
“த்தா! நம்மளப் பாத்தா எப்படி தெரியுதுன்னு தெரியல. வர்ற கோவத்துக்கு இதே காரை அந்த டீம் லீட் சங்குல வச்சு ஏத்துனாலும் என்னோட ஆத்திரம் தீராது!”
ராகவ் மேலும் சிரிப்பதைப் பார்த்து திலக் கோபம்இன்னும்அதிகமானது.
“எப்படிங்க உங்களால சிரிச்சிட்டு வர முடியுது?”
“வேற என்ன பண்ண முடியும் திலக்? இந்த லாக்டௌன் நேரத்துல நிறைய கம்பெனில சாலரியே போடல. நம்ம கம்பெனிலதான் எல்லாமே ஒழுங்கா வருது!”
“அதுக்குன்னு இந்த வேலையை பாக்க சொன்னா எப்பிடிங்க?”
திலக் தனது காரை வலதுபுறமாக திருப்பி ஆவேசமாக ஹாரன் எழுப்பினான். அவனுக்கு அருகில் ராகவ் மெல்லிய சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.
திலக், ராகவ் இருவரும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் எம்பிஏ பட்டதாரிகள். இவர்கள் நிறுவனத்தின் உயரதிகாரியின் இன்றைய இரவுக்கு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்யச் சொன்னதே திலக்கின் கோபத்திற்கு காரணம்.
“இந்த மாதிரி மாமா வேலையை அந்த டீம் லீடர் செய்யாம நம்மகிட்ட தள்ளி விட்டுட்டு மயிரு போச்சுன்னு ஏசி ரூம்ல உக்காந்திருப்பான்!”
ராகவ் பேசாமல் அமைதியாக இருந்தான்.
“என்ன ராகவ் எதுவும் பேச மாட்றீங்க? எனக்கு உங்க மேலயெல்லாம் கோபம் இல்லங்க!”
“நானும் அப்படி நினைக்கல திலக். நமக்கு குடுத்த வேலையை முடிச்சுதான் ஆகணும்!” ராகவ் ஒருமாதிரியான உற்சாக உணர்வில் இருப்பதுபோல திலக்கிற்கு தோன்றியது.
ஊரடங்கு காரணமாக சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. சாலை ஓரங்களில் ஆட்டோ, கார்கள் வரிசையாக நின்றது.
“ஊர்ல ஒரு காக்கா, குருவிகூட இல்ல. இதுல எங்க அந்த கிராக்கிகள பிடிக்கிறது?” திலக்கின் கோபம் சலிப்பாக மாறியது.
“அந்த பஸ் ஸ்டாண்டு ஒட்டி போங்க!” ராகவ் ஆர்வமாக சொன்னான்.
பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு எந்தச் சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தன.
ராகவ்விற்கு இன்னும் திருமணமாகவில்லை. இரண்டு வருடமாக இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறான். ஆர்வமான மனநிலை கொண்டவன். அதனால்தான் சமூகத்தில் இழிநிலையாகக் கருதப்படும் இந்தச் செயலைக்கூட ஒருவித உற்சாகத்தோடு செய்ய முடிகிறது அவனால்.
திலக்கிற்கு இப்போதுதான் திருமணம் நடந்தது. ஆறு மாதத்திற்கு முன்புதான் வேலையில் சேர்ந்தான்.
“ராகவ், இந்த கார் எனக்கு வரதட்சணையா வந்தது. அந்த கிராக்கியை எவனாவது வண்டில ஏத்துறதா பாத்தா கையோட டைவர்ஸ்தான்!”
பேருந்து நிறுத்தம் அருகே போலீஸ் மறித்தது. அவசரமாக இருவரும் முகக்கவசத்தை அணிந்துகொண்டார்கள். கார் கண்ணாடியில் ஈ-பாஸ் ஒட்டியிருந்ததை ஒரு காவல்துறை அதிகாரி படித்து பார்த்துவிட்டு கிளம்பச் சொன்னார்.
“இதுக்குன்னு புரோக்கர் இருப்பாங்களே, அவங்க நம்பர் இருந்தா வேலை முடிஞ்சிருமே திலக்!”
“அந்த டீம்லீடர் ஒரு நம்பர் குடுத்தான். அவன்தான் வழக்கமா சப்ளே பண்ணுற ஆளுபோல!”
“அப்ப அந்த நம்பருக்கு பேசலாமே?” என்றான் ராகவ்.
