
கார்த்திக் பாலசுப்ரமணியனின், ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து…
’நட்சத்திரவாசிகள்’ என்னும் தன் நாவலுக்கு யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’ஒளிரும் பச்சைக் கண்கள்’. இந்நூலில் பனிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பத்துக் கதைகளின் கதை சொல்லல் தன்னிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணமாக எனக்குத் தோன்றுவது மனதின் உள்ளலைவுகளைக் கூறுவதற்கு இவ்வடிவமே ஏற்றதென அவர் கருதியிருக்கலாம். அவரது இந்த எண்ணம் சிறப்பாகக் கைகூடி வந்துள்ளதை இக்கதைகளை வாசிக்கும்போது உணரலாம்.
பனிரெண்டு கதைகளில் இரண்டு கதைகள் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிகழ்பவையாக உள்ளன. மூன்று கதைகள் தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றியதாக உள்ளன. இரண்டு கதைகள் ஆஸ்திரேலியாவில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டும் இரண்டு கதைகள் தந்தையின் நண்பரைப் பற்றிய கதைகளாகவும் உள்ளன. வாசித்தவுடன் தோன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனிக் கதைகள் என்று பரவசமடையும் மனதை அடக்குவதற்காகத்தான் இந்தத் தொகுப்பு முறை. இப்படித் தொகுக்க முயன்றாலும் ஒவ்வொரு கதையும் தன்னளவில் தனித்தவைதான் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
சுழல், மெய்நிகரி மற்றும் தனித்தலையும் நட்சத்திரம் மூன்று கதைகளும் தகவல் தொழில்நுட்பங்கள் எத்தனை ஆழமாக மனித வாழ்வில் ஊடுருவி சிக்கல்களையும் மனப்பிளவுகளையும் உண்டாக்குகின்றன என்பதைக் காட்டுகின்றன. சுழல் கதையில் சுட்டப்படும், இணையத்தில் பொருட்கள் வாங்குவதற்கான செயலிகள் செயல்படும் விதம் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. கணவன் மனைவி தனிமையில் உரையாடுவதை அறிந்து அதற்கேற்ப பொருட்களைப் பரிந்துரைக்கும் செயலியின் செயல்பாடு மனைவியின் நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை அவளது பரிதவிப்பை அழகாகக் காட்டுகிறார் கார்த்திக் பாலசுப்பிரமணியன். கதையின் முடிவு இது அத்தனையும் பிரமையோ என்ற மயக்கத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது. ’மெய்நிகரி’ கதையில் பிரிந்துபோன மனைவியை அதேபோன்ற குணநலன்களுடன் குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு அளிக்கும் நிறுவனத்தின் மூலம் பெறுவது பற்றியது. பதின்மூன்று ஆண்டுகள் மனைவியைப் பிரிந்து பெருந்துயரை அடையும் கணவன், அவளை மீண்டும் பெறும்போது, தான் அப்போது இயற்றிய சிறு தவறை திருத்திக் கொள்ளமாட்டான் என்பதையும் அவனுடைய தன்முனைப்பின் மென்நரம்பைத் தீண்டி மாற்றுவது இயல்வதல்ல என்பதையும் அழகாக விவரிக்கிறது இக்கதை. ’தனித்தலையும் நட்சத்திரம்’ கதை மனைவியின் கனவினை ஒரு கருவியின் மூலம் கண்காணிப்பதால் ஏற்படும் மனக்குழப்பங்களைப் பேசுகிறது. மனைவி காணும் கனவில் நிகழ்வதன் அர்த்தமென்ன என அறிவதற்குள் கணவன் அடையும் மன சஞ்சலங்களும் அதை அறிந்தவுடன் அடையும் அதிர்ச்சியும் இயல்பாகப் புனையப்பட்டுள்ளன.
