பார்க்க வேண்டும் என்பதே. இரண்டாவது தொகுப்பின் கதைகளில் எந்த இடத்திலும் என்னுடைய நிழல் கவிந்து விடாமலிருக்க வேண்டும் என்பதில் சற்று கவனமாயிருக்கிறேன்.

போகன் சங்கர் ‘கார்த்திகைப் பாண்டியனின் அகவுலகம் ஐரோப்பியனின் அகவுலகம் குறிப்பாக பிரஞ்சு மனிதனின் உலகம்’ என்கிறார்! இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? (முக்கியமாக ருஷ்ய மற்றும் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் தாக்கம் உங்களிடம் இல்லை என்பதை)

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எனக்கும் போகன் சங்கருக்கும் பழக்கமுண்டு. என்னுடைய நல்ல நண்பர். எழுத்துக்கு வெளியிலும் என்னைப் பற்றி நன்கறிந்தவர். நான் இருளுக்குள் என்னைப் புதைத்து வைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற மறுப்பவன். ஆனால் அவர் இருளிலிருந்து ஒளியை நோக்கி தன் படைப்புகளை நகர்த்திச் செல்பவர். ஒரு வகையில் பார்த்தால், ஆடியில் தெரியும் எனது எதிரிடை பிம்பம்தான் போகன். வாசிப்பு, கிளாசிக்குகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்பு, ஃபுட்பால் ஈடுபாடு என என்னை பற்றிய சங்கதிகளை எல்லாம் ஒரு புள்ளியில் இணைத்தே அவர் என்னை ஒரு பிரெஞ்சு மனிதன் என்கிறார். எழுத்துக்கான உந்துதலை நான் ஆல்பெர் காம்யூவிடம் இருந்தும் வடிவத்தை அலென் ராப் கிரியேவிடம் இருந்தும் சுவீகரித்துக் கொண்டவன். அதன் காரணமாகவே வாழ்வின் அபத்தத்தைப் பேசும் கதைகளை சிதறுண்ட வடிவத்தில் எழுதிப் பார்க்கும் என் கதைகளை ஐரோப்பிய மனதோடு ஒப்பிட்டுப் பார்க்க போகனுக்குத் தோன்றுகிறது. தனிமனித உலகம், மரணம் மற்றும் உடல் என்கிற கருதுகோள்கள் என நான் எழுதுகிறவை யாவும் ஒரு ஐரோப்பிய மனதின் சிந்தனையே என அவர் சொல்வதை ஓரளவுக்கு நானும் ஒத்துக் கொள்ளவே செய்கிறேன். குறிப்பிட்ட நிலத்தின் தடங்களை விலக்கி மொத்த பிரபஞ்சத்துக்குமான ஒரு மனதின் கதையை எழுதிட முயற்சி செய்கையில் அது ஒரு பிரெஞ்சு மனதுக்கு நெருக்கமானதாக அமைகிறது. போலவே, ருஷ்ய மற்றும் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நான் பெரிதாக வாசித்ததில்லை என்பதுதான் உண்மை. ரூல்ஃபோவின் எரியும் சமவெளியும் பெட்ரோ பெரோமாவும் தவிர மார்க்குவேஸோ போர்ஹேசோ என்னை அவ்வளவாகப் பாதித்ததில்லை. அறம் என்கிற ஒன்றை நம்பாத என் மனமும் அதற்கான காரணம் என்று சொல்லலாம்.

இந்த சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளில் இருத்தலியம் மற்றும் காம்யூவின் அபத்தவாதம் என்பது ஒரு மையமாக வருகிறது. தமிழ்ச் சமூக வாழ்வியலில் இருத்தலியல் மற்றும் அபத்தவாதம் சார்ந்த பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா காரணம் இருத்தலியம் மற்றும் அபத்தவாதம் பேசப்பட்ட காலத்திலிருந்த உலக அரசியல் நிலை வேறு (முக்கியமாக உலகப்போர்கள்) ஆனால் இன்று தமிழ்ச்சமூகம் என்பது அப்படிப்பட்ட வாழ்வியல் நெருக்கடிகளைச் சந்திக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே?