“அதுக்கு நீங்களும் நானும் சாகணும்!” என முதல்முறையாக சிரித்தான் திலக்.
ராகவ் புரியாமல் பார்த்தான்.
“அந்த புரோக்கர் கொரோனாவுல போய்ச் சேந்துட்டானாம்!”
“வேற ஆள் இல்லையா?”
“வழக்கமா போய்ட்டு வர்ற அந்த டீம்லீடர் புறம்போக்குக்கே ஒரு புரோக்கரைதான் தெரியுது. அப்புறம் எப்படிங்க எனக்கு தெரியும்?”
ஆள் அரவமற்ற நகரம் வேறு மாதிரியாக இருந்தது.
“ராகவ் ரொம்ப நேரமா அலைஞ்சிட்டு இருக்கோம். நைட்டு பதினோரு மணிக்குள்ள அரேன்ஜ் பண்ணலேன்னா அந்த டீம் லீட் நம்மள ஒரு வழி பண்ணிருவான்!”
இருவரும் புறநகரில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். பெயரளவுக்குக்கூட ஆள்நடமாட்டம் இன்றி இருந்தது. எங்கேயோ செல்லும் ஆம்புலன்ஸ் சப்தம் மட்டும் தெளிவாக கேட்டுக்கொண்டே இருந்தது.
“எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ஒரு கொரோனா பேசண்டை அனுப்பி வச்சிடலாம்போல இருக்கு ராகவ்!”
ராகவ் சிரித்தான்.
“சிரிக்காதீங்க ராகவ். வயிறு எரியுது. பொண்டாட்டிக்கு சேலை எடுத்து குடுக்கக்கூட இப்படி காரில் அலைஞ்சதில்லை!”
“திலக், இன்னும் கொஞ்சம் அவுட்டர் ஏரியாவுக்குப் போவோம். நிச்சயமா ஆள் பிடிச்சிடலாம்!”
“கேக்கவே கேவலமா இருக்குங்க. அதுபோக இந்தக் காலத்துல எந்த ப்ராஸ்டிட்யூட் ரோட்டை மறிச்சு கஸ்டமரக் கூப்புடுறாங்க. நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? நார்மல் ஹைவே எப்ப நேஷனல் ஹைவேயா மாறுச்சோ அப்பவே எல்லாம் முடிஞ்சுபோச்சு!”
“சரி, நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்குவோம். எதுக்கும் கடைசியா ஒரு தடவை முயற்சி செஞ்சு பார்ப்போம். இல்லேன்னா வேற என்ன செய்யுறதுன்னு யோசிப்போம்!” என்றான் ராகவ்.
திலக் வேண்டா வெறுப்பாக நகரத்தைவிட்டு வெளியே வந்தான்.
“எங்க ராகவ்? ஒரு நாய்கூட இல்ல. எல்லாம் கொரோனாவுக்கு பயந்து சொந்த பொண்டாட்டியையே தொட பயப்படுறான். இந்த கபோதி என்னென்னா ஊர் மேய ஆசைப்பட்றான். இவங்களுக்கு மாமா வேலை பாக்கவா நம்ம எம்பிஏ படிச்சோம்?” என்ற திலக் கண்களில் ஆச்சரியம் மிளிர்ந்தது.
“கை குடுங்க ராகவ், நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. ஒரு லேடி நிக்குது பாருங்க!”
ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அந்த இரவில் ஒரு பெண் நிற்க வேண்டிய அவசியமே இல்லாத இடம் அது. வண்டியை மெதுவாக ஓரம் கட்டினார்கள்.
பெண் தலையில் முக்காடு போட்டிருந்தாள். இருவரில் யார் இறங்கி பேசுவது என்ற குழப்பம் நேர்ந்தது. ராகவ் ஒரு உற்சாக மனஉணர்வில் இருந்தாலும் கொஞ்சம் தயக்கத்துடன் இருந்தான்.
“என்ன ராகவ் தயங்குறீங்க? நீங்கதான் இதுவும் பார்ட் ஆப் த ஒர்க்ன்னு அந்த தடி மாடுகளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இப்ப பம்மிகிட்டு உக்காந்துருக்கீங்க?” போங்க ஸார், போய் கூட்டிட்டு வந்து கார்ல உக்கார வைங்க. அதுக்குத்தானே என் மாமனார் வரதட்சணையா காரெல்லாம் குடுத்தாரு!”
