i)
தனிமை நிரம்பிய வெளிச்சத்தில்
இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது
அதன் வலப்புறமும் இடப்புறமும்
வயலின் கணத்திற்குக் கணம்
நடனமிடுகிறது.
பியர் வெகு அபூர்வமாக
குறைந்து கொண்டே செல்கிறது
இழுத்துத் தள்ளிய
சிகரெட் புகையின் நீள் வளையம்
சுவரில் டாவின்ஸின் ஓவியமாய்
கூடி பரவசிக்க.
முற்றிலும் இசையின்
கண்ணாடித் துகள்கள்
சன்னல் வழியாக
பின்னிரவை நிலவொளியில் இணைக்க
மின்மினி பூச்சிகளின் சங்கீதம் ஆரம்பித்திற்று.
எல்லை தாண்டும் தனிமை
விலங்கிடும் போதெல்லாம்
இயலாமையின பெயரால் இப்படிதான்
விலக்கப்பட்ட வாழ்க்கையுடன்
என்னை குவளையில் ஊற்றி குடித்துக் கொண்டிருக்கிறேன்.
**********
ii)
கவிதையின் முதல் பகுதியில்
இடியுடன் கூடிய மழை பொழிவதைப் போன்ற காட்சியை உருவாக
விரும்பிய போது
கோடையின் வெப்பத்தில்
எரிந்து கொண்டிருந்தன சொற்கள்
கவிதையின் கடைசிப் பகுதியில்
குடை பிடித்துக் கொண்டு
ஊர் நனைவதைப் போன்ற காட்சியை உருவாக்க
தயாரான போது
கோடையின் வெப்பத்தில்
சொற்கள் வற்றிவிட்டன
கவிதையின் நடுநிலையில்
என்னோடு பேசிக் கொண்டிருந்த சொற்கள்
கவிதையின் கடைசிப்பகுதியை
நிறைவுக்கு கொண்டு வரும்போது
வெயில் இரவுக்குள் உறங்கிவிட்டதை வாசிப்பாளன் அறிந்திருக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொண்டன.
**********
iii)
இந்த பிரதியை எழுத முன்
எனது இந்தப் பிரதிக்குள்
யார் யார் வசிக்க வேண்டுமென்றும்
எந்தெந்த காட்சிகள் அமைய வேண்டுமென்றும்
எனக்கும் சொற்களுக்கும் சமர் ஒன்று தொடங்கியது
சமரின் அடையாளமாக
இந்தப் பிரதி உருவானது
கோடை காலம் என்பதால்
மழைக்கான சிபாரிசு செய்தேன்
எனவே சொற்கள் மழையில் நனைந்தன
பின் எனக்கு உதவும்படி
அவளை சிபாரிசு செய்தேன்
சொற்கள் அவளுடன் பேசத் தொடங்கின
இப்படியாக பல காட்சிகளுள்
ஊடுருவக் கிடைத்தது
அவள் அவசரமாக குளிக்கத் தொடங்கினாள்
பிரதி எங்கும் தண்ணீர் நிறைவதாக இந்தப் பிரதி முடிய வேண்டும்
சில காரணங்களுக்காக
அவள் குளிக்கத் தொடங்கியதும்
பிரதி எங்கும் தீப் பற்றி எரிவதாக
முடிகிறது.
**********
சம்பவங்களை உருவாக்குதல்
i)
காட்சியின் ஒரு புறத்தில்
கடலை பறவைகள்
தன் சொண்டில் அள்ளிச் செல்வதாய்
சம்பவம் தொடங்குகிறது
காட்சியின் மறுபுறத்தில்
எறும்புகள் சில
கடலை இழுத்துச் செல்வதாய்
சம்பவத்தை உருவாக்குகிறேன்
எப்படியாயினும்
சில பொழுது
நான் பறவையாகின்றேன் ஏனென்றால்,
எப்படியாயினும்
சில பொழுது
நான் எறும்பாகின்றேன்,ஏனென்றால்
……………
ii)
கடலை அள்ளிச் செல்லும்
பறவைகள், எறும்புகள் இரண்டுடனும்
புதிய உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது
உரையாடலின் மய்யத்தின் போது
எனது இரண்டாம் பரம்பரை
பறவைகளாய் வனத்தில் வாழக்கூடும்
உரையாடல் முடிவுறும் போது
எனது மூன்றாம் பரம்பரை
எறும்புகளாய் ஆங்காங்கே வாழக்கூடும்
காட்சி வேறு வேறு ஆயினும்
சம்பவம் உங்களைக் கடந்து செல்லும்
சிறு கணத்தில்
கடலை ஒரு கிண்ணதில்
நீங்கள் பருகிக் கொண்டிருக்கலாம்.
**********