**யாவரும் கேளிர்**
அன்றென்ன இன்றென்ன எப்பொழுதும் பொதுவாய்
அவரென்ன இவரென்ன யாவருக்கும் ஏதுவாய்
பூங்குன்றன் வரியன்றோ பொருந்தியது சிறப்பாய்-அதை
யாவரும் கேளீர் எந்தன் கேளிரே…
நான் என்பது நான் மட்டுமா
தான் என்பது தனித்து நிற்குமா?
வான் என்பது எனக்கு மட்டுமா?
மண் என்பதில் நான் மட்டுமா? …
கோரைப்புல் ஒதுக்கும் வேளையிலே-செடி
வேரிருக்கும் நிலத்தினிலே-குட்டி
மண்புழு நெளியும் காட்சியிலே-உழவன்
பூரித்து நிற்க அதுயென்ன தோழனோ…?
வற்றிய வயிற்றோடு உயிர் ஒட்டியிருப்பான்
கட்டிய துணிகூட கந்தலாக அணிந்திருப்பான்
இறைஞ்சிக் கையேந்தி யாசகன் அவனிருக்கையிலே
தானம் கொடுப்பவனங்கே அவனுக்கு தாயோ …?
பார்வைக்கு தோதின்றி பேருக்கு விழிகளோடு
நேருக்கு நேராக நிமிர்ந்திருக்கும் நடையோடு
துணையான கம்போடு சூழழறியாது திகைக்கையிலே
கரம்பற்றி சாலை கடக்கச் செய்பவன் அறியா உறவன்றோ…
அங்க குறைபாட்டு மனிதர்களைக் கண்டு
சொல்லி நீள்வதில்லை உதவும் கரங்கள்
அவசரத் தேவையில் அவதியுறும் போதினிலே
ஆராய்வதில்லை எவ்வுறவு இவரென…
பசையாக செல்வம் ஈர்க்கும் சிலரை
அரிதாக அறிவு ஈர்க்கும் சிலரை
பொதுவாக தேவை நாடும் பலரை
அதுவெல்லாம் ஏய்ப்பு அதுவல்ல சிறப்பு…
வரப்பு பிரித்துப் போடலாம்
உந்தன் எந்தன் காடுகளை
எல்லை அளந்து காட்டலாம்
உந்தன் எந்தன் நாடுகளை…
மொழி மாற்றி ஒலிக்கலாம்
உந்தன் எந்தன் பேச்சுகளில்
முகம் காட்டிக் கொடுக்கலாம்
உந்தன் எந்தன் ரூபங்களை…
மதம் நுழைந்து இடையூறாகலாம்
உந்தன் எந்தன் இறைகளில்
அரசியல் கிடந்து காழ்ப்புணர்வாக்கலாம்
உந்தன் எந்தன் தலைவர்களில்
எத்தனையோ பிரிவிகளிலும்…
அன்பு கருணை கனிவு நேசங்கள்
சொல்லட்டும் யாவரும் கேளிரென
கனவு நினைவு கற்பனை
ஏன் கவிதையும் சொல்லட்டுமே
யாவரும் கேளிரென……!17-