வண்டியிலிருந்து மெதுவாய் இறங்கினான். தூரத்தில் வாகனம் வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கார் நிற்பதைப் பார்த்து அந்தப் பெண்ணும் ராகவ்வை நோக்கி வந்தாள். திலக் ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப் பார்க்கும் பரபரப்பில் இருந்தான். ராகவ் ஒருகட்டத்தில் தயங்கி நிற்பதைப் பார்த்த திலக், “போய் பேசுடா, போய் பேசு!” என காருக்குள் இருந்தே குதித்துக்கொண்டிருந்தான்.
ராகவ் தைரியத்தை வரவழைத்து அருகில் முன்னேறிச் சென்றான். எப்படியும் பேசி அழைத்து வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் திலக் முகத்தைத் துடைத்துக்கொண்டு கேசத்தை சரிசெய்து வாரிக்கொண்டான். ஏசியை கூடுதலாக வைத்துக்கொண்டு ஒரு வாசனை திரவியத்தைக் காருக்குள் பரவவிட்டான்.
ராகவ் அப்போதுதான் அவள் கையில் இருந்த குழந்தையை கவனித்தான். துணி மூட்டைபோல இடுப்போடு சேர்த்து கட்டி வைத்திருந்தாள். அது கால்களை லேசாக உதைத்தபோதுதான் உயிரோடு இருப்பதே தெரிந்தது.
அவள் முகத்தை கவனித்தான். மிக சுமாரான கலையிழந்த முகம். கையில் குழந்தை வேறு, திரும்பிப் போய்விடலாமா என நினைத்தான். அவள் அவனை முழுமையாய்ப் புரிந்துகொண்ட காதலிபோல வெட்கமாக சிரித்தாள். சுமாராகவே இருந்தாலும் அழகாக சிரிக்கத் தெரிந்திருக்கிறது அவளுக்கு.
“என்ன சார் போலாமா?” என எடுத்த எடுப்பில் ஆரம்பித்தாள். ராகவ்விற்கு கால்கள் லேசாய் நடுங்கத் தொடங்கியது. “ஒரு நிமிஷங்க!” என்றபடி திலக்கிற்கு போன் செய்தான்.
ராகவ் அழைப்பதைப் பார்த்து திலக் குழப்பமடைந்தான், “ராகவ் கூட்டிட்டு வாங்க. எதுக்கு எனக்கு போன் பண்ணுறீங்க?”
ராகவ் அவளைவிட்டு சற்று தள்ளி வந்தான். “இல்ல ஒரு குழப்பம் அதான்!”
“இந்த நேரத்துல என்னங்க குழப்பம் உங்களுக்கு? எவ்வளவு பணம் கேட்டாலும் குடுத்துறலாம்!” திலக் நினைத்த வேலை முடியப்போகும் உற்சாகத்தில் பேசிக்கொண்டிருந்தான்.
“பிரச்சினை அது இல்ல திலக். பார்ட்டி ரொம்ப சுமாரா இருக்கு. கையில குழந்தைவேற. என்ன பண்ணட்டும்?”
“ஏங்க, நம்ம என்ன அந்த பொறம்போக்குக்கு என்ன பொண்ணா பாக்கப்போறோம்? சும்மா கூட்டிட்டு வாங்க!” என பதற்றம் குறையாமல் பேசினான் திலக்.
“திலக், வர்றது பெரிய ஆளு. இதப் பாத்து புடிக்காம போயிட்டா, அர்த்தராத்திரில எங்கங்க போறது?”
“ராகவ், வீணா கற்பனை பண்ணாதீங்க. முதல்ல அந்தம்மாவை கூட்டிட்டு வாங்க!”
“குழந்தையை என்ன பண்ண?”
“ராகவ் என்னாச்சு உங்களுக்கு? குழந்தையை பக்கத்துல இருக்குற பார்க்லயா விட முடியும்? அதையும் கூட்டிட்டு வாங்க. மிச்சத்தை கார்ல வச்சு பேசிக்கலாம்!”
“உங்களுக்கு வேண்டாமா அண்ணா?” அந்தப் பெண்ணின் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினான்ராகவ். வெகு அருகில் நிற்கிறாள். அதுவரை கொண்டிருந்த ஒட்டுமொத்த தைரியத்தையும் இழந்திருந்தான்.
