**எதிரெதிர் வினை**
இழு
தள்ளு
குழப்பங்களுக்கிடையே
இழுத்தடிக்கப் படுகின்றது
கண்ணாடி வாசல்…
நில்
கவனி
அதிகாரத்துக் கிடையே
அடங்காமல் பயணிக்கின்றது
சாலையில் வாகனம்…
இரவு
பகல்
வேளைகளுக்கிடையே
இயந்திரமாய் இயங்குகிறது
எலும்பு உடல்…
அன்பு
வெறுப்பு
உணர்வுகளுக்கிடையே
அலைமோதிக் கிடக்கின்றது
மனிதனின் தேவை…
வெற்றி
தோல்வி
போராட்டாங்களுக்கிடையே
விலாசம் தேடித் தவிக்கின்றது
இலட்சியங்களின் பயணம்…
உயர்வு
தாழ்வு
நிலைகளுக்கிடையே
தடுமாறிக் கிடக்கின்றது
பூமியில் வாழ்வு…
பிறப்பு
இறப்பு
நிர்பந்தங்களுக்கிடையே
அளவின்றியே கிடைக்கிறது
நல் அனுபவம்…
எதிரெதிர் வினைகளில்
எல்லாமுமே என்றாலும்
தன்னிலை அறிதலே
அவனவன் பொறுப்பாகுமே…!
*****. ***** ***** ***** *****
*புத்தகமே நீ என் பத்திரமே*
மேயும் என் விழிகளுக்கு
மாயமென மகிழ்வூட்டுகிறாய்
புரட்டும் என் விரல்களுக்கு
பூர்வீக செறிவூட்டுகிறாய்…
வாடும் என் தனிமைக்கு
வாய்த்திட்ட விருந்து நீ
தேடும் என் மனதிற்கு
தேனமுத ஆறுதல் நீ…
சிதறிக் கிடக்கும் சொற்களில்
கவர்ந்து விடும் ஒரு சொல்லில்
கனிந்து வருகிறது ஒரு கவிதை…
பரவிக் கிடக்கும் பக்கங்களில்
படிப்படியாக முன்னேறுகையில்
புரிந்து வருகிறது ஒரு தெளிவு…
இத்துனை இத்துனை இன்பமென
இணைந்து நீ வருகையில்
எத்துனை எத்துனை வகையிலென
எடுத்து நான் உரைப்பேன்
எழுத்துக்களால் அலங்கரித்த-என்
குட்டிக் குழந்தைப் புத்தகமே
உனை மடி தாங்கிடலில்
மனமிழக்கிறேன் உன்னோடு…!