இணைய இதழ்இணைய இதழ் 86சிறுகதைகள்

கவிதையும் கடல்வாழ் உயிரினமும் – சித்துராஜ் பொன்ராஜ்

சிறுகதை | வாசகசாலை

விதை எழுதுவதுகூட கடினமாகிப் போயிருந்தது.

கண்ணதாசன் குறுகலான படுக்கையில் சாய்ந்தபடி கைத்தொலைப்பேசித் திரையில் வார்த்தைகளை வெவ்வேறு விதமாய்ப் பிரித்துப் பிரித்து மூன்று வரிகளைத் தட்டச்சுச் செய்தான். பின்பு மெல்லிய சலிப்போடு திரையின் அடிப்பகுதியை ஆள்காட்டி விரலால் பலமாகக் குத்திக் குத்தி அவற்றை அழித்தான். கண்ணதாசனுக்கு கைவிரல்நுனிகள் நல்ல பருமனாக இருந்தன. இரண்டு சொற்களை அடிக்க நினைத்தும் மூன்று வரிகளும் ஒருகணம் அதிர்ந்து முற்றாக அழிந்து போயின. 

கண்ணதாசனுக்குக் கைவிரல்நுனி லேசாய் குறுகுறுத்தது. மீண்டும் பெருமூச்சுவிட்டுக்கொண்டு கட்டிலில் அந்தப் பக்கமாய்த் திரும்பினான். தலைக்குப் பக்கமாய் இருந்த சன்னலுக்கு வெளியே மிதந்து கொண்டிருந்த மேகங்கள் விலகி தங்க நிறத்தில் வெயில் அறைக்குள் நுழைந்து கண்களைக் கூசச் செய்யும் வகையில் கைத்தொலைபேசித் திரையை மூழ்கடித்தது. 

கண்ணதாசன் தொலைபேசியைச் சலிப்போடு கட்டிலில் வெறுப்புடன் மெல்ல தூக்கிப் போட்டான். கேலிச் சித்திரப் பொம்மைகள் போட்ட இழுத்து விரிக்கப்பட்டிருந்த நீலநிற படுக்கையுறையில் தொலைபேசி ஓரிரண்டு முறை துள்ளிக் குதித்துப் படுக்கையின் விளிம்புக்குப் போகப் போனது. கண்களில் கலவரத்தோடு முயல்குட்டியைத் தரையிலிருந்து அள்ளியெடுப்பதைப்போல கண்ணதாசன் கீறல்கள் விழுந்த முதுகினையுடைய தொலைப்பேசியைத் தன் கைகளில் அள்ளி மார்போடு வைத்துக் கொண்டான். 

தனிமை என்பது எழுத முடியாத கவிதையைவிடக் கடுமையானது.

பழைய தொலைபேசிதான். கையில் வேலையில்லாத காலத்தில் உடைந்து போனால் எப்படிப் புதுத் தொலைபேசி வாங்குவது? கண்ணதாசனின் படுக்கை தலைமாட்டில் மாட்டப்பட்டிருந்த சட்டம்போட்ட ஓவியத்தில் ஒலிவ மலைமீது முழங்கால்களைச் சுற்றிக் கைகளை வைத்து வானத்தை அண்ணாந்து பார்த்து ஜெபித்துக் கொண்டிருந்த யேசப்பாவின் முகம் கவலையால் கறுத்திருந்தது. அவரும் பழையவர்தான். கண்ணதாசனின் இரண்டு வயதில் பாட்டி வாங்கித்தந்த ஓவியம். 

ஓவியத்தின் அடிப்பகுதியில் போடப்பட்டிருந்த அடர்பச்சை, இளஞ்சிவப்பு, கண்ணைப் பறிக்கும் நீலம் ஆகிய நிறங்களைத் தவிர ஓவியத்தின் மற்ற வண்ணங்கள் அனைத்தும் மங்கியும் கறுத்தும் போயிருந்தன. ஓவியத்தின் வலது மேற்புறத்தில் கூரையிலிருந்து அவ்வப்போது குழாய்த் தண்ணீர் சொட்டாத இடத்தில் மட்டும் கர்த்தர் எதிர்ப்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்த வானம் வெளிச்சமாய்ப் பொங்கிக் கிடந்தது.

