யார் நீங்கள்?
அனைத்திலிருந்தும் வெளியேறிவிட
குடியிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கட்டிட வாசல் மட்டுமே
வழி அல்ல
தெருக்கள் சந்துகள் சாலைகள் நெடுஞ்சாலைகள் என
எங்கெங்கும் நெரிசல் துரோகம் ஃபிராடுத்தனம்
கூச்சல் குழப்பம்
வெளியேறுதல் நிகழ்ந்தது முன்னர்
வனத்திலிருந்து
வெளியேறுதல் நிகழ்கிறது பின்னர்
வனம் நோக்கி
ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களுக்கு உள்ளது கட்டற்ற வெளி
வேர்களைத் தீண்டிடும் நஞ்சு அந்நிலத்தில் இல்லை
உயிர் பற்றிக்கொள்வதற்கான ஈரப்பதம்
சுரந்திருக்க வேண்டிய இடம் இதயம் என்பதாக
பகுத்தறிவும் உதவுவதில்லை
மௌனித்திருக்கும் மனத்திலே ரகசியங்கள் அற்று மலர்கிறது
கவிதையென சிறு உதடு.
***
யாரேனும் கண்டதுண்டா அக்காட்டை?
காலை வேளையில் துடிப்புள்ள குருவியின்
கீச் கீச்
ஒரு நூற்றாண்டு பின்னோக்கிச் சென்று
கொத்தி வருகிறது ஒற்றை நெல்மணியை
ஆங்கே
விட்டுவிடுதலையடைய வேட்கையுடன் எரிந்த மனம்
மூண்டிடவில்லை உடனடியாக
தீயென
மாறாக
துளிர்விட்டது தழல்
அது சூல்கொண்ட இடம் இருண்மை
பசி அதன் மூச்சு
துயரம் நீங்கள் நினைப்பது போல் இல்லை
அது ஒரு மேஜிக்கல் ரியலிஸம்
காப்ரியேல் கார்ஸியா மார்குவேஸின்
மக்கோந்தோ நகரின் கடிகாரத்தில் சுற்ற மறந்த
முட்களும் அவைதாம்.
***
மேலும் ஒரு ரவுண்ட்
நள்ளிரவில் புக்கோவ்ஸ்கியுடன்
உரையாடிக்கொண்டிருந்தேன்
சிகரெட் நுனியில் எரிந்துகொண்டிருந்த சொற்களை
எழுதாமல் தவிர்த்துவிட்ட இருபத்தியோராம் நூற்றாண்டு
நவீன கவிதைகள் மீது
சாம்பலாக உதிர்த்துக்கொண்டிருந்தார்
‘நீயேன் இத்தனை அடத்துடன் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறாய்’
என்று என்னிடம் கேட்டார்
‘மேற்கொண்டு எழுதாமல் இருப்பதற்காகவே’ என்ற பதிலைத்
தவிர்த்துவிட்டேன் கவனமாய்
விஸ்கி குடிக்கிறாயா இந்தா ஐஸ் க்யூப்ஸ் எடுத்துக்கொள்
வேண்டாம் அவை கவிதையின் அடர்த்தியை
குறைத்துவிடலாம்
இத்தனை மண்டைசூட்டை தணித்துக்கொள்ள வேண்டாமா
ஐஸ் கியூப்ஸை மிஸ் பண்ணாதே
நான் நடந்து தீர்த்த சந்துகள்
உங்கள் நகரத்தில் இல்லை புக்கோவ்ஸ்கி
What about your Broadway
அங்கே கண்டெய்னர் லாரிகள் நிற்கின்றன
உற்பத்தி சரக்கு உழைப்பு கூலி
உபரி லாபம்
லோடு ஏற்றும் சேரி ஆட்கள்
கோழி மார்க்கெட்
மற்றும் வைன் ஷாப்
ஏடிம் வாசல்
வயசான யூனிஃபார்ம் உருவம்
அது இன்று பிராட்வே அல்ல புக்கோவ்ஸ்கி
Just sideways with some thousand potholes
நீ ஐஸ் க்யூப்ஸ் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும்
அந்த சுவரைப் பார் எத்தனை உயரம்
ஆமாம்
அதற்கென்ன இப்போ
உயரத்தில் பல்லியொன்று இருக்கிறது பார்
தெரிகிறதா உனக்கு
ம்ம்
அது கீழே வரும்வரை நாம் காத்திருக்க வேண்டும்
பிறகு என்ன?
வந்ததும் அதை அடித்துக் கொன்று விடவேண்டும்
அதுபோல்தான் ஒரு நவீன கவிதைக்காக காத்திருப்பது என்பதும்
ச்சியர்ஸ் என்கிறார்
மேலும் கொஞ்சம் சாம்பல்கள் விஸ்கியில் உதிர்கின்றன.
******