இந்த வாழ்க்கையைப் போல மிக மோசமான அபத்தம் வேறொன்றுமில்லை எனும் என் நிலைப்பாட்டையே கதைகளாக எழுதுகிறேன். அரசியலும் சமூகமும் என்னவாக மாறினாலும் மனித வாழ்வின் துயரங்களும் அபத்தங்களும் எப்போதும் தொடரக்கூடியவையே. ஒரு உதாரணத்துக்கு, இன்றைய சமூக ஊடகங்களை எடுத்துக் கொள்வோம். தொழில்நுட்பம் தன் உச்சத்தை தொட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மக்களனைவரின் கையிலும் சக்திவாய்ந்த ஒரு செவ்வகப்பெட்டி இருக்கிறது. அதற்குள் நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்களுக்கென ஒரு புதிய உருவத்தை வரித்துக் கொள்ளலாம், உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் காதல் செய்யலாம், அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்துத் தீவிரமாகக் களமாடவும் செய்யலாம். ஆனால் நிஜத்தில் களமிறங்கிய மறுகணம் அரசு எந்திரம் உங்களை எந்தத் தடயமுமின்றி துடைத்தழித்து விடும் என்பதுதானே நிதர்சனம்? உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் தீர்மானிப்பது நீங்கள் மட்டுமில்லை என்பதை உணரும்போது இதைவிட வாழ்வில் வேறென்ன பெரிய அபத்தம் இருக்க முடியும்? மெய் நிகர் உலகில் கட்டற்ற சுதந்திரத்தோடு இருக்கும் ஒரு மனிதனையும் சின்னதொரு செயல்பாடும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகிற மெய்யான உலகின் மனிதனையும் ஒப்பிட அது மாபெரும் முரணாக மாறுகிறதல்லவா? இந்தக் கணங்களே என் கதைகளுக்கான அடிப்படை கச்சாப்பொருட்களாக மாறுகின்றன. இவை யாவற்றையும் தனிமனித வாழ்வுக்குள் பொருத்திப் பார்க்கும் களங்களே என் கதைகள்.

மர நிறப் பட்டாம்பூச்சிகளில் இப்படிப்பட்ட மனிதர்கள் தொடர்ந்து வருகிறார்கள், வாழ்க்கை மீது பற்றற்று இருப்பது, பெண்ணுடல் மீது அதீத ஆர்வம் கொண்ட மனிதர்கள், நடுத்தர வர்க்க மனிதர்கள் மற்றும் அவர்களின் உள்மன ஆசைகள், மரணம் பற்றிய அவர்களின் தொடர் கனவுகள், பெரிய நகரம் பற்றிய பிம்பத்தை உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்கள், தங்களுக்குள் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டேயுள்ள நபர்கள். இவர்களெல்லாம் தஸ்தவெஸ்கியின் படைப்புகளில் வருபவர்களை நினைவுறுத்துகிறார்கள். ஒருவேளை அவரின் பாதிப்பு உங்களுக்குள் அதிகமாக இருக்கிறதா?

தஸ்தவெஸ்கியின் ஒரு வரியைக் கூட நான் வாசித்ததில்லை. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எனக்குள் இருக்கும் வன்மத்தையும் சந்தேகத்தையும் அவருடைய எழுத்துகளை வாசிப்பதால் இழக்க நேரிடும் என்கிற பயத்தின் காரணமாகவே அவரைத் தவிர்க்கிறேன். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள சங்கதிகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின், மிகத்துல்லியமாகச் சொல்வதெனில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதனொருவன் வாழ்வில் எதேச்சையாகச் சந்திக்கக்கூடிய சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான எதிர்வினைகள். எனக்கு நேர்ந்த சம்பவங்கள், ஒரு பார்வையாளனாக நான் பார்த்த விஷயங்கள், எனக்குச் சொல்லப்பட்ட சங்கதிகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவற்றின் எண்ணற்ற சாத்தியங்களை எழுதிப் பார்க்கவே முனைகிறேன். ஒரு வகையில் இந்தக் கதைகள் யாவுமே எனக்குள் நான் நடத்திக் கொண்ட உரையாடல்கள்தான். ஏதோ ஒரு வகையில் இவை தஸ்தவெஸ்கியின் படைப்புலகத்துக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் சொல்வதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்.

