வேண்டாம்
எதிர்வரும்போது வெட்டிச்செல்லும்
மின்பார்வை இல்லை,
மணிக்கொருமுறை முகம்நோக்கி
பதறுவதும் இல்லை,
அவ்வப்போது திடுக்கிட வைக்கும்
வெடுக்நடையும் இல்லை…
அவள் அருகில்லா இப்பொழுதில்..
வெளியெங்கும் விரவியுள்ளது
அவள் விழியின் ஒளி..
மனதெங்கும் நிறைந்துள்ளது
அவளின் இதமான வாசம்..
முகிலென மிதக்க வைக்கிறது
அவள் மொழியின் தேறல்..
வேறேதும் வேண்டாம்
வேறெதுவும் வேண்டாம்
இதற்குமேல் இப்பிறப்பில்…
அவளும் கூட
**********
எழுதல்
மலர் வாசத்துடன்
மென்தென்றல் பரவ
நீலவானமெங்கும் ஓவியமாய்
மென் முகில் படர
புள்ளினங்கள் சேர்ந்து
மெல்லிசை பாட
மரங்களெல்லாம்
மென்தளிர் நாவால் வாழ்த்த
இளங் கதிரோன் பரப்பும்
மென்னொளியென…
எழுகிறது
அவளின் நினைவு..
எப்போதும்
**********
பாவனை
ஒரு பூனையும்
சிலபறவைகளும்
பல மலர்களும்
ஓர் ஆடியும்
இல்லத்துடன் சேர்ந்து
சோம்பியபடி காத்திருந்தோம்…
அவள் வந்தவுடன்…
மெதுவாக வால் உரசி சிலிர்க்கிறது பூனை,
மெல்லொலியில் கீச்சுகின்றன
பறவைகள்,
வண்ணம்கூடி மிளிர்கின்றன
மலர்கள்,
ஒளியை நிறைக்கிறது
ஆடி,
உயிரசைவு கொள்கிறது
இல்லம்..
நிறைகுளத்து நீரை
சிறு மதகால் கட்டியதென
பிரவாகமாய்ப் பொங்கத்துடிக்கும்
மனதை உள்ளொடுக்கி,
எதிர்நோக்கி ஏங்கவில்லையென்ற
பாவனை சூடுகிறது…
என் ஆறறிவு ஆணவம்
**********
தணித்தல்
மழை தன் சிறுதுளிகளால்
வையத்தைப் புரப்பதென…
இருட் கருவறையின்
ஆதுரக் கதகதப்புக்கான
என் ஏக்கத்தையும்…
விரிந்த வான்வெளியில்
ஒளிரும் சொர்க்கத்திற்கான
என் எதிர்பார்ப்பையும்
ஒருங்கே தணித்தாள்…
சிறிய விழியும்
எளிய மொழியும் கொண்டவள்,
தன் அருகாமையால்
**********