கண்ணதாசன் மீண்டும் தொலைபேசியில் சற்று முன்னால் அவன் எழுதிப் பார்த்த நினைத்துக் கொண்டான். ‘வெளிச்சமாய் ஒரு வானம் – அதில் நீந்திக் கடக்கும் நட்சத்திரங்களாய் உன் கானம்’. ‘கடக்கும் இரவு நேரப் பறவைகளாய் உன் கானம்’ என்ற மாற்று வரிகள் மனதிற்குள் வந்து கொண்டே இருந்தன. கொஞ்ச நேரம் யோசித்த பிறகு உள்ளூர்ச் செய்தித்தாளுக்குத்தானே – நட்சத்திரங்களே போதும் என்று கண்ணதாசன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். 

அறைக்கு வெளியே அம்மா வெறும் நிழலாகவும் கழுத்தில் அணிந்த சிலுவைச் சங்கிலி சிணுங்கல்களாகவும் மாலைநேரச் சமையலின் வாசனைகளாகவும் புலப்பட்டு மறைந்தாள். கானத்துக்கு இரவு நேரப் பறவைகள்தானே சரியாய் வரும்?

‘நன்றாகத்தான் பெயர் கொடுத்திருக்கிறார்கள் கண்ணதாசன் என்று’ என்று மீண்டும் யோசித்தபடியே கண்ணதாசன் தன்னைத்தானே பார்த்துச் சலித்துக் கொண்டான். அப்பா சின்ன வயதில் கவிதைகள் எழுதியிருக்கிறார். திருமணப் பதிவுச் சான்றிதழ், ஞானஸ்நானச் சான்றிதழ்கள், திருமண அழைப்புக்கள், கல்விச் சான்றிதழ்கள், ரிப்பனோடு மலிவான உலோககங்களும் மக்கிப்போன பழைய பள்ளிக்கூட விளையாட்டுப்போட்டிப் பதக்கங்கள் ஆகியவற்றுக்கு அடியில் அப்பாவின் சுவைமிகுந்த வாலிப காலமாய் வெளிறிய நீல நிற மையில் கோணலான எழுத்துக்களால் எழுதப்பட்ட கவிதை நோட்டுகள் வரவேற்பறை கண்ணாடி அலமாரியின் கடைசி அடுக்கில் இன்னமும் இருக்கின்றன. பழைய தமிழ் நேசன், தமிழ் முரசு ஞாயிறு பதிப்புக்களிலிருந்து கவனமாய்க் கத்தரிக்கப்பட்டிருந்த பழுப்பு நிறத் தாள் பகுதிகளோடு. 

ஞாயிறு செய்தித்தாளில் சினிமா பக்கத்தின் அடியில் தனது கவிதை பொடி எழுத்துக்களில் வெளியாகும் சில சோம்பல் நிறைந்த பிற்பகல்களில் வாய்க்கடையோரத்தில் சின்ன ஏளனம் நிறைந்த புன்சிரிப்போடு கண்ணதாசன் அப்பாவின் கவிதைகளை வாசித்துப் பார்ர்த்திருக்கிறான். மொத்தமாய் வானம், நட்சத்திரம், மலர்கள், பறவைகள் என்று நிறைந்திருந்த கவிதைகள். 

அடடா – 

பாசீர் பாஞ்சாங் தமிழ் மெத்தடிஸ்ட் சபையின் பழைய போதகர் ஸ்டீபன் தங்கரத்தினம் கண்ணதாசனுக்குக் கண்ணதாசன் என்ற ஞானஸ்நான நாமத்தைச் சூட்டத் திடமாய் மறுத்துவிட்டார். அப்பா ‘மத்தவங்க’ குடும்பத்திலிருந்து வந்ததுதான் எல்லா குழப்பத்துக்கும் காரணம் என்பது பாஸ்டர் ஸ்டீபனின் நம்பிக்கையாய் இருந்தது. அம்மாவின் குடும்பத்தார் அனைவரும் மூன்று தலைமுறைகளாக மெத்தடிஸ்ட் பள்ளி ஆசிரியர்களாக திருச்சபை ஊழியர்களாக இருந்தவர்கள். பெரிய செல்வமில்லை என்றாலும் மதிப்பான குடும்பம். இளவயது அம்மா பள்ளிக்கூட ஆசிரியையாகச் சேர்ந்த பள்ளியில் அப்பாவும் முதல் பட்டதாரி ஆசிரியராகச் சேர்ந்திருந்தார். 

ஒரே இடத்தில் வேலை பார்த்த அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்று கண்ணதாசன் அவன் பாட்டியோ யாரோ எங்கோ எப்போதோ சொல்லக் கேட்டிருக்கிறான். எப்போது என்றுதான் அவனால் சொல்ல முடிவதில்லை. 