முழுத் தொகுப்பிலும் சற்று அதிர்ச்சியடைய வைக்கும் சிறுகதை கன்னியாகுமரி. இதற்கு விமர்சனம் வந்ததா எனில் அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

மர நிறப் பட்டாம்பூச்சிகளின் பேசுபொருட்கள் என இரண்டு சங்கதிகளைச் சொல்லலாம். காமமும் மரணமும். தொகுப்பின் முதல் கதையான நிழலாட்டத்தில் இவற்றை கதையின் நாயகன் வெளிப்படையாகவே தெரிவிக்கிறான். தொகுப்பில் காமத்தின் வெவ்வேறு சிக்கல்களைப் பேசும் மூன்று கதைகளை ஒரு trilogy ஆக எழுதிப் பார்த்தேன். மர நிறப் பட்டாம்பூச்சிகள் – முதன் முறை புணர்ச்சியில் ஈடுபட்டுத் தோற்பவனின் மனநிலை / ஒருபால் புணர்ச்சியாளனின் மனநிலை. பெருத்த மார்புகளையுடைய ஆணின் கதை – மனதளவில் ஆணாக இருந்தாலும் உடலின் மாற்றங்களால் அவதிப்படுகிறவனின் கதை. கன்னியாகுமரி – வாழ்வின் யாவையும் வெறுத்து மரணத்தை நோக்கி நகர்ந்தாலும் காமத்தைத் தவிர்க்கவியலாத ஒரு வயது முதிர்ந்தவனின் கதை. முதலிலேயே சொல்லி விடுகிறேன், இவை அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்ட கதைகளல்ல. காமத்தின் தடங்களை விலக்கி அவை உண்டாக்கும் மனச்சோர்வையும் வெறுமையையும் பேச முற்படும் கதைகள். எனவேதான் இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. பெண்ணுக்குள் தாய்மையைத் தேடியலையும் நரேந்திரன் (விவேகானந்தர்), தன் விருப்பத்துக்காக எதையும் பலியிட தயாராயிருக்கும் ராமநாதன் என இரண்டு எதிரெதிர் உலகங்களைப் பேசும் கதை எவ்வாறும் புரிந்து கொள்ளப்படும் என்கிற சந்தேகத்தோடுதான் அதை எழுதினேன். ஆனால் நான் நினைத்ததைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த எதிர்வினைகளே வந்தன. எளிதில் தொட முடியாத இடத்தை சரியான வகையில் எழுதிப் பார்த்திருக்கிறார் என்கிற தோழர் மணிமாறனின் வார்த்தைகள் மிகுந்த உற்சாகத்தைத் தந்தன. ஆனால் மொத்தத் தொகுப்பையும் கொண்டாடித் தீர்த்த கவிஞர் ராஜ சுந்தரராஜன் இறுதியில் ராமநாதன் மரணத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பது லட்சியவாதத்தை நோக்கி கதையை நகர்த்துகிறது என குற்றஞ்சாட்டினார். என்னளவில் நான் எழுதிய கதைகளில் எனக்கு மிக நெருக்கமான கதைகள் என கன்னியாகுமரியையும் பரமபதத்தையும்தான் சொல்வேன்.

‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ சிறுகதையை வாசிக்கும்போது லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் சாயல் தெரிந்தது. இந்தச் சிறுகதை எழுதத் தோன்றிய பின்புலம் பற்றிச் சொல்லமுடியுமா?

தமிழ் இந்துவில் சஞ்சீவ் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்தார் – குடிநோயாளிகளைப் பற்றிய தொடர். அவர்களின் காதுகளில் ஒலித்து கொண்டேயிருக்கும் குரல்களைப் பற்றிய ஒரு விரிவான வர்ணனை அதில் வந்தது. எனக்கு அந்தப் பகுதி மிகவும் சுவாரசியத்தைத் தர, காதுகளில் ஒலிக்கும் குரல் என்கிற சங்கதியை எடுத்துக் கொண்டே. வெகு நாட்களாகவே தொன்மங்களை reverse செய்யும் ஒரு கதையை எழுத வேண்டும் என்கிற ஆசை எனக்குள் இருந்தது. அதை எழுதுவதற்கான அடிப்படை tool ஆக இந்தக் குரல் சமாச்சாரம் பயன்படும் என்பது புரிந்தது. எனில் கதைக்கான வடிவத்தைத் தீர்மானிக்கும் சமயத்தில் அலெஹாந்த்ரோ ஹொடொரோவெஸ்கியின் ஹோலி மௌண்டைன் திரைப்படம் தந்த பாதிப்பில் ஏசு கிறிஸ்துவின் ஏழு வார்த்தைகளை எடுத்துக் கொண்டு அந்தக் கதையை எழுதத் தொடங்கினேன். அரசியல்ரீதியான சிக்கல்களைத் தெளிவாக பேசக்கூடிய ஒரு கதையை நான் எழுதி இருக்கிறேன் என்றால் அது இந்தக்கதைதான்.

