கவிதைகள்
Trending

கவிதைகள்- தமிழ் உதயா

தமிழ் உதயா

விழுங்கி உமிழ்ந்த வெயிலில்
குழைவு இல்லை
இம் மனிதர்களைப்போல
சுடர்விடலின்
மாய வெளிப்பாட்டோடு வர்ணங்களால் நிரப்புகிறது
ஈகைப் பிரகடனம் அதிர்கிறது
புசிக்கும் நெருப்புக்கு
நாக்கு தேவையாயில்லை
கூரிய உளியின் செதுக்கலில்
சிற்பத்தில் காணாமல் போகும் கல்லாய்
உலகம் சமைக்கிறேன்
உதட்டு வாசிப்புக்கு
மூங்கில் நெகிழ்வதற்கு
உப்புக்கடல் நுரைவழியேகிய
காற்றினால் இருக்கக் கூடும்
அக்கரையில் வேகமெடுத்த
அலையுடலைத் தாகம் தணிக்கும்
பாலியாற்றுப் படிக்கட்டு
திறந்த வெளி சிறைக்கூடத்தில்
என் மூச்சுக்காற்றில்

வியர்த்துக் கொண்டேன்

00
நினைவை கொளுத்திக்கொள்ள
எரிதலும் அணைத்தலும் வாசமெடுக்கும்
வாவிகள் எதற்காக
திரிகள் தேவையில்லை
ஊதுபத்திக்கும் கற்பூரத்திற்கும்
கரைதலும் புகைதலும்
மழை ஈரம் பாய்ச்சியவை
சுற்றிக்கொண்டு இருக்கின்றன
நிலம் தேடிய வேர்கள்
பூக்களுக்கு
மணமூட்டட்டும் நீரூற்று
இக்கரையில்
பாதை திரும்பிய நதியும்
சேருமிடம்

கடலின் அக்கரையில் இல்லைதானே

 

00
கை கோர்த்தலென்ன
வெற்றுச்சொல்லா
தோள் பற்றிக் கொள்கிறேன்
உயிரின் சொற்களை வடித்துப்பார்
நீர்ப்பாய்வு
என் நதிக்கு ரசவீச்சு
ஆசுவாசமாய் பருகும் வாய்ப்பு வாய்ப்பின்
நினைவின் மீதான உபரிவாசம்
சொற்சிக்கனம்
தூற்றல் மழையில் கிளம்பும்
மண்வாசம் போல
இழுத்து இழுத்து நுகர்கையில்
நரம்புமொழி வசீகரத்துள்
ஒருவித குழைவு நேரும்
நெடிய இரவை
சுருட்டிக் கொண்டு இறங்கினேன்
பாலையில்
மேலும் நிலா அழகு தானே…
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button