இந்தக் கதைகளில் தொழில்நுட்பங்களின் சாத்தியங்கள் கூறப்பட்டிருந்தாலும் அவை கதையின் மையமல்ல. உலகில் எங்கும் எப்போதுமிருக்கும் கணவன் மனைவிக்கிடையே உள்ள மனச் சிடுக்குகளும் அவை களையப்படாமல் இருப்பதால் உண்டாகும் நெருக்கடிகளையுமே இக்கதைகள் மையமாகக் கொண்டுள்ளன என்பதில்தான் ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்படுகிறது.
ஜன்னல், ஒளிரும் பச்சைக் கண்கள் ஆகிய இரண்டு கதைகளும் கொரோனா காலகட்டக் கதைகளாக உள்ளன. வீடடைவு காலத்தில் தான் இருக்கும் வீட்டின் மற்றொரு அறையில் தங்க வைக்கப்படும் பெண்ணால் ஏற்படும் மனக்கிலேசங்களை ஜன்னல் கதை விவரிக்கிறது. அருகிலிருக்கும்போது வேண்டாம் என வெறுத்து விலக்கிய ஒன்றை ஆழ்மனம் விரும்பத் தொடங்கும்போது அது விலகிச் சென்றிருக்கும். இதனை மையமாக வைத்து கொரோனா காலகட்டத்தைப் பின்னணியாக வைத்து கதையைப் பின்னியுள்ளார் ஆசிரியர். ’ஒளிரும் பச்சைக் கண்கள்’ கதை வீடடங்கு காலத்தில் இல்லத்திலேயே இருந்து பணிபுரியும் கணவன் மற்றும் அவன் மனைவிக்கிடையே நிகழும் சிறு பிளவு எத்தனை பெரிதாக உருமாற்றமடைகிறது என்பதை விவரிக்கிறது. இக்கதையில் வரும் பூனையும் அதன் ஒளிரும் கண்களும் கதையை வேறொரு அமானுஷ்யத் தன்மைக்கு எடுத்துச் செல்கின்றன.
தொழில்நுட்பமோ கொரோனோவோ இல்லாத கதைகளான, ’முன் நகரும் காலம்’ மற்றும் ’புள்ளிக்குப் பதிலாக வட்டம்’ இரண்டு கதைகளையும் இத்தொகுப்பின் முதன்மைக் கதைகளென நான் கருதுகிறேன். அத்தை பெண்ணின் பிள்ளை இறந்ததற்கு துக்கம் கேட்கச் செல்லும் கதைதான், ’முன் நகரும் காலம்’. பிள்ளையை இழந்தவள் பெரும் துயரத்தோடு இருப்பாளென்றும் அவளுக்கு தற்போது இவனது வருகையும் வார்த்தையும் ஆறுதல் அளிக்கும் எனவும் கதைசொல்லி எண்ணுகிறான். ஆனால் நிகழ்வது இவன் எண்ணியதற்கு மாறாக. இக்கதைக்கான தலைப்பு மிகப் பிரமாதமாகப் பொருந்தியுள்ளது. ஆறுதல் அளிப்பதென்பதே ஒரு கொடை என்பது போன்ற ஆணவம் பலருக்கு இயல்பாகத் தோன்றிவிடுகிறது. ஆனால் துன்பமடைந்தவர், எவ்வளவு விரைவில் அதிலிருந்து வெளியேற முடியுமோ அதற்கான மன உந்துதலிலேயே இருப்பார்கள். தான் ஆறுதல் சொன்னதன் மூலமே அவர் அத்துயரிலிருந்து மீண்டார் அல்லது சொன்னால் மட்டுமே மீள்வார் என பலர் தவறாக எண்ணிக் கொள்கிறார்கள் என்பதை அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் எளிய நடையில் சொல்லிய இக்கதை முக்கியமான ஒன்றாகும். ’புள்ளிக்குப் பதிலாக வட்டம்’ கதை தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவினை வேறு கோணத்தில் காட்டுகிறது. இறந்துபோன அப்பா மகனுடன் உரையாடுவதும் எப்போதும் வெறுத்த அப்பாவை மகன் ஏற்றுக்கொள்வதுமான