சிறுகதை எழுதும்போது நீங்கள் கருத்தில் கொள்ளும் முக்கியமான விடயங்கள் மற்றும் திட்டங்கள் (இது சாதாரண கேள்வியாகத் தோன்றலாம் ஆனால் வளரும் படைப்பாளிகளுக்கு உங்கள் பதில் உதவக்கூடும் என்பதால் கேட்கிறோம்)

எழுதுவதற்கென பெரிய திட்டங்கள் எதையும் நான் வைத்திருப்பதில்லை. சொல்கிற விசயம் புதிதாக இருக்கிறதா அல்லது அதற்கான வடிவம் புதிதா என்பதை மட்டும் பார்ப்பேன். கதைக்கான கரு தோன்றினால் அதை அப்படியே விட்டு விடுவேன். மனம் அதைப் பற்றித் தொடர்ச்சியாக சிந்திக்கும்போது அந்தக்கதைக்குத் தேவையான சங்கதிகள் எல்லாம் ஒவ்வொன்றாகச் சேர்ந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் கதை என் மனதுக்குள் முழுமையடைந்த பிறகு அதை எழுதி விடுவேன். சில சமயங்களில் நான் எண்ணியது ஒன்றாகயிருக்க எழுதும்போது கதை வேறொரு திசையில் நம்மை இழுத்துச் செல்லும் நேரங்களும் உண்டு. அவ்வாறு நிகழ அனுமதிப்பதே கதைக்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கும். தேவையற்ற வர்ணனைகளைத் தவிர்ப்பதும் பெரும்பாலும் உரையாடல்களைப் பயன்படுத்தாமல் எழுதுவதையும் என் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் சிறுகதைத் தொகுப்பை முழுவதும் வாசித்து முடித்த பின்பு தோன்றியது, ஏன் இவர் தொடர்ந்து நிறையச் சிறுகதைகளை எழுதுவதில்லை? இரண்டாவது மொழிபெயர்ப்பு மற்றும் சுய படைப்புகள் இவற்றில் எதில் ஈடுபடும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள்?

என்னுடைய எல்லைகளை நன்கு அறிந்திருப்பவன் என்பதால்தான் வெகு குறைவாக எழுதுகிறேன். வாசிப்பின் வழி உருவாகி வந்தவன் நான். சிறுகதைகள் பற்றி எனக்கென சில வரையறைகள் இருக்கின்றன, இதை நிச்சயம் நாம் எழுதித்தான் ஆக வேண்டுமென்கிற அழுத்தம் மனதுக்குள் உண்டாகும்போது மட்டுமே எழுதுகிறேன். எனவேதான், வருடத்துக்கு அதிகபட்சம் போனால் இரண்டு சிறுகதைகளைத்தான் என்னால் எழுத முடிந்திருக்கிறது. மர நிறப் பட்டாம்பூச்சிகள் தொகுப்பு வெளியான ஆகஸ்ட் 2015-க்குப் பிறகு மூன்று கதைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். கடைசியாக எழுதிய கதை ஆகஸ்ட் 2017 நடுகல் இதழில் வெளியானது. அதன்பிறகு ஏதும் எழுதவில்லை. எழுதுவதற்கான மனநிலை வாய்க்காது ஒரு காரணமெனில் அந்தக் கதைகளுக்கு என்னால் நியாயம் செய்ய முடியுமா என்கிற பயமும் ஒரு காரணம். இந்த நிலை மாறும் என்றே நினைக்கிறேன். சென்ற மார்ச் மாதம், கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணனோடு ஒரு நீண்ட உரையாடல் நிகழ்ந்தது. அவர் என்னிடம் சொன்ன மிக முக்கியமான வரிகள் – மொழிபெயர்ப்புகளை காட்டிலும் சிறுகதைகளே உனக்கான உண்மையான அடையாளம், எனவே அவற்றை எழுதுவதில் கவனம் செலுத்துங்கள் என்றார். அதில் உள்ள உண்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்றாலும் மொழிபெயர்ப்புகளையும் நான் மிகுந்த மன ஈடுபாட்டோடுதான் செய்கிறேன். அவை தருகிற சவால்களையும் சிக்கல்களையும் விரும்பியே ஏற்கிறேன். இலக்கியம் சார்ந்த செயல்பாடு என்கிற வகையில் சிறுகதையோ அல்லது மொழிபெயர்ப்போ, இரண்டையும் ஒன்றாகவே பாவிக்கிறேன்.

