பூரணி பொற்கலைகளின் நிலம்
மாமாங்கத்திற்குப் பிறகு
நிரம்பித் ததும்பும் குளத்திற்கு
கேத வீட்டின் சாயல்
குளக்கரையில் கிடை திருப்பும்
கீதாரியின் முகத்தில் பிரேதக் களை
கிணற்றடியில் பூத்துக் குலுங்கும்
புளியங்கிளைகளில் அமர்ந்து பறக்கும்
கொண்டலாத்திகளின் பாடல்களில்
இனம் புரியா சோகம்
கண்மாய்க்கரை புஞ்சையில்
பால் கட்டிய சோளக் கதிர்களை
பார்த்து பார்த்து ஓலமிடுகிறவளின்
தாவாங்கட்டையில் நதியென
இறங்குகிறது கடல்
ஏரிக்கரை பருத்திக்காட்டில்
குத்த வைத்த கோவணக்காரனின்
பனை தேகத்தில் இறங்கி எரிகிறது இடி
மாந்தோப்பின் நடுவே வீற்றிருக்கும்
ஆங்கார அய்யனின் பார்வையில்
ஆற்றொணாத் துயரம்
நடு கற்களை வெறித்திருக்கும்
பூரணி பொற்கலை அம்மைகளின் விழிகளில்
திரள்கின்றன ஐப்பசி மேகங்கள்.
**************************
பூம்புனல் காதை
வசந்தத்தின் ரம்யத்தை காற்றோடு
மிழற்றித் திரியும் ஆலமர் கிளிகள்
வேட்டை விழிகள் குவித்து
தக்கைச் சிறுவனென தவமியற்றும்
குத்தீட்டி அலகுற்ற
செங்கால் நாரைகள்
மூதூர் கிழத்தி செவியணிந்த
அபூர்வ ஆபரணத்தை
கரைதனில் கண்டெடுப்பர்
பச்சைக் குதிரையாடும் பரிமேலழகர்
பூசகன் சேந்தி வரும் கலசங்களில்
உச்சி குளிர்ந்து ஆங்காரம் தணிவாள்
தீப்பாய்ந்த அம்பிகை
மீசைச்சாமியின் செந்நாக்கு
எச்சிலூறும் வண்ணம்
மிளகுடன் மீன் சுட்டு பாசிப்பாறையில்
சப்பு கொட்டுவர் கெளபீன நளபாகர்
ஊர்ப்பிடாரனின்
மகுடிக்கு மயங்கி
நாணல் நடுவே
நடமிடும் நாகம்
மக்களென எண்ணி
மாக்களை நீராட்டி
தம்முடல் நனைப்பர் இடையர்
வேட்டுவன் குறிக்கு தப்பி
நீர்ச்சுழியில் தாவும் மரை
இக்கரையினின்று
அக்கரையேறும் பரிசல்களால்
அருகென வேரூன்றும்
நனி நாகரிகம்
நீத்தார் கடன் முடித்து
நெடுவழி கடக்கையில்
நிறை சூலியென நினைவில்
தோன்றி நெஞ்சுடைந்து
விசும்பும் துவண்ட மூதாயின்
தொய்வுற்ற தனமாகிய எம் பூம்புனல்.
வாசகசாலையில் நானும் ஒரு வாசகனாய் இருப்பதில் பெருமையே. நீங்கள் செய்யும் இலக்கிய சேவை அளப்பரியது. தினமும் கவிதை வாசிப்புகள், சிறுகதைகள், வாசக சந்திப்பு என்று அனைத்தும் பாராட்டுளுக்கு உரியவை.