“என்ன சொல்லுது அந்தப் பொண்ணு?” ஆர்வம் தாளாமல் போனில் கேட்டான், திலக்!
மீண்டும் சற்று தூரம் தள்ளிநின்று “என்னய அண்ணான்னு சொல்லுது திலக்!”
“அதுவும் நல்லதுக்குதான். டைம் வேஸ்ட் பண்ணாம கூட்டிட்டு வாங்க. ஏற்கனவே லேட்!”
அவளை அழைத்து வந்து காரில் உட்கார வைத்தார்கள். திலக் அவளை கவனித்துவிட்டு ராகவ்விடம் சொன்னான், “நீங்க சொன்ன மாதிரி சுமாராதான் இருக்கு. கொஞ்சம் அவசரப்பட்டு கூட்டிட்டு வந்துட்டோம்னு நினைக்கிறேன்!” அவளை காருக்குள் உட்கார வைத்துவிட்டு இருவரும் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
சரியாக டீம் லீடர் ராகவ்வை அலைபேசியில் அழைத்தார்.
“யோ என்னய்யா, எல்லா அரேன்ஜ்மெண்ட்ஸூம் பண்ணியாச்சா?”
“எல்லாம் ரெடி ஸார்!”
“சூப்பர், கிளைன்ட் வர இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. அதுக்குள்ள எல்லாமே பக்காவா இருக்கணும். ஏதாவது மிஸ்ஸானா காரியம் கெட்டுச்சு. எல்லாமே ஓகேதானே?”
“எல்லாமே பக்கா ஸார். எதுவும் சொதப்பாது ஸார்!” என்றான் ராகவ்.
“உன்னோட குரலே சரியில்லையே. பார்டியை கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடி நீங்க எங்கேயும் கூட்டிட்டு போய்ட்டீங்களா?”
ராகவ் பதறிப்போய், “ஸார், அப்படியெல்லாம் இல்ல ஸார்!”
“அப்ப ஓக்கே. நீ அந்தப் பெண்ணை மட்டும் ஒரு போட்டோ எடுத்து அனுப்பி விடு. கிளைன்ட்க்கு அனுப்பி ஒரு ஃப்ரி அஃப்ரூவல் வாங்கிருவோம்!” வெடித்து சிரித்தார்.
ராகவ்வுக்கு கோபமாய் வந்தது. “ஓக்கே ஸார்!” என துண்டித்தான்.
“நான்தான் அப்பவே சொன்னேனே, பொண்ணு சுமாரா இருக்குன்னு. நீங்கதான் அவசரப்பட்டு கூட்டிட்டு வரச்சொன்னீங்க. இப்ப என்ன பண்றது?” என்றான் ராகவ்.
திலக் யோசித்தான். பின்பு காருக்குள் உட்காந்திருக்கும் அவளைப் பார்த்தான்.
“இனி டைம் இல்ல. எதுவுமே இல்லாம இருக்குறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல. இதுக்கு என்கிட்ட ஐடியா இருக்கு!”
“என்ன பண்ணப் போறீங்க திலக்?”
“இப்ப என்ன ஒரு போட்டோதானே கேட்டாரு. வாங்க, சொல்றேன்” என காரை எடுத்தான்.
பின்பக்கக் கண்ணாடி வழியே இருவரும் அவளைக் கவனித்துக்கொண்டே வந்தார்கள். அவள் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதில் ஆவலாக இருந்தாள். அவ்வப்போது குழந்தையை எழுப்பி வேடிக்கை பார்க்கும்படி சொன்னாள். இனி இது போன்ற வாய்ப்புகள் வராமலே போகலாம் என்பதுபோல இருந்தது அந்தப் பரிதவிப்பு.
“என்ன ஏதாவது ஐடியா இருக்கா?” எனக் கேட்டான் ராகவ்.
“இருக்கு. ஒரு சுமாரான ஐடியா இருக்கு!”
“எங்க போறீங்கன்னு சொல்லிட்டாவது போங்க திலக்!”
“வேற எங்க எங்க வீட்டுக்குதான்!”
அந்தப் பெண் பேசுவதுபோல ஒரு பிரம்மை இருவருக்கும் ஏக காலத்தில் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் திரும்பினார்கள். நிஜமாகவே அந்தப்பெண் பேசினாள்.
“எங்க ஸார்?”