அம்மா அப்பாவும் திருமணம் செய்தே அனுப்பப்பட்டவர்கள்போல கண்ணதாசனுக்குத் தோன்றினார்கள். ஆதியிலிருந்தே தேவகுமாரனாகவே இருந்த ஆண்டவரானவரைப்போல். அவர்களது திருமண நிகழ்ச்சிகூட எண்ணிறந்த காலத்துக்கு முன்னால் நடந்த ஏதோ ஒரு குதூகலம் நிறைந்த அதிசயமாகவே கண்ணதாசனின் மனதில் பதிவாகி இருந்தது. 

இந்த உலகத்திலேயே போதகர்கள் மட்டும்தான் அப்பாவை கிறிஸ்டோபர் என்ற அவரது புதிய பெயரோடு அழுத்திக் கூப்பிட்டார்கள். கண்ணதாசன் பள்ளியிலும் திருச்சபையிலும் தேசிய சேவையிலும் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளிலும் இவற்றிற்கெல்லாம் உரிய சான்றிதழ்களிலும் ஜோசப் என்று அழைக்கப்பட்டான். பழைய கிழவர்கள் கூடும் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் மாத்திரம் அவன் தன்னைக் கண்ணதாசன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வான். அவன் பெயரைக் கேட்டதும் கிழவர்களின் கண்களில் தீக்குச்சியின் கிளர்தலைப்போல சிறிய வெளிச்சம் ஒன்று பெருகி அடங்குவதைக் கண்ட பெருமிதத்தில் கன்னங்களில் சூடேற ஒருகணம் மகிழ்வான். 

அப்பா அவனைப் பெயர்சொல்லி அழைப்பதை வெகுநாளாய்த் தவிர்த்து வருகிறார். அவனுக்குப் பிறகு பிறந்த பெண்ணுக்கு தானே முன்வந்து ஏஞ்சலின் என்று பெயர் சூட்டினார்.

வரவேற்பறைக் கண்ணாடி அலமாரியின் அடியில் வைக்கப்பட்டிருந்த கவிதை நோட்டுகளிலிருந்த கோணலான வெளிறிய நீல எழுத்துக்களைப்போலவே, அப்பாவின் பழைய பெயரும் கண்ணதாசன் ஏஞ்சலின் இருவரின் பெயர்களின் இறுதியில் மட்டும் சத்தமின்றி இன்னமும் ஒட்டியிருந்தது.

“என்னடா பண்ணிகிட்டு இருக்க?”

அம்மா அறைக்குள் தோன்றியிருந்தாள். மாலை ஆறரை மணி ஆகியும் மத்தியானத் தூக்கத்தைவிட்டு எழுந்திருக்காமல் பூப்போட்ட அரைக்கால் சட்டையோடும் கையில்லாத கசங்கிய பனியனோடும் கச்சலான உடம்போடு கட்டிலின் நீளம் போதாமல் கேலிச் சித்திரங்கள் போட்டிருந்த படுக்கையில் கிடந்த தனது இருபத்தேழு வயது மகனையும் அவன் கையோரமாய்க் கிடந்த தொலைபேசியையும் ஒருமுறை கண்கள் குறுக்கிப் பார்த்தாள். அவள் குரலில் அறிவிக்கப்படாத குற்றச்சாட்டு ஒட்டிக் கொண்டிருந்தது. அம்மாவின் வாயோரமாய் இருபுறமும் சாம்பல் பூக்களாய்ச் சுருக்கங்கள் மலர்ந்து விரிந்திருந்தன.

“வியாழக்கிழமை. ஏஞ்சலின் ஸ்கூல் முடிஞ்சப்பறம் டியூஷன் சொல்லிக் கொடுத்துட்டு ஒன்பது மணிக்கு மேலதான் வருவா.”

கண்ணதாசனின் கண்முன்னால் ஏஞ்சலின் தெரிந்தாள். அவள் இயற்கையிலேயே நல்ல நெடுநெடு என்று வளர்ந்து சுருட்டை முடியோடு சட்டைக்காரிச்சி என்று சொல்லத் தகுந்த வகையில் சிவந்த உடம்போடு எதையும் நேர்த்தியாகச் செய்யும் திறமையோடு பிறந்ததால் ஏஞ்சலின் கணக்கு ஆசிரியராக ஆனாளா, அல்லது கணக்கு அவளுக்கு இயற்கையிலேயே பிடித்ததால் நல்ல உயரமாக வளர்ந்து

அழகியாகி எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தாளா என்று கண்ணதாசனுக்குச் சொல்லத் தெரியவில்லை. 

