சாமான்ய புத்தன்
காலக்கொல்லன் முகமூடியை அணிந்தவன்
துன்பங்கள் ஊறிய நீரில்
சிரிப்புத் தூரியத்தால்
கண்ணீரைத் தேய்க்கிறான்
வீட்டுச் சுவர்களில் தொற்றியிருக்கிறது
நினைவுப் பூஞ்சை
கதவிடுக்கில் கசிந்த ஒளியிலிருந்து
ஒரு அசரீரி
சிந்தை படிந்திருந்த மனதைத்
தூசி தட்டியவனின் வீடு
போதி ஆனது
அவன் ஆதியின் மீதியானான்.
திசைகளின் கவிதைத் தொகுப்பு
உப்பு மூட்டை விளையாட்டை
என்னைச் சுமந்து
ஆடுகிறது காலம்
எதுகை மோனை கொண்டு
செதுக்கும் திசைகள்
ஃபில்டர் இருக்கும் நேரக் கண்ணாடியில் தெரியும்
என் பரிணாமத்தின்
எல்லாப் பரிமாணங்களையும்
தனது பேனாவுக்குள்
அடைத்துக் கொள்கின்றன
வாழ்வென்னும் பதிப்பகத்தில்
நீங்கள் வாசிக்க
அச்சாகிறேன் நான்.