1.கால உறக்கம்
வசந்தத்திடமிருந்து
விதவிதமாய்
வண்ணங்களையும் வாசனைகளையும்
பெற்றுக்கொண்ட
மலர்கள்
பருவத்தின் கொடையால்
மண்ணெங்கும்
மலர்ந்து நிறைகையில்
தேடிவந்து
தேன் குடிக்கும் தும்பிகள்
அன்னிச்சையாக
நிகழ்த்திடும்
அயல் மகரந்தச் சேர்க்கையினால்
சூல் கொள்ளத் தொடங்கும்
விதையொன்றிற்குள்
உறங்குகிறது
முளைத்தெழுந்து
வானத்தைத் துழாவிடும்
கிளைகளோடு
விரிந்து நிற்கப் போகுமொரு
விருட்சத்தின் காலம்.
2. ஒராயிரத்து ஒருத்தி:
தலைவிதிப்படி
தனக்கு மட்டும் தனியே நிகழ்வதாக
அவள் கருதிக்கொண்டிருந்த
பலதும்
வழியேவழியே பெண்கள் பலரும்
அனுபவித்துச் சென்றவைதான்
என்பதும்
அவற்றை
கடந்துதீரும்வரையில்
அவர்களும்
தன்போலவே
வெகுளியாகவும் வேதனையுற்றும்
வெதும்பிக் கிடந்தவர்கள்தாம்
என்பதும்
அவள்
அறிந்திடாதது
தெளிந்தவர்களுக்கு
தெரியும்
பெண்கள் ஆயிரமாயிரம்பேர்கள் அல்ல
ஒருத்திதான்
ஓராயிரம்முறை உயிர்த்தெழுந்து
உலவிக்கொண்டிருக்கிறாள்.