![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/10/52402640_2037329626364414_8585142971865759744_n-780x405.jpg)
கடைசிப் பச்சயம் தேசியக்கொடியில்
1.யானைக்கால் கற்தூண்களில்
உடைந்த ஓடுகளால் எஞ்சியிருக்கிறது
சென்னை ஆட்டுத்தொட்டி மேற்கூரை
ஓட்டைகளின் வழியே உற்றுநோக்கிக் கரையும் காகங்கள்
கால்கள் கட்டப்பட்ட மாட்டின் வால்
பின்னோக்கி இழுக்கப்படும் கொம்புகளும்
கழுத்து நரம்பை அறுத்த கத்தி
ரத்தம் சொட்டச் சொட்ட
அடுத்த குரல்வளையை நோக்கிச் செல்லும்
கழுத்திலிருந்து கொட்டிய ரத்தக்கடலை
கைகளால் அள்ளி
பிளாஸ்டிக் வாளியில் சேமிக்கிறாள்
எண்ணற்ற தோலுரித்த தலைகள்
நீலக்கண்களோடு தரையில் குத்திநிற்கின்றன
2. இறுக்கப்பட்ட கயிறுகளில் மூங்கில் கழிகளை நுழைத்து
இரும்புச் சட்டகத்தில் தலைகீழாய்த் தொங்கும்
தலையற்ற ஏசுவைப்போல்…
விரிந்த தொடைகளுக்கு நடுவே அமர்ந்து
கொத்திக் கொத்தித் தின்னும் காக்கைகள்
மஞ்சள் சிவப்பு தராசு
பச்சைநிற எண்ணில்
மாட்டின் எடையைக் காட்டும்.
ரத்தம் நின்ற தருணத்தில்
வெட்டத் தொடங்குவது உசிதம்
மார்பில் ஒரு துளையிட்டு
உணவுக்குழாயை உருவிவிடலாம்
மண்டை ஓடு மற்றும் கர்ப்பப்பை வாய் முதுகெலும்புகளுக்கு இடையில்
ஒரு கீறலை உருவாக்கி
தலையை உடலில் இருந்து பிரிக்கையில்
செல்போன் டவரைத் தாண்டியபடி
பறந்து வருகின்றன பறவைகள்
3. ஆலஞ்சடையாய் தொங்கும் வாலைப் பிடித்து
தூளியாடியவன் புறப்படுகிறான்
கரப்பான் பூச்சியாய் மல்லாக்கக் கிடக்கும் மாடு
தோலுரிக்கப்படுகிறது.
பெருங்கிழங்காய் பிரமாண்ட ரொட்டியாய் பெரும்பாறையாய்
செக்கச் செவந்த அல்வாவாய் மாபெரும் கனியாய் தொங்கும்.
வெட்டியபடியே வந்தவன்
மாட்டுத் தொடையில் குத்திய குத்தீட்டியை
தன் பின்னிடுப்பில் செருகினான்
ஓயாது கேட்கும் கத்திச் சத்தம்
விறகு வெட்டும் அருவா சத்தமாய்.
தலையைச் சுழற்றியபடி
கொம்புகளை வெட்டுகிறான்
மேய்ச்சல் நிலத்தில் பிடிக்கயிற்றோடு
அவனைச் சுற்றவிட்ட ஞாபகம்.
கால் குழம்புகளோடு வீசப்படும் கொம்பைச் சீவி
குவளை செய்தேன்
அன்றிரவு மதுவை
அதில் ஊற்றி ஊற்றிக் குடித்தேன்
4. நாமமிட்ட பச்சை நிற மாலை அணிந்தவன்
இரண்டு தோள்களிலும் இரண்டு மாட்டுத்தொடைகளைச் சுமந்துவந்து
மீன்பாடி வண்டியில் எறிந்தான்
அதன் அதிர்வில் மாநகரமே அதிர்ந்தது
மறுநாள் காலை
என் வீட்டு வாசலில்
பிள்ளைக்கறிக்கு மண்டையோட்டை ஏந்தி நின்றான்
ஈசன்
5. மடிகள் ஆடியபடி சென்ற கறவைமாட்டின் மீது
சினைக்குத் தாவியது காளை
அதன் பின்னே
துள்ளியோடிய சின்னஞ்சிறிய கன்று
சற்றுநேரத்தில் அலறியடித்து ஓடிவந்தது
பதாகை மறைவில் கொதிக்கும் கொழுப்பு
நகர்த்தி இழுத்துச் செல்லப்படும்
இன்னோர் கொழுப்பு அண்டாவின் அடியில்
புழுக்கள் நெளிகின்றன
சூடு ஆறிய பின்
உணவுப் பண்டத்தின் மிருதுதன்மைக்கு
தொழிற்கூடத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
6. ரத்தக்கால்களோடு கறிசுமப்பவன்
ஸ்கூட்டியில் கறியை ஏற்றுகிறான்
தொங்கும் கறியில் துளையிட்டு
கயிற்றை கட்டி வண்டியில் இறுக்க
ஒடிந்து தொங்கும் கறிக்கு மற்றுமொரு கட்டு.
