கவிதைகள்
Trending

கவிதைகள்- நந்தாகுமாரன்

இலை ரேகை ஜோசியம்

தலையகல மஞ்சள் செம்பருத்தியின்
யோனியில் கிடக்கிறது
என் மனம்
மகரந்தச் சேர்க்கையின்
மயக்கத்தில்
நீள அலகு வெண்கொக்கின்
நடுவிழியில் கிடக்கிறது
உன் பார்வை
இன்னும் காமத்தைச் சொல்லாத
தயக்கத்தில்
உருளைவிழி புல்நுனித் தும்பியின்
செவிநுனியில் நகர்கிறது
கருப்பு நதியின் கானம்
காலத்தின் ஓலத்தைத்
தன்னுள் கரைத்துக் கொண்டு
சூரியகாந்தியின் மையக் கருந்துளையில்
தொலைந்த தேனீயின் ரீங்காரத்தில்
அதிர்கிறது
ஒடுக்கப்பட்டதுகளின் ஓங்காரம்
கேட்காத தொலைவில்
கழிவிரக்கக் கனவுத் தொகுதியின் பள்ளத்தாக்கில்
சிலந்திப் பாலம் இணைக்கும்
இலைகளின் ரேகைகளில் ஓடுகிறது
நம் ஆயுள்
உயிர்ப்பின் பால்வெளியில்.

***********

ஏனெனில் …

நான் உன்னைக் காதலிக்கிறேன்
இந்தத் திறந்த கண்ணாடிச் சாளரத்தின் வழியே
உன் உடலின் மீது ஏறி வந்து என் மேல் பரவும்
பயணக் காற்றில் கரையத் துடிக்கும்
நம் காமத்தின் நிழலில்
மழை பொழிய விழையும் ஒரு மேகம் போல

நான் உன்னை நட்பெனக் கொள்கிறேன்
பொறுமை மீறிய கையழுத்தத்தில் உடைத்த முட்டையின்
வெண்கருவையும் மஞ்சள் கருவையும்
தனித் தனியே மிக இயல்பாகப் பிரித்தெடுத்துத் தரும்
எந்திரக் கரத்தின்
மாய உலகம்
என் பொய்யின் தேவைகளைத் தெரிந்து வாழ்வதைப் போல

நான் உன் மீது கோபம் கொள்கிறேன்
இன்னும் உயிருடன் இருக்கும்
நம் கனவின் கூரிய விழிகள்
ஒரு காட்டுப் பன்றியின் வயிற்றுக் கறியின் சுவையில் மயங்கி
இட்ட முகநூல் பதிவில்
எனைக் கண்டு கொள்ளும் வேறு யாரோ இருவரின்
இடையில் வந்த
சொற்களின் விவாதக் காதல்
வீழ்த்திச் செல்லும்
உன்
நிர்வாண உடலின் உஷ்ண வியர்வைக் கடல் போல

நான் உன்னை என் அச்சத்தால் அச்சுறுத்துகிறேன்
நான் இன்னும் கூறிச் செல்லும் என்
முடிவற்ற மிச்சத்தில்
இருந்தும் இல்லாமல் போகும்
இந்த
இறுதியின்
அருதிப் பெரும்பான்மை போல

நான் உனைக் கூடிப் பின் வடிந்து ஓடி மடிந்து
என் எலும்புகளை உன் சாம்பலில் புதைக்கிறேன்
ரத்தத் தடத்தின் காவிய நீட்சியில் நமை
சேர்த்து வைத்த மோகம் தான்
பிரித்தும் வைத்தது என்பதால்

ஏனெனில் …

***********

ரூபமோட்சம்

கண் விரித்த தூரம்
கனவு விழித்த நேரம்
தூக்கி நிறுத்திய துலாபாரம்
எடைக்கு எடை
மேலும் ஒரு கனவின்
கற்பனைத் தடை
மண் தரித்த மழை ஓரம்
தினவு ஒழித்த உயிர்ச் சாரம்
சங்கமத் தேவைக்கு
குங்குமப் பாவையின்
புனிதப் போர்வை
சன்னதியின் தரிசனம்
பாவ மென்பொதியின் கரிசனம்
தலையோ முலையோ காமப் பிழையோ
ரோமப் புதரின் சாமரம் அசைய
ஸ்ரீ
திரு
மதி
நிறை
அமர்
வணக்கம்
இட்டு முடியும் கவிதை முதல்
மரியாதை
அறியாததைக்
காணும்
மொழியின் விழி
அதிர்ந்து முதிர்ந்ததாம்
எப்படி
இப்படி
இதில்
எதில்
பதில்
கண்டதோ முண்டத்தின் கோலம்
விண்டதோ அண்டத்தின் காலம்.

***********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button