பயிற்சிபெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஒரு மணி நேர கணக்குத் துணைப்பாடத்தின் கட்டணம் குறைந்த பட்சம் நூற்று எண்பது டாலர். ஒரு வாரத்துக்கு நான்கு மணி நேரம். இப்படியே இன்னும் இரண்டு மாணவர்கள் என்றாலும், ஒரு மாதத்தில் வாங்கும் டியூஷன் பணத்தை ஏஞ்சலினின் படிநிலையிலிருக்கும் ஆசிரியர்களின் மாதச் சம்பளமான எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் டாலரின் விகிதமாய்க் கணக்கிட்டால்…

அறைக்குள்ளே அந்த கணத்தில் ஏதோ ஒரு வெளிச்சம் தெறித்துப் பெருகியதாகக் கண்ணதாசனுக்குத் தோன்றியது. ஒன்றும் பேசாமல் அம்மாவின் அடுத்த பேச்சுக்காகக் காத்திருந்தான். முப்பத்தைந்து வருடமாக அவளும் கணக்கு ஆசிரியராக தொழில் செய்துவிட்டு பெயர் குறிப்பிட முடியாத ‘பெண்கள் சம்பந்தமான’ பிரச்சனைகளின் காரணமாகப் போன வருடம் ஓய்வு பெற்றிருந்தாள். அவள் அனுபவத்தில் இந்த உரையாடல்கள் பாடத்தைச் சரிவரப் படித்துவிட்டு வராத மாணவர்கள் நிறைந்திருக்கும் வகுப்பின் தொடக்கத்தில் அனாயசமாய்க் காற்றில் அசைத்துக் காட்டும் பிரம்பு வீச்சு, வார்த்தைச் சிலம்பம்.

“இண்டர்வியூவுக்கு ஈமெயில் எழுதிப் போட்டியா இல்லையா?”

சம்பிரதாயமான இந்தக் கேள்விக்குப் பிறகு அம்மாவின் இறுக்கம் தளர்ந்ததை கண்ணதாசனால் உணர முடிந்தது. படுக்கைச் சன்னலுக்கு வெளியே சுற்றியிருந்த அடுக்குமாடி வீடுகளில் வெளிச்சங்கள் மின்ன ஆரம்பித்திருந்தன. அந்த வெளிச்சங்களின் நடுவில் தலைமயிரெல்லாம் நரை விழுந்த அம்மா மறுபடியும் சராசரி மனுஷியாகித் தன் உருவத்தைச் சுருக்கம் விழுந்த நைட்டிக்குள் சிறியதாக்கிக் கொண்டு குளிர்ந்து நின்றாள்.

“இன்னைக்கு வியாழக்கிழமைடா. அப்பாவும் டியூஷன் முடிஞ்சு வந்தா சார்டீன் கறி கேப்பாரு. இன்னைக்குப் பசாருக்குப் போனப்ப வாங்க மறந்துட்டன். நீ கீழ இருக்குற சீனன் கடையில போயி ரெண்டு டின்னு சார்டீன் வாங்கிட்டு வந்திரு என்ன? மேஜ மேல காசு இருக்கு.”

“ம்.”

“என்னடா?”

“ம். அதான் போறன்னேனே.”

“முதல்ல இந்தக் கண்றாவியான பூப்போட்ட ஷார்ட்ஸையும், பனியனையும் மாத்து. இப்படியே கடைக்குப் போகாத. அப்பா பார்த்தா கத்துவாரு. யேசப்பா…”

வியாழக்கிழமை சார்டீன் கறி கிடைக்கவில்லை என்றால் கத்தும் அப்பா. இன்னமும் வேலைக்குப் போகாத மகன் பூப்போட்ட பழைய அரைக்கால் சட்டையையும் கையில்லாத பனியனையும் அணிந்துகொன்டு சீனன் கடைக்கு சார்டீன் வாங்கப் போனால் கத்தும் அப்பா. 

இருவரும் வானத்தையும், நட்சத்திரங்களையும், மலர்களையும், பறவைகளையும் வைத்துக் கவிதை எழுதுகிறோம். 

அடடா – 

முதுகில் கீறல்கள் விழுந்த அரதப் பழசான கவிதைத் தொலைப்பேசி கண்ணதாசனுக்காக எப்போதோ வாங்கிப் போடப்பட்டிருந்த கேலிச்சித்திரப் படங்கள் வரைந்த சிறுவர்கள் படுக்கையிலிருந்து குப்புறப் புரண்ட நிலையிலிருந்தபடியே சிரித்தது.