“பயப்படாத, நீங்க நினைக்கிற மாதிரி ஆளு நாங்க இல்ல. வேற ஒரு ஆளுக்காகதான் கூட்டிட்டுப் போறோம்!” என ஓரிடத்தில் அழுத்தமாக ஹாரன் அடித்தபடி சொன்னான் திலக்.
“அப்ப நீங்க புரோக்கர் மாதிரியா?” எனக் கேட்டவள் திரும்பவும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். திலக்தான் அவள் கேட்ட அதிர்ச்சியில் பிரேக்கை அழுத்தி மிதித்துவிட்டான். ராகவ்விற்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.
திலக் அவன் வீட்டுக்கு சற்றுமுன் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு ஓடினான். வரும்போது கையில் ஒரு பெட்டி இருந்தது.
“நல்லவேளை பொண்டாட்டி அவுங்க அம்மா வீட்ல இருக்கா. இதை எடுத்துட்டு வர்றதப் பாத்தா பொழப்பு நாறிப் போயிருக்கும்!” அவன் கையில் ஒரு மேக்கப் செட் இருந்தது.
அந்தப் பெண்ணைப் பார்த்து சொன்னான், “இந்தாம்மா கொஞ்சம் மேக்கப் போட்டுக்க. போற இடம் கொஞ்சம் பெருசு. குழந்தையை இவருக்கிட்ட குடு!” ராகவ் குழந்தையை வாங்கிக்கொண்டான்.
“இது நிஜமாவே நல்ல ஐடியா திலக். என்ன இருந்தாலும் நீங்க ஒரு குடும்பஸ்தர்ன்னு நிரூபிச்சுட்டீங்க!” ராகவ் பாராட்டுவதைவிட அந்த மேக்கப் செட்டை விரைவாக சென்று எடுத்த இடத்தில் வைத்துவிட வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது.
அந்தக் குழந்தை அழவே இல்லை. தவிர சிரிக்கவும் இல்லை. ஆனால் அழகாக இருந்தது.
“குழந்தைய வச்சிட்டு தொழில் பண்ணுறது கஷ்டமா இல்ல?” ராகவ் அக்கறையாகக் கேட்டான்.
“வேற என்ன ஸார் பண்ண. அவரும் வேலைக்குப் போயிருவாரு!” என்றாள்.
“என்னது?” என்பதோடு தன் சந்தேகத்தைத் தனக்குள் புதைத்துக்கொண்டான். குழந்தைக்கு முறைப்படி ஒரு தந்தை இருப்பது திலக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.
அதை அந்தப்பெண் புரிந்துகொண்டதுபோல் பேசினாள். “எனக்கும் என்னோட வீட்டுக்காரருக்கும் லவ் மேரேஜ் ஸார்!”, கொஞ்சம் வெட்கப்பட்டாள்.
“ஓஹோ!” என்று மட்டும் சொன்னான் திலக்.
மேக்கப் சிறிது வேலை செய்ததுபோல இருந்தது. ஒப்பனையில் கொஞ்சம் தேறியிருந்தாள்.
“அப்படியே உங்க ஒய்ப் சாரி இருந்துருந்தா இன்னும் நல்லாருந்துருக்கும்!” என ராகவ் தெரிவித்த கருத்தை திலக் ரசிக்கவில்லை.
ஒருவழியாக ஒப்பனை முடிந்திருந்தது. “இந்தா ஸார்!” மேக்கப் செட்டை திலக்கிடம் கொடுத்தாள். திலக் திறந்து ஒருமுறை சரிபார்த்துக்கொண்டான்.
அவன் சந்தேகத்தை அறிந்தவளாய் “ஸார், திருட தைரியம் இருந்துருந்தா நான் ஏன் ஸார் இந்தத் தொழிலுக்கு வரப்போறேன்?” திலக் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.
“அப்படியே நில்லுங்க. ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்!” ராகவ் தன் போனில் அவளை போட்டோ எடுத்து டீம்லீடருக்கு அனுப்பி வைத்தான்.
போட்டோ என்றதும் அதற்கென்று பிரத்யேகமாக சிரித்தாள்.
இரண்டாவது நிமிடம் டீம்லீடரிடம் இருந்து அழைப்பு வந்தது.
ராகவ் பதட்டமாக அந்த அழைப்பை ஏற்றான். “ஸார் சொல்லுங்க ஸார்!”
“ராகவ், பார்ட்டியை எங்க பிடிச்சே?” என கேட்டார் டீம்லீடர்.
