1. அவர்கள்
~~~~~~~~
அவர்கள் இருவருக்கிடையே
சமீபகாலமாக சண்டையுண்டு என்பதை
நான்தான் கண்டுபிடித்தேன்
அதற்கு முன்பு
அவர்களுக்குள்
ஆழ்ந்த
யாருக்கும் தெரியாத
பெயரிடப்படாத உறவு இருந்ததை
நான்தான் தெரிந்து வைத்திருந்தேன்
ஒருவர் இரவென்றால்
இன்னொருவர்
எப்போதும் விண்மீன்கள் என்பார்
அவர்கள்
யாருக்கும் தெரியாமல்
எங்கு சந்திப்பார்கள்
என்ன பேசிக்கொள்வார்கள்
அவர்களின் வீட்டில்
ஏன் ஏதுமே கேட்பதில்லை
என்று தினமும் யோசித்தேன்
இடக்கையால் தள்ளி
வலக்கையால் மறைவாகத்தின்னும்
விநோத பண்டமாக
ருசித்துக்கொண்டே இருந்தது
அவர்களின் கதை
அவர்களுக்குள் எதுவுமே இல்லை
எல்லாம் கற்பனை
நேரடியாகப் பார்த்தாயா என்றும்
நிறைய நாட்கள் எனக்குள் புலம்பினேன்
நேரடியாகப் பார்த்தால்
அந்தக் கதைக்குள் ஒருவராக
நானும் மாறிவிடக்கூடும் என்று
ஒரு போதும்
அவர்களுடன் சென்றதில்லை
தனிமையில்
அவர்களை எப்போதும்
இணைத்துக் கொண்டே இருந்தேன்
ஆனால்
மோதி மோதிச் சிதற ஆரம்பித்தார்கள்.
அவர்கள்
அவர்களாக
தனித்தே இருக்கிறார்கள்.
நான்தான்
அவர்கள் இருவருக்குள்ளும்
கதையாக
பரவிக் கொண்டே இருக்கிறேன்.
2. தாழ்ப்பாள் இல்லாத கதவுகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முக்குதல்
முனகுதல் மட்டுமே
உள்ளிருப்பதை
வெளியே அறிவிக்கும் பாடல்கள்
மூலநோய்க்காரனுக்கு வாய்ப்பதெல்லாம்
தாழ்ப்பாள் இல்லாத
கதவுகள் கொண்ட கழிவறைகளே
சினம் தாளாமல் கதவைத் தட்டி
தாளம் இயற்றுகிறான்
மெதுவாகத் தட்டு
அடியில் வளரும் துரு
கதவைத் தின்றுவிட்டால்
நிலைமை மோசமாகி விடும் என்கிறான்
வெகுநேரமாகக் காத்திருப்பவன்
அவசரத்துடன் அவசரம் மோதுகிறது
அதிகரிக்கின்றன அவசரங்கள்
முதுகைத் தட்டத் தட்ட
கதவாக மாறுகிறது ஒவ்வொரு முதுகும்
சிறுநீர் மட்டும்தான்
என்னை முதலில் அனுமதியுங்கள் என்று
தனியே நிற்கிறான் ஒருவன்
புதுவரிசையில்
நிற்க ஆரம்பிக்கின்றன கதவுகள்
அடப்பாவிகளா !
இந்த ஊரில் ஒரே ஒரு கழிவறைதான் உள்ளதா
அதுவும் தாழ்ப்பாள் இல்லாததா
கடுமையாகத் திட்டுபவனை
அடித்து மேலே பறக்க விடுகிறார்கள்
வானத்தில் எங்குமே கழிவறை இல்லை
அழுது கொண்டே சுற்றுபவனை
வேடிக்கை பார்த்துச் சிரிக்கும் கதவுகள்
கடைசியாக நிற்க வைக்கின்றன
நீண்ட நேரத் தாக்குதலுக்குப் பிறகு
வெளியே வருகிறான் மூலநோய்க்காரன்
தட்டிக்கொண்டே இருந்ததில்
விழுகிறது கதவு
முதலில் நுழைபவன்
எந்தப் பக்கத்தை
முதலில் மறைப்பதெனத் தெரியாமல்
பின்பக்கமாக உட்காருகிறான்
துர்நாற்றம் தாளாமல்
திரும்பிக் கொள்ளும் கதவுகள்
நாசிகளைப் பிடுங்கி
தங்களுக்குப் பக்கத்திலேயே
நிற்க வைக்கின்றன வரிசையாக
“இடக்கையால் தள்ளி வலக்கையால் மறைவாகத்தின்னும் விநோத பண்டமாக ருசித்துக்கொண்டே இருந்தது”
உருவகம் அருமை.