அம்மா அறையைவிட்டு மீண்டும் நிழல்களாகவும் சிலுவைச் சங்கிலியின் சிணுங்கல்களாகவும் மாலைநேரச் சமையலின் வாசனைகளாகவும் மாறிக் கிளம்பும் முன்னால் கடைசியாய், ஒரு இடைச்செருகலாய் ஒரு கேள்வி கேட்டிருந்தாள்.

“அப்பா சொன்ன வேலைக்குத்தானப் போகப் போற…?”

இம்முறை அம்மா கண்ணதாசனின் பதிலுக்குக் காத்திருக்காமலேயே கிளம்பி விட்டாள். அவள்

அறையைவிட்டுக் கிளம்பத் திரும்பியபோது அறைக்குள் இன்னமும் சுடர்விட்டுப் பெருகிக் கொண்டிருந்த பிரகாசத்தில் மின்னிச் சுடர்விட்ட அவள் நெற்றி மேட்டோடும் புருவங்களின் மேற்புற வளைவோடும் கொஞ்சம்போல் ஏஞ்சலினைப்போலவும், கொஞ்சம்போல் செசிலியாவைப்போலவும் இருந்தாள். 

செசிலியா, கண்ணதாசனின் தமிழ்த் திருச்சபை சந்திக்கும் அதே கட்டடத்தில் கூட்டங்களை நடத்த ஆரம்பித்திருந்த ஓர் ஆங்கிலச் சபையில் உறுப்பினளாக இருப்பவள். கண்ணதாசனுக்கு ஒத்த வயதிருந்த தமிழ்ப் பெண். ஏஞ்சலினைவிட செசிலியாவுக்கு உயரமும் நிறமும் நேர்த்தியும் அதிகம். விளம்பர நிறுவனமொன்றில் எதுவாகவோ இருந்தாள்.

சமீப காலமாய் தனது கவிதைகளை எல்லாம் செசிலியாவுக்காக எழுதுவதாகவே கண்ணதாசன் நினைத்துக் கொண்டிருந்தான்.

அவன் எழுதும் கவிதைகளைச் செசிலியாவுக்குப் படித்துக் காட்டுவதுபோலவும் அவற்றைக் கேட்டுவிட்டுச் செசிலியா கண்கள் பெரிதாய் விரிய விரியப் பாராட்டுவதுபோலவும் கண்ணதாசன் கற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான். 

ஆனால், இதில்கூட கண்ணதாசனுக்குத் திடமாய் பெரிய நம்பிக்கை எதுவுமில்லை. 

செசிலியாவுக்குத் தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. அவளை ஒரு சீன இளைஞனோடு பக்கத்திலிருந்த நூல் நிலையத்தில் அடிக்கடி பார்த்திருப்பதாக பாஸ்கல் தேவராஜ் சொல்லியிருக்கிறான்.

அம்மா ஏஞ்சலினின் சாயலிலும், ஏஞ்சலினும் செசிலியாவும் அம்மாவின் சாயலிலும் தெரிகிறார்கள். திருச்சபை கட்டடத்தில் சில நேரங்களில் முகத்துக்கு முகம் சந்தித்துக் கொண்டாலும் பேசவே துணியாத இருபத்தாறு வயது செசிலியா, ஐம்பத்தொன்பது வயது அம்மாவின் குரல் உயர்த்தி உயர்த்திக் கரகரத்துப் போன கட்டைக் குரலில் பேசினாள்.

இயேசுவானவர் தபோர் மலைமுகட்டில் தேவனின் மகிமையினால் மறைக்கப்பட்டபோது அவரைச் சூழ்ந்திருந்த மேகத்திலிருந்து ஒலித்த அமானுஷ்யமான குரலைப்போலவே கண்ணதாசனைச் சூழ்ந்திருந்த பிரகாசத்திலிருந்து மூவரின் நெற்றி மேடுகளும் புருவ வளைவுகளும் ஒருமித்த குரலிலேயே ஒலித்தன.

இது என்ன ஒரு சிறுவனின் அறையா அல்லது வளர்ந்துவிட்ட ஒரு ஆண்பிள்ளையின் அறையா? பூப்போட்ட அரைக்கால் சட்டை பொறுப்பான ஒரு மூத்த பிள்ளையின் லட்சணத்துக்குப் புறம்பானதா.. புறம்பானது இல்லையா? படிப்புக்குத் தகுந்தபடி தேடுவதுதான் வேலையா இல்லை பணத்துக்குத் தகுந்தபடிதானா?