“தெரிஞ்ச ஆள் மூலியமாதான் ஸார். ஏதாவது பிரச்னையா?”
“இல்ல, ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். நம்ம கிளைன்ட் பெரிய பணக்காரன். அவன் நினைச்சா, சினிமா ஆர்ட்டிஸ்ட் கூட இருக்கலாம். ஆனா அந்தாளு ஒரு சைக்கோ. ரோட் சைடுல சுமாரா கருப்பா இருக்குற பொண்ணுங்க கூட இருக்க ஆசைப்படுறான். அதனாலதான் வேலையை உங்ககிட்ட குடுத்தேன். இந்தப் பொண்ணு கொஞ்சம் ரிச் லுக்ல இருக்கு. அவன் என்ன சொல்லப்போறான்னு தெரியல. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு!” பேசிக்கொண்டிருக்கும்போதே ராகவ் திலக்கை பார்த்து முறைத்தான். மேலும் இரண்டு முறை ஸார் என விளித்துவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
ராகவ், அந்தப் பெண்ணைப் பார்த்து குடிநீர் பாட்டிலை நீட்டினான். “நீ போய் மூஞ்சி கழுவிட்டு வாம்மா. நாம கிளம்பலாம்.
திலக், “என்ன ராகவ் விளையாட்றீங்களா? கால் பவுடர் அந்தப் பொண்ணு முகத்துல இருக்கு. என்னோட பொண்டாட்டி வந்து கேட்டா என்ன சொல்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருக்கேன். நீங்க என்னென்னா சாதாரணமா மூஞ்சி கழுவிட்டு வர சொல்றீங்க?”
“வாங்க, வந்து வண்டியை எடுங்க. பேசிட்டே போகலாம்!” மூவரும் வண்டியில் ஏறினார்கள். குழந்தை தூங்கிவிட்டது.
“இந்தப் பணக்காரனுங்க ரசனையை புரிஞ்சுக்க முடியலயே!” என சலிப்பாக பேசினான்.
“எது எப்படியோ, அவங்க கேட்ட லுக் வந்துருச்சு. நேரா கொண்டுபோய் கெஸ்ட் ஹவுஸ்ல விட்டுட்டு வந்துறலாம்!” என்றபோது ராகவ் போன் மீண்டும் ஒலித்தது.
“ஓக்கே ஸார்!” என்று வைத்துவிட்டான்.
“என்ன சொல்றான், அந்த பொறம்போக்கு டீம்லீடர்?” என்றான் திலக்.
ராகவ் சிரித்தான். பின்பு சொன்னான். கிளைண்ட் முடிச்சதும் இந்தப் பெண்ணை அவன் வீட்டுக்கு வந்து விட்டுட்டு, கூட்டிட்டுப் போகணுமாம்!”
திலக் தேர்ந்தெடுத்த பெரிய கெட்ட வார்த்தையை சொல்லி ஸ்டெரிங்கில் கையைக் கோபமாகக் குத்தினான். ஹாரன் ஒலித்தது. குழந்தை முழித்துப் பார்த்துவிட்டு தூங்கியது.
“நம்மள மாமான்னு முடிவே பண்ணிட்டானுங்க!” திலக்கின் ஆதங்கம் தவறே இல்லை. இது நிச்சயமாக ஒரு சாகசச் செயலும் இல்லை என ராகவ் நினைத்துக்கொண்டான்.
இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவளை ரகசியமாய் கண்காணித்தபடி இருந்தார்கள். யார் என்னவென்று விசாரிக்காமல் இரண்டு அந்நிய ஆண்களோடு நிச்சயமற்ற இந்த நேரத்தில் வரும் பெண்ணின் வாழ்வைக் காட்டிலும் தாம் ஒரு அபாயகரமான வாழ்வை வாழவில்லை என ராகவ் நினைத்துக்கொண்டான்.
ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த கெஸ்ட் ஹவுஸை நெருங்குவதற்குள் இரண்டு போலீஸ் தடுப்புகளைத் தாண்ட வேண்டியிருந்தது. அவளுக்கு ஒரு முகக்கவசம் ஒன்றைக் கொடுத்தான் திலக். அதை அணிந்துகொண்டதும் அவள் கண்ணியமாகக் காட்சியளித்தாள்.
