கவிதைகள்

கவிதைகள் -இரா.கவியரசு

 

1.புரட்சியாளர்கள்  

அடிக்கடி யாராவது

பொய்ச்சூடு வைத்து

நம்மைச் சொறிந்து விடுகிறார்கள்

மயிர்க்கால்கள் பூரித்து

புரட்சிக்கு தயாராகின்றன

 

புரட்சியாளருக்குத் தெரியும்

எந்த நரம்புகளை சுத்தியலால் தட்டினால்

புரட்சி புடைத்தெழும் என்று

 

திடீர் புரட்சியாளர்

போர்க்களத்தில் பிடறிமயிர் சிலிர்க்க

கணைத்துப் பாயும்

குதிரைகளைப் போல

நம்மைப் பாய்ந்தோடச் செய்கிறார் 

 

வரிசையாக வைக்கப்பட்ட

கூர்தீட்டப்பட்ட வாள்களில்

நாம் நம்மை பலி கொடுக்கிறோம்

 

‘போரில் இறந்தவர் மனதில் வாழ்கிறார் ‘

புரட்சியாளர் விளம்பரம் செய்கிறார்

 

போர் முழக்கம் செய்யச் சொல்லிவிட்டு

விமானத்தில் பறந்து

வெளிநாடு செல்லும் புரட்சியாளர்

திரும்பி வரும் போது

இறந்தவர்களை எண்ணுகிறார்

 

நம் இதயங்களை கரைந்தழச் செய்யும்

புரட்சியாளரின் ஒரு துளிக் கண்ணீர்

அடுத்த போருக்கு ஆயத்தப்படுத்தும்

 

புரட்சியாளர்களின் உடைகள்

வாடகை என்று நமக்குத் தெரியாது

அவர் சொந்தமாக எதுவும் 

பேசுவது கூட இல்லை

 

மிகச் சிறிய பிளேடால் 

கிழிந்து விடும் வெண்திரையில்தான்

நம் புரட்சியாளர்கள்

தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்

 

~~~~~~~~~~~~~~~

2. மாஸ்க்குகளின் காலம் 

    

மாஸ்க்குகளுக்கு 

வீடு இருக்கின்றது எப்போதும் 

 

துவைக்க 

அயர்ன் செய்ய 

மூக்கில் சரியாகப் பொருத்த 

ஆட்கள் இருக்கிறார்கள்

 

யாருமற்ற சாலைகளில் 

நடக்கும் போது துள்ளும் மாஸ்க்குகள் 

வீதிகள் பிரியும் இடத்தில் 

காத்திருக்கும் சைரனுக்கு பயந்து 

எத்தனை நாளைக்கு இப்படியென்று 

குறுக்கு சந்துகளில் ஒளிகின்றன 

 

மாஸ்க்குகளுக்கு 

விதவிதமாக திண்பண்டங்கள் 

சேகரித்த மூட்டைகளில் 

ஓட்டையிடும் எலிகளை வேட்டையாடுதல் 

என சூப்பராகச் செல்கிறது விடுமுறைக்காலம் 

 

எதையும் 

 ஃபெர்பெக்டாகச் செய்யும் மாஸ்க் 

சாம்பாருக்கு துவரம் பருப்பை 

மலரவிடவில்லையா என்கிறது 

என்னென்ன படிக்க வேண்டும் 

எப்படித் திரைப்படங்களைப் 

பார்க்க வேண்டும்

எப்போது குசு விட வேண்டும் 

முழங்கிக் கொண்டே இருக்கிறது 

 

அறிவிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாக

மூட்டைகளுடன் வரும் குழந்தைகளை 

நிறுத்துகிறது புதிய எல்லைக் கோடு

நோய்பரப்பும் கிருமிகளை 

உள்ளே விடாதீர்கள் என

அலறுகின்றன மாஸ்க்குகள் 

 

குழந்தைகள் முதியவர்களின் உயிரை 

விரும்பி உண்ணும் கிருமிகள் 

பெரிய மூக்கு மாஸ்க்குகளை 

எதுவுமே செய்வதில்லை 

 

மாசு படியுமென்றால் 

கிளைகளை வெட்டுவது

இலைகளைப் பிய்த்தெறிவது 

எல்லாமே கை வந்த கலை 

மாஸ்க்குகளுக்கு 

 

இறந்தவர்களின் எண்ணிக்கையை 

அறிவிக்கும் தொலைக்காட்சிகளை 

தூசி படியாமல் துடைக்கும் போது 

தங்களையறியாமல் அழுது விடும் 

மாஸ்க்குகளின் கருணை

வானை விடவும் பெரிது 

கடலினும் ஆழமானது 

~~~~~~~~~~~~~~~

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button