நீயென்ன உண்மையில் ஜோசப்பா.. கண்ணதாசனா?

செசிலியாவிடம் மட்டுமல்ல அப்பாவிடமும் கண்ணதாசன் இதுவரை சந்தித்த வேலைக்கான நேர்முகத் தேர்வுகளிலும்கூட சிக்கல் இதிலிருந்துதான் தொடங்குகிறது. கண்ணதாசன் பூப்போட்ட கசங்கிய அரைக்கால் சட்டையை அவிழ்த்துவிட்டுத் தொடைகளில் ஜீன்ஸ் பேண்டை இழுத்தபடியே யோசித்தான்.

“…….”

“நாடகமும் நுண்கலையும் குறிப்பிட்ட தொழிலுக்கு என்று அல்ல. அவற்றைப் பயில்வதால் நாம் மெருகேற்றிக் கொள்ளும் கற்பனைத் திறனையும் சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றலையும் அலுவலக மேலாண்மையில் மட்டுமின்றி பல்வேறுவித துறைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.”

“…….”

“வரைவதும் கைவினையும்தான். ஆனாலும் இதில் ஆய்வும் உண்டு ஆராய்ச்சியும் உண்டு. குறிப்பாக நான் எழுதிய இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பாருங்கள்.”

“…….”

(சற்றுக் கோபமாகவே): “பயன் இல்லாமலா நுண்கலைப் பல்கலைக்கழகம் கட்டி வைத்திருக்கிறார்கள்.”

[இறுதியில் உரையாடல் ‘உங்கள் வளமான எதிர்காலம் வேறொரு திசையில் இருக்கிறது என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்’ என்று முடியும். அப்பா அதைக்கூடச் சொல்ல மாட்டார். அப்பா கண்ணதாசனுக்காகப் பார்த்து வைத்திருந்த வேலை அரசாங்க நிறுவனம் ஒன்றில் மனித வளப் பிரிவைச் சேர்ந்தது. அந்த வேலை நிச்சயம் கண்ணதாசனை முழுதாக விழுங்கிக் கொள்ளும். அவன் செய்ய நினைத்த எந்தவிதமான படைப்புக் காரியத்தையும் வேலைப்பளு செய்யவிடாது. கோப்புகளிலும் கணக்கு லெட்ஜெர்களிலும் வாழ்க்கையே முடிந்துபோகும் அபாயமுண்டு. கண்ணதாசன் அப்பாவின் ஆலோசனையை வன்மையாக மறுத்து வந்தான்.]

கண்ணதாசன் கைத்தொலைபேசியை எடுத்துக் கொண்டு மீண்டும் எழுதி அழித்த பழைய கவிதை வரிகளை உருப்போட்டுக் கொண்டே வீட்டைவிட்டுச் சார்டீன் டின்களை வாங்க வெளியேறியபோதும், அடுக்குமாடிக் கட்டடத்தின் படிகட்டு வளைவில் மங்கிய விளக்கொளியில் கால்கள் தடதடக்க இறங்கியபோதும், தனது கவிதைகளுக்கு இந்த உலகத்தில் ஏதோ ஒரு தேவை இருப்பதாகவே கண்ணதாசன் நினைத்துக் கொண்டான்.

செய்தித்தாளில் அவன் கவிதைகள் மாதத்தில் ஒருமுறையாவது பிரசுரமாகாவிட்டால் இலக்கியக் கூட்டக் கிழவர்கள் ஞாபகம் வைத்துக் கொண்டு கேட்டார்கள். அவர்களில் பலபேர் மிகச் சாதாரணமான வேலையிலிருந்து கொண்டே கணினி வரும் காலத்துக்கு முன்னமேயே சொந்தக் காசில் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர்கள். ஜோசப் என்று சொல்ல ஆரம்பித்து நாக்கைக் கடித்துக் கொண்டு ‘கண்ணதாசன்’ என்று கண்ணதாசன் தன்னையே அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது முகத்தில் பெருமிதம் பெருக அவனைப் பார்ப்பவர்கள். 

‘தமிழ்ல நல்ல பயிற்சி வேணும் தம்பி. நிறைய படிங்க’ என்று சொல்லி அரசாங்கம் நூல் நிலையங்களுக்கு வாங்கிக் கொண்டாலொழிய ஐம்பது படிகளைத் தாண்டி விற்றுத் தீராத அவர்களது புத்தகங்களை அவன் கைகளில் திணித்தார்கள். அவர்களில் ஓர் அட்டகாசமான கிழவன் உரத்த குரலில் கண்ணதாசனை விரைவில் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார்.

“நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் இந்த ஒரு விஷயத்துக்காகத்தான தம்பி” என்று கண்சிமிட்டினார்.

படிக்கட்டுகள் முடிந்த இடத்திலிருந்து இருபது அடிகள் தள்ளி கட்டடத் தாழ்வாரத்தில் சீனனின் பலசரக்குக் கடை கவிழத் தொடங்கியிருந்த இரவின் இருட்டில் வைரமாய்ச் சுடர்விட்டது. 

கடையின் முன்புறத்திலிருந்த காசாளர் மேடையில் வெனெஸா அமர்ந்திருந்ததைப் பார்த்துக் கண்ணதாசன் ஆச்சரியப்பட்டுப் போனான். அவனோடு பள்ளிக்கூடத்தில் படித்த சீனப்பெண். 

கடவுள் பெண்ணைப் படைத்ததெல்லாம் அவள் உடம்பின் வசீகரங்களைத் தெளிவாக அம்பலப்படுத்துபதற்காகத்தான் என்பதுபோல் மிக மெல்லிய துணியாலான கையில்லாத பனியனையும் தொடையின் மேல்புறத்தைக்கூடத் தொடாத ஷார்ட்ஸையும் அணிந்து கால்மேல் காலை அகட்டிப் போட்டபடி வெனெஸா முக்காலியில் அமர்ந்திருந்தாள். 

கையில்லாத பனியனுக்குள் புடைத்திருந்த உள்ளாடை கொள்ளாமல் மார்பு பொங்கியிருந்தது. கடையின் வெளிச்சத்தில் அவள் உடம்பு தங்கமாய் ஜொலித்தது. மேடையில் மீது அவள் உணவை மங்குகளில் பரப்பி வைத்து உண்ண ஆரம்பித்திருந்தாள். வறுத்த பன்றி மாமிசத்தின் வாசம் கடை முழுவதும் புறப்பட்டுக் கிளம்பியது.

படிக்கும் காலத்தில் அப்பாவுக்குப் பயந்து கண்ணதாசன் வகுப்பிலிருந்த எந்தப் பெண்ணோடும் அதிகம் பேசுவதில்லை. அப்படிப் பேசாமலிருப்பது அப்பாவையும் அம்மாவையும் கனம் செய்யச் சொல்லும் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதின் ஒரு பகுதியென்றே அவன் நம்பினான். அது மட்டுமல்லாமல் அந்தப் பழைய காலத்தில் பன்றி மாமிசத்தின் வாசம் அவனுக்கு ஆகாமலும் இருந்தது.

கண்ணதாசனைப் பார்த்ததும் வெனெஸாவின் முகம் வெளிச்சமானது. அவன் முகத்தில் தெரிந்த ஆச்சரித்தைக் கண்டு கொண்டு, ‘எங்க அப்பா கடை’ என்று அவனிடம் மெல்ல முணுமுணுத்தாள். அவள் கண்கள் கடை முகப்பு நேரெதிராய் உயரத்தில் மாட்டப்பட்டிருந்த சின்ன தொலைகாட்சிப் பெட்டியின் திரையில் நிலைகுத்தியிருந்தது. ஒருகணம் வெனெஸா அவனைப் பார்த்துக் கண்ஜாடையால், ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டாள். 

“ரெண்டு டின் சார்டீன் வாங்க வந்தேன் – அப்பாவுக்கு,” மன்னிப்புக் கேட்பதுபோல் தயக்கத்தோடு சொல்லி நிறுத்தினான்.

“பொறு,” என்று கை உயர்த்திக் காட்டியவள் முக்காலியிலிருந்து பன்றி மாமிசத்தை வாய்நிறைய மென்றுகொண்டே எம்பிக் குதித்து அந்தச் சின்னக் கடையின் அடியாழத்துக்குப் புறப்பட்டுப் போனாள். 

அவள் மீண்டும் கடை முகப்புக்கு வந்தபோது அவள் கையோடு துர்நாற்றம் நிறைந்த தொளதொளப்பான நீல நிறச் சட்டையும் கணுக்காலுக்கு சற்று மேலேயே முடிந்துவிட்டிருந்த அளவு போதாத கால்சட்டையும் அணிந்திருந்த கறுப்புத் தோலுடைய சீனக் கிழவன் தொத்திக் கொண்டு வந்தான். கிழவன் கையில் அழுக்கேறிய அடர்பச்சை கன்வாஸ் பையை இறுகப் பிடித்திருந்தான். பையை அவனிடமிருந்து பிடுங்கியவள் ஜிப்பைத் திறந்து பைக்குள்ளிருந்து பிஸ்கட் பாக்கெட்டுகளையும் அரிசி பொட்டலம் ஒன்றையும் உருவியெடுத்தாள். மூச்சிரைத்ததில் அவளது பெரிய மார்புகள் விம்மித் தாழ்ந்தன. 

