விடுமுறை
கோட்டைக் கொத்தளங்கள்
தூசு தட்டப்பட்டு
ராஜா ராணிகள்
நவீனத்துக்கு மாற்றப்படுகிறார்கள்..
பாரம்பரிய
உணவுகளோடு
பிட்ஸாவும் பர்கரும்
இணைந்து கொள்கின்றன..
அழுகாச்சி தொடர்களெல்லாம்
ஓரங்கட்டப்பட்டு
ஆதித்யாவும் கார்ட்டூன்களும்
களைகட்டுகின்றன..
முன்னூறு நாளாய்
எந்த மருந்து மாத்திரைக்கும்
கட்டுப்படாத
மூச்சு பிடிப்பும் மூட்டுவலியும்
தற்காலிகமாக
விடைபெற்று விட
ஒவ்வொரு கோடை விடுமுறையிலும்
தாத்தா பாட்டிகளுக்கு
சிறகு முளைத்து விடுகின்றது..
2.கவிதை
ஒரு வெற்றிடத்தின்
இருப்பை..
மௌனத்தின் மொழியை
அரூபத்தின் அசைவை
இருளின் ஒளியை
கனவின் நினைவை…
கண்டுணரத் தலைப்படும்
போதெல்லாம்…
வலிய வந்து வசப்படும்
வார்த்தைகளால்
தன்னைத் தானே
எழுதிக் கொள்கிறது
கவிதை..
3.அடக்கம்
அடக்கி வைத்தாலும்
அடங்கி இருப்பதில்லை
அது..
காக்க நினைத்தாலும்
கதவுடைத்து வெளிவந்து
காட்டிக் கொடுத்துவிடுகிறது..
தலைக்கனத்தாலோ
தற்புகழ்ச்சி கொண்டோ
தவற விடுகிறது.
சொல்லழுக்குகளைச்
சிதறவிட்டு
சொல்லிழுக்காகிச்
சோர்ந்தும் போகிறது..
இனி
காக்கின் என் காவாக்கால் என்?