இன்றைய தமிழ் மொழிபெயர்ப்புத்துறை எப்படி இருக்கிறது? இரண்டாவது மொழிபெயர்ப்பு என்பது இங்கு சரியாகக் கையாளப்படுகிறதா? காரணம், அவற்றின் மீது வைக்கப்படும் தொடர் விமர்சனங்களினால் இதைக் கேட்கிறோம்.

தமிழ் மொழிபெயர்ப்புத்துறை எனப் பொதுவாகச் சொன்னால் அதன் சாதக பாதகங்கள் இரண்டையும் நாம் பேசியாக வேண்டும். சாதகம் என்று பார்த்தால், மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கைகள் பெருகி இருக்கின்றன. புதிய, நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் வந்திருக்கிறார்கள். வெறும் பெயர்களாக மட்டுமே இருந்த வெளிநாட்டு எழுத்தாளர்கள் இன்று தொடர்ச்சியாக மொழிபெயர்க்கப்படுகிறார்கள். புத்தகங்களின் உரிமைகளை வாங்கி மொழிபெயர்க்கும் வழக்கம் வந்து விட்டிருக்கிறது. நம்முடைய படைப்புகளை ஒப்புநோக்குவதற்கான சாத்தியங்களையும் இந்த மொழிபெயர்ப்புகள் வழங்குகின்றன. பாதகம் என்றால், மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை பெருகியுள்ள அதே சமயத்தின் அவற்றின் தரம் என்னவாக இருக்கிறது என்கிற கேள்வி எழக்கூடும். ஆங்கிலம் அறிந்த ஒரு காரணத்துக்காகவே யாரேனும் இலக்கியப்பிரதிகளை மொழிபெயர்க்க முற்பட்டால் நான் அதைத் தீவிரமாக எதிர்ப்பேன். இலக்கியமும் வாசிப்புப் பயிற்சியும் இல்லாத நபர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது பிரதியின் ஆன்மாவை அவர்கள் தவற விடுகிறார்கள். மேலும் மொழிபெயர்ப்புகளின் மீதான விவாதம் என்று தமிழ் இலக்கியச்சூழலில் பெரிதாக ஏதும் நடைபெறுவதில்லை என்பதும் ஒருவகையில் துயரம்தான். கிட்டத்தட்ட முப்பதாண்டுக் காலமாக தமிழ் சிற்றிதழ் சூழலில் பெரிதும் சிலாகிக்கப்பட்ட கசார்களின் அகராதி ஸ்ரீதர் ரங்கராஜின் மொழிபெயர்ப்பில் வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது. அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பைக் கூட எங்கும் பார்க்க முடியவில்லை என்கிற துயரத்தை எங்குப் பதிவு செய்வது? தங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கும்போது மொழிபெயர்ப்புகள் இன்னும் செழுமையடையக்கூடும்.

மொழிபெயர்ப்பு செய்யும்போது எவற்றையெல்லாம் முக்கியமாகக் கருத்தில் கொள்கிறீர்கள்?

உள்ளடக்கத்திலோ வடிவ ரீதியாகவோ ஏதேனும் ஒரு புதிய சங்கதியைக் கொண்டிருக்கும் கதையைத்தான் மொழிபெயர்க்க விரும்புவேன். அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களைக் கண்டடைந்து அவர்களை மொழிபெயர்ப்பதென்பதை என் மனதுக்கு நெருக்கமாக உணர்கிறேன். பெரும்பாலும் மாஸ்டர்களை மொழிபெயர்க்கக்கூடாது என்கிற என்னுடைய நிலைப்பாட்டை சற்றே தளர்த்திக் கொண்டு தற்போது போர்ஹெஸின் “The Book of Imaginary Beings”-ஐ மொழிபெயர்த்து வருகிறேன்.