இக்கதையின் வடிவம் இத்தொகுப்பிலுள்ள மற்ற கதைகளிலிருந்து வேறுபட்டு சிறப்பாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நிகழும் கதைகளாக, ’இணை’ மற்றும் ’மண்’ ஆகிய இரண்டு கதைகள் உள்ளன. பிரேசில் நாட்டில் பிறந்து ஆஸ்திரேலியா வந்து பணியாற்றுபவனுக்கும் இந்தியாவில் பிறந்து அங்கு சென்று பணியாற்றும் ஒருவனுக்குமான நட்பு வாழ்வில் நிகழ்பவற்றை, ’இணை’ கதை காட்டுகிறது. இவனைப் போலவே இருக்கும் நண்பனின் இணைமேல் இவனுக்கு ஏற்படும் இனம்புரியாத வெறுப்பு ஏன் என்பதே இக்கதையின் மையம். கதையின் கடைசி பத்தி கதையை மீண்டும் மனதில் ஓட்டிப்பார்க்க வைக்கிறது. ’மண்’ கதை தங்கள் நிலத்தை இழந்த ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரின் துயரை, தமிழ்நாட்டில் நிலம் வாங்கிக் குவிப்பவரின் மகனின் கண்கள் வழியாக பார்ப்பதாக அமைந்துள்ளது. அந்த ஆளில்லாத தீவிலிருக்கும் சிறைச்சாலையும் பழங்குடியினரின் இசைக் கருவி எழுப்பும் ஒலியும் முக்கியமானவை.
இத்தொகுப்பிலுள்ள பெரும்பான்மையான கதைகளில் கதைசொல்லி ஆணாக இருந்து தன்னிலையில் சொல்வதாக அமைந்துள்ளது. ஆசிரியர் கூறவிரும்பும் கதைக்கு இவ்வடிவம் ஏற்றதென அவர் கருதியிருக்கலாம். ஆனால் இக்கதைகளில் பெண்களின் மனவோட்டம் பற்றி எதுவுமே கூறப்படவில்லை என்பது ஏதோ முழுமையடையாததாகத் தோன்றுகிறது. எல்லாக் கோணங்களையும் காட்டுவதற்கு இவை நாவல் இல்லை, சிறுகதைதான் என்று கொண்டாலும், வாசகருக்கு சிறு குறையாகத் தோன்றச் செய்யும் இதிலும் ஆசிரியர் கவனம் செலுத்தலாம் எனக் கருதுகிறேன்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கார்த்திக் பாலசுப்ரமணியனின் கதைகள் தொழில்நுட்ப சாதனங்கள் மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாததாக மாறியுள்ள நிலையில் மனிதர்களின் அகவுலகில் நிகழும் அல்லாடல்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. மனித மனம் ஒரு இணுக்கினால் கொள்ளும் சிணுங்கலையும் அது போடும் வேடங்களையும் காட்டுகிறது. சிறு சொல்லைக் கூறியதால் உண்டாகும் பெரும் பிளவையும், ஒரு சொல்லைக் கூறாததால் உண்டாகும் பிரிவையும் இவர் கதைகள் காட்டுகின்றன. இவை செயற்கையாக இல்லாமல் இயல்பானதாக புனையப்பட்டுள்ளதால் மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. இரவைப் பற்றிய வர்ணனைகள் இவரது கதையில் சிறப்பாக உள்ளன. உதாரணமாக, “தூரிகையால் தொட்டு வைத்த கரு மசியெனப் புள்ளியாய்த் தொடங்கி மெதுவாகப் பற்றி படர்ந்து பரவியது இருள்…” என்று தொடங்குகிறது ஒரு கதை. இவரது நாவலை வாசிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது இந்த, ’ஒளிரும் பச்சைக் கண்கள்’ சிறுகதைத் தொகுதி.
******