இரவு பதினோரு மணியை நெருங்கியது. உயரமான மரங்கள் அடர்ந்திருந்து அந்த வீட்டையே மறைத்திருந்தது. சாதாரணமாக இருப்பவன்கூட தவறு செய்ய நினைக்கும் சூழல்தான் நிலவியது. பால்கேணியில் இருந்து அந்த எழுபது வயது வட இந்திய ஆசாமி இவர்களைத்தான் தீவிரமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தான்.
“இந்தக் கிழட்டு மூதேவிக்குதான் நம்ம இவ்வளவு கஷ்டப்பட்டோமா?” என்ற திலக்கைப் பார்த்து ராகவ் நட்பாய் சிரித்தான்.
“திலக், நீங்க அப்படியே போய் அந்தப் பெண்ணை விட்டுட்டு வாங்க. நா இங்க குழந்தையோட இருக்கேன். இப்படியே குழந்தையோட போனா அந்தாளு ஏதாவது சொல்லிட்டா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டது வீணாப்போயிரும்!”
அவன் சொல்வது சரியென திலக்கிற்கு பட்டது. “நான் போய் விட்டுட்டு வர்றேன். நீங்க இங்கேயே இருங்க!”
“அப்புறம் இன்னொரு விஷயம், இன்னிக்கு நடந்த விஷயம் எக்காரணம் கொண்டும் மத்த ஸ்டாப்க்கு தெரியக் கூடாது” என்றான் ராகவ்.
“ஏங்க நம்ம என்ன பெரிய சாகசமா செஞ்சோம்? வெளிய பெருமையா சொல்லிக்கிட்டு திரிய? வீட்டுக்குப் போனதும் கண்ணாடில என் மூஞ்சியைப் பாத்து நானே துப்பிக்கணும்! ” திலக் சொல்வதைப் பார்த்து அவள் சிரித்தாள். இவன் அவளை லேசாய் முறைத்தான்.
“இங்க பாருங்கம்மா, உள்ள ஒரு பெரிய மனுசன் இருப்பாரு. அவர்கிட்ட இருந்துட்டு வர்ற வரைக்கும் குழந்தை எங்ககிட்டதான் இருக்கும்!”, அவள் கண்களில் தாய்மைக்கு உண்டான பரிதவிப்பு வெளிப்பட்டது. அதுவும் சில நொடிகளுக்குத்தான். அதனைப் புரிந்துகொண்ட ராகவ், “நீங்க தைரியமா போய்ட்டு வாங்க. குழந்தையை நான் பத்திரமா பாத்துக்கிறேன்!”
திலக்குடன் அவள் செல்வதை ராகவ் காருக்குள் இருந்து வேடிக்கை பார்த்தான்.
ஒரு ஐந்து நிமிடத்தில் திலக் தலைதெறிக்க ஓடிவந்தான். ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்த ராகவ்வின் கைகள் வியர்வையில் ஈரமாகியது.
“என்ன திலக், பிரச்சினை ஆயிருச்சா?”
“ஆமாங்க, அந்த டேஸ் போர்டுல சானிடைசர் இருக்கு. அத எடுங்க!”
“அதா பிரச்சினை?”
“ஆமாங்க. சுத்தம் பாக்குற கம்மினாட்டி செய்யிற வேலையைப் பாருங்க!” சானிடைசரோடு உள்ளே ஓடினான்.
உள்ளே சென்ற வேகத்தோடு வெளியே வந்தான் திலக்.
“எல்லாம் ஓக்கே தானே?” எனக் கேட்டான் ராகவ்.
“இந்தக் கிழடு லாக்டௌன்ல இங்க தனியா மாட்டிருச்சுபோல. இப்ப எது கிடைச்சாலும் மேயிற மூட்லதான் இருக்கு!” என்ற திலக் சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டு ராகவிற்கு ஒன்றை நீட்டினான்.
“இருவரும் பற்ற வைத்து சிகரெட் புகையை மேலே விட்டனர். காருக்குள் குழந்தை வீல்லென்று அலறி அழுதது.
திலக் அலறினான். “ஏங்க குழந்தையை எங்க போட்டீங்க? இப்படி அழுது?”
“சீட் மேலதான் படுத்துருந்துச்சு. கீழ ஏதும் விழுந்துருச்சான்னு தெரியல!” என சிகரெட்டை கீழே போட்டு மிதித்து காரை நோக்கி ஓடினான்.
குழந்தை கை, கால்களை உதறிக்கொண்டு கத்தியது. குழந்தையைத் தோளில் தூக்கிப்போட்டு லேசாய் குலுக்கினான் ராகவ்.