நீங்கள் மொழிபெயர்த்த மிஷிமாவின் ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ நாவல் மிக முக்கியமான ஒன்று. ஆனால் அது அதிகம் பேசப்படவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு உண்டா?

நம்முடைய தொகுப்பு / மொழிபெயர்ப்பு பேசப்படவில்லை என்கிற ஆதங்கம் நமக்குள் குடிகொண்டால் பிறகெப்போதும் நிம்மதியாகப் பணிபுரியவே முடியாது. தமிழ்ச்சூழல் இப்படித்தான் என்பதை அறிந்தே நாம் இயங்குகிறோம் எனும்போது அதைக் குறித்து வருத்தம் கொள்வது அவசியமற்றது. மிஷிமா எனக்கு மிக நெருக்கமான ஒரு எழுத்தாளர். வலசைக்காக அவரைப் பற்றிப் படிக்க ஆரம்பித்து அவருடைய Confessions of a Mask நாவலை வாசித்தேன். நிச்சயமாக அவரைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற உந்துதலின் காரணமாக அதே நாவலையே மொழிபெயர்த்தேன். நாவலின் முதல் அத்தியாயம் மிகக்கடினமான மொழியைக் கொண்டிருந்ததால் வாசிக்கச் சிரமமாக இருந்ததாக நிறைய நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த அத்தியாயத்திற்கு அந்த மொழி தேவைப்பட்டது. நாவலை மொழிபெயர்க்கும்போதே என்னுடைய பதிப்பாளரிடம் இந்த நாவல் விற்பனையாவது சிரமம் என்பதைச் சொல்லி விட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக நாவலின் முதல் பதிப்பு முழுதாக விற்று இப்போது இரண்டாவது பதிப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால் நாவலைப் பற்றி யாருமே பெரிதாகப் பேசாத சூழலில் புத்தகத்தை வாங்கியவர்கள் யார் அல்லது எதற்காக வாங்கினார்கள் என்பது இன்றளவில் எனக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்” என்பதைப் பார்த்தவுடன் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” போல அரசியல் சார்ந்ததாக இருக்கும் என்றெண்ணி வாங்கினார்களோ என்னவோ?

தமிழ் இலக்கியச்சூழலில் நீங்கள் ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பாளர். சிறந்த மொழிபெயர்ப்புகளை எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள். எதிர்காலத் திட்டங்கள் என ஏதேனும் உள்ளதா?

திட்டமிட்டு வேலை செய்வதற்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை. இந்த வருடம் புத்தகமே கொண்டு வரக்கூடாது என 2017 முழுதும் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்தேன். திடீரென்று ஒரு நாள் பிரம்மராஜன் ரைம்போ பற்றிச் சொன்னவுடன் நரகத்தில் ஒரு பருவகாலத்தை மொழிபெயர்த்தேன். 2019-ல் என் கதைகளை மட்டும்தான் எழுத வேண்டும், மொழிபெயர்ப்பில் ஈடுபட மாட்டேன் என்று சொல்லி வந்தேன். இப்போது போர்ஹெஸை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆக மனதுக்குத் தோன்றியதைச் செய்வோம், ஆனால் அதை ஒழுங்காகச் செய்வோம் என்பது மட்டுமே என் நிலைப்பாடு. இரண்டு நாவல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் உண்டு, ஆனால் எப்போது செய்வேன் என்று தெரியாது. இன்னும் சரியாகச் சொல்வதெனில், செய்வேனா என்றும் தெரியாது. லாஸ்லோ க்ரஸ்னஹோர்காயின் Satantango, மெசிடோனியா பெர்ணாண்டஸின் The Museum of Eterna’s Novel ஆகிய இரண்டு நாவல்கள்தான் அவை.

கடைசியாக, மொழிபெயர்ப்புகள் தாண்டி உங்களின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு அல்லது நாவல் எப்போது வெளிவரும்?

2021-ல் அடுத்த சிறுகதைத் தொகுப்பை கொண்டு வரவேண்டும் என்பது என் விருப்பம். நடக்கிறதா இல்லையா என்பதைக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button