அவன் கைமுட்டியை எலும்பு கிழித்தது
அதைப் பொருட்படுத்தாதவனை மறைக்கிறது
திறவாத
வயிறுகிழித்து எடுக்கப்பட்ட கன்றின் கண்கள்
முனகலும் இல்லை மூச்சும்
கோரைப்பாயில் காய்கின்றன இதயமும் நுரையீரலும்
ஆடை வணிகன்
மாட்டுக் கொம்பில் சட்டைபட்டன் கோட்டு பட்டன்
தைத்தான்
7. எருமைக் கொம்பில் ஒன்றை
கூர்மையான கருங்கல்லால் அறுத்து
இரண்டு துண்டுகளாக்கியவன்
அதன் அடிப்பகுதியை வகுந்து எடுக்கையில்
மஞ்சள் நிற உட்கொம்பு உதிர்ந்தது
சொரசொரப்பான மேற்பகுதியைக் கல்லால் மென்மையாக்கி
மேலும் வழுவழுப்பாக்குகிறான்
மரத்தடி நிழலில் சுள்ளிகளைக் குவித்து மூட்டிய நெருப்பு
ஓரடி நீளம்கொண்ட செவ்வகக் கொம்பை வாட்டுகிறது
சூட்டை மண்பானை நீரில் தணித்து
முட்டிக்காலில் வளைத்து வளைத்து
அதன் ஒருபக்கத்தில் சற்று இடைவெளிவிட்டு
சின்னஞ்சிறிய துளையிட்டவன்
எண்ணெய் தடவிய கருங்கூந்தலைச் சீவுகிறான்
பின்னொரு நாள்
எருமைக் கொம்பில் கப்பலுக்கு வாசர் செய்கிறான்
8. அழுகிய எலும்பில் ஒட்டிய கறித்துண்டை
கொத்தும் பறவை
கறியின் நிழலைத் தின்னும் சிட்டுக்குருவிகள்
சூரியனில் காயவைத்த எலும்புகளை
எந்திரத்தில் அரைத்து மாவாக்கினான்
முதல் கைப்பிடியால்
வெள்ளைச் சர்க்கரையைத் தூய்மைப்படுத்தினாள்
இரண்டாவது கைப்பிடியால்
மருந்து தயாரித்தாள்
மூன்றாவது கைப்பிடியை
உரமாக்கி வேர்களுக்கு வீசினாள்
நான்காவது கைப்பிடியை
ஜெல்லி சாக்லேட் ஐஸ்கிரீமில் குழைத்தாள்
கைப்பிடிகள்தான் உலகின் நுரையீரலை சுருங்கிவிரியச் செய்கிறது
9. விறுபட்ட சுவர் எப்போது சரிந்து விழுமோ
வெட்டும் தொழிலாளர்களை
கொம்புகளும் முட்டித்தள்ளும்
சாக்கடையில் கால்நடைகளின் ரத்தக்கழிவுகள்
வேள்விக்கு அறுக்கப்பட்ட விலங்கின் ரத்தமும்
இன்னும் தேங்கியபடியே…
மருத்துவ சீலுடன்
வியாபாரிகளுக்கு விற்கப்படும் இறைச்சியை
புல்லுக்கட்டைப்போல் கட்டி
வண்டியில் ஏற்றுகிறான்
தெருவிளக்கின் மீது ஒருதுண்டு கறியைக் கொத்துகிறது காக்கை
10. ஐஸ்பெட்டிக்குள்ளிருந்து ஒவ்வொரு கறியாய் எடுத்து
கோரப்பாயில் வைக்கிறான்
விரித்த தோலில் இறைச்சியைப் பரப்பி
விற்பனை செய்பவள்
ஒற்றைச் சக்கரத்தை மிதித்தபடி
இயக்கும் எந்திரத்தில் அரிவாள்மனையைச் சானை பிடிக்கிறாள்
உடல்சிலிர்க்கும் மாட்டிலிருந்து
ஓராயிரம் ஈக்கள் பறந்து மீண்டும் அமர்ந்தன
`லட்சுமி’ என்று பெயரிட்ட மாடுகளுக்கு
`B’, `C’, `K’ என்ற பெயர்களே எஞ்சின
இம்மாடுகள் கடைசியாய் பச்சையத்தைக் கண்டது
தேசியக்கொடியில்தான்
பாரத் மாதாகீ ஜே.