“என்னங்க கல்யாணமாகலேன்னு சொன்னீங்க. குழந்தையை அழகா தூக்கி வச்சு சமாதானப்படுத்துறீங்க?” என கிண்டல் தொனியில் கூறினான் திலக்.
“ஹலோ, அக்கா பசங்களை நான்தான் வச்சிருப்பேன். சொன்னா நம்பமாட்டீங்க. கடைசி பாப்பாவுக்கு நைட்டு நான் சாப்பாடு ஊட்டுனாதான் சாப்பிடும்!” என ஒருவித ரசனையாக சொன்னான் ராகவ்.
“அப்ப சரி. உங்க குழந்தை பராமரிப்பு வரலாற்றில் இதையும் சேத்து எழுதிக்கிறேன்!” என மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான் திலக்.
குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தது. அதன் அழுகை மட்டும் அந்த இருட்டில் தனியாகக் கேட்டது. ராகவ்வால் அந்தக் குழந்தையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“ஏங்க என்னென்னமோ சொன்னீங்க. இந்தக் குழந்தை அழுகையை நிறுத்த முடியல உங்களால?”,மேலும் கிண்டலாக சிரித்தான் திலக்.
ஒருகட்டத்தில் அந்தக் குழந்தையைக் கட்டுப்படுத்த திலக்கும் உதவி செய்தான். “குழந்தை பாலுக்குத்தான் அழுதுபோல! வாங்க ராகவ், பக்கத்துல ஏதாவது டீக்கடை இருக்கான்னு பாப்போம்!”
“திலக், நார்மலா இந்த அன்டைம்ல எதுவுமே இருக்காது. லாக்டௌன் நேரத்துல கழுவி கவுத்துன பாயிலர்கூட பாக்க முடியாது!”
ராகவ் குழந்தையை சமாதானம் செய்யகொஞ்சம் தண்ணீரைக் கொடுத்துப் பார்த்தான். சற்று குடித்துவிட்டு கீழே துப்பியது. அது இன்னும் வீறிட்டு அழுதது. இருவரும் மாற்றிமாற்றி செய்த குரங்கு சேட்டைகூட எதுவும் வேலை செய்யவில்லை. அடுத்து என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவள் ஓடிவந்தாள். குழந்தையை வாரி அணைத்துக்கொண்டாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திலக்கை அவர் போனில் அழைத்தார்.
அவள் காருக்குள் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றாள். ராகவ் வேறு பக்கம் கைகட்டிக் கொண்டுநின்றான். நேரம் நள்ளிரவை நெருங்கியது.
திலக் உற்சாகமாய் நடந்துவந்தான்.
“என்ன திலக், சந்தோஷமா வர்ற மாதிரி இருக்கு!”
“ஆமாங்க, கொஞ்சம் காரைத் திறந்து அந்த வாட்டர் பாட்டில் மட்டும் எடுத்துக் குடுங்க!”
“என்ன திலக், வந்ததும் வராததுமா தண்ணி கேக்குறீங்க?”
“அட ஆமாங்க, எவ்வளவு அவாய்ட் பண்ணியும் அந்த கிளைண்ட் பொறம்போக்கை சேக் ஹேண்ட் பண்ற மாதிரி ஆயிருச்சு. அதான் கை கழுவுறேன்!” என விஷமமாய் சிரித்தான் திலக்.
காரை எடுத்துக்கொண்டு டீம்லீடர் இடத்திற்கு சென்றார்கள். அந்தப்பெண் குழந்தைக்கு மாராப்பை மறைத்தவாறு பால் புகட்டிக்கொண்டிருந்தாள். அதை இருவரும் கவனித்தார்கள். அவள் ஜன்னலுக்கு வெளியே வெறித்துக்கொண்டு பார்த்தாள். ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் அவளிடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவள் வேறு ஒரு பெண்போல இருந்தாள். டீம்லீடர் கெஸ்ட்ஹௌஸ் வரும்வரை திலக், ராகவ் பேசிக்கொள்ளவில்லை. அந்த கனத்த அமைதியை அவள்தான் கலைத்தாள், “அடுத்து எங்க ஸார்?”
ராகவ் திரும்பிப் பார்த்தான். குழந்தை அவனைப் பார்த்து சிரித்தது.
*******
– rabeek1986@gmail.com –