யாதுமானவன்
குளிர்ச்சி தரும் மாத்திரையாக நிலவை விழுங்கினாலும்
என்னுள்ளே தகிக்கிறாய் ஆதிமுதல்வா
கிளர்ந்து வளையும் கொடிகள் மரம்சுற்றுகையில்
கூடுவதைக் கூடுவதாகக் கூறும்
ஓரலங்காரமணி நெஞ்சிலடிக்கிறது
சங்குநாராயண சஞ்சீவி இலைகளாய்
உனது சொற்கள் காதுகளில் எப்போதும்
உயிர்ப்பிக்கின்றன வாழ்வை
குளிர்தேசத்து ஈத்தல் புதர்ப் பாடலாய்
குறவராடும் கூத்தாய்
மலைக்குன்றிச் செம்மணியாய்
மனம் திரள்வதை அறிவாயா
யாதுமானவா
உனது அகமகிழ்ச்சியின் உரிமை எனதாகும்
முல்லைப்பண் ஒன்றை யானைத் தந்தங்கொண்டு பாடுவேன்
மலைத்தினைமாவும் நீல அல்லிக்காய் புட்டும் கறிப்பலாவும் கதலிப்பூ வடையும்
மரக்காளானும் மந்திரத் தாவரமும் ஊட்டுவேன்
உனது உயிரடைத்த தாயத்தாய் மாறிப்போனேன்
திருமார்பில் தினம்துயில வரமளிப்பாய்
தாற்பரியங்கள் காக்க தனித்திருப்பேன்
பொழுதில் சாதிப்பத்திரிப்பூவாய் உனைச்
சூழ்ந்திருப்பேன்.
காதல்
எத்தனை முறை மறுத்தாலும்
காதலின் சுவை உப்பு தான்
கலக்கும் தன்மை கொண்டது தான்
கலந்த பின்
திசையறியாமல் திகைக்கும் விழி கொண்டது
அதனை என்ன செய்ய
உட்புகும் வழியும் வெளிவரத் தெரியாத
பைத்திய நிலையும்
வெற்றிப்பறையில் எழும் சத்தம்
வேகாள வெப்பத்தோடு உயர்வது போல
தகிக்கும் அகம் வாய்த்த மாய உடல்
காதலைப் போற்றுவதற்கு
இதற்கு மேல் அதிகாரம் ஏதேனும் உண்டா
காலச்சக்கரத்தை மூளையாகப் பெற்றது
காதல் இன்றி வேறு என்ன
தட்டையாகப் பறந்து செல்ல முடியாத
ஆழங்களை வேராகப் பெற்ற
கணங்கள் எல்லாம் முத்தங்களை ஊற்றெடுக்கிற சூத்திர அச்சு
நீங்கள் எத்தனை முறை சம்மதித்தாலும்
காதலை காதலாகவே கைக்கொள்ளும்
விரல்கள் தனித்தனி நேர்கோட்டில் பயணிப்பவை
இதுதான் இயக்கவியல் விதி
எங்கேயும் அவை இணைந்து விடக்கூடாது
இணையும் புள்ளியில் காதலின் கதிரியக்கம் மாறுபடும்
வலமிருந்து இடம் காலச்சக்கரம் சுழலும்
மாயச்சூத்திர அச்சின் சில கணக்குகள் முடிவு பெறும் போது
இயற்கையின்
நீட்சிமிக்க நீலவிதானக் கைகள் விரியும்
வாழ்கையின் உள்ளக்கால் உறுத்தும்
வைராக்கியம் என்பதற்கு காதலே தாய்
கைக்குழி இரகசியமாக பொத்தி வைக்க முடியாத வெயில்மேனி காதலுக்கு
அதனை மடியில் கிடத்தி ஏகாந்தம் தெளித்து கொஞ்சிப் பேசினால்
உரையிடப்படாத இலக்கணங்களை
ஞானமாக ஊட்டும்
நீங்கள் எத்தனை முறை சம்மதிக்க மறுத்தாலும்
வஸ்திரங்கள் ஏதும் உடுத்திக் கொள்ள விரும்பாத காதலின் நிர்வாணம் போல்
இவ்வுலகில் மகோன்னதம் ஏதேனும் உண்டோ
தேவை ஒரே ஒரு அகம்
உட்சுழலும் விதி யாவும் எதற்கும் ஒன்றே
காதலின் உயிர் நன்றியின் நளினக் கண்களால் ஆனது.
உனது நடை எனக்குள் உலாவும் நீர்
நிலை கொள்ள முடியா வானவில் கசிவு
மலை விரிவது போன்ற மன நசிவு
அலை மேயாத ஆழம்
உனை நினைக்கையில் எல்லாம்
முப்பொழுதும் முப்பொறியாய்
முலைப்பாலாய் ஊறுவதேனோ
முத்தங்கள் உதடுகளின் சுருக்கங்களுக்குள்ளே சுருங்கிப் போவதை
முன்னிரவோடு பின்னிரவைக் கண்ணீர்
முப்புரி நூலாய் திரிப்பதை
எல்லை கட்ட இயலாமல் தவிக்கிறேன்
கணிதக் குறியீடுகள் மனதில் வளர்ப்பது
கருணைக்கு எதிரானது என்று
போதனை செய்தால் ஒரு முறையேனும்
ஏற்கமுடியுமா
கருவிழி எத்தகைய கருவிக்கும் வாசலாக இருக்கட்டும்
வெளிச்சொல்லாமல் உருகும் கேவல்களை எப்படி நீர்மமாக்குகிறது
உன் மேல் கொண்டுள்ள அன்பை
காட்டுச் செண்பகப் பூவின் வாசத்தில்
தூபமாக ஏற்றி உறுதிபூசி
கண்டு கொண்டே இருந்து விடுகிறேன்
ஒடுங்குதல் தான் இருமனங்களுக்குள்
சரியான வாகை
உனது திடம் தீர்க்கரேகைக்கு மேல் செல்லும் மந்திரக் கோடு
உனது செறிவுமிக்க கருணை ஒப்பில்லா வானம்
உனது விழிகள் உக்கிர நட்சத்திரங்கள்
உனது நடை எனக்குள் உலாவும் நீர்.