கிழவனைச் சீன மொழியில் வெனெஸா மிக மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டினாள். அவள் அப்படிச் செய்தபோது கண்ணதாசன் அரைமணி நேரத்துக்கு முன்னால் அவன் எழுதிய கவிதையின் வார்த்தைகளை அவள் பேசிய வார்த்தைகளோடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“இதுக்கெல்லாம் நீ காசு கொடுக்கப் போற?”

பொட்டலங்களைக் கிழவனிடமிருந்து பிடுங்கி அவனைத் துரத்தியடித்த அதே நேரத்தில் காசாளர் மேடையில் வெனெஸா கைவிட்டுத் துழாவி ஐந்து டாலரை எடுத்துக் கிழவனின் கையில் திணித்தாள்.

வந்த அவசரத்தில் கண்ணதாசன் மேசைமீதிருந்து பணத்தை எடுத்துவர மறந்திருந்தான். வெனெஸா அவனைச் சிரித்த முகத்தோடு பார்த்து அவனது சங்கடத்தை அலட்சியம் செய்தாள். கண்ணதாசன் மின்விசிறிக் காற்றில் விலகி மூடிய அவளது மெல்லிய மேலாடையைப் பார்க்காமல் இருப்பதற்காக தன் கண்களை விலக்கிக் கொள்ள பாடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் உதட்டோரங்களிலும் இப்போது மெல்லிய சிரிப்பிருந்தது. 

ஒரு கையின் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து மற்ற மூன்று விரல்களையும் விறைக்க நீட்டிக் கண்ணுக்கு முன்னால் வைத்து வெனெஸா கண்ணதாசனைப் பார்த்து நட்போடு பேசினாள்.

“மறுபடி வந்து காசு தரமாட்டியா என்ன? அப்படி காசு தரப்ப ஒரு காபி வாங்கித் தராமலயா போயிடுவ?”

கைகளைப் பலமாகக் குலுக்கிச் சத்தியம் வாங்கிக் கொண்டாள். இருவரும் தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டார்கள். கண்ணதாசன் முதுகில் கீறல் விழுந்த தனது கைத்தொலைபேசியைக் கர்வத்தோடு பார்த்தான்.

கடையைவிட்டுக் கிளம்பி படிக்கட்டுகளின் மங்கலான விளக்கு வெளிச்சம் சார்டீன் டின்களின்மீது விழுந்தபோது கண்ணதாசனுக்கு ஒரு விஷயம் தோன்றியது. சார்டீன் டின்களின் அட்டையில் பெரிய கண்களோடு நீள நீளமான சார்டீன் மீன்களின் மிக வாளிப்பான உடல்களைப் படமாய்ப் போட்டிருந்தார்கள். 

கடலின் எத்தனை அழுத்தத்துக்கு அடியிலிருந்த போதும் எல்லா கடல்வாழ் உயிரினங்களுக்கும் இந்த அசாத்தியமான வாளிப்பைத் தந்துவிடுகிறது ஜீவரசம், ஜீவரசம். அந்த ஜீவரசம் கண்ணதாசனுக்குள்ளும் இப்போது ததும்பிக் கொண்டிருந்தது.

சார்டீன் மீன்களின் வாளிப்பான உடல்கள் அவனுக்கு வெனெஸாவின் பொங்கிய மார்புகளையும் பொன்னிறமான உடலையும் நினைவுக்குக் கொண்டு வந்தன.

கண்ணதாசன் தன் நடையை விரைவாக்கினான். அப்பாவிடம் சொல்ல அவனுக்கு ஒரு காரியம் இருந்தது. 

படிகளில் அவன் தடதடத்துத் தாவி ஏறிய ஓசையில் அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லித் தூண்டினாரே அந்த அட்டகாசமான கிழவர், அவருடைய வார்த்தைகள் ஒவ்வொரு படியிலிருந்தும், படிக்கட்டுக் கம்பியிலிருந்தும், அவன் படித்த அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலிருந்தும், எல்லா கட்டடங்களிலிருந்தும் அந்த நகரம் முழுமையிலிருந்தும் பெரிதாய் எழுந்து எதிரொலித்தன.

*******

espiesx@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button